Wednesday, October 21, 2009

இன்னுமொரு நாடகம் (சிறுகதை)

மீசை லேசாக அரிக்க ஆரம்பித்தது.லிப்ஸ்டிக் வாயோடு ஒட்டிக் கொண்ட‌து.பேண்ட் அவிழ்ந்து விடுவேன் என்று ப‌ய‌முறுத்திய‌து. அட்டை ஈட்டி நுனியில் லேசாக ஊச‌லாடிக் கொண்டிருந்த‌து.அடிவ‌யிற்றை முட்டிய‌ ஒன் பாத்ரூமை அட‌க்கிக் கொண்டு "பாபிலோனிய‌ ம‌ன்ன‌ர் த‌ரியூ..பராக் ப‌ராக் பராக்" என்று இடுப்பில் சொருகி வைக்கப்ப‌ட்ட‌ கால‌ர் மைக்கில் சொல்ல‌ வேண்டும்.பாபிலோனிய‌ ம‌ன்ன‌ருக்கு எப்ப‌டி த‌மிழ் தெரியும் என்ற லாஜிக்கெல்லாம் யோசிக்க‌ நேர‌மில்லை.கொடுக்கப்பட்ட‌ வாயிற்காப்போன் வேட‌த்தைச் ச‌ரியாக‌ செய்ய‌ வேண்டுமென்ப‌து த‌ற்காலிக‌ க‌வலை. ஒன்ப‌தாம் வகுப்பு மாண‌வ‌ர்க‌ளுக்கு நாட‌க‌ங்க‌ளில் இது போன்ற‌ ஒப்புக்குச்ச‌ப்பான் வேட‌ங்க‌ள் தான் கொடுக்க‌ப்ப‌டும்.ம‌ன்ன‌ராக‌ வேண்டுமென்றால் ஃப்ள‌ஸ் டூவில் க‌ம்பியூட்ட‌ர் ச‌யின்ஸ் எடுத்திருக்க‌ வேண்டும்.

படிக்கிற பையன் என்ற ஒரு கெட்ட வார்த்தை போதும்.கேள்வியே இல்லாமல் நாடகம்,கட்டுரை,பேச்சுப்போட்டி என வலிந்து திணித்து விடுவார்கள்.இப்போது செய்து கொண்டிருக்கும் வாயிற்காப்போன் வேடமாவ‌து ப‌ர‌வாயில்லை.க‌ட‌ந்த‌ ஆண்டு விழாவில் நோஞ்சானான எனக்கு பீமன் வேட‌ம் த‌ந்தார்க‌ள்.அடுத்த‌ முறை த‌மிழ் ம‌ன்ற‌ விழாவின் போது சாக்ர‌ட்டீஸூக்கு விஷ‌ம் வைக்கும் மெலீட்ட‌ஸ் கேர‌க்ட‌ர் த‌ருவ‌தாக லிட்டில் ஃபிள‌வ‌ர் மிஸ் ப்ரா'மிஸ்' ப‌ண்ணியிருந்தது கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌ இருந்த‌து.

ஃபிகர்களை தரம் பிரித்தல்,திருட்டு தம் அடித்தல்,பிளாட்பார பத்திரிக்கைகள் விற்றல் போன்ற எக்ஸ்டிரா கோ கரிகுலர் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடும் மாப்பிள்ளை பெஞ்ச், எங்களைப் போன்று படிக்கிற குருப்பை பார்த்தாலே வெண்பொங்க‌லில் மிள‌கு போல‌ ஒதுக்கி வைப்பார்கள்.முரட்டு சைஸ்,மூணு பவர் மூக்கு கண்ணாடியும்,முக்கா கால் பேண்ட்டுமாக அலையும் முதல் ரேங்க் மாணவர்கள் எப்போதும் த‌னித் தீவாக‌த்தானிருக்க‌ வேண்டும்.எந்த‌ கேங்கிலும் சேர்த்து கொள்ள‌ மாட்டார்க‌ள்.ம‌ச்சி..இவன் தான் க‌ண‌க்கு மிஸ் ஜோஸ்பினோட‌ spy டா..அவ‌ன் இருக்கும் போது பாத்து பேசுங்க‌..என்று அபாண்ட‌மாக‌ ச‌ந்தேகிப்பார்க‌ள்.இதுபோல் எங்கள் கனாக்கானும் காலங்களில் கல்லெறிந்தவர்கள் ஏராளம்.இப்படி வறண்டு கிடந்த எங்கள் பாலைவனத்தில் பாயாசம் காய்ச்சியது நாடக ஒத்திகைகள் தான்.

