Friday, September 18, 2015

நீ நிரம்பிய உலகமும் நம் மனிதர்களும்



சென்னை நகரின் ஒடுங்கிய மூலையில் அந்த பேருந்து நிலையம் இருந்தது. பாரிமுனைக்குச் செல்ல வேண்டுமென்றால் 116 ஆம் நம்பர் பேருந்துக்காக காத்திருக்க வேண்டும். நம்மோடு சேர்ந்து 116 பேர் காத்து நிற்பார்கள். அவ்வளவு தாமதமாக, நிச்சயமற்ற கால இடைவெளியில் தான் அப்பேருந்து புகையைக் கக்கிய படி வந்து செல்லும். பாரிமுனையிலிருந்து அடையாறு நோக்கிச் செல்லும் இன்னொரு பேருந்தில் ஏறி கல்லூரிக்குச் சென்றடைவேன். வாகன நெரிசல், கூட்டம், புழுக்கம் என எல்லா அசெளகரியங்களையும் கடந்தும், அந்தப் பயணங்கள் ஒரு நாளும் சலிப்பைத் தந்ததேயில்லை. காரணம் நண்பர்கள். இரண்டு இருக்கையில் நான்கு பேர் அமர்ந்திருப்போம். ஒருவர் காலின் மீது ஒருவர் நின்றிருப்போம். பஸ் பாஸைத் தவிர பையில் பணம் என்ற ஒரு வஸ்து அறவே இருக்காது. ஆனால் பேச்சுக்கும் சிரிப்புக்கும் கும்மாளத்துக்கும் குறைவிருக்காது. கல்லூரி வாழ்க்கையின் மூன்று ஆண்டுகளும் தொடர்ந்து நண்பர்களோடு தான் அந்த பேருந்து நாட்களைக் கடந்திருக்கிறேன்.

பயணங்கள் எப்போதும் அசதியானது தான். எதிர்பாராமைகளை தொடர்ந்து சந்திக்க வேண்டும். புதிய அனுபவங்கள் ஒவ்வொரு நிறுத்தத்திலும் காத்திருக்கும். எல்லா இடர்களையும் மீறி, தற்காலிக எல்லைகளை அடையும் போது , பயணத்தின் உண்மையான ருசி புலப்படும். நீண்ட பயணங்களைக் கடந்து, ஏகாந்தமான காற்றை அனுபவிக்கும் போது, அது ஒரு சுகமான இளைப்பாறுதலாக இருக்கும். அப்படியான ஒரு நீண்ட பயணத்தைக் கடந்து வந்த இளைப்பாறுதலை இன்று உணர்கிறேன். உன்னதமான கணங்களையும், திருப்பங்களையும், உடல் சுகவீனங்களையும், உற்சாகமான நாட்களையும் ஒருங்கே கடந்து வந்திருக்கிறோம். இவ்வளவு தூரம் மலையேறி வந்திருக்கிறோமா என்று பார்க்கும் போது, ஐந்தாண்டு கால பள்ளத்தாக்கு, கீழே பசுமையாக நம் கண் முன் விரிந்து படர்ந்திருக்கிறது. மலைச் சரிவுகளில் பேருந்தில் இருந்து இறங்கி, ஒன்றுக்கு ஒதுங்கும் போது, வெறுங்காலில் சுருக்கென்று குத்தும் பனிக்குளிரின் ஈரத்தைப் போல, உன்னுடனான நாட்களும் இப்படியான எதிர்பாராமைகளின் அன்பால் என்னை நனைத்த படியே இருக்கின்றன. உன் கை பிடித்து ஏறி வந்த இந்த நெடும்பயணம் ஒரு நாளும் சலிப்படைய வைத்ததில்லை.

