Thursday, February 16, 2012

இனப்படுகொலை வெர்ஷன் 2.0 - முறியடிப்பது எப்படி ?உலகெங்கும் அணு உலைகளுக்கெதிராக எதிர்ப்பு இயக்கங்கள் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இவ்வெதிர்ப்பு இயக்கங்களின் செயல்பாடுகளும் போராட்டங்களும் நிறைந்த வரலாறு மிகப்பழமையானது. அணு உலைகளை ஆதரிக்கும் ஜப்பானிலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் தான் உக்கிரமான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 2001 ஐரோப்பிய கமிஷன் எடுத்த ஒரு சர்வே, வெறும் 10.1 விழுக்காடு ஐரோப்பியர்கள் மட்டுமே அணு சக்தியின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 80-க்கும் மேற்பட்ட அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் இருக்கின்றன. 1982-ல் நியூயார்க் நகரில் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்ற ஒரு போராட்டம் (அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய அணு உலை எதிர்ப்பு) நடந்தேறியிருக்கிறது.

அணு உலைகளே இல்லாத ஆஸ்திரேலியாவில் கூட அணுசக்திக்கெதிராகவும் யுரேனியம் வெட்டி எடுப்பதை எதிர்த்தும் அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் (CANE) போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. ஆஸ்திரியா, க‌ன‌டா, ஜெர்ம‌னி, பிரான்ஸ், க‌ஸக‌ஸ்தான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், துருக்கி, போல‌ந்து, தைவான், சுவிட்ச‌ர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் என‌ எல்லா நாடுக‌ளிலும் இவ்விய‌க்க‌ங்க‌ள் போராடி வ‌ருகின்ற‌ன. இவர்களுக்கெல்லாம் எந்நாட்டிலிருந்து நிதி வருகிறதென்றோ அல்லது எந்த மிஷினரியின் பின்புலம் வேலை செய்கிறதென்றோ நமது தினமலரும் நாராயணசாமியும் ஒரு கலந்தாய்வு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். எல்லா இயக்கங்களின் முழக்கம் ஒன்று தான். அது மக்கள் நலம். மக்களின் வாழ்வாதாரங்களுக்கெதிராக அரசோ நாட்டின் வளர்ச்சியோ அணு உலைகளோ முக்கியமல்ல என்பதே அனைத்து போராட்டங்களின் அடிநாதமாக இருந்து வந்திருக்கிறது.

செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்த இரண்டாமாண்டு நினைவு தினம். சோவியத் யூனியனின் குர்சட்டாவ் என்கிற அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் முதல் இயக்குனரான வாலெரி லெகசோவ் தனது அபார்மென்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பின்னாளில் தெரியவந்த‌ லேகசோவ் தற்கொலைக்கான காரணங்கள் ரஷ்யாவையே உலுக்கின. லெகசோவின் தற்கொலை ரஷ்ய அணுசக்தி கழகத்தின் மீதான‌ மிகப்பெரிய ஐயப்பாட்டையும் அதிர்ச்சி அலைகளையும் மக்களிடையே தோற்றுவித்தது. ரஷ்ய‌ அணுசக்திக் கழகத்தின் அம்பலமாகாத ரகசியங்களை வெளிப்படையாக‌ பேச முடியாத தொடர் மன அழுத்தமே தனது தற்கொலைக்கான காரணமாக லெகசோவ் தனது இறுதி ஆடியோடேப்பில் பதிவு செய்திருக்கிறார். செர்னோபில் அணு உலைகளின் வடிவமைப்பில் இருந்த‌ தொடர் குளறுபடிகளும் கன்ட்ரோல் ராடுகளின் பிரச்சினைகளும் அந்த நிலைய ஆபரேட்டர்களுக்கு ஏற்கனவே தெரியுமாம். அனைத்து உண்மைகளையும் விபத்து நடந்ததற்கு பின் ஒப்புக் கொள்ள வேண்டி வந்த மிகப்பெரிய துயரம் அவரை பெருமளவில் பாதித்திருக்கிறது.

இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் லெகசோவின் தற்கொலை என்பதை விட, அவர் தற்கொலைக்கு ஆகிருதியான காரணியாக விளங்கிய செர்னோபில் அணு உலையின் நம்பகத்தன்மையும் ரஷ்ய அணுசக்திக் கழகத்தின் பொய்யுரைகளுமே. கூடங்குள‌மும் செர்னோபிலும் ஒத்த‌ வ‌டிவ‌மைப்புடைய‌வை என்ப‌து நம் அனைவருக்கும் தெரிந்த‌ உண்மை.

ப‌ல ல‌ட்ச‌ம் ம‌க்க‌ளை அணு அணுவாய் கொன்று குவித்த‌ அதே செர்னோபில் தான் இப்போது கூடங்குள‌த்தில் ம‌றுபிற‌வி எடுத்திருக்கிற‌து. 16 ஆண்டுக‌ளுக்கு முன் ர‌ஷ்யாவில் ந‌ட‌ந்த‌ ஒரு மாபெரும் வ‌ர‌லாற்றுத்துய‌ர‌ம் மீண்டும் நிக‌ழக் காத்திருக்கிற‌து. அதே வடிவமைப்பு, அதே காரணங்கள், அதே பொய்கள். எல்லா உண்மைகளையும் தெரிந்தே தான் ரஷ்யா, விபத்திற்கான இழப்பீட்டைத் தர முடியாது என்ற நிர்பந்தத்தில் இந்திய அரசை கையெழுத்திட வைத்திருக்கிறது.

தனது ஏவல் நாயான இலங்கை அரசின் உதவியோடு, ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய காங்கிரசு அரசின் இரத்த வெறி இன்னும் தீர்ந்து விடவில்லை. பாதுகாப்பானதென‌ பொய்யுரை பரப்பியோ, வெளிநாட்டுச் சதி என உண்மைகளைத் திரித்தோ அல்லது மறைத்தோ, மதச்சாயம் பூசி வன்முறையை ஏவியோ இந்த கூடங்குள அணு உலையை நிறுவி விட்டால் போதும்; குமரி முதல் வங்காளம் வரை மேற்கே மகாராஷ்டிரம் வரை ஆயிரம் மீட்டருக்கு ஒரு அணு உலையை கடலோரப்பகுதிகளில் கட்டி விடலாம் என்ற கொள்கை வெறியோடு களமிறங்கியிருக்கிறது இந்த மக்கள் விரோத காங்கிரசு அரசு. தமிழர்களைக் கூண்டோடு கொன்றொழிக்க போடப்பட்ட திட்டமாகவே இந்த கூடங்குள அணு உலையை நினைக்கத் தோன்றுகிறது. வடதமிழகத்திற்கு கல்பாக்கமும் தென் தமிழகத்திற்கு கூடங்குளமுமே முழு தமிழகத்தை அழிக்கப் போதுமானதாக இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் முடிவாக இருப்பதாலும் ஆரல்வாய் கணவாய் இவைகளினாலும் இயல்பாகவே காற்று வீசும் பகுதியாக அமைந்திருக்கிறது. ஆகவே அணு உலை செயல்படத் துவங்கும் வேளையில், புகை போக்கியின் வழியாக வெளியேறும் சீசியம், அயோடின், சார்ட்டியம் போன்ற நச்சுத்துகள்கள் காற்று வீசும் திசையெங்கும் பரவும்.

நூறு மில்லி சிவரேட் கதிர்வீச்சு புற்றுநோயை உருவாக்கப் போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் மில்லி சிவரேட் கதிர்வீச்சு உடனடி மரணத்தை தோற்றுவிக்கக் கூடியது. நூறு மில்லி சிவரேட் அல்லது அதற்குக் குறைவான கதிர்வீச்சு என்பது ஒரு அணு உலையைச் சுற்றி எழ‌ வாய்ப்பில்லை என யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அணுக்கதிர்வீச்சு முதலில் தாக்குவது கருத்தரிக்கும் உறுப்புகளைத் தான். இதனால் அணு உலையைச் சுற்றியிருக்கும் ஆண்களும் பெண்களும் மலடாகவோ அல்லது உருச்சிதைந்த குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களாகவோ மட்டுமே இருப்பர். இதனால் ஒரு சமூகமே அழியும் பேரவலம் திரைமறைவில் காத்திருக்கிறது. கதிர்வீச்சு கடல்வாழ் உயிரினங்களுக்கும் உலைவைக்கும் என்பதால் கடலை நம்பியே வாழும் மக்களின் வாழ்வாதாராம் பறிபோகவிருக்கிறது.

