Sunday, September 18, 2011

எப்போதுமிருக்கும் ஒருநாள்



பொடி கடை,பாண்டியன் பலசரக்கு, விதை உரம் பூச்சி மருந்து கடை,அமுதலிங்கேஸ்வரர் திருக்கோயில்,கோயில் சாவி எதிரே உள்ள பட்டறையில் இருக்கிறது இரும்பு பலகை,ஆழாக்கரிசி வணிக வளாகம்,சுலைகா மர இழைப்பகம்,அச்சம்மாள் கிளினிக், ஃபிரண்ட்ஸ் புரோட்டா கடை, மிட்டாய் கடை,உப்புமா,கேசரி விற்கப்படும் ஒரு டீக்கடை சன்னல் வழி பார்த்தபடியே வந்த களிப்பில் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பயணித்த பேருந்து களைப்பு ச‌ற்று த‌ணிந்திருந்த‌து.

பல‌முறை த‌ண்ணீர் தெளித்து அய‌ர்ன் செய்த புது ச‌ட்டை முதுகுப்புற‌ம் சாய்ந்து அம‌ர்ந்த‌தில் நிறைய‌ க‌ச‌ங்கியிருந்த‌து.வெயிலின் உக்கிர‌ம் புது பேருந்து நிலைய‌ பாத்திர‌க்க‌டையின் எவ‌ர்சில்வ‌ர் குடக்கண்ணாடியில் முக‌த்தை இன்னும் க‌ருப்பாகக் காட்டிய‌து.பெரிய‌ப்பாவும் மாமாவும் சாத்துக்குடி,ஆப்பிள் வாங்க பழக்கடைகளைத் தேடிக் கொண்டிருந்தார்க‌ள்.அப்பா எதிரே உள்ள‌ மிட்டாய் க‌டையில் ல‌ட்டுக‌ளை அட்டைப்பெட்டியில் "எம்புட்டுண்ணே" பெண்ணிட‌ம் வெகுசீராக‌ அடுக்க‌ உத‌விக் கொண்டிருந்தார்.அம்மாவும் சித்தியும் சர்பத் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஐஎஸ்ஐ முத்திரை இல்லா தண்ணீர் பாக்கெட் வாங்கி முகத்தில் அறைந்து கழுவி, தலை சீவி கைக்குட்டையில் துடைத்து துடைத்து சற்று வெளுப்பாக்கிக் கொள்கிற தலையாய முயற்சியில் மதியம் மணி ஒன்றைத் தாண்டியது. மாப்பிள்ளை என்ற ஒரு காரணத்திற்காக அன்று மட்டும் கொஞ்சம் என்னை மரியாதையோடு பார்ப்பதற்கான ஒப்பந்தத்தை தம்பி ஏற்றுக் கொண்டிருந்தான்.முகம் கழுவ அவன் தான் தண்ணீர் பாக்கெட்டை உள்ளங்கையில் பீய்ச்சினான்.

பல்முனை ஆயத்தங்கள் நிறைவு பெற்று உறவினர் அனைவரும் ஓரிடத்தில் கூடி, பெண் வீட்டை நோக்கி மூங்கில் கைப்பிடி வைத்த பைகளோடு நடக்கத் தொடங்கியிருந்தோம்.லேசாக மழை தூர ஆரம்பித்தது.எப்போதுமில்லா பதற்றமும் குறுகுறுப்பும் பலமுறை சீராக சீவியச் சிகையை மீண்டும் மீண்டும் சீவத் தூண்டியது. மணக்கப்போகும் பெண்ணைப் பார்ப்பதற்கு முன்பே நெய்சோறும் கோழி வறுவலும் பரிமாறப்பட்டு உள்ளூர் அஸ்ரத்து தூவா ஓதி அங்கேயே நிச்சயம் முடிந்து, திருமணத் தேதி குறிக்கப்பட்டது. ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ முதிய‌வ‌ர் என் ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு என்ப‌தை தெரிந்து கொள்வ‌தில் மிகுந்த சிரத்தையோடு இருந்தார்.வாச‌லில் நின்றிருந்த‌ வேப்ப‌ம‌ர‌த்திற்க‌டியில் இர‌ண்டு ஆட்டிக் குட்டிக‌ள் ஓயாம‌ல் க‌ர‌க‌ர‌வென்று கத்திக் கொண்டேயிருந்தன. தெரு வீட்டிலிருந்து சற்றே கண் அகற்றிப் பார்த்தால் வீட்டின் உள்ளறையிலிருந்து நான்கைந்து பெண்கள் சலசலக்கும் புடவை கொலுசு சத்தத்தில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதில் யார் மணப்பெண்ணாக இருக்கும் என்று யூகிக்கலாமா என்று யோசிப்பதற்குள், நொடிகளை எண்ணி மணவாட்டியைக் காண்பித்து அவசர கதியில் மதுரைக்கு என்னை பஸ் ஏற்றி விட்டார்கள்.