புனித சூசையப்பர் மேனிலைப் பள்ளியின் நாடக மேடைகளில்,கமலஹாசனுக்கு இணையாக அதிகம் வெரைட்டி செய்தது நானாகத் தானிருப்பேன்.குருட்டு பெற்றோரை கூடையில் சுமக்கும் சிரவணனாகவும்,ச‌மூக‌விய‌ல் டீச்ச‌ர் காந்திம‌தியின் இஸ்திரி போட்ட‌ சேலையை அங்கியாக‌ உருமாற்றி, பைபிள் கேரக்டர் யாக்கோபுவாகவும்,இரண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் பூசி, ஜாலிய‌ன் வாலாபாக் ப‌டுகொலைக்கு கார‌ண‌மான‌ ஜென‌ர‌ல் ட‌யரை ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு பின் சுட்டு கொன்ற‌ உத‌ம் சிங்'காக‌வும், கடைசி நேரத்தில் என் ஆத‌ர்ச‌ காஸ்ட்யூம் ஸ்பான்ஸர் இருதயராஜ் காலை வாற, வேட்டி கிடைக்காமல் பள்ளிக்கூடத்து பக்கத்து வீட்டுக்காரன் ஜான்பீட்டர் லுங்கியை கட்டிக் கொண்டு ஆசிரியராகவும்,( ம‌ச்சான் லுங்கில‌ நீ ந‌ம்ம‌ பேட்ட‌ ர‌வுடி கணக்கா மெர்சிலா இருந்த‌..என்று மாப்பிள்ளை பெஞ்ச் அதிருப்தி தெரிவித்தது வேறு விஷயம் ) அழுக்கு ஜட்டியை ச‌ர்ஃப் எக்ஸ‌லில் ஊற வைத்ததைப் போலவும்,க‌ருப்ப‌ட்டியை உருட்டி வைத்தாற்போலவும் இருப்பவன் வெள்ளைக்கார‌ ஜாக்ச‌ன் துரையாக‌வும், இப்ப‌டி நிறைய "ஆக‌வும்" நான் ந‌டித்ததைப் ப‌ற்றி ஒரு நெடுந்தொட‌ரே எடுக்க‌லாம்.

எங்கள் தமிழ் மீடியமும், சேட்டு பிள்ளைக‌ள் நிறைந்த‌ கான்வென்ட்டும் ஒரே வளாகத்தினுள்ளேயே அமைந்திருந்தன.இரண்டு பள்ளிகளும் ஒரே குழுமத்தை சேர்ந்தவை என்பதால் ஆண்டு விழா உட்பட எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றாகத்தான் நடக்கும். எந்த விழாவாக இருந்தாலும், கான்வென்ட் தரப்பிலிருந்து குறைந்தது நான்கைந்து மேற்கத்திய நடனங்கள் தயாராகி விடும். பிரிட்டினி பியர்ஸ்,ஜெலோ என்று மெட்ரிகுலேசன் குட்டைப்பாவாடை குருவிகள் ஒருபுறம் சிறகடிக்க..பூலித்தேவன்..ஊமைத்துரை,பாரதியார் என எங்கள் தமிழ் மீடிய நாடகப்பட்டறை காத்து வாங்கும்.அத்தி பூத்தாற் போல‌ கைத‌ட்ட‌ல்க‌ள் அள்ளும் எங்க‌ள் நாட‌க‌ குழுவின் ந‌ட்ச‌த்திர‌ நாய‌க‌ன் சுப்புர‌ம‌ணி, 11ம் வகுப்பு சேர வேறு ப‌ள்ளிக்கு சென்று விட்டதாலும், ஒலிபெருக்கிகளும் மைக்குகளும் ஓய்வு பெறும் நிலையை அடைந்து விட்டதாலும், ஏறத்தாழ நாங்கள் போட்ட அனைத்து நாடகங்களும் ஃபிளாப் ஆனது. சகாக்கள் ரொம்பவும் சோர்ந்து போயினர்.

