Sunday, August 30, 2009

நத்தை (பாகம்-2)

"தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும்.அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.."

*******************

கீழ‌க்க‌ர‌ கார‌வுஹளாம்.மாப்ளக்கார‌ன் ல‌ண்ட‌ன்ல‌ க‌ம்யூட்ட‌ர் என்ஜினியரா இருக்காப்ள‌யாம்.ந‌ல்லா வெச்சிருக்கிருவாஹ‌ போல.தெருவீட்டில் ச‌ஹ்ரானி மாமா,உரத்த குரலில் வாப்பாவிடம் சொல்லிக் கொண்டிருந்த‌ வெற்றிலைக் குதப்பல் அடுப்பங்கரை முட்டும் பட்டுத் தெறித்தது.இப்ப‌த்தான‌ ப‌ள்ளிக்கூட‌ம் முடிச்சிருக்கா.டீச்ச‌ர் டிரெயினிங் வேற‌ ப‌டிக்க‌ணுன்டு திரியிறா.அதுக்கு விருதுந‌க‌ர்ல‌ ஹாஸ்ட‌ல்ல‌ த‌ங்கி ப‌டிக்கணுமாம்ல‌.பொம்ப‌ள‌ புள்ள‌ய‌ காலேஜிதேன்.ரெண்டு வ‌ருசம் அதுவரைக்கிம் பொறுத்து கிருவாக‌லா? அதெல்லாம் பேசிக்கிர‌லாம் ம‌ச்சான்.ஒத்துக்கிருவாஹ..ப‌டிக்கிற புள்ள‌ய‌ நாம ஏன் த‌டுக்க‌..! ச‌ஹ்ரானி மாமா பேச‌ ஆர‌ம்பித்து விட்டார் என்றால் பாறையையும்,வேக‌ வைத்து கிழ‌ங்காக்கி மசித்து விடுவார்.அந்த‌ க‌ம்பியூட்ட‌ர் என்ஜினிய‌ர் வீட்டையும் சேர்த்து.

அப்ப ஊனாமூனாவ என்னளா பண்ணப் போற! ச்செவப்பி கேட்க கேட்க,மெஹரு கண்களில் தாரை தாரையாக‌ பெருகி கொண்டிருந்தது.சினிமால வர மாதிரி இழுத்துக்கிட்டா ஓடமுடியும்.ஓடுறது ஒருபக்கம் இருக்கட்டும்.அதுக்கு இந்த அழுக்கு குத்து என்ன மனசுல நெனச்சிருக்கோன்னு யாருக்கு தெரியும்.சரி இன்னும் ரெண்டு வருசம் இருக்குல்ல..நீ அழுவாத‌! ப்பாப்பம்..ஒந்தலையில என்ன எளுதிருக்கிண்டு...நீ அலட்டிக்காம போயி படிக்கிற வளியப்பாரு..!

கமுதி,முதுகுளத்தூர்,சிக்கலூர் சனம் முழுவதும் அவ‌ள் வீட்டில் நிரம்பி வழிய,அடுத்த‌ வார‌மே பூ வைக்கும் வைப‌வ‌ம் ந‌ட‌ந்தேறிய‌து.எம்.எஸ் வீட்டு நிகழ்ச்சின்னா சும்மாவா..பூ வைத்த‌ல் என்ப‌து நிச்ச‌யதார்த்தத்திற்கு முன்பு ந‌ட‌க்கும் ப‌ரிச‌ம் போடுத‌ல் அல்ல‌து ட‌வுன் ப‌ஸ்ஸில் சீட்டுக்காக‌ துண்டு போடுத‌ல் வ‌கைய‌றாக்க‌ளை ஒத்த‌து.இந்த சின்ன நிகழ்ச்சிக்கே, சுந்தரபுரத்து தெரு முழுதையும்,கீழக்கரை டாட்டா சுமோக்கள் நிறைத்திருந்தன.ஆட்டுக்கிடா ஆனமும் முந்திரி போட்ட நெய்ச்சோறும் சட்டி சட்டியாக இறங்கின.நண்டு,சுண்டு முதல் அந்த கீழக்கரை குடும்பத்து பெரியவர்கள் மீது வரை வீசிய‌ அத்தர் வாடை அவளுக்கு குமட்டத் தொடங்கியது.காட்டுமல்லி மணமும் பட்டுப்புடவைகளும்,தரைதொடுமளவு தங்க நகைகளும் ஒப்பவில்லை.வந்தவர் கண்கள் எல்லாம் அவள் மீது படிந்திருந்தாலும்,தனித்து விடப்பட்டதாகவே உணர்ந்தாள்.தன்னைச் சுற்றி நடப்பவை எல்லாம் அந்நியமாகப்பட்டன.