மாட்டுத்தாவ‌ணியிலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் க‌ன‌வுக‌ளும் எதிர்பார்ப்புக‌ளும் கூட‌வே ஏறிக் கொண்ட‌ன‌.அட‌ர்ந்த‌ வேப்ப‌ம‌ர‌மொன்றும் ம‌ர‌ச்ச‌ட்ட‌ம் பொருத்த‌ப்ப‌ட்ட‌ திண்ணையும் அதில் தனது இஷ்டம் போல விரிந்திருந்த மணி பிளாண்ட் கொடியின் பச்சை இலைகளும், ம‌ங்க‌லாக‌ ஒரு பெண்ணின் முக‌மும் ம‌ன‌மெங்கும் நிறைந்திருந்த‌ன‌.வாக‌ன‌ இரைச்ச‌லையும் தாண்டி, ஒரு ஆட்டிக் குட்டியின் க‌ரைச்ச‌ல் காதில் இடைவிடாம‌ல் ஒலித்துக் கொண்டேயிருந்த‌து. எட்டாம் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கியதற்கு பரிசாக அப்பா வாங்கி கொடுத்த மீன்குஞ்சுகளை ஆவலோடு தொடும் போது ஏற்பட்ட ஒரு இனம்புரியாத பதற்றமும் சந்தோசமும் முதன் முதலாக அவளைப் பார்த்தபோது ஏற்பட்டது.ஒரு சேரில் அமர்த்தி அவள் வாயில் சீனி போடச் சொன்னார்கள்.மீண்டும் அவளை எனக்கு சீனி போடுமாறு சொல்லி என்னை அமரச் செய்தார்கள்.உறவினர்கள் பகடியும் புன்னகையுமாக‌ மாறி மாறி ஒரு கனவு போல அந்த காட்சி நகர்ந்து கொண்டிருந்தது.பேருந்து திண்டுக்கல் தாண்டியும் தூக்கமே வரவில்லை.

ஆண்பிள்ளை என்பதால் தாத்தா பாட்டி முதற்கொண்டு குஞ்சு குளுவான்கள் வரை புது டிரெஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும்.நல்ல சூட் தைக்க வேண்டும்.காலனி கொஞ்சம் குதிகால் உயரமாக பார்க்கவேண்டும். இதில் அசட்டையாக இருந்தால் அவள் என்னைவிட ஒரு இஞ்ச் அதிகமாகத் தெரியக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன.இரண்டு அக்காளுக்கும் காஞ்சிபுரத்தில் உயர்ந்த விலையில் பட்டு புடவை வாங்கித் தர‌ வேண்டும். மணப்பெண் மஹருக்கு நகை வாங்க வேண்டும்.எத்தனை பவுன் என்பதை தீர்மானிக்க வேண்டும். எல்லா செலவுகளையும் சமாளிக்க வங்கியில் லோன் எடுக்க வேண்டும். வட்டியாக‌ மாதச் சம்பளத்தில் இருந்து எவ்வளவு பிடிப்பான் என்ற‌ கவலை, வெள்ளை சட்டையில் காக்காய் எச்சம் போல பொத்தென்று தெறித்து அநாவசியமாக தொற்றிக் கொண்டது.சட்டென உதறிவிட்டு, மீண்டும் திருமணக் கனவு என்னை உள்ளிழுத்து தாழ்பாளிட்டது.

