Tuesday, June 23, 2009

கொள்ளை-காரிவழமையாய் சன்னல் தேடி வரும்
அடர்வெளிர் நிற பறவையொன்று
அதன் வெண்மையை இழந்திருந்தது;
மயிலிறகு மறைத்து வைக்கப்பட்ட
டைரி ஒன்றில் சிறந்த கவிதைகளைக் கொண்ட
ஏழெட்டு பக்கங்கள் கிழிக்கப்பட்டிருந்தன;
கார்மேகங்களும் மெல்லிய மழைத்தூறல்களும்
வருகைப் பதிவேட்டில் காணாமற்போயிருந்தன;
சாலையோரப் பூக்களின் எண்ணிக்கை
இன்று பெருமளவு குறைந்திருந்தது;
சிறுகுழந்தைகள் கடத்தப்பட்டிருப்பதாக
செய்திகள் வெளியாகி கொண்டிருந்தன;
இரவோடு இரவாக பாணிபூரி
கடைகள் மாயமாகி போயின;
மீன்தொட்டிகளில் ஏஞ்சல் ரக
மீன்களுக்கு மட்டும் பஞ்சம் ஏற்பட்டது;
சலனமில்லாமல் எனக்கான உலகமொன்றை
வரைந்து கொண்டிருந்தாய் நீ.


23-6-2009 கீற்று மின்னித‌ழில் பிர‌சுர‌மான‌து.

****************

Wednesday, June 17, 2009

அபுஅஃப்ஸருக்கு பெண்குழந்தைபின்னூட்ட சுனாமி,கும்மி பினாமி,சிறுகதைப்புயல்,கவி காளமேகம்,நட்பிலக்கணம் இளைய தளபதி அண்ணன் மாலிக் என்கிற பிரபல பதிவராகிய‌
ந‌ம் அபுஅஃப்ஸருக்கு,இன்று மதியம் 2.30 மணியளவில் பெண்குழந்தை பிறந்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.தாயும் சேயும் பூரண நலத்துடன் இருப்பதாக தொலைபேசியில் தெரிவித்தார்.

மீண்டுமொருமுறை "அபு" வாகியிருக்கும் மாலிக் அவர்களை வாழ்த்தி, குழந்தை செல்வங்களோடு வளமான வாழ்வு வாழ இறைவனை இறைஞ்சுவோமாக.

இந்த மகிழ்ச்சியான தருணத்தை முன்னிட்டு, வாழ்த்தும் அனைத்தும் நல்ல உள்ளங்களுக்கும் பிரம்மாண்டமான நட்சத்திர விடுதி ஒன்றில் மாபெரும் விருந்தை அபு ஏற்பாடு செய்திருப்பதாக ஏஜென்சி செய்திகள் தெரிவிக்கின்றன.

Wednesday, June 10, 2009

ஜூன்-10 சில‌ ஞாப‌க‌ குறிப்புக‌ள்


வேலை கிடைத்து பெங்களூருக்கு புறப்பட ஆயத்தமாகி கொண்டிருந்த அந்த சனிக்கிழமை மாலை நீ அனுப்பிய "ஹேப்பி ஜெர்னி" குறுந்தகவலில் ஆரம்பித்தது நமக்கே நமக்கான வாழ்க்கை.கடல்கடந்து ஏதோ ஒரு அந்நிய தேசத்தில் இருந்தாலும் நிச்சயம் உனக்கு இன்று என் நினைவு வரும்.நாம் இருவரும் முதன்முறையாக வார்த்தைகளை பரிமாறி கொண்ட நாள் இன்று..

ஜூன் 10


கல்லூரி முடிந்த கோடைகால விடுமுறை நாளிரவொன்றில்,தூரத்து சொந்தமென்று உன்னை என் வீட்டில் அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.சிவப்பு நிற சுடிதாரில் எங்கள் அசாதாரண பார்வைக்கு 90 சதவீத மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்றிருந்தாய்.இரண்டு நாட்கள் நம் உறவினர்கள்,கலகலப்பு,கலாய்ப்புகள் என என் வீட்டில் நீ தங்கியிருந்த பொழுதுகளில் உன் துபாய் தனிமை காணாமல் போனதாக என் அம்மாவிடம் சொன்னதாக நினைவிருக்கிறது. என்னிடம் கடைசி வரை பேசவேயில்லை.கிளம்பும் சமயம் லேசாக‌ புன்ன‌கைத்து ம‌ட்டும் வைத்தாய்.

