Wednesday, May 27, 2009

யார் சொன்னது ந‌ம்மைக் காதலிக்க யாருமில்லையென்று !!!!

ந‌ம்மைப் புர‌ட்டி போட்டு,க‌ச‌க்கி க‌ந்த‌லாக்கும் வாழ்வு தான் தின‌ம் தின‌ம்.

நேற்றைய நற்பொழுதுகள் மறக்கப்பட்டு, நாளைய‌ க‌ன‌வுக‌ள் சிதைக்க‌ப்ப‌டும் எதிர்பாராமையை எதிர்கொள்ளும் ச‌வால்களுமே அதிக‌ம்.ந‌ம்மை நாமே காத‌லிக்க‌ த‌குதியில்லாமை மேற்கூறிய‌வைக‌ளை பொறுத்து தான் அமைகிற‌து.நிற‌ம்,தோற்ற‌ம்,உய‌ரம் போன்ற‌ அளவைகள் ம‌ற்ற‌வ‌ர்க‌ள் ந‌ம்மை காத‌லிக்க‌ குறைந்த பட்ச தகுதிகளாக‌ நாமே நிர்ண‌யித்து கொள்த‌லில் ஏமாற்றங்கள் ம‌ட்டுமே மிஞ்சுகின்ற‌ன‌.திருமணத்திற்கு பிறகு தோன்றும் காதலை "பெற்றவை"களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறோம்.அங்கே பொறுப்புகளும் சில கடன் தொல்லைகளும் தோள் சேர்ந்து கொண்டு அந்த உண்மைக் காதலையும் நீர்த்து போகச் செய்து விடுகின்றன.எல்லா அடைப்புக‌ளையும் மீறி, நமக்கே தெரியாம‌ல் என்றோ ஒருநாள் நமக்கு ஆதரவாக காதல் பிறந்திருக்கும்..நாமும் பல தருணங்களில் காதலிக்கப்பட்டிருப்போம்.காத‌லிக்க‌ப்ப‌ட்டு கொண்டிருக்கிறோம்.

எங்கே எப்போது ??? ......இருக்க‌லாம்......

பேருந்து நிழ‌ற்குடையிலும் டீக்க‌டையிலும் ஒதுங்கி நிற்போர் கண்கள் விரிய‌, சுஜாதாவையும் செல்போனையும் பாலிதீனில் வைத்து நீர்புகா வ‌ண்ண‌ம் இறுக‌ க‌ட்டி கொண்டு,குடையை மடக்கி வைத்து விட்டு,கொட்டும் ம‌ழையில் அம்மா சொல்லியும் கேட்காமல் சேற்றில் ந‌ட‌ந்த‌ "சொத‌க்" "சொத‌க்" க‌ண‌ங்க‌ளிலா...

வெள்ள‌ம் க‌ரைபுர‌ண்டோடிய‌ ம‌ழைக்கால‌ங்க‌ளில், அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவ‌து த‌ள‌த்தின் உய‌ர‌த்திலிருந்து செலுத்திய‌ க‌த்திக் க‌ப்ப‌ல்,நீரில் மூழ்கும் போதும் கலங்கிய நாட்களிலா...

ச‌வேராக்க‌ளையும் ஷெர‌ட‌ன்க‌ளையும் புறக்கணித்து விட்டு,நண்பன் பிறந்த நாளை அந்த கிழ‌க்கு குறுக்கு தெரு கையேந்திபவன் சுண்டல் கடையில் அறுபது ரூபாய் செலவில் கொண்டாடி மகிழ்ந்தோமே !!! அந்த டிசம்பர் மாத இரவுகளிலா....

மின்சார ரெயில் எதிர் இருக்கையில், தன் பாட்டி மடியில் படுத்து கொண்டு..நம்மை முறைத்து பார்க்கும் குழந்தையின் பிஞ்சு விரல்களை லேசாக உரசிப் பார்த்து சிலாகிப்போமே !!! அந்த அரை மணி நேர பயணங்களிலா...!

அலுவலகம் முடிந்து களைப்புடன் வீடுதிரும்பும் மாலைப் பொழுதுகளில், முகத்தில் புழுதி வாரியிறைப்பதையும் பொருட்படுத்தாது,சட்டை கைகளை மடக்கி வைத்து விட்டு, சாலையோர‌ சிறுவர்களுடன் கால்பந்து ஆடி களித்தோமே....! அப்போது மளிகை கடையோடு கூடிய அந்த மாடி வீட்டு மயிலொருத்தி சன்னலோரத்தில் நின்று,ஓரக்கண்ணால உங்களை சைட்டிருக்கலாமே !!! அந்த அந்தி நேர பொழுது சாயுதல்களிலா.......

