Thursday, February 14, 2013

அப்ஃசல் குருவும் கஷ்மீரும் - வஞ்சிக்கப்பட்ட வரலாறு
வருகின்ற‌ நாடாளுமன்ற‌ தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரசு அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வீச, பா.ஜ.க வுக்கு எவ்வித அருகதையும் இல்லை. இருகட்சிகளுமே கழுத்தளவு ஊழல் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் கட்சிகள் என்பதால் ஊழலை ஒரு முக்கிய குற்றச்சாட்டாக பா.ஜ.க பயன்படுத்த முடியாது. எனவே தேசப்பாதுகாப்பு என்ற ஒரு கருத்தியலை எடுத்துக் கொண்டால் மட்டுமே காங்கிரசை கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற பா.ஜ.க வின் திட்டத்தை, காங்கிரசு முறியடிக்க இந்த வைகறைக் கொலைகள் அவசியமாயிருக்கின்றன. இந்து தீவிரவாதிகள் என வாய் மலர்ந்ததற்காக எங்கே வாக்கு வங்கியை தவற விட்டு விடுவோமோ என்ற பதை பதைப்புடன் இப்படுகொலை முழுக்க முழுக்க சர்வ ரகசியமாக, உரிய நேரத்தில் காங்கிரசின் காய் நகர்த்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த புள்ளியிலிருந்து தான் அஃப்சல் குரு படுகொலையை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியலமைப்பு, ஆனால் அஃப்சல் குருவின் வழக்கில் நடந்ததோ இதற்கு நேரெதிர்.

சரணடைந்த போராளியான அஃப்சல் குரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். சரணடைந்த போராளிகளுக்கு எந்த அரசு வேலையும் கிடைக்காது. அஃப்சல் குருவுக்கு ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்ளும் அளவுக்குக் கூட வசதியில்லை.குற்றம் சாட்டப் பட்ட நால்வரில் தண்டனை வழங்கப்பட சாத்தியம் உள்ளவராக இருந்த போதிலும் அஃப்சலுக்கு மட்டுமே வழக்கறிஞர் யாருமில்லை. தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறு அவர் சிறப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.எட்டு வழக்கறிஞர்களின் பெயர்களடங்கிய பட்டியலொன்றையும் அவர் அளித்திருந்தார். எனினும் தாங்கள் தேசத்துரோகிகள் என அழைக்கப்பட நேருமோ என்கிற அச்சத்தின் விளைவாக அவ்வழக்கறிஞர்கள் அவருக்காக வாதிடுவதற்கு மறுத்துவிட்டனர்.ராம்ஜெத் மலானி மட்டும் கிலானிக்காக வாதிட முன் வந்த போது, சிவசேனா இந்து வெறியர்கள் அவரது மும்பை அலுவலகத்தை சூறையாடியது நினைவிருக்கலாம்.

இறுதியாக 2002 ஜூலை 12 ஆம் தேதி அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒரு இளம் வழக்குரைஞரை சட்ட உதவுனராக ( amicus curiae) நியமித்தும், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அஃப்சலுக்கு உரிமை அளித்தும் ஆணை ஒன்றை இட்டார். கிரிமினல் விசாரணை என்பது குற்றவியல் சட்ட அறிவைக் கோரும் ஒரு விஷயம் என்பதையும் ஒரு சாதாரண மனிதன் சட்ட உதவியின்றி குறுக்கு விசாரணை செய்ய முடியாது என்பதையும் எல்லோரும் அறிவர். அஃப்சல் சட்ட உதவி பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். எஸ்.ஏ.ஆர் கீலானியைக் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட அகில இந்திய குழுவிற்கும், உச்சநீதி மன்றத்தால் அவருக்காக வாதாடிய வழக்கறிஞருக்கும் அவர் எழுதிய கடிதங்களை வாசித்தால் சட்டபூர்வமாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் அவரது முயற்சிகள் எவ்வளவு குரூரமாக மறுக்கப்பட்டன என்பது புரியும்.