பார்த்தவுடன் கவர்ந்துவிடும் வசீகர முகம் கொண்டவனில்லை என்பதால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்குமா? எந்த அளவுகோல் கொண்டு என்னை மதிப்பீடு செய்திருப்பாள், அவளின் உறவினர்கள் எப்படியான விமரிசனத்தை அவளிடம் வைப்பார்கள், திருமணத் தேதி வரையில் இடையில் இருக்கும் சொற்ப நாட்களில் பேச வாய்ப்பு கிடைக்குமா,யாரிடம் சொல்லி அலைபேசி எண் வாங்குவது,என்னென்ன பேசுவது,பழைய கதைகளையெல்லாம் சொல்லித் தொலைப்பதா இல்லை மறைப்பதா,என்னைப் போலவே புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்குமா, சாலையில் சிதறியிருக்கும் சிறுபூக்களை பொறுக்குபவளாயிருப்பாளா ? கவிதைகள் பிடிக்குமா, மழையை ரசிப்பவளாயிருப்பாளா,ஏதேனும் ஒரு சிறுகதையையாவது வாசித்திருக்கக்கூடுமா. பேருந்து தாம்பரம் தாண்டியிருந்தது.

அவள் வீட்டு நிலைக்கண்ணாடியும் தூண்களும் நூறு வருட பழைய கடிகாரமும் எப்போதும் என்னைச் சுற்றியிருந்தன.நகரம் அழகாகத் தெரிந்தது.அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மின்சார ரயிலில் எல்லோரும் அழகாகத் தெரிந்தார்கள்.குறுந்தகவலில் கவிதைகளோடு நிறைய பரிமாறத் தொடங்கியிருந்த நாட்கள்.காணாமல் போன குருவியொன்று என் வீட்டு தென்னை மரத்தில் மீண்டும் கூடுகட்ட ஆரம்பித்திருந்தது.'இன்னும் எத்தன நாள் இருக்கு..சொல்லு பாப்போம்'. திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தாள்.பதிலையும் அவளாகவே சொல்வதைத் தான் விரும்புவாள்.அதில் இருந்த‌ குழந்தைமையும் சந்தோசமும் இன்று வரை மாறாதவை. வண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவுக்கு அடிக்கடி வருகிறது.சமீப நாட்களில், நான் வீட்டுக்கு வெளியே இத்தனை உயரம் பறந்ததில்லை.


------

வைர மோதிரமோ,சலவைக்கல் மாளிகையோ,இறக்குமதி செய்யப்பட்ட காரோ வாங்கித் தர இயலாதவனாய் இருந்தும் என்னை சகித்துக் கொண்டும் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொண்டும், உலகின் பரிவு அனைத்தையும் எனக்காக தன் கண்களில் எப்போதும் சேமித்து வைத்திருக்கும் என் அன்பு மனைவிக்கு.

*****************

Friday, August 19, 2011

ராம்லீலாவில் ஒரு குபீர் சிரிப்பு நாடகம்


ராலேகான் கிராமத்தில் மது குடித்த‌ இளைஞர்களை மரத்தில் கட்டி வைத்து பெல்ட்டால் அடித்த சாந்த சொரூபியும், இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்டில் கையாடல் செய்த புண்ணியவானும்,தன்னுடைய அறப்போராட்டமும் அகிம்சையும் ஆஃப் சைடு வாங்கினாலும் பரவாயில்லை என்று ராசாவை தூக்கிலிட வேண்டும் என்ற வீரமராட்டிய சிவாஜி சிவசேனாக்களின் முழக்கங்களைப் பறை சாற்றிய இந்த உத்தமர் காந்தி தன்னுடைய உண்ணாவிரத நாடகத்தை, ஏற்கனவே பண்டார ராம்தேவ் மண்ணைக்கவ்விய ராம்லீலா மைதானத்தில்,தேசபக்தி பாடல்களுடனும் முதலாளித்துவ ஊடகங்களின் ஆசிர்வாதத்துடனும் வெகு விமரிசையாக மீண்டும் ஆரம்பித்திருக்கிறார்.மேலும் அன்னா சிறையில் இருந்த போது,அரசுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டங்களில் "ராம் ராம்" என்ற முழக்கங்களும் விண்ணைத் தொட்டன. உச்சபட்ச காமெடி என்னவென்றால் டப்பாவாலாக்கள் முதற்கொண்டு, நம் நாட்டையே சுரண்டி சுண்ணாம்பாக்கிய கார்பரேட் பகற்கொள்ளையர்களான‌ CEO-க்கள் கூட அன்னாவின் அறப்போராட்டத்திற்கு ஆதரவு தந்து விட்டார்களாம்.