வந்த சனம் முழுதும் வெற்றிலைகளையும் தேங்காய்களையும் சேலையில் முடிந்து கொண்டு,அவள் நெற்றியைத் தடவி "கொடுத்து வச்ச மவராசி"க்களை வாரி வழங்கி விட்டு நகரத் துவங்கியிருந்தது.வாப்பாவும் அம்மாவும் பூரிப்புடன் அதை பார்த்துக் கொண்டிருந்தனர். சஹ்ரானி மாமா சமையல்,பந்தல்,சேர்க்காரனுக்கு செட்டில் பண்ணிக் கொண்டிருந்தார்.கனமான சீமைச் சில்க்கிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு,மீண்டும் பழைய பூப்போட்ட கத்தரிப்பூ தாவணிக்கே மாறினாள்.என்னமோ அந்த தாவணியை உடுத்தும் சமயம் மட்டும் அவனை பார்த்து விடுவதாய் ஒரு குருட்டு நம்பிக்கை.சில நேரங்களில் அது நடந்தும் இருக்கிறது.

மதியந்தே இந்த கொள்ள கூக்கறையில சரியா சோறுண்டுருக்க மாட்ட.இப்பவாவது ஒலுங்கா தின்னுளா! அம்மா கத்தியது காதில் விழவேயில்லை.மனம் என்னவோ சொரட்டுபுள் திண்ணையையும்,கேபிள்காரனையுமே சில்லுவண்டாய் சுற்றிக் கொண்டிருந்தது.மேனி முழுதும் படர்ந்திருந்த அவன் சாயம் அடைமழையே நனைத்தாலும் வெளுக்கப்போவதில்லை என்ப‌து ம‌ட்டும் ச‌த்திய‌ம்.

ஊர் முழுதும் நிசப்தத்தை போர்த்திக் கொண்டு நள்ளிரவு முழுமையடைந்திருந்தது.கொலுசுகளை கழற்றி வைத்தாள்.கொள்ளைப்புற கதவை சத்தமில்லாமல் திறந்தாள்.பாவாடையை இழுத்து இடுப்பில் செருகிக் கொண்டாள்.கிணற்றுத் திண்டில் கால்வைத்து ஏறி,சுவர்களை பற்றிக் கொண்டு பின் தெருவில் குதித்தாள்.சுண்ணாம்பு வீடுக‌ளைத் தாங்கிய‌ சொர‌ட்டுபுள் தெரு வெறிச் சோடிப் போயிருந்தது.விறுவிறுன்று அவன் வழக்கமாக தூங்கும் ப‌ழ‌ந்திண்ணையை நோக்கி ந‌ட‌க்க‌த் துவ‌ங்கினாள்.

