Tuesday, July 21, 2009

பாஸ்வேர்டு தேவ‌தைக‌ள்

*********

கால‌வ‌ழுவ‌மைதி

பையில் பத்து ரூபாயும்
பஸ் பாஸூம்
கொண்டாட கொஞ்ச‌ம் சுதந்திரமும்
வாய்க்கும் காலநிலையில்
அறிமுகமாவாள்;
நண்டு வளையில்
உலகம் காட்டுவாள்;
பொம்மைக‌ளோடு
ச‌ண்டையிட‌ க‌ற்றுத் த‌ருவாள்;
அரைநாள் பேசாவிட்டால்
ஒம்பேச்சுக்கா என்பாள்

குயவனின் சக்கரச் சுழலில்
உருப்பெறுமுன் சரிந்து விழும்
களிமண்ணாய் ஒருநாள்
சடுதியில் மரித்து உடைந்து போவாள்

அவ‌ள் க‌ன்ன‌ங்க‌ளில்
க‌ட்ட‌ப்ப‌ட்டிருக்கும்
உப்ப‌ள‌ங்க‌ளில்
என் நிராசைக‌ள்
எழுத‌ப்ப‌ட்டிருக்கும்.*******

இட‌வ‌ழுவ‌மைதி

நேற்று எதிர்பார்க்க‌வில்லை
எதிர்பாராத‌ "இன்று" வ‌ருமென்று.
ஒவ்வொரு நாளும் வேண்டிக் கொள்வேன்
அந்த‌ "இன்று" ம‌ட்டும் வானாளில்
வ‌ர‌வே கூடாதென்று.

எதிர்பார்த்த‌ப‌டியே
ஏமாற்றாமல் ஒருநாள்
வ்ந்து தொலைத்த‌து அந்த‌ "இன்று"
மின்சார‌ ர‌யிலில்.

"வேளா வேளைக்கு ஒழுங்கா சாப்பிடுறியா?"
"வெயில்ல‌ அலைஞ்சி ரொம்ப‌ க‌ருப்பாயிட்ட‌ல்ல‌?"
"அம்மா ந‌ல்லா இருக்காங்க‌ளா?"
"அக்கா கொழ‌ந்த‌ இப்ப‌ வ‌ள‌ந்துருப்பால்ல?"
"இப்பவும் க‌விதைல்லாம் எழுதுறியா?"
"எப்ப‌டிடா இருக்க‌?"
"ச‌ந்தோஷ‌மா இருக்கியா?"
"என்ன‌ ம‌றந்துட்டியா?"
"இல்ல‌ இப்ப‌வும் நினைச்சிப்பியா?"

கைக்குழ‌ந்தையும் க‌ண‌வ‌னும்
அருகில் இருக்க‌
கேட்க‌ நினைத்த‌ அனைத்தையும்
ஒற்றை நொடியில் வ‌லிக‌ளோடு
க‌ண்களாலேயே கேட்டு முடித்தாள்
மாயாவி ஒருத்தி!


**********

Tuesday, July 14, 2009

சுவார‌ஸிய‌ வ‌லைப்ப‌திவு விருது

ப‌ள்ளிக்கால‌ங்க‌ளில் க‌ட்டுரை போட்டிக‌ளில் தொடர்ந்து மூன்று ஆண்டுக‌ள் முதல் பரிசு வாங்கியவன் என்ற ஒரே அற்ப‌ த‌குதியை மட்டுமே ஆதாரமாக வைத்து,வ‌லைத‌ள‌த்தில் எழுத‌ வ‌ந்த‌ என‌க்கு கிடைக்கும் சிறிய‌,பெரிய‌ அங்கீகார‌ங்க‌ள் உண்மையிலே அவ‌ற்றிற்கு நான் த‌குதியான‌வனா என்ற‌ சிந்த‌னையை அவ்வப்பொழுது தூண்டுவதுண்டு.அது ஒருபுறமிருக்க..

அண்ணன் செந்த‌ழ‌ல் ர‌வி மூலமாக,நான் விரும்பி வாசிக்கும் பதிவர் அமித்து அம்மா என்னையும் சுவார‌சிய‌ ப‌திவ‌ர் ப‌ட்டிய‌லில் சேர்த்து,என் ப‌திவுக‌ளுக்கும் வாகைப்பூ சூட்டியிருக்கிறார்.பெருமையாக‌ உண‌ர்கிறேன்.