திருமண நாளுக்கு நான்கைந்து நாட்கள் மீதமிருந்த போது, காலம் அவ்வளவு பொறுமையான ஆசாமியாக இருந்தது. போய் ஒரு டீ குடித்து விட்டு வருகிறேன் என்கிற அளவுக்கு சாவகாசம். அடுத்த டீ குடித்து முடிப்பதற்குள் ஐந்து ஆண்டுகள் உருண்டோடி விட்டன. ஐந்து பெருக்கல் 365 ஏ கால் நாட்கள், ஒவ்வொரு நாளும் புதியது தான். புதியது என்ற உண்மையை உணரும் முன் அடுத்த நாளை வேகமாக நம் காலடியில் வந்து போட்டு விடுகிறது இந்த நகரம். இப்படியாக சிறுகச் சிறுகச் சேமித்த நாட்களையும் செலவழித்த நாட்களையும் கணக்குப் போட்டால் எஞ்சியிருப்பது நீ மட்டுமே. உன்னைக் கொண்டு என் நாட்களை நிரப்பிக் கொள்வது மட்டும் தான் எனக்கு பிடித்தமானதாக இருக்கிறது. வேறு பொருட்களைச் சேமிப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இரவும் பகலுமாக நாம் சேர்ந்து சேமித்தது அழகான நினைவுகளைத் தான். பெரும்பாலும் கசப்பான அனுபவங்களை ஓரிரு நாட்களில் மறந்து விடுவோம்.

மகப்பேறு மருத்துவமனையில் ஊசி வலியில் நீ அழுத போது, "எதற்கெடுத்தாலும் அழக் கூடாது. அது தவறான கருத்து" என்று கருத்துச் சொன்ன தாதிப் பெண், "ஆட்சியே மாறிரிச்சி...40 ரூவாயா...." வென‌ அருப்புக் கோட்டை சினிமா கட்டணத்தை வியந்து வாய் பிளந்த கிராமத்துத் தொழிலாளி, தூத்துக்குடி செல்லும் ரயிலில் சன்னலோரம் அமர்ந்து இரவு முழுதும் பென்சில் பாக்ஸை திறந்து திறந்து பார்த்தபடியே வந்த கண்ணாடி போட்ட சிறுமி, காலாண்டு விடுமுறையைக் கொண்டாட புத்தகப்பைகளோடு ரயிலேறிய பள்ளிக்குழந்தைகள், சீலம் பேக்கரி ஜோதிகா, "நம்ம புருசன்" செஞ்சது என்று பிரியாணி கொடுத்த பக்கத்து வீட்டு பெங்காலி ருக்சு அம்மா...பழம் வாங்கும் போதெல்லாம் குழந்தையின் கையில் ஒரு கொத்து திராட்சையைத் திணிக்கும் முத்தமிழ் நகர் பழக்கடைக் காரர், எந்த உடல் உபாதையைச் சொன்னாலும் ஒரே மாதிரியான மருத்துவ சிகிச்சையளிக்கும் பேருந்து நிலைய அக்குபஞ்சர் மருத்துவர், தாமதமான இரவில் சோம்பேறியாக பஞ்சர் போட்டு, முடியும் தருவாயில் பசிக்குதுக்கா..போய் சாப்ட்டு வந்துர்றேன் என கரச்சலைக் கொடுத்த வேளச்சேரி ஒல்லிக்குச்சி சிறுவன்... என நம்மிருவருக்கும் பொதுவானவர்கள் நிறைய பேர் நம்மைச் சுற்றி வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். நம் வாழ்வை இப்படியான வெள்ளந்தி மனிதர்கள் தான் அழகாக்குகிறார்கள். அன்பு நம்மிருவரையும் சுற்றி ஒரு திடப்பொருள் போல உறைந்து கிடக்கிறது அல்லது ஒரு சிற்றோடையைப் போல முட்களையும் கற்களையும் சுழித்து ஓடிக் கொண்டிருக்கிறது.

உன்னைக் கை பிடிக்கும் முன் பேசும் போது நம் கனவுகளைப் பற்றி பேசிக் கொள்வோம். தெருவோரக் கடைகளில் சாப்பிடுவது முதற்கொண்டு, ஒன்றாக கவிதை புத்தகம் வாசிப்பது வரை எண்ணற்ற கனவுகள் நம்மிடையே இருந்தன. எல்லா கனவுகளையும் ஏறத்தாழ நனவாக்கி இருக்கிறோம். தண்டவாளத்தை கடக்க விடாமல் ஒரு நீண்ட கூட்ஸ் ரயில் நிதானமாக போய்க் கொண்டிருக்கும். அதன் கடைசிப் பெட்டி எப்போது வரும் என்று காத்துக் கொண்டே இருப்பது போலத் தான் கனவுகள் நனவாகும் தருணமும். இன்றளவும் கனவுகள் சுரந்து கொண்டே தான் இருக்கின்றன. ஆனால் கடைசிப் பெட்டியை நாம் இருவரும் எதிர்பார்க்காமல் இருக்கிறோம். அது தான் நம் இருவருக்கும் பிடித்திருக்கிறது.