Wednesday, June 16, 2010

ரஹ்மத்துன்னிசா நிக்காஹ்வும்,ஒரு பிரியாணிக்கதையும்

ஆளுயர கரண்டிகளும்
வானமளவு வானலிகளும்
வெங்காய‌மும் க‌த்திரிக்காயும்
புதினா க‌ட்டும் ம‌ட்ட‌ன் ம‌லைக‌ளும்
முன்னிர‌வே டெம்போவில்
வ‌ந்திற‌ங்கி விடுகின்ற‌ன‌.

கோழி போட்டால் பேரிழிவாம்
ஆடு போட்டால் தான் அந்த‌ஸ்தாம்
ஒரு கிலோ அரிசிக்கு
ஒன்னே கால் கிலோ க‌றி.
கிலோ அரிசிக்கு எட்டு பேரு
பேய்ச்சாப்பாடு சாப்ட‌லாமென்றாலும்
ஒரு இலைக்கு ஒரு துண்டு க‌றி தான்.
தண்டலுக்கு வாங்கி ஏற்பாடு செய்த‌
ரஹ்மத்துன்னிசா வாப்பா க‌ண‌க்கு.

தெரிஞ்ச‌ முக‌மென்றால் ம‌ட்டும்
"தூணோர‌மா உக்காந்திருக்க‌
ப‌ச்ச‌ ச‌ட்ட‌ பய நம்மாளு ! பீஸூ கேக்குறாப்ள‌!"
ப‌த்தாம‌ போகுமோண்டு
ப‌ய‌த்துட‌னே ப‌ரிமாறும்
ர‌ஹ்ம‌த்துன்னிசா மாம‌ன் மாருஹ‌.

வந்த மக்க மனுசரையெல்லாம்
வாண்டு கேட்டே நா வறண்டு
ஒருவா சோறுங்காம
மக கல்யாணம் நல்லபடியா முடியணுமேங்கிற‌
தவிப்புல தடுமாறி நிக்கிற‌
ரஹ்மத்துன்னிசா உம்மா.

இவங்க யாருக்குமே தெரியாதாம்.
கல்யாணப்பொண்ணு
நூரே ச்சஸ்மி
ரஹ்மத்துன்னிசாவுக்கு மட்டுந்தா தெரியுமாம்.
எதித்த வீட்டு முருகேசனுக்கு
பிரியாணிண்டா உசுறுண்டு !


********

Sunday, February 14, 2010

நெப்பந்தஸ் ( சிறுகதை பாகம்-2 )


முத‌ல் பாக‌ம் ப‌டிக்க..!

---------------------------------

தீட்டுக்காயங்கள் பழுத்து,ஆறி காய்ந்து தழும்புகள் மறைந்து சமநிலைக்கு வந்தது கல்லூரியில் சகுந்தலாவின் அறிமுகத்திற்கு பிறகு தான்.பால்க‌வுச்சியும் நெய் வாடையும் கும‌ட்ட வைத்த‌ பா.ரா தெருவின் ஒரே ம‌ரிக்கொழுந்து ம‌ண‌ம் சகுந்தலாவினுடைய‌து.பெரிய‌ பெரிய‌ க‌ண்க‌ளுடைய‌ ச‌குந்த‌லாவின் மேனியெங்கும்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ம‌ண‌ம் வீசும்.துள‌சி,ம‌ல்லிகை,பெருங்காய‌ சாம்பார்,மூல்தானி மெட்டி,சிகைக்காய்,மோர்க்குழ‌ம்பு என ஒவ்வொரு கிழமையும் திங்களும் நாழிகையும் ஒவ்வொரு மணம்.அப்போதைய தட்ப வெப்ப சூழ்நிலையில் ஒரு சுத்த ஐய‌ங்கார் வீட்டுப் பெண்,பேயன் தெரு மக்களோடு புத்தகங்கள் பகிர்ந்து கொள்வதும்,தொட்டு அடித்து பேசுவதும் டிப‌ன் பாக்ஸை திற‌ந்து பார்ப்ப‌தும்,ஐம்ப‌து ரூபாய் ப‌ந்த‌ய‌ம் க‌ட்டி க‌ருவாட்டுத் துண்டைக் காக்காய் க‌டி க‌டித்த‌தும்,ம‌னித வாசனை இல்லாத தேச‌த்திலிருந்து ப‌ற‌ந்து வ‌ந்த‌ சிட்டுக்குருவியைப் போல,அவள் பெரிய கண்களை அக‌ல‌ விரித்து,கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ என் கூட்டுக்குள் அடைகாக்க‌ தொட‌ங்கினாள்.

சக ந‌ண்ப‌ர்க‌ளைப் போலத் தான் என்னிடமும் பழகுகிறாள் என்று வெற்றுச்ச‌மாதான‌ம் செய்து செய்து கொள்வது பெருஞ்சிரமமாக இருந்தது.ச‌மாதான‌ம் செய்து கொள்ள‌வும் விருப்ப‌மிருக்க‌வில்லை.த‌ண்ணி சீசாவை வாய் வைத்து குடித்த‌த‌ற்கு கூட ஒன்றுமே சொல்ல‌வில்லை.இதுவே ம‌ற்ற‌வ‌ர்க‌ள் செய்திருந்தால் ச்சீ எச்சி என்று உத‌டு கோணியிருப்பாள்.பிசிஓ ப‌ரிம‌ள‌த்திட‌ம் பேசும் போது கூட‌,ஒருமுறை என்னைப் பார்த்து முறைத்தாள்.நான் எரிப்ப‌து போல் பார்த்தாள் என்று க‌விதை எழுதினேன்.என‌க்கு பிடித்தவாறு தான் உடைய‌ணிகிறாள்.சுதா ர‌குநாத‌னின் அலைபாயுதே குர‌ல் பிடித்திருக்கிறது என‌ கார‌ண‌மில்லாம‌லா என்னிட‌ம் ம‌ட்டும் சொல்லுவாள்.ஸ்நான‌ம் ப‌ண்ணின்ட்ருக்க‌ச்ச‌ அடிவ‌யித்துல‌ அப்ப‌டி ஒரு வ‌லிடா.அதான் மூணுநாளா காலேஜூக்கு வ‌ல்ல என்று பெண்மையின் ர‌க‌சிய முடிச்சுக‌ளை த‌னிமையில் அவிழ்க்கிறாள்.அவளின் உடல்மொழியின் அளபெடையில் நான் எத்தனை மாத்திரை என்பதை கணக்கிடுவதிலும்,நடந்தவற்றை அசை போட்டு மென்று,தற்குறிப்பேற்ற அணிகளை இயற்றுவதிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்பதை உணர முடிந்தது.