அவ‌ர்க‌ள் இருவ‌ருக்கும் மிக்க‌ ந‌ன்றி !!!!

என‌வே இந்த‌ ச‌ங்கிலித்தொட‌ர் ச‌ம்பிர‌தாய‌த்தை க‌ர்ம‌சிர‌த்தையோடு நிறைவேற்றும் சீரிய‌ ப‌ணி என்னிட‌ம் ஒப்ப‌டைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.தொட‌ர்ப‌திவு என்ற‌வுட‌ன்,ந‌ம‌து க‌டைக்கு வ‌ரும் ரெகுல‌ர் க‌ஸ்ட‌ம‌ர்க‌ளையும் நெருங்கிய‌ ந‌ண்ப‌ர்க‌ளையும் அழைத்து,த‌ட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் ப‌ர‌ஸ்ப‌ர‌ சொறித‌லில் என‌க்கு உட‌ன்பாடில்லையாதலால்,கொஞ்ச‌ம் சீரிய‌ஸாக,இந்த‌ விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று அதிகப்பிரசங்கித்தனமாக யோசித்து,ஆறுபேரை அலசி எடுத்திருக்கிறேன்.


இவ‌ர்க‌ளுக்கு விருது வ‌ழ‌ங்க‌ நான் த‌குதியான‌வ‌னா என்ற‌ கேள்வி உள்ளுக்குள்
பீடிகை போட‌த்தான் செய்கிற‌து.எது எப்ப‌டியாக‌ இருந்தாலும் இவ‌ர்கள் தான் என் எழுத்துக‌ளை சுத்திக‌ரித்து கொண்டிருப்பவர்கள்.ம‌றைமுக‌மாக‌ என‌க்கு பாட‌ம் ந‌ட‌த்தி கொண்டிருப்ப‌வ‌ர்க‌ள்.யாரெல்லாம் ?

பீமோர்க‌னின் "வ‌ழிப்போக்க‌ன்"

என்னை அடித்து துவைத்த‌ எழுத்துக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.அவ‌ருடைய
"ச‌முத்திர‌த்தில் மீன்க‌ளை வ‌ரைப‌வ‌ன்" ப‌திவின் அனைத்து வ‌ரிக‌ளும் என‌க்கு ம‌ன‌ன‌ம்.த‌னிப்ப‌ட்ட‌ முறையில் இவ‌ரை அதிக‌ம் தெரியாது என்றாலும், இவ‌ர் எழுத்துக்க‌ளை மிக‌வும் நேசிக்கிறேன்.

ஆடுமாடு

ம‌ண்வாச‌னை மிக்க சிறுக‌தைக‌ளை ம‌ட்டுமே எழுதுகிறார்.

சுவார‌சிய‌மான‌ எழுத்துக‌ளை வாசிக்கும்போது,என்னைய‌றியாம‌ல் ந‌க‌ங்க‌ளால் என் உத‌டுக‌ளை கிள்ளுவ‌துண்டு.அந்த‌ வ‌கையில் உதட்டில் இர‌த்த‌ம் வ‌ரும‌ளவு,ப‌டிக்க‌ வைத்து புண்ணாக்கிய‌வ‌ர் ஆடுமாடு.அவ‌ர் ப‌திவுகளுக்கு பின்னூட்ட‌மிடும் அளவுக்காவ‌து நான் த‌குதிய‌டைய‌ வேண்டும் என்று முய‌ற்சி செய்து கொண்டிருக்கிறேன்.

லேகாவின் "யாழிசை ஓர் இல‌க்கிய‌ ப‌ய‌ணம்"

எஸ்.ரா.வின் ம‌ன‌ங்க‌வ‌ர்ந்த‌ டாப்டென் வ‌லைப்பூக்க‌ளில் யாழிசையும் ஒன்று.த‌மிழின் குறிப்பிட‌த்தக்க ப‌டைப்புக‌ளை அறிமுக‌ம் செய்து வைத்து,த‌மிழ் கூறும் ந‌ல்லுல‌குக்கு ச‌த்த‌மில்லாம‌ல் ஒரு சேவையை செய்து வ‌ருகிறார் லேகா.ந‌ல்ல‌ படைப்புக‌ளுக்கான‌ தேட‌ல்க‌ளுக்கு லேகாவின் வ‌லைப்பூ ஒரு முற்றுப்புள்ளி.நேர‌ம் கிடைக்கும் போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் ப‌திவ‌ர் இவ‌ர்.இவ‌ருடைய‌ ப‌ர‌ந்த‌ வாசிப்பை க‌ண்டு விய‌ந்திருக்கிறேன்.