தடை செய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பிலும் முகம்மது அஃப்சல் உறுப்பினராக இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் வெளிப்படையாக கூறியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் பொடா சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளிலிருந்தும் அஃப்சலை அது விடுதலை செய்துள்ளது. பொடா சட்டம் 3(2) பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட தண்டனை விலக்கப்பட்டுள்ளது. அவர் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார் என்பதற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தைத் தவிர வேறு நேரடி ஆதாரம் எதுவுமில்லை என்பதால் பொடா சட்டம் 3(5) பிரிவின் கீழான தண்டனையும் விலக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் வாக்குமூலத்தின் படியும் கூட அவர் எந்த ஒரு பயங்கரவாதக் கும்பல் அல்லது அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார் என்பது சந்தேகத்துக்குரியதே என்பதையும் நாங்கள் சொல்ல முடியும்” என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.காவல்துறை சார்பாக 80 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட அஃப்சலுக்கு ஏதேனும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டவில்லை. உண்மைகள் இப்படி இருந்தும் கூட காவல் துறையும் ஊடகங்களும் தொடர்ந்து அஃப்சல் குருவின் மரணத்தை ஒரு “தீவிரவாதியின்” மரணமாகத் தான் கொண்டாடி மகிழ்கின்றன. இது அடிப்படை இசுலாமிய வெறுப்பும் இந்துத்துவ பாசிச வெறியும் அறுவடை செய்த மரண தண்டனை. உலகளாவிய பச்சைக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு, அடிவருடி இந்திய அரசு நிறைய துரும்புகளைக் கிள்ளிப் போட வேண்டியிருக்கிறது.‘இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும்” என்று கூறி அஃப்சல் குருவிற்கு மரண தண்டனை அளித்தது உச்ச நீதிமன்றம். நாட்டையே உலுக்கிய நிகழ்ச்சியின் விசாரணையும், தண்டனை வழங்கிய விதமும் எவ்வளவு கேலிக்கூத்தான வகையில் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

அஃப்சல் குரு தூக்கில் இடப்பட்டது அவரது குடும்பத்திற்கு கூட தெரிவிக்கவில்லை, அதுமட்டுமின்றி அவரது உடலையும், சனநாயகத்தையும் சேர்த்து திகார் சிறையினுள்ளே புதைத்துவிட்டது இந்திய அரசு. அஃப்சல் குரு தூக்கிலிட்ட அன்றிலிருந்து இன்று வரை கஷ்மீர் முழுக்க ஊரடங்கு உத்தரவு, அஃப்சல் குரு குடும்பம் உள்ளிட்ட கஷ்மீர் மக்கள் யாருக்கும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட உரிமையில்லை, ஆனால் நாம் சொல்கின்றோம் இந்தியா சனநாயக நாடென்று, தன் தந்தையின் இறந்த உடலை கூட பார்க்கமுடியாத சனநாயக நாட்டில் வாழ்கின்றது அஃப்சல் குருவின் குழந்தை. அஞ்சலி செலுத்துவதற்காக ஒன்று கூடிய மக்களின் மேல் எந்த வித சனநாயக வழிகளையும் பின்பற்றாமல் நடந்தேறிய துப்பாக்கி சூட்டில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். மருத்துவர்கள் கூட தங்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இராணுவ படையினரால் தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.