கிரண்பேடியிடமிருந்த தேசியக் கொடியை பிடுங்கி ஆட்டி கைதட்டல்களைப் பெற்ற நமது மீடியா கதாநாயகர் இந்த காமெடி காட்சிகளை, தம்மால் கேபிள் டிவி தடை செய்யப்பட்ட ராலேகான் மக்கள் பார்க்க முடியாதே என்று வருத்தப்பட்டாரோ இல்லையோ, இந்த உண்ணாவிரதத்தின் மூலம் தான் மூன்று கிலோ எடை குறைந்ததைப் பற்றி சிலாகித்துப் பேசுகிறார். இந்தியாவில் ஊழலை ஒழிக்க 3 கிலோ எடைகுறைதல் என்றால் அது எவ்வளவு பெரிய தியாகம் ?

இந்திய வரலாற்றில் முதன் முறையாக, 30, 7 ,15 என்று ஒரு வழியாக பேரம் பணிந்து, அரசும் அன்னாவும் பரஸ்பர சம்மதத்தின் பேரில் ஒரு காலவரையற்ற ஆனால் 15 நாள் உண்ணாவிரதத்துக்கு ஒப்புக் கொண்டனர்.இதை முன்னாடியே காங்கிரஸ் செய்திருந்தால், "அரசு பணிந்தது",அன்னா காலடியில் அன்னை அரசு போன்ற நக்கல்களையெல்லாம் கேட்கும் அவல நிலை அரசுக்கு ஏற்பட்டிருக்காது.என்ன செய்வது ? இடுப்பு வரை மாட்டிக் கொண்ட ஊழல் சேற்றிலிருந்து அன்னாவைப் போல விரல்களைக் கூட‌ அசைக்க முடியவில்லையே.

உண்ணாவிரததுக்கு இடமளிக்காமல் அன்னாவை காங்கிரஸ் அரசு கைது செய்த போது,"ஐயகோ என்ன கொடுமை இது. ஜனநாயகம் கற்பிழந்து விட்டது.பாசிசம் தலை விரித்தாடுகிறது" என்றெல்லாம் ஆவேசத்துடன் டிவிட்டிய, ஃபேஸ்புக்கிய நமது மீடியாக்களின் செல்லக் குஞ்சுகளும் இதுவரை ஜன்லோக்பாலை ஏற்காத பிஜேபியும், தன் வீட்டு நாய்க்குட்டியை விரட்டுவது போன்ற தொனியுடன் அன்னா இந்திய அரசையும் நீதித்துறைகளையும் கேமரா முன் ஆள் காட்டி விரல் கொண்டது மிரட்டுவது மட்டும் எவ்விதத்தில் ஜனநாயகத்தைக் கட்டிக்காக்கும் செயலாகும் என்பதை விளக்க வேண்டும்.

ஊழலை எதிர்க்க மாபெரும் ஆயுதம் ஜன்லோக்பால் என தொண்டைக்குள் ஸ்பீக்கர் சொருகி பிரகடனப்படுத்தும் அன்னாவின் கூட்டணியில் உள்ள அறிவு ஜீவிகள், அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் சட்டத்தின் சாராம்சமான, அரசல்லாத துறைகளின் மீதும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் மீதும் ஊழல் நடவடிக்கை எடுக்கும் சட்டத்தை ஏன் எதிர்க்கின்றனர். NGO-க்களின் மீது நடவடிக்கை எடுக்கும் இந்த அம்சம் ஜன்லோக்பால் வரைவில் சேர்க்கப்பட்டால் அந்த பொறியில் முதலில் மாட்டும் எலியாக அன்னா தான் இருப்பார் என்ற உண்மை, ரூம்போட்டு விளக்கும் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தெரியாதா என்ன ? அன்னாவின் ’இந்து ஸ்வராஜ் ட்ரஸ்ட்’டிலேயே நடந்தது என்ன என்ற உண்மையைத் தான் நீதிபதி பி.பி.சாவந்த் அன்னாவின் புனிதப்பானையை பொதுவெளியில் வைத்து உடைத்து விட்டாரே.