ஆதிமூல‌கிருஷ்ண‌னின் "புல‌ம்ப‌ல்க‌ள்"

இவ‌ருடைய‌ ர‌க‌ளையான‌ த‌ங்க‌ம‌ணி ந‌கைச்சுவை ப‌திவுகள் அதிகம் பேச‌ப்ப‌ட்டாலும்,இவ‌ருடைய‌ குறுங்க‌தைகளைத் தான் நான் அதிக‌ம் ர‌சித்திருக்கிறேன்."நீ நான் அவ‌ள்" என்ற‌ ப‌திவை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்க‌ள்.துறை சார்ந்த‌ ப‌திவுக‌ள், சிறுக‌தை, மொக்கை என‌ அனைத்து த‌ர‌ப்பின‌ரையும் சுண்டி இழுக்கும் டிபிக்க‌ல் ம‌சாலா+த‌ர‌ம் வாய்ந்த‌ வலைப்பூ இவ‌ருடைய‌து.ந‌ர்சிம்,ப‌ரிச‌ல் வ‌ரிசையில் இன்னுமொரு MR.CONSISTENT !

அக‌நாழிகை பொன்.வாசுதேவன்

வெகுஜ‌ன‌ ஊட‌க‌ங்க‌ளில் அதிக‌ம் தொட‌ர்புடைய‌வ‌ர் என ந‌ண்ப‌ர்க‌ள் மூல‌ம் கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்+பதிவர்.க‌தை சொல்லிக‌ளுக்கு கே.ர‌விஷ‌ங்கர் ஒரு ஆசிரிய‌ர் என்றால்,க‌விதை எழுதிக‌ளுக்கு வாசு அவ‌ர்க‌ள் ஒரு ஆசிரிய‌ர்.ப‌ல‌ ந‌ல்ல‌ த‌மிழ் வார்த்தைக‌ளை க‌ற்ப‌த‌ற்காக‌வே அவ‌ர் வ‌லைத‌ள‌த்துக்கு நான் அடிக்கடி செல்வ‌துண்டு.இவ‌ருடைய‌ "போடா ஒம்போது" க‌ட்டுரையை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பார்க்க‌வும்.முழுக்க‌ முழுக்க‌ அக்மார்க் த‌ர‌ம் வாய்ந்த‌ ப‌டைப்புக‌ளுக்கு சொந்த‌க்கார‌ர்.

அனுஜ‌ன்யா

'க‌விதை எழுதி'க‌ளுக்கு ஒரு மான‌சீக‌ குரு.கீற்று,உயிரோசை,நவீன‌ விருட்ச‌ம் மின்னித‌ழ்க‌ளில் தொட‌ந்து இவ‌ருடைய‌ க‌விதைக‌ள் பிர‌சுர‌மாகின்ற‌ன‌.
இவ‌ருடைய‌ "ரொட்டியும் மீன்க‌ளும்" க‌விதையை ப‌டித்து உறைந்து போனேன்.நீ சிகரெட் பிடிப்பியா என்று என் பெற்றோர்கள் சந்தேகிக்குமளவுக்கு நான் உதடு கிழித்து புண்ணாக்கியதற்கு இவருடைய‌ எழுத்துக‌ளும் ஒரு காரணம்.உரைந‌டையை எப்ப‌டி சுவார‌ஸிய‌மாக‌ கையாள்வ‌து எனக் க‌ற்று கொள்ள விரும்பும் புதிய‌வ‌ர்க‌ளுக்கு நான் முத‌லில் ப‌ரிந்துரைக்கும் வ‌லைப்ப‌க்கம் அனுஜன்யா அவ‌ர்க‌ளுடைய‌தாயிருக்கும்.

சாஸ்திர‌ ச‌ம்பிர‌தாய‌ப்ப‌டி,ஆறுபேரும் த‌ங்க‌ள் அபிமான‌ ப‌திவ‌ர்க‌ளுக்கு இவ்விருதை ப‌கிர்ந்த‌ளிக்க‌ வேண்டுமாம்.