கொசுவ‌த்தி சாம்ப‌ல் த‌ரையில் உதிர‌,லேசான‌ குற‌ட்டைச் ச‌த்த‌த்துட‌ன் அவ‌ன் உற‌க்க‌த்தில் ஆழ்ந்திருந்தான்.உத‌டுக‌ள் துடிதுடிக்க‌ அவன் முகத்தைப் பார்த்த‌ மாத்திர‌த்தில் அவளுக்கு அழுகை வெடிக்க ஆரம்பித்தது.என்ன‌ எங்கியாவ‌து க‌ண் காணாத‌ எட‌த்துக்கு கூட்டிட்டு போயேண்டா!!! ஓவென்று க‌த‌ற‌த் துவ‌ங்கினாள்.இடி இடித்தாற் போல் அலறிக் கொண்டு எழுந்தான் ஊனாமூனா.க‌ண்களாலேயே விழுங்குப‌வ‌ள் போல‌ அவ‌ன் முக‌த்தையே அவ‌ள் வெறித்துக் கொண்டிருக்க,திண்ணைச்சுவற்றில் சாய்த்து வைக்க‌ப்ப‌ட்டிருந்த ஆயிரம் சுள்ளிக்குச்சிக‌ள் அவ‌ள் மேல் ச‌ரிந்து விழ‌..அவ‌ள் அவ‌ன் மேல் விழ‌..சுள்ளிக்குச்சிக‌ள் முழுதும் இருவர் மீதும் சரிய‌,அவன் அவளை இறுக அணைத்துக் கொள்ள‌,இருளில் இருவரும் மூழ்கிப்போயின‌ர்.ஒரு ந‌த்தையை போல மெதுவாக ஊர்ந்து சென்ற அந்த‌ இர‌வு, இருளை ஊதி அணைக்க‌ ஆர‌ம்பித்திருந்த‌து.

***************முற்றும்***************

Monday, August 17, 2009

நத்தை

"தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய்.."

--------------------------------
ஊள‌மூக்கு உம்முனாமூஞ்சிக்கு இன்று தான் பிறந்த‌ நாளென்று நாடார்வீட்டு ச்செவ‌ப்பி மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்பு சொன்ன‌து எப்ப‌டி ம‌ற‌க்கும் அவ‌ளுக்கு.அத‌ற்காக‌ ப‌த்து வெளாம்ப‌ழ‌ம‌ல்ல‌வா ப‌றிகொடுக்க‌ வேண்டியிருந்த‌து.ஆளைப்பார்ப்ப‌தே ராம‌நாத‌புர‌த்தில் ம‌ழைபெய்வ‌தைப் போல‌ அரிதாக இருக்க‌,வெறும் ஞாப‌க‌ம் ம‌ட்டுமே வைத்து கொள்வ‌தில் என்ன‌ ப‌ய‌ன்.அதுவும் பார்க்கும் போதெல்லாம்,எண்ணெய் வ‌ழிய‌,எள்ளும் கொள்ளும் வெடிக்க‌,சுண்ட‌ வைத்த‌ வெஞ்ச‌ன‌க்கிண்ண‌ம் போல்,முக‌த்தை உர்ரென்று வைத்து
அலைந்து கொண்டிருக்கும் அந்த‌ உயிரின‌ம்.எது எப்ப‌டியிருந்தாலும் இன்று அவ‌னைப் பார்த்தே தீர‌ வேண்டுமென்று ஊருணியில் துணிவெளுக்கும் கல்லின் மீது அடித்து சத்தியம் செய்து கொண்டாள்.

அந்த ஊனாமூனா கேபிள்கார‌னின் திருமுக‌த்தை த‌ரிசிப்ப‌த‌ற்கு,அவ‌ள் பின்னும் சூழ்ச்சிவ‌லைகள் இருவ‌கைப்ப‌டும்.ம‌திய‌நேர‌மாக‌ இருந்தால் அம்மா சீரிய‌ல் பார்க்கும் நேர‌ம் பார்த்து,மெதுவாக‌ கொள்ளைப்புற‌ம் சென்று உமி நிர‌ம்பியிருக்கும் சவுக்கு கூடையின் மேல் எடை போடாம‌ல் ஏறி,பூஸ்ட‌ரில் செருகியிருக்கும் கேபிள் வ‌ய‌ரை பிடுங்கி விட்டால், உள்ளிருந்து திட்ட‌ப்ப‌டி அம்மாவின் குர‌ல் வ‌ரும், "பேதில‌ போயிருவாய்ங்க‌..ந‌ல்ல‌து பொல்ல‌து பாக்க‌ விட‌மாட்டாய்ங்க..எப்பப் பாரு கேபிள் கரெண்டு கட்டு! ஏளா மெஹ‌ரு..அந்த‌ கேபிள்கார‌ய்ங்க‌ளுக்கு போன‌ போடுளா"..!!இது ஒரு வ‌கை.ஐந்தாம் தேதி த‌ர‌வேண்டிய‌ கேபிள் ப‌ண‌த்தை, எட்டு ப‌த்து ப‌தினைந்து வ‌ரை வேண்டுமென்றே இழுத்த‌டித்து அடிக்க‌டி வீட்டுக்கு வரவைத்து முக‌ம் பார்ப்ப‌து இன்னொரு வ‌கை.