வழக்கமான காதலின் சராசரி மூடநம்பிக்கைகள்,கெட்டப்பழக்கங்களில் எனக்கு இம்மியளவு கூட நம்பிக்கையில்லை.ஒருவரை விரும்பலாம் என்று அவர்கள் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.ஆனால் காரணங்கள் அபத்தமாக இருக்கும்.வேதியல் துறை கணபதி பிப்ரவரி 23 ஆம் தேதி பிறந்தவனாம்.அதே துறையில் படிக்கும் புஷ்பவல்லியும் பிப்ரவரி 23ம் தேதி பிறந்தவள் என்பதால் காதலிக்க ஆரம்பித்து விட்டானாம்.பிரபாவதி பிரபாகரன் பிரபா பிரபா ஒரே மாதிரி வந்தால் போதும் காதல் கோட்டைக்கு அடிக்கல் நாட்டி விடுவார்கள்.பக்கத்து வீடாக இருத்தல்,அம்மாக்கள் ஒரே ரேஷன் கடையில் சீனி வாங்குதல் அல்லது அப்பாக்கள் ஒரே கடையில் சவரம் செய்பவர்களாதல்,ஒரே பேருந்து வழித்தடத்தில் பயணம் நாய்க்குட்டி,தோட்டம்,சுண்டக்காய் என இப்படி குறைந்த முதலீட்டில் சம்பந்தங்களை உருவாக்கி,சந்தர்ப்பவாத காதலை நடத்துவார்கள்.

சகுந்தலாவின் மீதான ஈர்ப்பு வேலி தாண்டி அத்து மீறியதற்கு தரம் தாழ்ந்த காரணங்கள் எனக்கு அவசியப்படவில்லை.அவள் ஒரு அதிசயப்பிறவி.மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கத் தெரிந்த அதிசயப்பிறவி.சாதியும் வர்ணங்களும் எங்களை வேற்றுக்கிரகத்தில் வீசி எறிந்த போது,வானத்தைக் கிழித்து பறந்து வந்த மீன்கொத்திப் பறவையாக,நட்பு அலகில் கவர்ந்து சென்று மீட்டவள்.என் க‌ருப்பு புறங்கையில் அவ‌ளின் செக்க‌ச்சேவேல் விர‌ல்க‌ள் ப‌ட‌ரும் போது தோன்றும் அதீத‌ குற்ற‌ உண‌ர்ச்சியை,தாழ்வு ம‌ன‌ப்பான்மையை,கூச்ச‌த்தை,வெட்க‌த்தை,குறுகுறுப்பை,ப‌ர‌வ‌ச‌த்தை சலனமின்றி ஒரு வென்னிற‌ கைக்குட்டை கொண்டு துடைத்து தூர எறிந்தவள்.

வாய் நிறைய புன்னகையும்,மடிநிறைய இளைப்பாறல்களும் அவள் மீதான உடைமைத்துவத்தை அகலப்படுத்தியது.சகுந்தலா எனக்காக மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டவள் என்ற மனநிலை உக்கிரமாக ஆட்கொண்டது.அந்த‌ர‌ங்க‌ உடைமையில் கீறல்கள் விழுவது சாட்டை அடியை ஒத்திருந்த‌து.ஒவ்வொரு வ‌லியும் வெறுப்பை விதைத்த‌து.வெறுப்பு வ‌ன்ம‌த்தை கொணர்ந்த‌து.

(தொட‌ரும்...)

*****

Thursday, January 28, 2010

நானோ பிரபஞ்சத்தில் பேரிடி

இது ஒரு தொடர் பதிவு. அதிரடி பதிவர் விசாவின் யோசனைப்படி முகிலன் இதை துவக்கினார். மொத்த பதிவையும் நீங்கள் இங்கே படிக்கலாம்.

http://padhivarkalanjiyam.blogspot.com/

முகிலன். பலாபட்டரை, பிரபாகர், ஹாலிவுட் பாலா, வினோத் கௌதம், கிஷோர், சுபதமிழினியன்....இறுதியாக விசா.. இவர்களை தொடர்ந்து நானும்
களத்தில் இறங்க முடிவு செய்து சிறுமுயற்சி தந்திருக்கிறேன்.

சொதப்பல்,ஒன்னுமே புரியல,கதை நீளம்,ஒரே கொயப்பம்,இடியாப்பம் போன்ற பின்னூட்டங்கள் ஏற்கப்பட மாட்டாது என்பதை தாழ்வன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

இக்கதையின் முன்கதை, பதிவர் விசாவின் விறுவிறுப்பான எபிசோட் வாசிக்க,

http://writervisa.blogspot.com/2010/01/8.html

---------

எங்கே செல்லும் இந்த பாதை-9

வ‌தை 1:

வீடியோவில் காண்பிக்கப்பட்ட வெற்றுடம்பு மனிதனின் குறியில் கொக்கி போட்டு இழுக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த‌ ராஜேஷ் வாய் திறக்காமலா இருப்பான்.உடைந்த உண்டியலில் சில்லறைகள் சிதறுவது போல உண்மைகள் கொட்ட ஆரம்பித்தன.