நம் நாட்டையே கூறு போட்டு பங்கு வைக்கும் இந்திய அரசின் பொருளாதார கொள்கைகளையும் தனியார் மயமாக்கலையும் ஏற்றுக் கொள்ளும் இந்த அன்னா ஹசாரே கும்பல், மிகப்பெரும் அன்னிய முதலாளிகளின் ஏகோபித்த ஆதரவுடனும், பியூட்டி பார்லர் பளபளப்போடு வலம் வரும் மீடியா மங்கைகளின் பின்னணி கொஞ்சல்களோடும், பாபா ராம்தேவ், ரவிசங்கர் பாபா போன்ற கார்பரேட் பண்டாரங்களின் யாவார நோக்கத்தோடும் நடாத்தி வரும் இந்த ஐடெக் குபீர் சிரிப்பு நாடகம் இன்னும் எத்தனை நாளைக்கு நம் திடீர் புரட்சியாளர்களை ஆரவாரத்தில் வைத்திருக்கப் போகிறது என்பது தான் இப்போதைய கேள்வி.

புதிதாக ஒரு உணவு பதார்த்தத்தை சாப்பிட்டால் முகமெங்கும் கட்டிகள் உருவாகி அலர்ஜி வருவது போல, இந்திய வரலாற்றில் அடுத்தடுத்து ஸ்பெக்ட்ரம் ஊழல்,எஸ் பேண்ட் ஊழல்,ஆதர்ஷ் வீட்டுமனை ஊழல்,காமன்வெல்த் ஊழல் என பாரத மாதாவின் 'அழகிய' முகத்தில் கண்டு கண்டுகளாக வீங்க வைத்திருக்கும் இந்த பொற்கால காங்கிரஸ் ஆட்சி, ஒரு சராசரி இந்திய பிரஜைக்கு நிச்சயமாக வலிக்கத் தான் செய்யும்.அந்த ஆதங்கத்திற்கும் கோபத்திற்கும் வடிகாலாக, இந்த போராட்ட செய்திகளை அதிர வைக்கும் விவாதங்களுடனும் இசை பின்னணியுடனும் பார்க்கும் போது, தேசிய உணவு மெய்சிலிர்த்து வீறு கொண்டு எழும்.எப்படி டோனி கடைசி பந்தில் சிக்சர் அடிக்கும் போது ஒரு தேசப்பற்று எழுந்ததே அதற்கு ஒப்பானது இந்த வீரம்.

ஊழலை எதிர்ப்பதற்கு முன்,அதன் ஊற்றுக் கண்ணான முதலாளித்துவ மறுகாலனியாக்க கொள்கைகளையும் சுரண்டலையும் அதற்கு வழிவகை செய்யும் இந்திய பொருளாதார அமைப்பு முறையையும் டாடா, ரிலையன்ஸ் அம்பானி,வேதாந்தா போன்ற கார்பரேட் பெருச்சாளிகளின் பகற்கொள்ளைகளையும் ஒவ்வொரு குடிமகனும் புரிந்து கொள்ள வேண்டும். ஹசாரே கூறும் ஜன் லோக்பால் ஆனது இந்த சுரண்டல்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டு, வெறும் சில்லறை விஷயங்களையும் எலும்பு துண்டுகளைப் பொறுக்கக் காத்திருக்கும் அரசியல் வாதிகளை மட்டுமே குறிவைப்பதாக்ச் சொல்லிக் கொள்கிறது. மக்களை அரசியல் குருடர்களாக்கி இது போன்ற அடிப்படை அறிவில்லாத காமெடியன்களின் நகைச்சுவை நாடகங்களின் மூலம் ஆளும் வர்க்கம் ஒரு பாதுகாப்பைத் தேடிக் கொள்கிறது.நம் நாட்டின் இயற்கை வளங்களையும் சொத்துக்களை அன்னிய முதலாளிகளுக்கு விருந்து வைக்கும் கார்ப்பரேட் கும்பல், நமது வாழ்வின் அடிப்படை வாழ்வாதாரத்தை எவ்வித தங்கு தடையின்றி, சட்ட்ப்பூர்வமாக சூறையாடி மகிழ்கிறது.