"போய் க‌ண்ணாடில‌ உங்க‌ ஃபேஸ‌ பாருங்க‌ பாஸூ..அந்த‌ பொண்ணு ரேஞ்சே வேற‌..அதெல்லாம் உங்க‌ள‌ போயி.." என்ற‌ நண்ப‌னிட‌ம் "க‌ண்டிப்பா இவ‌ வீட்டில‌ இன்னிக்கு போயி என்ன‌ ப‌த்தி அட்லீஸ்ட் 0.00002% ஆவ‌து யோசிப்பாடா" என்று ச‌வால் விட்டேன்.அத‌ற்கு முன்பே குறுந்த‌க‌வலில் நாம் மேக‌ங்க‌ளை திர‌ட்ட‌ ஆர‌ம்பித்திருந்தோம்.சொல்லுங்க‌'லிருந்து ஆர‌ம்பித்து 'சொல்லுடா'வ‌ரை ம‌ழை தூர‌ ஆர‌ம்பித்திருந்த‌து.

வெளிநாட்டில் இருக்கும் அம்மாவை பிரிந்திருந்ததால்,சேலையை நீ அணைத்து கொண்டு உறங்கும் இரவுகளை நான் ஆக்கிரமித்ததாக என் மீது பழி சுமத்தினாய்.நேரடியாக உன் காதலை நான் அக்கணம் நிராகரித்தாலும்,"உன்னோட சிம்பிளிசிட்டி பிடிச்சிருக்குடா","இப்பல்லாம் நாள் ஃபுல்லா உன்ன பத்தி மட்டுமே யோசிக்கிறேன்" "உன் குரல கேக்கணும் போல இருந்துது" இந்த வார்த்தைகளை கேட்கும் தருணமெல்லாம் என் மன நிலப்பரப்புகள் உன் ஆளுகையின் கீழ் கட்டுப்பட ஆரம்பித்தனதென்னவோ உண்மை தான்.

உனக்கு பிடித்த ஜெலோவின் "If you had my love" எனக்கும் பிடிக்க ஆரம்பித்தது.பரப்பான காலைப் பொழுதொன்றில் அலுவலக பேருந்தில் ஐபாடை காதிலிருந்து எடுக்காமல்,குறுந்தகவலில் நான் உன்னை ஏற்று கொண்ட போது,எவ்வித ஆடம்பரமும் சலனமும் இல்லாமல் "சரி" என்ற ஒற்றை வார்த்தையில் என்னைத் தழுவி கொண்டாய்.நீ என் சொந்தம் என்று முடிவான அந்த தினம் சுவர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாய் உணர்ந்தோம்.சரியாக நான்கு நாட்கள் கழித்து உன் பிறந்த நாள் முன்னிரவில்,நான் அழைக்காமல் மறந்து விடுவேனோ என்று நீ தவித்த தவிப்பை, ரிசீவரை பிடிங்கி, உன் பக்கத்து வீட்டு தோழி என்னிடம் முறையிட்ட போது,நான் அடைந்த மகிழ்ச்சியை உன்னிடம் சொல்ல வார்த்தைகளற்று போனேன்.

மீனம்பாக்கம் ரயில் நிலையம் நினைவிருக்கிறதா?? பல லட்சம் தேவதைகளின் அழகை கண்களில் கடத்தி வந்த‌ ஒரு பெண்ணை முதன் முதலாக நான் சந்தித்தது அங்கு தான். வெகுநேரம் பேசாமல் கைக‌ளை ம‌ட்டும் பிடித்து கொண்டு அம‌ர்ந்திருப்போமே!!.சுற்றும் முற்றும் பார்த்து விட்டு இமைக்கும் நேரத்தில் நீ தந்த முதல் முத்தம்,இன்றும் மின்னல் வெட்டியதை போல் கண்முன் வந்து போகிறது.அன்று நீ என் கன்னங்களை ஈரமாக்கிய நினைவுகள்,இன்று என் கண்களை மட்டும் ஈரமாக்குகிறது.இப்போதெல்லாம் பல்லாவரம் ஸ்டேஷன் கடக்கும் போது மட்டும் கண்களை இறுக மூடிக்கொள்வதும்,பிறகு மனசு கேட்காமல் சன்னல் கம்பிகளினூடே எட்டி பார்ப்பதும் வாடிக்கையாகி விட்டது.

நள்ளிரவு மொட்டைமாடி அலைபேசி பேச்சுகளுக்கு பிற‌கு உன் அருகாமையை அதிகம் பெற்றது அடையாறு பூங்காவில்.உன் மடியில் கண்ணயர முயலும் போது,தலைமுடியை கலைத்து விட்டு "இப்பதான்டா நீ அழகா இருக்க" என்று என்னையும் சேர்த்து கலைத்தாய்."மான்கள் குறுக்கிடும் பார்த்து செல்லவும்" அறிவுப் பலகையை பார்த்து விட்டு நான் மான்களை பார்த்தே ஆக‌ வேண்டும் என்று நீ அடம் பிடிக்க அடையாறிலிருந்து கிண்டி வரை உன் கைகோர்த்து நடந்தது எப்படி மறக்க முடியும்?!!அந்த மாலைப்பொழுதுகள் தான் எவ்வளவு அழகு !!