லோ டெம்ப்ரேச்ச‌ர்ல‌ பாடிய‌ வைக்க‌ற‌துனால‌ செல்க‌ள‌ திரும்ப‌வும் உயிர்ப்பிக்க‌லாம்னு நினைக்க‌ற‌து திய‌ரிடிக‌லா வேணும்னா சாத்தியமாகலாம்.ஆனா இது இம்ப்ராடிக்க‌ல்.இந்த‌ கிரையோனிக்ஸ் எல்லாம் சும்மா ப‌ம்மாத்து வேல‌.."

"நோ இன்ஸ்பெக்ட‌ர்.இது எங்க‌ ட்ரீம்..எட்டு வ‌ருஷ‌ க‌னவு,தவம்,உழைப்பு.நானோ டெக்னாலஜில இதுவர யாரும் தொடாத லிமிட்ஸ்-அ நாங்க டச் பண்ணிருக்கோம்.இதுக்காக‌ எங்க‌ பாஸ்,டாக்ட‌ர் நிர்மல் எவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட்ருக்காருன்னு கூட‌ இருந்து நான் பாத்துருக்கேன்." வலி வேதனையுடன் ராஜேஷின் குரலில் அழுத்தம் இருந்தது.

இது இயற்கைக்கு புறம்பானது தான்.இது சாத்திய‌மே இல்லாத‌ ஒன்னு.அப்படியே இது வொர்க் அவுட் ஆனாலும் பின்னால ஆபத்தான விளைவுகள ஏற்படுத்தும்.இத உடனே தடுத்து நிறுத்தணும்" இன்ஸ்பெக்டர் தனது விசாரணையின் அடுத்த கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

"சொல்லுங்க‌ ராஜேஷ்...உங்க‌ ரிசர்ச் சென்ட‌ர் எங்க‌ ந‌ட‌த்திட்ருக்கீங்க‌ ? எத்த‌னை பேரு இதுல‌ இன்வால்வ்ட்..?

***

வ‌தை 2:

ஸ்டான்ஃபோர்டு ஸ்டூடியோவின் அதிநவீன உபயம் போலிருந்தது ம்ருத்துவக்கூடம்.சோடியம் விளக்குகள் கூடத்தை ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்தன.டாக்டர் நிர்மல் நான்கைந்து கோர்ட் சூட் வெள்ளையர்களுடன் ருஷ்ய மொழியில் மானிட்டரைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.சென்னையில் இப்படி ஒரு இடம் வாய்ப்பே இல்லை.

மின்னல் கடந்தது போல ஒரு ஃப்ளாஷில் பாஸ்கருக்கு விழிப்பு தட்ட ஆரம்பித்தது. ஸ்வாதி !! ஸ்வாதி !!! முனக ஆரம்பித்தான்.இமைகளைத் திறந்ததும் அதில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் பல்லிளித்தது.அருகே இருந்தே கணினித் திரையில் அலைகள் பாய்ந்தன. பீப் சத்தம் கேட்டு டாக்டர் நிர்மல் தன் சகாக்களுடன் பாஸ்கரின் படுக்கையை நோக்கி விரைந்தார்.

"கய்ஸ்..சப்ஜெக்ட் கண் முழிச்சுடுச்சி !!! லெட்ஸ் ஸ்டார்ட் தி தெர்மல் இன்செர்ஷன்" கண் சிமிட்டினார்.

பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ப‌டுக்கை திடீரென‌ ஒரு க‌சாப்புக்க‌டை ம‌ர‌க்க‌ட்டையாகி, லேச‌ர் க‌ற்றைக‌ள் அவ‌ன் உட‌லை கூறு போட‌ ஆர‌ம்பித்த‌ன.கொடூர‌ வ‌லியில் எழும்பிய‌ அவ‌ன் குர‌ல் எதிரொலிக்காம‌ல் துளைக‌ள் போட்ட‌ அட்டையால் விழுங்க‌ப்ப‌ட்ட‌து.ரத்தக்களரியாக‌ செல்க‌ள் பிரித்து மேய‌ப்ப‌ட்ட‌ன‌.ந‌ர‌ம்புக‌ளில் ஆங்காங்கே அக்குப‌ஞ்ச‌ர் முறையில் IC-க்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்ட‌ன‌.என்ன‌ ந‌ட‌க்கிற‌து ?? இங்கே..!! நான் ஏன் இங்கே இருக்கிறேன்.மாஸ்க் அணிந்த‌ ப‌ச்சைப் பேய்க‌ள் யார் இவ‌ர்க‌ள் ? இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ தேவையிருக்கிற‌து ? ப‌னிக்க‌ட்டியில் வைத்த‌தைப் போல் உட‌ல் ந‌டுங்குகிற‌தே..நான் ப‌டுத்திருப்ப‌து என்ன‌ ஐஸ் கட்டியா ?

***


போலீஸ்,க‌மாண்டோ ப‌டையின‌ரின் வாக‌ன‌ங்க‌ள் 120 கீ.மீ ஐத் தாண்டி ப‌றந்து கொண்டிருந்த‌ன‌.

போரூர் செக்போஸ்ட்டை க‌ட‌ந்த‌தும் வேக‌ம் குறைய‌ ஆர‌ம்பித்த‌து. ஜீப்புக‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு,க‌மாண்டோ ப‌டையின‌ர் ஒவ்வொருவ‌ராக‌ இற‌ங்கி சுற்றியிருந்த‌ வீடுக‌ளில் ப‌துங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.இன்ஸ்பெக்ட‌ர் வேர்க‌ட‌லை சிறுவ‌னை அழைத்து அந்த‌ பிர‌தான‌ சாலையின் சுர‌ங்க‌ப்பாதையில் "இயேசு அழைக்கிறார்" போஸ்ட‌ரை கிழிக்க‌ச் சொன்னார்.

எதிர்பார்த்தப‌டியே,சுவ‌ற்றில் நால‌ணா அள‌வு துளையில் ஒரு க‌ணினி மெள‌ஸின் ரோல்ல‌ர் ப‌ந்து செருகியிருந்த‌து.ஆட்காட்டி விர‌ல் கொண்டு அதை உருட்டிய‌ மறுக‌ண‌ம்,மெல்லிய‌ இசையுட‌ன் அந்த‌ அற்புத‌க்க‌த‌வு திறந்த‌து.Thats it !!!