இந்திய ராணுவத்திற்கு சிறப்பு அதிகாரங்களை வழங்க வகை செய்யும் சட்டத்தை எதிர்த்து ,கடந்த பத்து ஆண்டுகளாக போராடி வரும் ஐரோம் ஷர்மிளாவும், வேதாந்தா என்னும் அன்னிய முதலாளி தம்முடைய வாழ்வாதாரமான நியாம்கிரி மலைப்ப்குதியை பாக்சைட் தாதுக்காக வெட்டிப் பங்கு வைப்பதை எதிர்த்து போராடி வரும் டோங்கிரியா கோந்த் மலைவாழ் மக்களும், டாடா கம்பெனியை எதிர்க்கப் போராடி துப்பாக்கிச்சூட்டில் பலியாகும் விவசாயிகளும் நடத்தும் நிஜமான அக்மார்க போராட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், மேட்டுக்குடி மக்களின் பார்ட் டைம் பொழுது போக்கான இந்த கூட்டுக்களவாணி நாடகங்களை ஆதரிக்கப் போகிறோமா ?


*****************

Wednesday, June 1, 2011

தரம் தாழ்ந்த ஆனந்த விகடனின் டாலடித்த ஜெ கம்மல்

---------

ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் வழிதவறும் போது தவறுகளை எடுத்துரைத்து நல்வழிப்படுத்த வழிமுறைகளைச் சொல்லித்தர வேண்டிய புனிதப்பணி பத்திரிக்கையினுடையது.எழுத்து சுதந்திரம் என்பது நடுநிலைமை பிறவாமல் வாள்சுழற்றும் வித்தை.அந்த வாள் இரத்தத்தை கொணர்வதற்காக அல்ல.மேலும் வதைகள் ஏற்படாமல் தடுக்க.

மெழுகுவர்த்தி புகழ் ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்களையும் கிரிக்கெட்டையும் பிரதான செய்திகளாக வெளியிடும் வடஇந்திய ஊடகங்களுக்கு இணையாக ஆனந்த விகடன் இப்போது தரம் தாழ்ந்து இயங்கி கொண்டிருக்கிறது.பக்கத்திற்கு பக்கம் கனிமொழி கைதை நையாண்டி செய்வதிலும் கலைஞரையும் திமுகவையும் கிண்டலடிப்பதிலும் தற்பொழுது ஆ.வி முழுமூச்சில் ஈடுபட்டிருக்கிறது.ஏற்கெனவே அணைந்து போன நெருப்பை
மீண்டும் மீண்டும் நீர் தெளித்து அணைப்பதில் ஒரு ஆழ்மன வக்கிரம் தொனிக்கிறது.

ஆனந்த விகடன் அதிமுக விகடனாக புத்துயிர் பெற்று கனகாலமாகி விட்ட நிலையில்,ஜெ.வின் வெற்றியை ஜெ எந்தளவு கொண்டாடினாரோ,அதைவிட ஆ.வி அந்த வெற்றியில் ஊறி ஊறித் திளைத்து இத்து போகும் அளவு ஊறிக் கொண்டிருக்கிறது.கடந்த கால திமுக ஆட்சியின் பேயாட்ட ஊழல்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு போன்ற ஆயிரம் காரணங்கள் தான் அதிமுகவை ஜெயிக்க வைத்திருக்கிறது என்ற உண்மை ஒருபுறமிருக்க,ஏதோ ஜெயலலிதா மக்களுக்காக வீதியில் இறங்கி போராடி ஜெயித்ததாக உச்சி மோர்ந்து கொஞ்சுகிறது ஆ.வி.அதிலும் ஜெவுக்கு அட்வைஸ் செய்து நல்லபேர் வாங்கி கொள்ள நினைப்பது அதைவிட பேரபத்தம்.