சாலையில் சிதறி கிடக்கும் பூக்களையும் சிதறாமல் விரிக்கப்பட்டிருக்கும் கோலங்களையும் மிதித்து விடுவோமோ என்ற பிரக்ஞையில், தாவி தாவி நடக்கும் மார்கழி மாத பனித்துளி முகத்தில் சொட்டும் வைகறைகளிலா...!!

உறவு வீட்டு திருமணமொன்றில், ஓடியாடி வேலைபார்த்து,வந்த சுற்றங்களுக்கெல்லாம் உணவு பரிமாறி,கடைசியில் இருக்கும் மிச்சமீதியை பரிமாறக் கூட ஆள் இன்றி,க‌ளைப்புட‌ன் விய‌ர்வை வ‌ழிய‌ அம‌ர்ந்து,ந‌ம‌க்காக‌ நாமே கிழிந்த இலை விரித்து சாப்பிட முயலும்போது,ஓடிவந்து கரண்டியை பிடுங்கி புன்னகையுடன் பரிமாறுவாளே !!! அத்தை மகள்..அவள் கண்களிலா..

இருக்கலாம்....

பல தருணங்களில் நாம் கவனித்திருக்க மாட்டோம் நம்மை யாரெல்லாம் கவனிக்கிறார்கள் என்று.

வாழ்வின் புதையல்களில் சிக்கி கிடக்கும் ஆயிரமாயிரம் அற்புத கணங்களைத் தோண்டியெடுத்து, தொல்பொருள் துறைக்கு ஒரு நகலையும்,தடயவியல் துறைக்கு ஒரு நகலையும் அனுப்பி வைத்தோமேயானால், கிடைக்கும் நம்மை காதலித்தவர்களின் எண்ணிக்கையை கொண்டு ஒரு தேசத்தையே உருவாக்கலாம்.

வாழ்வு நுரையீரலைப் பிய்த்து தின்னும் வேளைகளிலும், ஈயெறும்புகள் கூட நம்மை காதலிப்பதாக உருவகித்து கொள்ளும் உயர்ந்த உள்ளங்களின் தலைமேல் ஒளிவட்டங்கள் படரக் கடவது !!!

*******************

Sunday, May 17, 2009

ஷேர் ஆட்டோ கவிதை பயணங்கள்பீக் அவ‌ர்ஸ்லில் பேருந்துக்காக காத்திருக்கும் பரபரப்பான காலைப் பொழுதுக‌ளில்,பத்து ரூபாய் கணக்கு பார்க்காமல்,ஒரு சில அசெளகரியங்களையும் அலட்டி கொள்ளாமல்,ஷேர் ஆட்டோக்க‌ளை நாடும் கணவான்கள்,குறித்த‌ நேர‌த்தில் இல‌க்கை அடைத‌லோடு ம‌ட்டுமின்றி, இன்னும் ப‌ல‌ சுவார‌ஸிய‌மான‌ சுகானுபவ‌ங்க‌ளை பெறுகிறார்க‌ள்.

என்னைப் பொறுத்த‌ம‌ட்டில் சென்னையின் ம‌ற்ற ப‌குதிக‌ளைக் காட்டிலும்,வ‌ட‌சென்னை ராய‌புர‌ம்,பீச் ஸ்டேஷ‌ன் மற்றும் வியாச‌ர்பாடி ஏரியாக்க‌ளில் ஷேர் ஆட்டோக்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்தலே அலாதியானது.பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.

க‌ட்டுப்பாடுக‌ளும்,பார‌ம்ப‌ரிய‌மும் மிக்க‌ த‌மிழ் க‌லாச்சார ஏடுக‌ளின் வரலாற்றில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.

ஷேர் ஆட்டோக்க‌ள் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட கால‌கட்ட‌ங்க‌ளில்,குறைந்த‌ க‌ட்ட‌ண‌த்தில் கார் ஸ்டிய‌ரிங் வைத்த‌ விக்ர‌ம் மினிடோர் ஆட்டோக்க‌ள் தான் முத‌லில் மாந‌கராட்சியை வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌.நாங்க‌ள் அதை மூட்டைப்பூச்சி ஆட்டோ என்று செல்ல‌மாக‌ அழைப்போம்.