***

எம்.எம்.எக்ஸ் மெடிக்கல் பவுண்டேஷனின் முத‌ல் த‌ள‌ம் சைர‌ன் ஒலியில் அதிர்ந்த‌து.மாடி அறையில் இய‌ங்கி கொண்டிருந்த‌ லின‌க்ஸ் திரைக‌ள் அபாய செய்திக‌ளை ப‌ர‌ப்பிக் கொண்டிருந்த‌ன‌.ஆப‌த்து !!!

"ந‌ம்ம‌ இட‌த்த‌ போலீஸ் க‌ண்டுபிடிச்சிடுச்சி..நம்ம கிரவுண்ட் ஃப்ளோர் 3M கதவ‌ இவ்ளோ சுல‌ப‌மா த‌மிழ்நாடு போலீஸ் ம‌ட்டுந்தான் ஓப்ப‌ன் ப‌ண்ண‌ முடியும்.

லெட்ஸ் கிக் ஆஃப் தி பேக்கிங் புரோகிராம் ! "

பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ஐஸ்க‌ட்டி படுக்கை ஒரு பெட்டியாக‌ உருமாறி அவனைச் சுற்றி சுவர் எழுப்பியது.ஆக்ஸிஜ‌ன் வால்வு பொருத்த‌ப்ப‌ட்ட‌து.ரிச‌ர்ச் சென்ட‌ரின் முத‌ல்த‌ளம், Maersk பெயர் ஒட்டப்பட்ட‌ துறைமுக‌ டிர‌க் ஒன்றில் அலேக்காக‌ அம‌ர்ந்த‌து. எந்நேர‌மும் த‌ப்பிப்ப‌த‌ற்கான டாக்டர் நிர்மலின் மின்ன‌ல் வேக‌ ஏற்பாடுக‌ள் இவை.

டாக்ட‌ர் நிர்ம‌ல் அன்ட் கோ, பெட்டியில் பாஸ்க‌ர், முத‌ல் த‌ள‌ க‌ருவிக‌ள் எல்லாம் ஒரே டிர‌க்கில்.டிரக் நகரின் இஞ்சி இடுக்குகளில் நுழைந்து சீறிப்பாய்ந்தது.வேகம்.ஒளியின் வேக‌த்தை தொட‌ முடியுமா? எத்த‌னித்தார்க‌ள். பிடிப‌ட்டால் மில்லிய‌ன் டால‌ர்க‌ள் அர‌சாங்க‌த்தின் பிடியில். திட்ட‌ம்,க‌ன‌வு,த‌வ‌ம் எல்லாம் த‌விடு பொடி. ஏற்கென‌வே செய்த‌ 20 ந‌ர‌ப‌லிக‌ளுக்கு ப‌தில் சொல்லியாக‌ வேண்டுமே !!!டாக்ட‌ர் நிர்ம‌லின் இத‌ய‌ம் ப‌ட‌ப‌ட‌த்த‌து. புரோஜெக்ட்டின் உச்ச‌ப‌ச்ச‌ திருப்ப‌த்தில், இப்ப‌டியாகி விட்ட‌தே. ராஜேஷ் !! கிராதகன்.இப்ப‌டியா உள‌றி கொட்டியிருப்பான்.அவ‌ன் க‌ழுத்தில் ச‌ய‌னைடு க‌ட்டி விட்டிருக்க‌லாம்.ப‌ர‌வாயில்லை.எப்ப‌டியாவ‌து த‌ப்பித்து விட‌லாம்.பாஸ்க‌ரின் உயிர் தான் ந‌ம‌க்கு இறுதி ந‌ம்பிக்கை.பாஸ்க‌ரின் கிரையோனிக் பொருத்த‌ப்ப‌ட்ட‌ உட‌ல் தான் ந‌ம‌க்கு த‌ங்க‌ முட்டையிடும் வாத்து. எங்கே பாஸ்க‌ர் ?!?! ஓ மை காட் ?!?!

ஐஸ்க‌ட்டியின் Frozen plug-in பிடுங்க‌ப்ப‌ட்டு த‌ண்ணீர் தேங்கியிருந்த‌து. பாஸ்க‌ர் மாய‌ம்.

டிரக்கின் வேக பிடி தளர்ந்தது. புறநகர் பகுதியை அடைவதற்கு முன்பாகவே தாம்பரத்தில் Maersk டிர‌க் போலிஸ் வாகனங்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

***

போலிஸ் கஸ்டடியில் சிக்கிய‌ டாக்டர் நிர்மல், பதற்றமாகாமல் அமைதியாக‌ திருவாய் மலர்ந்தார்.

"பாஸ்கரோட பாடியில இன்செர்ட் பண்ணியிருக்க Aphinil -X சிப் இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கப் போவுது. அது மட்டும் வெடிச்சா தமிழ்நாடே அமிலக் காடாகும் !!..என்ன பண்ண போறீங்க ?"


( தொடரும் )

-----------------------------------------------

விதிகள் :

01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாராவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.

---

Saturday, January 23, 2010

நெப்பந்தஸ்



"நெருக்கியடித்து வளர்ந்தும் வளராத முட்புதர்களும்,செம்மண் புழுதி படிந்து காய்ந்து போயிருக்கும் கீழாநெல்லிச்செடிகளும்,சிறியதும் பெரியதுமாக கோரைப்புற்களும் சூழ்ந்த புனித மார்க் தோட்டத்தின் மண்ணறையொன்றில் மெல்வின் கிடத்தப்பட்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான்.பூச்சிகளைத் தின்னும் நெப்பந்தஸ் போல,தன் கருநாவைக் க‌ழற்றியெறிந்து,நினைவுகளை வாரிச்சுருட்டி ஒருமுறை அசைபோட்டு விட்டு மீண்டும் விழுங்கி விடுகிறது நாட்களின் நகர்வுகள்."