கலைஞர் ஜெயா டிவிகளின் அபத்தங்களுக்கு இணையாக‌ "முதல்வரின் கம்மல் டாலடித்தது முகம் டாலடித்தது" போன்ற மூன்றாந்தர எழுத்துக்களை வாரி இறைத்து கொண்டிருக்கிறது.வீட்டுவசதி திட்டத்தை "தீப்பெட்டி திட்டம்" என்று கேலி செய்து பேசியதற்காக வீட்டுவசதி துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதையும்,கல்வி பற்றி நாலு வார்த்தை உளறியதற்காக உயர்கல்வித்துறை ஒரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டதையும் ஏதோ ஜெயலலிதா தமிழ்நாட்டின் மிகப்பெரிய புரட்சி சீர்திருத்தம் செய்து விட்டதாக கொண்டாடுகிறது.

லோக்பால் திட்டத்தின் வெற்றி லட்சணம் எந்த அளவு என்கிற முகாந்திரத்தின் அடிப்படை தெரியாமலேயே, இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியையும்,மும்பை ரவுடி ராஜ் தாக்கரேவையும் அபிமானியாக கொண்ட அண்ணா ஹசாரே (எ) கொல்லு தாத்தாவை வாராவாரம் பாலாபிஷேகம் செய்து ம‌கிழ்கிற‌து.இதில் வரும் வாரங்களில் வெத்து வேட்டு விஜயின் கேள்வி பதில் வேறாம்.ஏற்கெனவே ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கழுவுற மீனில் நழுவுற மீன் கேள்வி பதில்களை படித்து சலித்துப் போன வாசகர்களுக்கு மேலும் ஒரு துன்ப அதிர்ச்சி.பொக்கிஷம்,எனர்ஜி பக்கங்கள் போன்ற பதிவுகள் ஓரளவு ஆறுதல் அளித்தாலும்
மேற்கூறிய‌ மொக்கை கேள்வி பதில்களும் முகம் சுழிக்க வைக்கும் நையாண்டி விருதுகளும் டிவிட்டர் உளறல்களும் விகடனின் வாசகப்பரப்பை குறைத்துக் கொண்டிருக்கிறது.

பூந்தளிர்,அம்புலிமாமா,சிறுவர்மலர்,தினசரி செய்தித்தாள் இவைகளுக்கு பிறகு வாசக அனுபவ பரிணாமத்தை விரிவுபடுத்துவதில் விகடன் எல்லா கால கட்டங்களிலும் முன்னணி வகித்திருக்கிறது.சராசரி நடுத்தர வர்க்க சமூகத்திலிருந்து மேட்டுக்குடி வரை விகடன் வாசிக்கப்படுகிறது.ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்த‌ பாமரனிலிருந்து இலக்கியவாதிகள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஒரே பத்திரிக்கை விகடன்.தமிழ் எழுத்தாளர்களையும் படைப்புகளையும் ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் மறந்து விட்ட நிலையில்,கி.ரா வண்ணதாசன் சிறுகதைகளை இன்றும் ஆனந்த விகடனில் பார்க்கலாம்.அழகிய பெரியவனின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.இப்படி எல்லா அருமை பெருமைகளையும் தன் ஒருதலை பட்சமான எழுத்துகளால் இன்று விகடன் குழுமம் இழந்து கொண்டே இருக்கிறது.தரமான வாசகர்களையும் சேர்த்து தான்.


-----

Friday, January 7, 2011

புத்த‌க‌ ச‌ந்தை- 2011 இதுவரை வாங்கிய புத்தகங்கள்

போதிய விளம்பரம் இல்லாததாலும்,வேலை நாட்களாக இருப்பதாலும் நேற்று
ஸ்டால்களில் கூட்டம் மட்டுமல்ல.பதிப்பக உரிமையாளர்களைக் கூட காண்பது அரிதாக இருந்தது.தற்காலிக பொறுப்பில் இருந்த கடைப்பையன்களிடம் புத்தகங்களின் பெயர்களைச் சொன்னால்,ஏற்கெனவே வாங்கிய புத்தகங்களையும் பிடுங்கி விடுவார்கள் என்ற பீதியில் நானே முடிந்தவரை தேடிக் கொண்டேன்.