இந்த கூட்டு மனசாட்சியில் கஷ்மீரிய மக்களுக்கு இடமில்லையா? அல்லது சமூகத்தின் கூட்டு மனசாட்சி ஒரு உயிரின் முடிவில் தான் சமனமடைகிறதா? அஃப்சல் குரு என்ற இளைஞனுக்கு நிகழ்ந்த இந்த கொடூரம் இன்று ஒவ்வொரு அப்பாவி கஷ்மீரி இளைஞனுக்கும் அவன் சொந்த மண்ணிலேயே நடந்து கொண்டிருக்கிறது. இயற்கை அழகு கொஞ்சும் கஷ்மீரில் இன்று எட்டு லட்சம் இந்திய ராணுவ வீரர்கள், அதாவது ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவ வீரன். இராணுவ படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற வரம்பிலா அதிகாரத்துடன் அம்மக்களை ஆண்டு வருகின்றனர். இராணுவம் யாரை வேண்டுமென்றாலும் கொலை செய்யலாம், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கலாம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காது, அதற்கு பதிலாக பதவி உயர்வுகளும், பரிசுகளும் சன்மானமாக கிடைக்கின்றன. கடந்த 2010 சூலையில் இந்த இந்திய இராணுவத்தினரால் 113 சிறுவர், சிறுமியர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், இவர்களை சுட்டுக்கொன்றவர்களின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை இல்லை, 6000த்திற்கும் அதிகமான மனித புதைகுழிகளை கஷ்மீர் அரசு அமைத்த மனித உரிமை ஆணையம் கண்டுபிடித்து சட்டசபையில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது, இதன் மேலும் எந்த ஒரு விசாரணையும் இல்லை. கஷ்மீரை ஆள்வது சனநாயகமல்ல, இராணுவமே. மணிப்பூரின் ஐரோம் சர்மிளா முதற்கொண்டு தற்போது அமைக்கப்பட்ட வர்மா கமிசன் வரை எல்லோரும் பரிந்துரைக்கும் முதல் வாக்கியம் இராணுவ படை சிறப்பு அதிகார சட்டத்தை இரத்து செய்யச் சொல்கின்றது, ஆனால் அரசு அதை காதில் கூட வாங்க மறுக்கின்றது.

பூக்களின் தேசம் இன்று ராணுவ கூடாரங்கள் சூழ்ந்த விதவைகளின் தேசமாக மாறிப் போயிருக்கிறது.கடந்த 18 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் கஷ்மீரிக‌ள் இந்தியப் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80,000 குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். தொடர்ந்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆண்டின் பல மாதங்கள் ஊரடங்கு உத்தரவு.

கஷ்மீர் பிரச்சினைக்கு 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு இருக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில், இந்திய ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கின்றன. இவ்விவகாரத்தில் அமெரிக்காவோ ஐ.நாவோ வேறு எந்த மூன்றாம் தரப்போ தலையிடுவதை நிராகரிப்பது தான் அதன் முதல் நிலை.காரணம், எச்சூழ்நிலையிலும் அது கஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசை ஏற்கச் செய்து விடவும் கஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வாய்ப்பளித்து விடக்கூடும்.ஆகவே தான் கஷ்மீர் ஒரு சர்வதேச பிரச்சினையாவதை எப்போதும் கடுமையாகவே எதிர்த்து வந்திருக்கிறது இந்திய அரசு. அதே நேரம் எல்லைக்கப்பாலிருந்து பயங்கரவாதிகளை ஏவிவிடுவதால் பாகிஸ்தானைப் பயங்கரவாத நாடாக அறிவித்து, பொருளாதாரத் தடைகள் விதித்து ஒடுக்க வேண்டும் என்று தொடர்ந்து உலக நாடுகளை வற்புறுத்தியே வந்திருக்கிறது. இது தான் கஷ்மீர் மக்கள் தொடர்ந்து இந்திய அரச பயங்கரவாதத்தின் மூலம் வஞ்சிக்கப்படும் வரலாறு.

கஷ்மீர் மண்ணும் மலையும் காடுகளும் இயற்கை வளங்களும் கஷ்மீரிய மக்களுக்கே சொந்தம். அதைக் கேட்பது அவர்கள் உரிமை. அஃப்சல் குருவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேள்விக்குள்ளாக்குவதன் மூலமும் கஷ்மீரிய தெருக்களில் கட்டவிழ்க்கப்படும் இந்திய அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவதன் மூலமுமாகத் தான் அம்மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் நாம் துணை நிற்கிறோம் என்பதை அவர்களுக்கு நாம் உணர்த்த முடியும். கஷ்மீர் நிலப்பரப்பை மட்டும் நேசித்து கஷ்மீர் மக்களை இராணுவப் பிடியில் வைக்கச் சொல்லும் இந்தியாவின் பெரும்பான்மை ’நாட்டுப் பற்றாளர்கள்’ போல் அல்லாமல் கஷ்மீர் மக்களை நேசிக்கும் நாட்டுப் பற்றாளர்கள் கஷ்மீரிகளோடு இருக்கின்றார்கள் என்பதை உரக்கச் சொல்வதே நம் முன் இருக்கும் கடமை.


கீற்றுவில் வெளிவந்தது

---------