ஆயிர‌ம் குண்டூசிக‌ள் ஒரு சேர செருகிய‌தைப் போல் வாடைக்காற்று செவிப்ப‌றையைக் கீறும் குளிர்கால‌ம்.எதிர் வீட்டு நாவ‌ல் ப‌ழ‌ ம‌ர‌ம் மட்டும் இலைகளையும் சருகுகளையும் கலைத்து பேரிரைச்ச‌லை உண்டு ப‌ண்ணாம‌லிருந்தால்,அந்த ர‌க‌சிய‌க் காற்றின் அமானுஷ்ய‌ம் விள‌ங்காம‌லே போயிருக்க‌க்கூடும்.ப‌றவைக‌ளும் மின்மினிப்பூச்சிக‌ளும் தத்தம் இணைகளோடு கூடிய நிசப்த வெளியில் தியான‌த்தில் இருக்கின்ற‌ன.புலர்காலை சூரியன் முதுகில் அறைந்து எழுப்பிய‌தும் அவைக‌ளின் த‌வ‌ம் க‌லைய‌க்கூடும்.அப்போது எல்லாம் ச‌ரியாகி விடும்.

ச‌ன்ன‌லின் திரைச்சீலை இருப்பு கொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்த‌து.குளிர்சாதன‌ம் அணைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ த‌ற்காலிக‌ உஷ்ண‌த்தில் க‌டிகார‌ முள் ச‌ற்று உற்சாக‌மாக‌ ஒலியெழுப்பி ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌து.மேஜை மேலிருந்த பிஸ்கட் பாக்கெட்டின் இடுப்பு பகுதி கிழிந்து சில‌ கொசுக்க‌ள் உள்ளே போய் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்தன.வ‌ழ‌க்கமாக‌ இர‌வின் சுழற்த‌ன்மை புல‌னாவ‌த‌ற்கு முன்பே எனக்கு விடிந்து விடும்.இன்று கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌ நாள்.அத‌னால் தான் என்ன‌வோ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டைத் தாண்டியும் தூக்க‌ம் பிடிக்க மறுக்கிறது.

ச‌குந்தலா இடப்பக்கம் படுத்திருக்கிறாள்.என் முக‌த்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.குழந்தைமை மாறாத க‌ண்க‌ளில் நீர்த்துளிக‌ள் சுர‌ந்து வீங்கியிருக்கிறது முக‌ம்.நிறைய அழுதிருப்பாள்.சோக‌ம் விர‌வியிருந்த அழகிய முட்டைக்க‌ண்க‌ளை விடியும் வ‌ரை பார்த்து கொண்டிருந்தாலும் பாவ‌மில்லை.பார்வை எதிர்கொள்ளும் பிம்ப‌ங்க‌ளைக் க‌ட‌ந்து,அவ‌ள் சிந்த‌னை கால‌ய‌ந்திர‌த்தின் ஞாப‌க‌ க‌ண்ணியை ப‌ற்றிக் கொண்டு,ஒரு வ‌ருட‌ம் பின்னோக்கி நீள்கிறது.நிச்ச‌ய‌ம் அங்கு நானிருக்க‌ப் போவ‌தில்லை.இருந்தாலும் தொந்த‌ர‌வு செய்ய‌ப்போவ‌தில்லை.அவளைச் சூழ்ந்திருக்கும் பேரமைதி ஒரு திடப்பொருளாக இருக்கிறது.தவறி உடைந்து விடும் பட்சத்தில் அதனுள் நிரப்பப்பட்டிருக்கும் பெயரிடப்படா திரவம் பீய்ச்சியடிக்கப்பட்டு,அறையை ஒரு வித‌ ரசாயன வெள்ளத்தில் மூழ்கடிக்கக்கூடும்.இது அவளுடைய அந்தரங்கம்.பிர‌த்யேக‌ தனிமை.முழுமையாய் அனுபவிக்கட்டும்.கரைந்து தீர்க்கட்டும்.

----

எங்கள் வீட்டின் வலது திண்ணையிலிருந்து சுவற்றை ஒட்டி எட்டிப்பார்த்தால்,வரதராஜ பெருமாள் கோயிலின் பின்புறமிருக்கும் பொற்றாமரைக்குளம் தெரியும்.சைக்கிள் இருந்தால் ஐந்து நிமிடங்களில் குளத்தை அடைந்து விடலாம்.குளத்தின் மறுகரையில் இருந்தது பாப்லோ ராமசாமி தெரு.குளத்தை ஒட்டியே இருந்ததால் அத்தெருவுக்கு ஒரு திவ்யமான அழகு கூடியிருந்தது.வைகறைகளில் சாணி மொழுகி,வண்ணப்பொடிகளைத் தூவி மலர்க்கோலம் இடும் இளந்தளிர்களை அலகில் வைத்து கவர்ந்து போக காகங்கள் கூட காத்திருக்குமாம்.மாமா சொல்லியிருக்கிறார்.

அக்ரஹாரத்து பெரியவாள் தெப்பக்குளத்தின் வலது கோடியில் குளிப்பது தான் வாடிக்கை என்பதால் இடது ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு பொற்றாமரைக் குளம் லேசாக கலங்கியிருந்தது.தூர்வாறப்படாத அந்த இடது ஓரத்தில் தான் நாங்கள் சர்வ ரகசியமாக குளிப்பதும் கோயில் கோபுரத்தைப் பார்த்து கை கூப்புவதும்! வரதராஜ பெருமாளை தரிசித்த கணங்களை விட,குளத்தில் ஊறியவாறே ராமசாமி தெருவின் தேவதைகளைக் கண்டு வாய் பிளந்த தருணங்கள் அதிகம்.பாப்லோ ராம‌சாமி தெருவில் காகங்களுக்கும் நாய்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் காலாற,பசியாற இடமுண்டு.எங்களைப் போன்ற கீழ்வர்ண மனிதர்களுக்குத் தான் இடமில்லை.

(தொடரும்..)