ச‌ங்க‌ர‌ன்கோவில் இடைத்தேர்த‌லுக்குப் பின் கூட‌ங்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌த‌ற்கான‌ எல்லா முகாந்திர‌ங்க‌ளையும் த‌மிழ‌க‌ அர‌சு செய்து வ‌ருகிற‌து. எட்டுமணி நேர மின்வெட்டின் மூலம் கூடங்குள அணு உலையைத் திறக்ககோரி மக்களிடையே ஒருமித்த பொதுக்கருத்தை கட்டமைத்தது முதற்கொண்டு, பேச்சிப்பாறை அணையை தூர்வார‌ ஆணை பிற‌ப்பித்த‌து, எம்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட‌ அணு உலை ஆதரவாளர்களை வைத்தே நிர்மாணிக்கப்பட்ட நிபுணர் குழு, என‌ மெல்ல‌ மெல்ல கூடங்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌தில் மாநில‌ அர‌சு த‌ன் இர‌ட்டை வேட‌த்தைக் க‌லைத்து வ‌ருகிற‌து.

இலங்கையில் லட்சக்கணக்கான நம் தமிழ் உறவுகளை பறிகொடுத்தபோது செய்வதறியாது கையறு நிலையில் இருந்த நாம், நம் சொந்த மண்ணிலேயே மீண்டுமொரு சதி நிறைவேற அனுமதிக்கக் கூடாது. வலுவான வெகுஜன ஊடகங்களை தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்ட மத்திய, மாநில அரசுகளின் பொய்யுரைகளை அம்பலமாக்கி அவற்றை வேரறுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. இதற்கான களப்பணிகளை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

நொடிப்பொழுதில் லட்சக்கணக்கானோருக்கு ஒரு தனிமனிதனின் முயற்சியாலேயே செய்திகளைக் கொண்டு சேர்க்க வல்ல அதிநவீன கால கட்டத்தில் வாழும் நாம், பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய வழிகள் எளியன. எடுத்துக்காட்டாக அலுவலக நண்பர்களுக்குப் புரிய வைக்கலாம்; விவாதிக்கலாம். உண்மைகளை தரவுகளோடு எடுத்துரைக்கலாம். பக்கத்து வீட்டு பெரியவர்களுடன் இது குறித்து உரையாடலாம். சிறு கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யலாம். கூடங்குள அணு உலையின் பேராபத்துகள் குறித்து கட்டுரைகள் நிறைந்த சிறு புத்தகங்கள் எண்ணற்ற அளவில் கிடைக்கின்றன. அதை நண்பர்களுக்குக் கொடுத்து கருத்து கேட்கலாம். பேருந்து, ரயில் பயணம் என கிடைத்த சந்தர்ப்பங்களில் அணு உலைகள் குறித்து பேச முயற்சிக்கலாம்.

எப்படி பேச்சை ஆரம்பிப்பது? வெகு சுலபம். மின்வெட்டு என்ற ஒரு பொறி போதும். அல்லது கூடங்குள அணு உலை படம் போட்ட புத்தக‌மொன்றை கையில் எடுத்துக் கொண்டால் அருகிலிருப்பவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். தொடர்ந்து முகநூலில் நிலைத்தகவல்களை எழுதுதல், கட்டுரைகளைப் பகிர்தல் என எல்லா வகையிலும் நமது பரப்புரைகளைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து கூடங்குள மக்களின் போராட்டங்களுக்கு நம்மால் இயன்றவரை எல்லா வகையிலும் தோள் கொடுத்து, மக்கள் போராட்டம் வெல்லும் வரை உடன் நிற்போம்.


பெப்ரவரி 14,2012 அன்று கீற்று இதழில் வெளிவந்தது

***********************************************************