**************

Wednesday, July 8, 2009

உயர்ரக மந்திகள்


"இன்னிக்கும் ச‌ரியா க‌ழுவ‌ல.நேத்து சட்ட காலர்ல அழுக்கு அப்படியே இருந்துது.இன்னிக்கும் எல்லா த‌ட்டுல‌யும் கொழ‌ம்பு கற‌ ஒட்டிண்ருக்கு.ஒருநாள்,ரெண்டு நாள்னா பொறுத்துக்கலாம்.தினமுமா? இந்த‌ மாச‌ கூலிய கொடுத்துட்டு ச‌னிய‌ன‌ இதோட‌ த‌ல‌ முழுகிட‌ வேண்டிய‌து தான்" க‌ண‌வ‌னிட‌ம் பொரும ஆரம்பித்தாள் பார்வ‌தி.

"பாவம்டி அவ! அன்னிக்கே பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு சொல்லிட்ருந்தா.இந்த‌ நேர‌த்துல போயி அவ‌ள‌ நிப்பாட்ட‌ணும் நினைக்கிற‌து ச‌ரியாப்ப‌ட‌ல‌.உக்காத்தி வ‌ச்சி பேசிப்பாரு!! அவ‌ளுக்கு தேவையான‌த‌ செஞ்சி கொடு!!" அன‌ந்த‌ன் சொன்னதும் பார்வ‌திக்கு கொஞ்ச‌ம் விட்டுதான் பிடிக்க‌லாமென்று தோன்றிய‌து.

அன‌ந்த‌ன் பார்வ‌தி த‌ம்ப‌தியின‌ர் ஆர‌ஞ்ச் க‌வுண்டி அபார்ட்மென்டிற்கு குடிவ‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாய் வேலைக்காரி லீலா தான் அவ‌ர்க‌ளுக்கு எல்லாம்...க‌ண‌வ‌ன் உட‌னிருந்த‌ வ‌ரை ஜாம்ஜாமென்று வாழ்ந்து கொண்டிருந்த‌வ‌ள் அவ‌னை விட்டு பிரிந்த‌தும்,நூல‌றுந்த‌ ப‌ட்ட‌ம் போல‌ ஆனாள்.வ‌யிற்று பிழைப்புக்காக‌வும் வீட்டு வாட‌கைக்காக‌வும் ம‌ட்டுமில்லாம‌ல் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைத்து ந‌ல்ல‌ நிலைக்கு கொண்டு வ‌ர‌வேண்டும் என்ற‌ வைராக்கிய‌ம் அவ‌ளிட‌ம் அதிக‌ம் இருந்த‌து.

"மாச‌ சம்பளத்த‌ கூட்டி கொடுத்தா எந்த‌ வேலையையும் மொகஞ்சுழிக்காம‌ செய்வா!"

பி-பிளாக் கச்சபேஸ் சொன்னபோது தான் அனந்தனுக்கு லேசாக‌ பின்ம‌ண்டையில் ச‌ப‌ல‌ம் த‌ட்டிய‌து.நேற்று ஸ்டூல் மேல் ஏறி,ப‌ர‌ணிலிருந்த‌ எலிப்பொறியை எட்டி எடுக்கும்போது, க‌றுத்த‌ தேக‌த்தில் திமிரி கொண்டிருந்த‌ அவ‌ள் அழ‌கு அன‌ந்த‌னை நிலைகுலைய‌ வைத்த‌து.இது போன்று ப‌ல‌த‌ருண‌ங்க‌ள் அன‌ந்த‌னை உசுப்பி விட‌ ஆர‌ம்பித்த‌து.வேண்டுமென்றே தான் இப்ப‌டி உடைய‌ணிகிறாளா..இல்லை செய்யும் வேலையை போன்றே துணியுடுத்துவ‌திலும் அச‌ட்டை தானா?

ப‌ல‌நாள் ப‌சிக்கு இன்று தீனி போட்டுவிட‌ வேண்டுமென முடிவு செய்தான்.வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கம் போல‌ பார்வ‌தி கதாகாலட்சேபத்துக்கு சென்றிருப்பாள்.இந்த‌ வாய்ப்பை நழுவ விட்டால் திரும்ப‌ கிடைக்காது.பெர்ச‌ன‌ல் வொர்க் என‌ மேனேஜ‌ரிட‌ம் சொல்லிவிட்டு மதியம் 2 ம‌ணிக்கே கிள‌ம்பினான்.ஏடிஎம்மில் அட்டையை நுழைக்க‌ அது க‌த்தை க‌த்தையாக‌ நோட்டுக‌ளை உமிழ்ந்த‌து.