வாங்க நினைத்திருந்த புத்தகங்கள் கிடைக்கப் பெறாமல் அலையும் அவலம் இந்த வருடமும் தொடர்கிறது.வண்ணதாசன் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பும்,கோபி கிருஷ்ணனின் டேபிள் டென்னிஸூம் எங்கு கிடைக்கும் என்றும் யாராவது தெரியப்படுத்தினால் நன்றாக இருக்கும்.

கிருஷ்ணபிரபு பரிந்துரைத்த சிஸ்டர் ஜெஸ்மியின் "ஆமென்" மலையாள புத்தகம் பரபரப்பான தன்வரலாறு.காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து குளச்சல் மு.யூசுப் தமிழில் கொணர்ந்திருக்கிறார்.கிறிஸ்துவ மடத்தில் நடக்கும் ஆன்மீக மீறல்கள்,குற்றங்கள்,பாலியல் வன்முறை குறித்து விரிவாக பேசுகிறது இந்நூல்.

ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் விளம்பரம் தாங்கிய அலமாரியில் தோப்பில் முகமது மீரானின் "சாய்வு நாற்காலி"யும் அடுக்கப்பட்டிருந்தது வருத்தமளிக்கிறது.தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றான இந்நாவல் சாகித்ய அகாதெமி விருது பெற்றது.புதிதாக எழுத வருபவர்களுக்கு இந்நாவல் ஒரு படிப்பினை.

தயவு செய்து பா.ராகவனின் டாலர்தேசம் புத்தகத்திருவிழாவில் வாங்கி விடாதீர்கள்.525 ரூபாய் விலை சொல்லும் ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறார்கள்.அதன் அசல் விலையான ரூபாய் 400க்கு,கிண்டி நடைபாதையில் கிடைக்கிறது.

சுஜாதா நூல்கள் படிக்க நினைப்பவர்கள் கிழக்கு பதிப்பகம் விஜயம் செய்யலாம்.எங்கு நோக்கினும் வண்ணமயமான வழவழப்பான அட்டைப் படங்களில் சுஜாதா கண்ணாடி அணிந்திருக்கிறார்.விஞ்ஞான சிறுகதைகள் உயிர்மையில் கிடைக்கிறது.

இந்த ஆண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற, நாஞ்சில் நாடனின் "சூடிய பூ சூடற்க" தமிழினியில் கிடைக்கிறது.அவரிடமே கையெழுத்து போட்டு வாங்கி கொள்ளும் பாக்கியமும் தமிழினியில் இலவசம்.

த‌மிழினி:

சூடிய‌ பூ சூட‌ற்க‌ நாஞ்சில் நாட‌ன்
நெரிக்க‌ட்டு அழ‌கிய‌ பெரிய‌வ‌ன்

கிழக்கு:

காஷ்மீர் பா.ராக‌வ‌ன்
ரெய்னீஸ் ஐயர் தெரு வ‌ண்ண‌நில‌வ‌ன்

உயிர்மை:

க‌டிகார‌ம் அமைதியாக‌ எண்ணிக் கொண்டிருக்கிற‌து அ.முத்துலிங்க‌ம்
எக்ஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்சி பனியனும் சாரு நிவேதா
ம‌ண்பூத‌ம் வாமுகோமு

காலச்சுவடு:

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனை இருந்தது ‍பஷீர்
பாத்துமாவின் ஆடு பஷீர்
மதில்கள் பஷீர்
ஆமென் சிஸ்டர் ஜெஸ்மி
ம‌காராஜாவின் ர‌யில் வ‌ண்டி அ.முத்துலிங்க‌ம்
கோப‌ல்ல‌ கிராம‌ம் கி.ரா

வ‌ம்சி:

உரையாட‌லினி அய்ய‌னார்
க‌தை நேர‌ம் பாலும‌கேந்திரா

கலீஃபாக்கள் வரலாறு
இஸ்லாமிய கேள்வி பதில்கள் ஜாகீர் நாயக்
இஸ்லாமும் பெண்களும்

********************