****

Tuesday, January 19, 2010

மனப்பிறழ்வு.காம் சில குறிப்புகள் பாகம்-1



முடிவுகளை நோக்கி பயணிக்காத கதைகள் தரும் சுதந்திரம் அளப்பரியது.ஒழுங்கின்மையும் சீரமைக்காத வார்த்தைகளும் வரையறைகளுக்கு இம்மியளவு கூட கட்டுப்படாத வடிவ நெருடல்களும் கதையின் சுவாரசியத்தை அதிகரிக்க‌ வல்லவை.அதை ஏன் கதை என்று சொல்ல வேண்டும்.எழுதப்போவது கதை என்றாலே அங்கு ஒரு கட்டுப்பாடு வந்து விடுகிறது.நாவல் என்று வைத்து கொள்வோமோ ? குறுநாவல்,ஒரு பக்க கதை,தொடர்கதை எதுவும் வேண்டாம்.வரையறைகளே வேண்டாம்.வரையறை என்ற சொல்லாடல் வரும் போது தான் அங்கு மேற்சொன்ன கட்டுப்பாடுகளும் விதிகளும் இலவச இணைப்புகளாக வந்து விடுகின்றனவே.இந்த தடைகளற்ற சுதந்திரத்தை அனுபவித்தலுக்கு "டேனியல் விதி" என்று பெயரிடுவோமோ.ஒரு விதிக்கு ஆங்கில நாட்டவரின் பெயர் வைத்தால் தான் அதற்கு மதிப்பும் மரியாதையும் தருகிறோம்.தானாகவே அந்த விதிக்கு ஒரு வசீகரம் கூடிவிடுகிறது.)பொன்னுசாமி விதி,குப்புசாமி விதி என்று சொல்லிப்பாருங்கள்.சகிக்கவில்லை தானே ?

இதே கோட்பாடு "டேனிய‌ல் விதி" என‌க்கும் ஒரு பெண்ணுக்குமான‌ உற‌வில் ஏற்ப‌ட்ட‌ நிலையைத் தான் சொல்ல‌ நினைக்கிறேன்.முழுமையாக அவளை என் பக்கம் இழுப்பதே இப்பகுதியின் நோக்கம் என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.எந்த வடிவத்தில் என்னைக் கொடுக்கிறேனோ அதே வடிவத்தில் கூடுமானவரை அவளுக்கு நேர்மையாளனாக இருப்பேன்.

என‌து சுய‌ம், க‌ன‌வு, தோல்விக‌ள் ஏற்ப‌டுத்திய ர‌ண‌ங்கள்,போலியான‌ ச‌மூக‌ க‌ட்ட‌மைப்புக‌ளின் மீதிருந்த அதிருப்தி என‌ என்னைச் சூழ்ந்திருந்த எல்லா அப‌த்த‌ங்க‌ளுக்கும் அவ‌ளிட‌ம் ஒரு ப‌தில் இருந்த‌து.இந்த விஷயத்தில் மட்டும் சிக்ம‌ண்ட் ஃபிராய்ட் அநியாய‌த்திற்கு விழித்துக் கொள்கிறார்.நான் என்ன‌ செய்து கொண்டிருக்கிறேன் என்ப‌தை நொடிக்கொரு த‌ர‌ம் என‌க்கு நினைவு ப‌டுத்திக் கொண்டே இருக்கிறார்.நூற்றி இருப‌து நிமிட‌ங்க‌ளில் நாற்ப‌த்தைந்து முறை,அவ‌ள் ஏதோ ஒரு ம‌ய‌க்க‌ப்புள்ளியிலிருந்து த‌ன்னை விடுவித்துக் கொள்ள‌ போராடித் தோற்றதை கொண்டாட‌ச் சொல்கிறார்.அதே நூற்றி இருபது நிமிடங்களில்,எத்தனை முறை அவளை வன்முத்தமிட எத்தனித்தேன் என்கிற ரகசியத்தை இந்நேரம் அவளிடம் போட்டுக் கொடுத்திருப்பார்.இருக்க‌ட்டும் இருக்க‌ட்டும்.பிற‌கு கவனிக்கிறேன் அவரை.

இப்ப‌குதியை எழுத ஆர‌ம்பித்த‌ போது வித்தியாச‌மான சில‌ குறிப்புகளைக் கொண்டு அவ‌ளைச் சொல்வ‌தென‌ தீர்மானித்தேன்.ஒரு கோர்வையாக‌ எழுத வ‌ராம‌ல் குறிப்புக‌ள் அனைத்தும் பிற‌ழ்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக‌ சித‌றிக் கிட‌க்கிற‌து.அவ‌ற்றிற்கு ந‌ம்ப‌ர்க‌ள் கொடுத்து ஒரு வ‌ரைய‌றைக்குள்......ம‌ன்னிக்க‌வும்..ஏதோ ஒரு முறையில் த‌ந்திருக்கிறேன்.பாருங்க‌ள்.

--------

உறவுக‌ளை வ‌ரைய‌றுத்த‌ல் அபத்த‌மான‌து என்ற கொள்கை ஆழ்ம‌ன‌தின் வ‌க்கிர‌ங்க‌ளை ச‌மன் செய்யும் ந‌வீன‌ சித்தாந்த‌மாக‌ இருவ‌ரும் ஏற்றுக் கொண்டோம்.

காத‌ல்,அன்பு போன்ற டெட்டால் போட்ட வார்த்தைக‌ள் வ‌ழ‌க்கொழிந்த‌ சொற்களாகி விட்ட‌ நிலையில்,உட‌ல் ப‌ற்றிய‌ பிர‌க்ஞையே இல்லாம‌ல் அவ‌ளோடு ப‌ழ‌க முடியும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல‌ முடியாது.

எத்தனை முறை முயன்றும் அவளுக்கான இந்த முதல் பத்தியை சிறப்பாக எழுதிவிட முடியவில்லை.எந்த வரிகளாலும் அவளை நிரப்பி விட முடியாதோ என்ற அச்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிற‌து.எவ்வித கொள்கலனிலும் அடைக்க முடியாத விசேஷ நீர்மம் அவள்.