காலிங் பெல்லை அழுத்த‌ க‌த‌வை திறந்தது எதிர்பார்த்தபடி லீலாவே தான்.

"உட‌ம்பு ஏதும் ச‌ரியில்லீங்க‌ளாய்யா !! சீக்கிர‌ம் வ‌ந்துட்டீங்க‌" ....

"ஆமா லேசா த‌லைவ‌லி அதான்..." க‌த‌வை தாளிட்டான் அன‌ந்த‌ன்.

"இருங்க‌ய்யா நான் காபி போட்டு த‌ர்றேன்" ....லீலாவின் விய‌ர்வை வாடை அனந்தனை கிறங்கடித்தது

"உன் பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ காசு வேணும்னு சொன்ன‌ல்ல.அந்த‌ க‌றுப்பு பாலிதீன் பைக்குள்ள‌ வ‌ச்சிருக்கேன் எடுத்துக்க‌..

எனக்கு உன்ன‌ ரொம்ப‌ பிடிச்சிருக்கு லீலா..ஒரே ஒருமுறை...இன்னிக்கு ம‌ட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.உன் பைய‌ன‌ கான்வெண்ட் ஸ்கூல்ல‌ ப‌டிக்க‌ வைக்க‌ப்போறியா...இல்ல கார்ப்ப‌ரேஷ‌ன் ஸ்கூல் போதுமா?.."

பின்புற‌மிருந்து லீலாவை க‌ட்டிய‌ணைக்க‌ முய‌ன்ற‌வ‌னை ப‌டாரென்று த‌ள்ளி விட்டு,முந்தானையை சரிசெய்து கொண்டு சுவற்றில் சரிந்தாள் லீலா.அவ‌ள் கண்கள் நிறைந்திருந்தன.

அரை நிமிட சுழற்சியை சட்டென நிறைவு செய்தது கடிகாரம்.

பெறும் கதறலுக்கு பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு "வேணாம்யா...இந்த‌ அபார்ட்மென்ட் க‌ட்ட‌ற‌ நேர‌ம் இங்க‌ எல‌க்ட்ரீசிய‌ன் வேலைக்கு வ‌ந்த‌ புருசன் ஒரு சித்தாள் பொம்ப‌ள‌ கூட இருந்த‌ தொட‌ர்பால‌ தான், நான் இப்ப‌ ப‌த்து பாத்திர‌ம் தேய்க்க‌ வந்துருக்கேன்.எம்புள்ளைங்க‌ இன்னிக்கு அர‌வ‌யிறு காவ‌யிறு க‌ஞ்சிக்கும் க‌ஷ்ட‌ப்ப‌டுது.அந்த‌ நெல‌ம‌‌ பார்வ‌தி அம்மாவுக்கும் வ‌ர‌க்கூடாது.கிழிஞ்ச‌ சேலையோட‌ வ‌ந்த‌ நான் இன்னிக்கு க‌ட்டிட்ருக்க‌து அவ‌ங்க‌ளோட‌ சேலையத்தான்.என்கிட்ட‌ மிச்ச‌மிருக்கறது இது ஒன்னுதான்யா..என்ன‌ விட்ருங்க‌..நாளையிலிருந்து நான் வ‌ர‌ மாட்டேன்." க‌ண்ணீரை துடைத்து கொண்டு வெளியேறினாள்.

"காய‌வ‌ச்ச‌ துணியெல்லாம் மழையில நனைஞ்சிண்டுருக்கு..பாருங்க‌!!
இன்னிக்கும் துணிய‌ எடுக்காம‌ போயிட்டாளா?" த‌லையை துவ‌ட்டி கொண்டே வ‌ந்த பார்வ‌தியிட‌ம், "ஆமாண்டி.அவ‌ ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டா.அழுக்கும் க‌றையும் இனிமே இருக்க‌க் கூடாதுன்னு நான் தான் அவள நாளையிலர்ந்து வேலைக்கி வ‌ர‌ வேணாம்னு சொல்லிட்டேன்."


*******************************

Sunday, July 5, 2009

மேகங்கள் திரட்டுவது நீ !


பொய்யாக சண்டை போட்டு
தற்காலிகமாக பிரிந்திருந்து
அடுத்த நாள்
பொழிய விருக்கும்
அடைமழைக்காக காத்திருப்போம்.

விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.