ரோமியோ ஜீலியட் நாடகம் போட்டால் ஓர‌ள‌வு கல்லா கட்டலாம் என்று கிரேஸி மிஸ்ஸிடம் கன காலமாக பரிந்துரைத்து வந்தது இந்த பெருமந்தத்திற்கு பிறகு ஒப்புதலானது.ரோமியோவாக‌ நானும் ஜீலியட்டாக குளோரியா மேரியும். ஆஹா..ராவெல்லாம் தூக்கம் வராமல்..ரத்தத்திலகம் சிவாஜி ஒத்ஸெல்லோ ஸ்டைலில் போர்வைக்குள் வசன ஒத்திகை நடந்தது. வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சம்மர் சால்ட் அடித்தன.மேரியின் விரல்களை தொடுவதே ஒரு சம்போகம் தான்.எங்களுக்குள் மெளன தீட்சண்யமாக ஒரு உறவு அரங்கேறி கொண்டிருந்ததை நான் ம‌ட்டுமே ந‌ம்பினேன்.ஸ்கிரிப்ட் தயாரானது.பேப்பரில் ரோமியோ வேடத்தில் என் பெயருக்கு பதிலாக ஹேமந்த் பாபுவின் பெயரும் வந்தது.

( மீதி விரைவில்..)

************************************************

Monday, October 19, 2009

முக‌த்தில் அறைந்த‌ க‌விதை ஒன்று
எழுத்துல‌கில் வெகு அபூர்வ‌மாக‌த்தான் நிக‌ழ்கின்றன‌ இது போன்ற‌ ப‌டைப்புக‌ள்.கவிஞ‌ர் ச‌ல்மாவின் க‌விதைக‌ள் பெரும்பாலும் பெண்க‌ளின் வாழ்விய‌ல் போராட்ட‌ங்க‌ளையும் அவ‌ல‌ங்க‌ளையும் உண‌ர்வுப்பூர்வ‌மாக எடுத்துரைக்கும்.அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளுள் ஒன்று அதிகாலையில் பார்த்த மாத்திரத்திலென் முகத்திலறைந்தது.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீள வில்லை.


இரண்டாம் ஜாமத்துக் கதை
****************************

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய

இரவுகளில்

பழகிய நிர்வாணத்திற்கிடையில்

அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்

என் அழகின் களங்கமின்மையைபெருத்த உடலும்

பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்

ரொம்பவும்தான் அருவருப்பூட்டுவதாய்ச்

சொல்கிறாய்

இன்றும் இனியும்

எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்

புதையுண்டிருக்கும் என் குரல்

தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான்

என் உடலைப் போலல்ல

உன்னுடையது

பறைசாற்றிக்கொள்வதில்

வெளிப்படையாக இருப்பதில்இதற்கு முன்னும்கூட

உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ

யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்

உன்னிடம் தடயங்களில்லை என்பதால்

நீ பெருமைகொள்ளலாம்நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்

இந்தப் பிரசவக் கோடுகளும்

எளிதில் செப்பனிட முடிவதில்லை

வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லைஉன்னைக் காட்டிலும்

மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது

இயற்கை எனக்கு

உன்னிலிருந்துதானே தொடங்கிற்று

எனது தோல்வியின் முதலாவது நிலைமுதல் ஜாமத்தைக் காட்டிலும்

விபமுதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்சுவரோவியத்தில் அமைதியாக

அமர்ந்திருந்த புலி

இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்

என் தலைமாட்டிலமர்ந்து

உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது


************************