உட‌ல் தின்று உயிர் வாழும் வ‌ல்லூறுக‌ளின் ந‌க‌ங்க‌ள் என் விரல்களில் முளைக்க ஆரம்பித்த நாட்களில் தான் அவள் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்ன நினைவிருக்கிறது.வ‌ரைய‌றை இல்லாத‌ உற‌வுமுறை இருவ‌ருக்குமே பிடித்திருந்த‌து.

தீவிர அவதானிப்புடன் எழுதப்பட்ட புனைகதைக்குள் வெற்றுடம்புடன் செவ்வரளிப்பூக்களை மட்டும் சூடி உலாவரும் யட்சியின் புற அழகை வென்றிருந்தாள்.

க‌ட‌ற்காக‌ங்க‌ளும் வ‌ல்லூறுக‌ளும் ந‌ண்டுக‌ளும் மீன்க‌ளும் அன்றைய‌ தின‌த்தின் புனித அறிக்கைகளை செவ்வானத்திடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்த ர‌ட்சிக்க‌ப்ப‌ட்ட ஒரு அந்தி வேளையில்,இர‌வுப்ப‌ணிக்காக‌ பெள‌ர்ண‌மி நில‌வு முழு வீச்சில் ஆய‌த்த‌மாகிக் கொண்டிருந்த‌து.

அன்று Sigmund Freud கொஞ்ச‌ம் அதிக‌மாக‌வே விழித்திருந்தார்.நான் என்ன‌ செய்து கொண்டிருக்கிறேன் என்ப‌தை நொடிக்கொரு த‌ர‌ம் என‌க்கு நினைவுப‌டுத்திக் கொண்டே இருந்தார்.நூற்றி இருப‌து நிமிட‌ங்க‌ளில் நாற்ப‌த்தைந்து முறை,அவ‌ள் ஒரு ம‌ய‌க்க‌ப்புள்ளியிலிருந்து த‌ன்னை விடுவித்துக் கொள்ள‌ போராடித் தோற்றுக் கொண்டிருந்தாள்.

இடைவெளிகளை நிரப்புவதில் அவளுக்கும் உடன்பாடு இருந்திருக்கக்கூடும்.

பெளர்ணமி நாளின் நிலவின் குளிர்ச்சியும்,அவள் அருகாமை ஏற்படுத்திய உஷ்ணமும் ஒரு சேர அனுபவிக்கும் தருணங்கள் எத்தனை கொடுமையானது என்று அலைகளைச் சபித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் என்மீது கடற்கரை மணலைத் தூவி விளையாடி கொண்டிருந்தாள்.

என்கிரிப்டட் கவிதைகளை டிசைஃபர் செய்யும் உத்திகளை பழகிக் கொண்டிருக்கிறேன்.காலப்போக்கில் நிறைய புலப்பட்டு விடும்.

அவள் சுயமைதுனச் சித்திரங்களின் ஒரு கிளையாக எனது விரல்களும் நீட்சியடைந்திருக்கக்கூடும்.

எம்மை சோதனைகளில் விழவிடாதேயும்.தீமையிலிருந்து ரட்சித்தருளும்.

நெருக்கமான ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை.ஆனால் அதை என்னை உணர வைக்க அவள் எடுத்துக்கொண்ட சிரத்தை ரகசியங்களால் கட்டமைக்கப்பட்டது மட்டுமின்றி அது ஒரு சிக்கலான மதிப்பீடு.

*********

Monday, January 11, 2010

கேணி இலக்கிய சந்திப்பு,புத்தக கண்காட்சி சில குறிப்புகள்

கணிசமான தொகைக்கு இந்த வருடம் புத்தக சந்தையில் அள்ளியாகி விட்டது.வழக்கம் போலவே,வாங்க வேண்டும் என்ற நினைத்த பட்டியல் வேறு.புத்தக சந்தையில் நுழைந்த பின் உருவான பட்டியல் வேறு.மற்றபடி,அபிமான எழுத்தாளர்களான யுவன்சந்திரசேகர்,கோபி கிருஷ்ணன் இவர்களின் புத்தகங்களை வாங்க தவறவில்லை.நண்பர்கள் கேட்ட,பரிந்துரைத்த சில புத்தகங்கள் நிறைய கிடைக்கவில்லை.ஒவ்வொரு நாளும் பதிவுலக நண்பர்களை விழாவில் சந்தித்தது சுவாரஸியமான அனுபவம்.கிழக்கு வெளியீட்டில், ரகோத்தமன் எழுதிய ராஜீவ் காந்தியின் கொலைவழக்கு புத்தகத்தை அண்ணன் அப்துல்லா வாங்கி கையெழுத்திட்டு அன்பளித்தார்.

பதிவுலக நண்பர்களின் எழுத்துக்களை அச்சில் பார்த்ததும் ஏற்பட்ட பரவசம் சொல்லில் அடங்காது.

-------------

ஞாயிற்றுக்கிழமை ஹெவி மதிய உணவுக்கு பிறகு,பரபரப்பாக கிளம்பி,கலைஞர் நகர் ஞானியின் வீட்டை தாம‌த‌மாக‌ க‌ண்டடைந்தேன்.பதிவர் கிருஷ்ண‌பிர‌புவும் கைபேசியும் இல்லையென்றால்,விழா முடியும் போது தான் சேர்ந்திருப்பேன்.ச‌ரியாக‌ ஞானி வீட்டின் வாச‌லில் அடியெடுத்து வைக்கும் போது தான் க‌விஞ‌ர் சுகுமாற‌ன் ஒலிபெருக்கியையும் குர‌லையும் ச‌ரிசெய்து ஆர‌ம்பிக்கிறார்.வ‌ழ‌க்கமாக‌ ஞானி வீட்டின் கொல்லை புறத்தில் தான் ச‌ந்திப்பு ந‌ட‌க்கும் என்று கேள்வி.இம்முறை,அவ‌ர் வீட்டின் வ‌ர‌வேற்ப‌றையிலேயே ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌து.