இது சிலந்தி வலையென்று
தெரிந்தும் தெரியாதது போல
மழையே பிடிக்காத பெண் போல
குடையோடு வந்திருப்பாய்.

தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்
கொட்டும் மழையில் நனையாது
தவமிருப்போம்.

வெறுமையின் சருகில்
விரக்தி பொறிபட்டு
கனவுகள் தீப்பிடிக்குமுன்
மெல்லிய சாரல் அதை அணைத்து விடும்
மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.

உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.

இன்னுமொரு பிரப‌ஞ்சத்தில்
மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.

வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருந்த‌து ந‌ம் காத‌ல்.


************

பி.கு: பூனேவில் ம‌ழைக்கால‌ம் என்ப‌தால்
எந்த‌ ச‌ம்ப‌ந்தமோ காரணமோ இன்றி ( குவாலிட்டி க‌ம்மியா இருந்தாலும் )
ஒரு மீள்ப‌திவு.க‌ல்லூரி கால‌ங்க‌ளில் எழுதிய‌து.

**********************

Thursday, July 2, 2009

கறையான்கள் அரித்த மீதிக்கதவுகள்கட‌ந்து செல்லும் ம‌னித‌ர்க‌ளின் சூட்டை நுக‌ரும் திற‌ந்த‌ க‌த‌வுக‌ளைக் காட்டிலும்,மூடிய க‌த‌வுக‌ள் கொஞ்ச‌ம் அனுபவ‌சாலிக‌ள்.அந்த‌ இடைவெளி ச‌ர்விலிய‌ன்ஸ் கேமிரா பொருத்த‌ப்ப‌ட்ட‌ அபார்ட்மென்ட் க‌த‌வுக‌ளுக்கும், திறந்த‌வெளி கிராம‌த்து திண்ணை வீட்டு க‌த‌வுக‌ளுக்குமான அனுப‌வ‌ இடைவெளி.அடைமழை காலங்களில் விடுமுறை அறிவித்து பூட்டப்படும் பள்ளிக்கூடத்து கதவுகள் திடீர் மகிழ்ச்சியையும்,எதிர்பார்த்து சென்ற நண்பன் வீட்டு பூட்டிய கதவுகள் ஏமாற்றத்தையும் தரவல்லவை.

மூடிய வீட்டின் க‌த‌வுக‌ளை பார்க்கும் போது ஏற்ப‌டும் உண‌ர்வுக‌ள் அலாதியான‌வை..உள்ளே காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,கம்பளங்கள் விரிக்கப்பட்டு,மர வேலைப்பாடுகளோடும் அழகூட்டப்பட்டிருமா அல்லது விரிசல்கள் படர்ந்து உள்ளே பாம்பு,பூரான்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்குமா? ஒளிந்திருப்பது ஆடம்பரமா? ஏழ்மையா? உள்ளிருக்கும் அறைக‌ள் முழுவதும் சில‌ந்தி வ‌லை பின்ன‌ப்ப‌ட்டு பாழ‌டைந்த‌ தோற்ற‌ம் உருவாகியிருக்குமா? நிரந்தரமாக பூட்ட‌ப்ப‌ட்ட‌ க‌த‌வுக‌ளின் பின் வாழும் சுவ‌ர்க‌ளின் நிலைமை என்ன‌வாகி போயிருக்கும்? த‌ங்க‌ளுக்குள் பேசி கொண்டு அச்சுவர்கள் ச‌க‌ஜ‌பாவ‌ங்க‌ளை க‌ற்று கொண்டிருக்குமா? அல்லது தம்மோடு ஒன்றிப்போயிருக்கும் ப‌ல்லிக‌ளின் இச்சைக‌ளை பார்த்து முக‌ம் சுளிக்க‌ தொட‌ங்கியிருக்குமா? என்றெல்லாம் ஆர்வமிகுதியில் நிறைய கேள்விகள் எழுவதுண்டு.

'பூட்டிய வீட்டை பார்த்தால் உனக்கு என்ன தோன்றும்' என்று அலைபேசியில் தோழியிடம் கேட்டால் 'ம்ம்ம்...பயம்ம்மாயிருக்கும்' என்று மிரட்சியோடு பதில் சொல்வாள்.பூட்டிய வீட்டிற்கும் அவளுக்குமான சம்பந்தம் நிறைய பேய்க்கனவுகளில் தோன்றியதாக‌ குற்றம் சாட்டுவாள்.பார்த்து பார்த்து மரத்தையும் வர்ணப்பூச்சுகளையும் தேர்வு செய்து அரிதின் முயன்று இழைத்த கதவுகளை,ஏதோ ஒரு காலசூழ்நிலை கறையான்களுக்கு உணவாகவும்,குழந்தைகளை பயமுறுத்த காட்சி பொருளாகவும் ஆக்கி விடுகிறது.