ஆறு பேர் ம‌ட்டுமே அமர‌லாம் என்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை மீறி, அதிக‌ப‌ட்ச‌ம் ட‌ச‌ன் ஆட்க‌ளை உள்ளே திணித்துகொண்டு, குறுக‌லான‌ ச‌ந்துக‌ளில் கூட, மொனோக்கோ கிராண்ட்பிரீயில், மைக்கேல் ஷீமாக்கர்க‌ளாக‌ சீறிப் பாயும் நம்மூர் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் சாகசங்கள் எண்ணிலடங்கா.

இர‌ண்டாவ‌து சிக்ன‌லில் நிற்கும் போதே, மூன்றாவ‌து சிக்ன‌லில் இருக்கும் டிராபிக் மாமாவின் இருப்பு முன்கூட்டியே அலைபேசியில் ந‌ம்ம‌வ‌ர்க்கு தெரிவிக்க‌ப்பட்டு விடும்.மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.

நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.ப‌ல‌பேருக்கு அது ஊஞ்ச‌லாக‌ ம‌ட்டுமே இருக்கும்.

தாலிக‌ட்டிய‌ ம‌னைவியோடு கூட‌ அத்த‌னை நெருக்க‌மாக‌ அம‌ர்ந்து போயிருக்க‌ மாட்டோம்.அவ்வள‌வு அன்யோன்ய‌ம்.ப‌ழ‌க்கப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளாயிருந்தால் ப‌ர‌வாயில்லை.ஆனால் புதிதாய் ஷேர் ஆட்டோக்க‌ளில் ஏறுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.கூனி கூசி குறுகிப்போய் மனிதர் ஒரு ஓரமாக கால்களை மடக்கி அமர்ந்திருப்பார் பக்கத்தில் பூ கட்டி கொண்டிருக்கும் நம்ம மி(மு)னிமா அக்காவின் வசைகளை கேட்டபடி.

இந்த அலப்பறைகளை குவியாடியில் பார்த்து கொண்டே,டிரைவரின் இடதுபுறம் அசோக‌ சின்ன‌த்தின் சிங்க‌ம் போல‌ தவுலத்தாக‌ அம‌ர்ந்து கொண்டு, "மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி, பார்டைம் ஷேர் ஆட்டோ க‌ண்ட‌க்ட‌ர் வேலை பார்ப்ப‌து ம‌ன‌துக்கு ஒரு இந்த‌ஸ்தை அளிக்குமென்ப‌தில் ஐய‌மில்லை.

ச‌ம‌ய‌ங்க‌ளில்,பாதிவ‌ழியிலே ந‌ம்ம‌ தேர் பிரேக் ட‌வுன் ஆக,ஃபார்ம‌லான‌ உடையில், மென்பொருள் ஐடி கார்டுக‌ளோடு நாமும் இற‌ங்கி த‌ள்ள‌ வேண்டிய‌ நிர்ப‌ந்தத்துக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறோம் என்றாலும், உள்ளே மேல்த‌ள‌த்தில் அம‌ர்ந்திருக்கும் சிட்டுக்குருவிக‌ளின் புன்ன‌கைக‌ளை ப‌ரிசில் பெறுகிறோம் என்ற‌ ஒரு உண்மையை க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும்.

இந்த அரைம‌ணி நேர‌ அற்புத‌ ப‌ய‌ணங்களில் குறைந்த பட்சம் ஒரு சிறுக‌தைக்கான‌ க‌ரு நிச்சயம் கிடைத்து விடும்.முக‌ம் பார்க்க‌ முடியாவிட்டாலும் உள்ளூர‌ ஒரு நெருக்க‌த்தோடு அம‌ர்ந்திருக்கும் ம‌னித‌ர்க‌ள் தான் எத்த‌னை ர‌க‌ம்?

அத்த‌னை பேரையும் ஒரு க‌ட்ட‌த்தில் ஒன்றாக்கி விடுவ‌து இந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ள் மட்டுமே.

சென்னை ந‌க‌ர‌ ம‌க்க‌ளின் அன்றாட வாழ்வில் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ளுக்கு,
கழிப்பறையில் அமர்ந்த வண்ணம் கனநேரத்தில் யோசித்து எழுதிய இக்கவுஜையை அர்ப்பணிக்கிறேன்.