காதலிக்க ஆரம்பிக்குமுன்னே எதிர்ப்புகளை சந்தித்தது நாமாக தானிருப்போம்.கேலி பேசிய சுற்றத்தாரின் வார்த்தைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது நீ என் மீது வைத்த உறுதியான ந‌ம்பிக்கையும் காத‌லும்.எதிர்த்தவர்கள் தர்க்கம் செய்ய திராணியற்று போயினர்.அந்த பிரச்சினைகளுக்கு பிறகு நாம் சந்திப்பது ஆபூர்வமாகிப் போனது.ஒரே ஒரு மின்னஞ்சல் கணக்கை மட்டும் உருவாக்கி இருவரும் பயன்படுத்த தொடங்கியது அப்போது தான்.இப்போது நீ அதை பயன்படுத்துவதில்லை என நினைக்கிறேன்.உனக்காக நான் எழுதிய (முதல்) மழை கவிதை தனியாக ஒரு ஃபோல்டரில் அழிக்கப்படாமல் இருக்கிறது.மை டியர் ஹஸ்பெண்ட் என்று ஆரம்பிக்கும் அனைத்து ரோஜாப்பூ மின்னஞ்சல்களையும்,உன் உம்மாக்களையும் என்ன காரணத்திற்காகவோ தினமும் படித்து கொண்டிருக்கிறேன்.நீ அழுது எழுதிய அந்த கடைசி பத்து கடிதங்களையும் சேர்த்து தான்.

அதே கிண்டி ரயில் நிலையம் நாம் கடைசியாக சந்தித்த இடம் நினைவிருக்கிற‌தா?.அதோடு பிரியப்போகிறோம் என்று தெரிந்தோ தெரியாமல் என் கைகளை அழுத்தமாக பிடித்து கொண்டு "நீ எனக்கு வேணுன்டா" என்று நீ அழுதது இன்னும் நினைவுக‌ளை விட்டு அக‌ல‌ ம‌றுக்கிற‌து.

அத‌ன்பிற‌கு,நாம் வேறோடு பிடுங்க‌ப்ப‌ட்டு,வெவ்வேறு தேச‌ங்க‌ளில் ந‌ட‌ப்ப‌ட்டோம்.நீ இப்போது எங்கே எப்ப‌டி இருக்கிறாய் என்ற தகவல் தெரியாமலும் உன் குரலை கேட்காமலும் நாட்கள் நரகமாய் நகர்கின்றன.சிக‌ப்பு க‌ற்க‌ள் ப‌தித்த‌ உன் வ‌ளைய‌லும்,உன் புகைப்ப‌ட‌மும் இன்னும் என்னிட‌ம் ப‌த்திர‌மாக‌ இருக்கின்ற‌ன‌.இப்போதெல்லாம் முன்பேவா பாட‌ல் வ‌ரும் போதெல்லாம் தொலைக்காட்சியை அணைத்து விடுகிறேன்.

எவ்வளவு முயன்றாலும் இதற்கு மேல் என்னால் எழுத முடியவில்லை.என்றோ ஒருநாள் எதையோ தேடிக் கொண்டிருக்கையில் எதேச்சையாக இக்கடிதம் உன் கண்ணில் படக்கூடும்.அப்போது நாம் வாழ்ந்த நினைவுகள் மீண்டும் ஒருமுறை உன் மனதில் எழும்.அந்த ஒரு நிமிடம் நீ சிந்த‌ப்போகும் ஒற்றை க‌ண்ணீர்த்துளி நிச்சயம் சொல்லும் இன்னும் உன் மனதில் ஏதோ ஒரு ஓரத்தில் அந்த பழைய காதல் ஒட்டி கொண்டிருப்பதாய்.

"நான் போத்தீஸ்ல‌ இருக்கேன்.என்ன‌ க‌ல‌ர் சுடிதார் எடுக்க‌ட்டும்..சீக்கிர‌ம் சொல்டா" என்று என்னை தொந்த‌ர‌வு செய்ய‌வும்,"உன்ன நான் யாருக்கும் தரமாட்டேன்.நீ எனக்கு மட்டுந்தான்" என்று உரிமையோடு ச‌ண்டை போட‌வும்,எனக்காக அழவும் இங்க யாரும் கிடையாது.நீ என் த‌லைமுடிய க‌லைக்கணும்.ஒரேயொருமுறை உன் கூட‌ சண்ட போடணும்.நீ என்ன பொறுக்கின்னு கூப்புடறத கேக்கணும்.ஒரேயொரு முறை உன் கைய பிடிச்சிக்கணும்.இதெல்லாம் திரும்பவும் நடக்குமா?"..


*******************************