ஏற்கென‌வே ப‌ல‌முறை இந்த‌ பிர‌ம்மாஸ்திர‌ங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு தீர்ந்து விட்ட‌ன‌.ம‌திய‌ம் பள்ளிவாசல் தெரு வ‌ழியாக அவன் வ‌ரும் வாய்ப்புக‌ள் அதிக‌ம்.திண்ணையில் ப‌ர்மா கிழ‌வி க‌ண்ண‌ய‌ரும் நேர‌மாக பார்த்து க‌த‌விடுக்கில் ஒளிந்து கொண்டாள்.எல்லாம் ஓரிரு நொடிகள் குறுகுறுப்பு ப‌ர‌வ‌ச‌ பார்வைக‌ளுக்காக‌த் தானன்றி,அந்த பட்டிக்காட்டில் வேறென்ன வேறென்ன சாதித்து விடமுடியும்.நெற்றி விய‌ர்வை நீர்த்திவ‌லைக‌ள் பூத்து ஒவ்வொன்றாக‌ உதிர‌ தொட‌ங்கும் வேளையில்,ச‌ட்டென்று ச‌ருகில் தீப்பிடித்த‌தை போல் ஒரு ச‌ல‌ன‌ம்.துருப்பிடித்த அந்த‌ பெரிய‌ கேரிய‌ர் சைக்கிள் பெல்லின் கர்ர்முர்ர் சத்தம் நான்கு தெருக்க‌ளுக்கு அப்பால் இருந்து ஒலித்தாலும்,ஏதோ ஒரு அலைவ‌ரிசையில்,அதிர்வெண்ணில் அவ‌ள் காதுக‌ளை எட்டிவிடுகிற‌து.

தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய், அவ‌ளும் அவ‌ள் காத‌லும் க‌த‌விடுக்கில் அவ‌ன் வ‌ர‌வை எதிர்பார்த்து..!ந‌ம்ப‌ முடிய‌வில்லை.ஏழெட்டு மாத‌ங்களுக்கு முன்பிருந்த‌ நிலைமை இப்போது த‌லைகீழ். ப‌ள்ளி தோழிக‌ளிட‌ம் ஜான்சிராணி தொனியில் காத‌ல் எதிர்ப்பு வ‌ச‌ன‌ங்க‌ள் பேசிய‌தும்,பெண்ணிய‌ம் பற்றி கொட்டை எழுத்துகளில் க‌ட்டுரை எழுதிய‌தும் இந்த‌ வாயில்லா பூச்சியிட‌ம் தோற்க‌த்தானா? அப்ப‌டியென்ன அவ‌ன் மீது அப்ப‌டியொரு ஈர்ப்பு.பார்த்த‌வுட‌ன் வ‌சீக‌ரிக்கும் முக‌ம் கொண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை.ப‌டிப்பு வாச‌னையும் கிடையாது.பிறகு எங்கிருந்து ஒட்டி கொண்டது அவன் சாயம் அவள் மேல்.

மாலை இருட்டும் வரை கால்கடுக்க நின்றது தான் மிச்சம்.கடைசி வரை அத்தெருவுக்குள் அவன் வரவே இல்லை.கோபத்தில் உதடுகள் துடித்தன.கண்கள் நிறைந்து விட்டன.என்ன தெரியும் அவனுக்கு.செக்குமாடு மாதிரி இர‌வு வ‌ரை சைக்கிள் மிதித்து,வீடு வீடாய் கேபிள் கனெக்ச‌ன் மட்டுந்தான் கொடுக்க‌த் தெரியும். கடந்த ஆறுமாதங்களாக இந்த கூத்து நடந்து கொண்டு தானிருக்கிறது.ஒவ்வொரு நாளும் இப்படித்தான் எதிர்பார்த்தபடியே ஏமாற்றுவான்.

தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும். அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.

( வரவேற்பை பொறுத்து மீதி.......)

*******************************