என‌க்கு முன் பாயில் ச‌ம்ம‌ண‌மிட்டு அம‌ர்ந்திருந்த ஒரு பெண்ம‌ணி,எக்க‌ச்ச‌க்க‌ ஒப்ப‌னையில்,க‌விஞ‌ர் சுகுமார‌ன் அவ‌ர்க‌ளின் உரையில் லயித்திருந்தார்.லைட்டா திரும்புங்க ஆண்ட்டி என்று ம‌ன‌திற்குள் சொன்ன‌து அவ‌ர் காதில் எப்ப‌டி விழுந்த‌து என்று தெரிய‌வில்லை.லேசாக திரும்பினால்,செய்தி வாசிப்பாள‌ரும் ந‌டிகையுமான‌ பாத்திமா பாபு.பிறகு,நேர‌ம் செல்ல‌ செல்ல எல்லா க‌வனச்சிதறல்களையும், தேநீர் பிஸ்கட் கேக் போன்ற வஸ்துக்களின் வாசனைகளையும் த‌ன் பேச்சு ஆளுமையால் சுகுமார‌ன் முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டார்.

ஒரு மீசைக்கார‌ க‌விஞ‌னின் ப‌டைப்பு தான் த‌ன்னை முத‌ன் முத‌லில் புர‌ட்டிப் போட்ட‌தாக‌வும்,அதுவே தான் எழுத வ‌ந்த‌மைக்கு முழுமுத‌ற்கார‌ண‌மும் என்று சொன்னார்.எழுத‌ வ‌ந்த‌ கால‌த்தில் க‌வியுல‌கில் அப்போது க‌ர‌காட்ட‌ம் ஆடிக் கொண்டிருந்த பிச்ச‌மூர்த்தி,த‌ர்மு சிவ‌ராமு,பிர‌மிள் இவ‌ர்க‌ளின் பாணி த‌ன்னுள் வராம‌ல் இருக்க பெருஞ்சிரத்தை எடுத்துக் கொண்ட‌தாக‌வும் தெரிவித்தார்.எழுத்தாள‌ர் பாஸ்க‌ர் ச‌க்தியும்,ஞானியும் புன்முறுவ‌லோடு கேட்டுக் கொண்டிருந்த‌ன‌ர்.

ச‌ரியாக ஐந்த‌ரை ம‌ணிக்கு ந‌ண்ப‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு இட‌ம‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.மொழிபெய‌ர்ப்பு குறித்து கிருஷ்ண‌பிர‌பு கேட்ட‌போது,அதில் இருக்கும் ச‌ங்க‌ட‌ங்க‌ளை சுகுமார‌ன் எடுத்துரைக்க ஆர‌ம்பித்தார்.ம‌லையாள‌ எழுத்தாள‌ர் ப‌ஷீரின் க‌தைக‌ளை த‌மிழில் மொழிபெய‌ர்த்தல் எவ்வ‌ளவு ரிஸ்க் ஆன‌ காரிய‌ம் என்று தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து."எண்ட உப்பப்பாட்ட ஒரு ஆன உண்டு" குறுநாவலை "என் தந்தையிடம் ஒரு யானை இருந்தது" என்று ஒருவர் தவறாக மொழிபெயர்த்த கதையையும் கூறினார்.இருந்தாலும் குள‌ச்ச‌ல் யூசுப்பின் மீது என‌க்கு ந‌ம்பிக்கையிருக்கிற‌து."உல‌கப்புக‌ழ் பெற்ற‌ மூக்கு" வாங்கி வைத்திருக்கிறேன்.பார்ப்போம்.

அர‌சிய‌ல் சார்ந்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌,க‌விதை இய‌க்க‌மான "வான‌ம்பாடி" குறித்து நிறைய‌ ச‌ர்ச்சைக‌ள் எழுந்த‌ன.பிற‌கு அந்த‌ ச‌ர்ச்சை,பெண் க‌விஞ‌ர்க‌ளான‌ ச‌ல்மா,குட்டி ரேவ‌தி,மால‌தி மைத்ரிக்கு தாவியது.ஞாநி,சென்ஷேன‌லைஸ் செய்வ‌து மீடியா தான் என்று வாதிட்டார்.பிற‌கு,கவிதை புரித‌ல் குறித்து நானும் என் ப‌ங்குக்கு ஒரு கேள்வி கேட்டேன்.சில‌ த‌மிழ் க‌விதைக‌ளுக்கே எங்க‌ளுக்கு மொழிபெய‌ர்ப்பு தேவைப்ப‌டுகிறது என்கிற ஆத‌ங்க‌த்தையும் சொன்னேன்.எல்.கே.ஜி குழ‌ந்தைக‌ளுக்கு, பிள‌ஸ் டூ பாட‌ப்புத்த‌க‌த்தை கொடுத்தால் புரித‌ல் எப்ப‌டியிருக்குமோ,அப்ப‌டித்தான் என்று ஞாநி க‌ருத்து தெரிவித்தார்.க‌விதைக்கும் என‌க்குமான‌ இடைவெளி குறைந்த‌ மாதிரி தெரிய‌வில்லை.

ராகுகால கூட்டம் என்ற பெயர் மாறி,இச்சந்திப்பு இன்று ஒரு பிடிவாத கூட்டமாக அமைந்திருக்கிறது.புத்தக கண்காட்சி போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் இத்தனை பெரிய கூட்டம் வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது என‌வும் சில நாட்களுக்கு முன்னர் தான்,இதய அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும் பிடிவாதமாக இம்மாத கேணி சந்திப்பை நடத்தியே ஆக வேண்டும் என்று வெற்றிகரமாக நடத்திய ஞாநி அவர்களுக்கும்,கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கும் பாஸ்கர் சக்தி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

சந்திப்பு கலைந்து,நானும் கிருஷ்ணபிரபுவும் சில கவிஞர்களுமாக சேர்ந்து,சரவணபவனில் காபியுடன் ஒரு சிறு இலக்கிய கலந்துரையாடலில் பங்கேற்றது புதிய அனுபவம்.

*******