தட தட சத்தமும்
வியர்வை கலந்த டீசல் வாடையும்
இரண்டாம் தளத்தில் அமர்ந்திருக்கும் போது
'பின்னால்' குத்தும் ஆணியும்
முதுகில் மிதிக்கும் இளம்பெண்களின் செருப்பும்
அவ்வ‌ப்போது நிக‌ழும் விப‌ரீத‌ விப‌த்துக‌ளும்
"அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"


மத்தியதர வர்க்க வாழ்வியலின் த‌விர்க்க‌ முடியா அடையாள‌ங்க‌ள்.

******************************************************************

Monday, May 11, 2009

சில்லறை சித்தாந்தம் !


எப்போது ஆரம்பிக்கும் என்று
அவனுக்கு தெரியவே தெரியாது.

விவரம் தெரிந்த நாளிலிருந்தோ
பொம்மைகளினூடோ
புத்தகப் பையிலோ
பக்கத்து வீட்டு பெண்ணிலோ
வளையல் துண்டுகளிலோ
அலுவலகத்திலோ
படுக்கையிலோ
கனவிலோ
ஏதேனுமொன்றை
தேடி கொண்டிருப்பதே அவனுக்கு வாடிக்கை.

தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.

அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய‌
தேடல் மட்டுமே.Wednesday, May 6, 2009

இஸ்லாத்திலும் சாதிகளை புகுத்தாதீர் !!

முஸ்லிம் அல்லாத‌ சகோதரர்கள் மட்டுமின்றி, இன்னும் இஸ்லாத்தை சேர்ந்த சகோதரர்களே இக்கருத்தில் உறுதியானதொரு கருத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தினாலும் இவ்விஷயத்திற்கு நல்லதொரு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் மட்டுமே இப்பதிவை எழுதுகிறேன்.

இதை ஒரு பிரச்சார மற்றும் ஒருதலை பட்சமான பதிவு என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற தயக்கம் இருந்தது.மற்றபடி, "இது ஒரு நல்ல ஆஃபர். அனைவரும் வாங்கி பயனடைவீர்" என்று அறிவிக்க என் வலைப்பூ விளம்பர தளம் அல்ல.

**********************************************************************

ஓரிறை,ஓர் வேத‌ம் என‌ ஏக‌த்துவ‌த்தை பின்ப‌ற்றும் இஸ்லாமிய‌ர்க‌ள் ஏன் ஹ‌ன‌பி,ஷாபி(இந்தியாவில்), ச‌ன்னி,ஷியா ( இராக்கில்) என பல்வேறு குழுக்களாக‌ பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ர்.இந்த‌ பிரிவினைக‌ளை இஸ்லாம் ஆத‌ரிக்கிற‌தா ?? இஸ்லாத்தில் சாதீய‌ம் என்ற‌ ஒரு க‌ருத்து இருக்கிற‌தா ??

இதற்கு பதில் "நிச்ச‌ய‌மாக‌ இல்லை" என்ப‌தே.மேலும் இந்த‌ நெறிமுறைக‌ளின் வீரிய‌ம் கொஞ்ச‌ம் அதிக‌ம்.

இத‌ற்கான‌ ஆணித்த‌ர‌மான‌ விடை குர்ஆனில் இருக்கிறது.

"நிச்ச‌ய‌மாக‌ எவ‌ர் த‌ம்முடைய‌ மார்க்க‌த்தை ( த‌ம் விருப்ப‌ப்ப‌டி ப‌ல‌வாறாக‌ப் பிரித்து) ப‌ல‌ குழுக்க‌ளாக‌ பிரிந்து விட்ட‌ன‌ரோ அவ‌ர்க‌ளுட‌ன் (ந‌பியே !) உம‌க்கு எவ்வித‌ ச‌ம்ப‌ந்த‌முமில்லை;அவ‌ர்க‌ளுடைய‌ விஷ‌ய‌மெல்லாம் அல்லாஹ்விட‌மே உள்ளது.அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌வ‌ற்றைப் ப‌ற்றி முடிவில் அவ‌னே அவ‌ர்க‌ளுக்கு அறிவிப்பான்."

6:159 ஸூர‌த்துல் அன் ஆம்.