வண்ணவிளக்குகளின் வெளிச்சத்தில் சிரித்து கொண்டிருக்கும் தோரணங்கள் கட்டப்பட்ட‌ கல்யாண‌ வீடுகளை விட,முட்செடிகளால் சூழப்பட்ட‌ இருளில் பூட்டப்பட்ட கதவுகளின் ஈர்ப்பு அதிகம்.நிரந்தரமாக பூட்டப்படும் கதவுகளை விட,தற்காலிக பூட்டப்படுதல்கள் தான் கள்வர்களின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன. இரவுகளில் 'அந்த மாதிரி' இத்யாதிகள்லாம் நடக்குதாம்' என்பன போன்ற அவதூறு குற்றச்சாட்டுகளில் ஆரம்பித்து,'அந்த‌ வீட்டுல‌ தான் ஒரு பொண்ணு தூக்கு போட்டு தொங்குச்சாம்' ரீதியிலான‌ திகில் க‌தைக‌ள் வ‌ரை அனைத்து வ‌சைக‌ளையும் பூட்டிய‌ வீட்டின் காதுக‌ளாக‌ அந்த‌ க‌த‌வுக‌ள் கேட்டு கொண்டுதானிருக்கின்ற‌ன‌.

தேக்கு,ரோஸ்வுட் என்று இழைத்து இழைத்து க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ க‌த‌வுக‌ளை க‌ன‌த்த‌ பூட்டுக‌ள் எப்போதுமே அல‌ங்க‌ரிப்ப‌தில்லை.கதவுகளை வடிவமைக்கும் போது,பூட்டுகளை பற்றி யாரும் ஏன் அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை என்று கூட‌ சில‌நேர‌ங்க‌ளில் நினைக்க‌த் தோன்றும்.

மூடிய‌ க‌த‌வுக‌ள் எங்கோ ஓரிட‌த்தில் யாரோ ஒருவ‌ரின் சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை மெள‌ன‌மாக‌ அறிவித்து கொண்டிருக்கின்ற‌ன‌.இரவோடு இரவாக காலிசெய்த காதலி வீட்டு கதவுகள் பிரிவின் உச்சத்தை உரக்க சொல்லி கொண்டிருக்கின்றன.மனிதர்கள் இல்லா வெற்றிடத்தை அஃறிணை பொருட்கள் நிரப்ப முயன்று தோற்றிருக்கலாம்.மின்விசிறிகள் அணைக்கப்பட்டு,சில நினைவுகள் மட்டுமே சுழன்று கொண்டிருக்கலாம்.திறக்கப்படாமலே இருக்கும் பல கதவுகள் பின்னாளில் தத்தம் முகவரிகளை மறந்து போகலாம். சாலையில் போவோர் வருவோரையும்,பாராமுகமாய் செல்லும் தபால்காரரின் சைக்கிள் பெல்லையும் ஏக்கத்தோடு எதிர்நோக்கியிருக்கலாம்.இரவுக்கும் பகலுக்குமான சுழற்சி,பூட்டிய வீடுகளுக்கு எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.கிழிக்கப்படாத திகதிகள்,உலகம் தற்காலிமாக எந்த ஒரு சலனமுமற்று நின்று போனதாக உள்ளிருக்கும் பொருட்க‌ள் நினைக்கக் கூடும்.

பூட்டிய கதவுகளுக்கும் தனிமைக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை.ஏதோ ஒரு மொழி நான்கு சுவ‌ர்க‌ளுக்குள் சிறை வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.இருள் க‌ப்பிய‌ அந்த‌ சுவ‌ர்க‌ளின் மேல் வெறுமையின் கிறுக்க‌ல்க‌ள் ப‌ட‌ர்ந்திருக்க‌லாம்.பொருள் பொதிந்த‌ மெள‌ன‌ங்களையும் சோகங்களையும் சும‌ந்து கொண்டு வெளியே சிரித்துகொண்டுதானிருக்கின்ற‌ன‌ பூட்டிய‌ வீட்டின் க‌த‌வுக‌ள்.

**********************