மேலும் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் த‌ன‌து ச‌ந்த‌தியின‌ர் 72 பிரிவுக‌ளாக‌ பிரிந்து பிள‌வுப‌டுவார்க‌ள் என‌ க‌ணித்துள்ளார்.அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ர‌க‌ நெருப்பில் விழ‌க் க‌ட‌வ‌து என‌வும் ச‌பித்துள்ளார்க‌ள்.இவைகள் மட்டுமின்றி அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் இதே கருத்தை வலியுறுத்துகிறான்.

இந்த மத்ஹபுகள் குறித்து ஒரே பதிவில் எழுதுவதென்பது இயலாத காரியம்.
சுருங்கக் கூறின், இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் நீட்சியான ஃபிக்ஹு என்னும் சட்டத்தை நான்கு பிரிவுகளாக நான்கு இமாம்கள் உருவாக்கினர்.இமாம் ஹனஃபி,ஷாஃபி,மாலிகி,ஹம்பலி இந்த நான்கும் சன்னி பள்ளியின் கீழடங்கும் சட்டங்கள்..இந்த மத்ஹபுகளை பின்பற்றுவர்கள் நாளடைவில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வழக்கம் போல, குழுமனப்பான்மைக்கே உரிய நடவடிக்கைகளில் இரங்க ஆரம்பித்து விட்டனர்.

சதாம் ஹூசைன் சன்னியை சேர்ந்தவர் என்பதால், ஷியா நீதிபதியை வைத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி,இரு பிரிவினர்க்கும் ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்கும் பகை நெருப்பில் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்த்தது அமெரிக்க அரசின் ராஜ தந்திரம் என்பது தனிக்கதை.

இந்தியாவில் இந்த பிரிவுகள் இருந்தாலும்,இது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன..மற்றபடி,திருமணம் உள்ளிட்ட எந்த சம்பிரதாயங்களிலும் இந்த மத்ஹபுகள் குறித்து முஸ்லிம்கள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் இதை ஒரு சாதி பிரிவினை அளவுக்கு முக்கியத்துவம் தருவது வ‌ருத்த‌ம‌ளிக்கிற‌து.

ஆக‌வே,இஸ்லாம் என்ற‌ ஒரு மார்க்க‌த்தில் பிரிவினைக‌ளும் ஏற்ற‌த்தாழ்வுக‌ளும் இல்லை.சாதிக‌ளோ குழுக்க‌ளோ இல்லை.

யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து ம‌ஸ்ஜிதில் தொழ‌லாம்.வேதம் ஓதலாம்.ஒரே தட்டில் உணவருந்தலாம்.ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கலாம்.

குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்தான் தொழுகை ந‌ட‌த்த‌ வேண்டும் என்ற உய‌ர்சாதிய‌ கோட்பாடுக‌ள் இங்கு செல்லாது.இஸ்லாத்தை ஏற்று கொண்ட‌ யாராக இருந்தாலும் ( விஷ‌ய‌ம் தெரிந்திருக்கும் ப‌ட்ச‌த்தில் ) ம‌றுக‌ண‌மே தொழுகை ந‌ட‌த்த‌லாம்.

மேற்கூறிய ச‌ன்னி,ஷியா,மாலிகி போன்ற‌வை வெறும் கொள்கைக‌ளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களே அன்றி அவைகள் சாதிகளோ வகுப்புகளோ கிடையாது.

மதங்கள் அனைத்தும் ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கும் கோட்டைக‌ள் என்று மதங்களின் பலவீனத்தை சொன்ன பெரியார்,தீண்டப்படாதவர்களுக்கான ஒரே தீர்வாக இஸ்லாத்தை மட்டுமே பல தருணங்களில் குறிப்பிட்டதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.

ஒலிம்பிக்கில் த‌ங்க‌ப் ப‌த‌க்க‌ம் வாங்கிய‌ போது க‌ருப்ப‌ர் என்ற நிற‌வெறியின் கார‌ண‌மாக அமெரிக்க அரசால் நிராக‌ரிக்க‌ப் ப‌ட்ட குத்துச்சண்டை வீரர் கேஸிய‌ஸ் கிளே, ஓக்லஹாமா ந‌தியில் த‌ன‌து ப‌த‌க்க‌த்தை தூக்கி வீசிவிட்டு பிற்கால‌த்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு கார‌ண‌ங்க‌ள் இல்லாம‌லில்லை.


*****************************