Sunday, December 28, 2008

வியாச‌ர்பாடி ( இது எங்க ஏரியா...)


ஒரு சில வருடங்களுக்கு முன் இந்த ஏரியாவுக்கு இரவில் நீங்கள் வருவதாயிருந்தால் ஒரு ஆட்டோ கூட கிடைக்காது.வியாசர்பாடி என்றாலே ரவுடி ஏரியா என்று நிறைய பேருக்கு தெரியும்.
வடசென்னை முன்பெல்லாம் லேபர் ஏரியா என்றுதான் சொல்வார்கள்.
ப‌டிப்பு வாச‌னையே இல்லாத வெள்ள‌ந்தி ம‌னித‌ர்க‌ள் இங்கு ஏராள‌ம்.அழுக்கு ப‌டிந்த‌ ச‌ட்டை,ப‌ர்மா "பாதெக்" (Bataik) கைலிக‌ள்,வாயில் பீடி நாற்ற‌ம் இது தான் வியாச‌ர்பாடி ம‌க்க‌ளின் அடையாள‌ம்.
ஆனால் சென்னை மக்களுக்கு தெரியாத இன்னும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இந்த வியாசர்பாடி ஏரியாவில் உண்டு.

பி.வி.காலனி,சாஸ்திரி நகர்,சர்மா நகர்,பாரதி நகர் இந்த பகுதிகளை உள்ளடக்கியதே இந்த வியாசர்பாடி.அறுபதுகளில் எங்களைப் போன்று பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோருக்காக,அப்போதிருந்த தமிழக அரசு வியாசர்பாடியில் நிலங்களை ஒதுக்கியது.முன்னரே குடியிருந்த மக்களுக்கும்,இந்த புலம் பெயர்ந்த குடிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டபோது தான், ரவுடியிசமும் கட்டப் பஞ்சாயத்துகளும் கோலோச்சத் துவங்கின.குட்டி காஷ்மீர் மாதிரி.எதாவது ஒரிடத்தில் சண்டை நடந்து கொண்டே தான் இருக்கும்.
பட்டப் பகலில் வெட்டுக் குத்து கொலைகள் சகஜம்.ஆயிர‌க் க‌ணக்கான ச‌ம்ப‌வ‌ங்க‌ள் நட‌ந்தேறியிருந்தாலும், சுப்பையா,பிலிப்,பெஞ்ச் ப‌டுகொலைக‌ள் இங்கே பிர‌ப‌ல‌ம்.குறிப்பாக‌ பிலிப் என்ற‌ ர‌வுடி, ஒரு ம‌திய‌ வேளையில் பைக்கில் சென்ற‌ போது, முக‌த்தில் ஆசிட் ஊற்றி வ‌ழிம‌றித்து,ஒரு கும்ப‌ல் ம‌ற்ற‌ ம‌க்க‌ள் முன்னிலையில் ச‌ர‌மாரியாக வெட்டிக் கூறுபோட்ட‌து. செய்தது காதுகுத்து ர‌வியின் ஆட்க‌ள்.எல்லாம் 14 முத‌ல் 15 வ‌ய‌துள்ள சிறுவ‌ர்க‌ள். நீண்ட கால போராட்டத்திற்குப் பின் தமிழக காவல்துறை இந்த ரவுடியிசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.எல்லா வீரமறவர்களையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய பிறகு தான் வியாசர்பாடி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

அதெல்லாம் இப்போது இறந்த காலமாகி விட்டது.
இப்போது நீங்கள் வியாசர்பாடி வந்தால் உங்கள் அனுபவமே வேறு.



பர்மாவிலிருந்து வந்ததால் இப்பகுதி மக்களிடையே ஒரு வித்தியாசமான கலாச்சாரத்தை உணர முடியும்.
உணவு,உடை பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றிலுமே.
சென்னையில் (தண்டையார்பேட்டை,செகண்ட் லைன் பீச் ரோடுகளைத் தவிர) வேறங்கும் கிடைக்காத
சில உணவு வகைகள் இப்பகுதிகளில் கிடைக்கும்.
அத்தோ,கவ்ஸ்வே,மொய்ங்கா,பேபியோ,மொபெட்டோ அனைத்தும் பர்மிய உணவு வகைகள்.
குறிப்பாக அத்தோ,கவ்ஸ்வே சின்னசின்ன‌ ரோட்டோர கடைகளில் (Only at nights) கிடைக்கும். "அத்தோ" கடை எங்க இருக்கு" என்று விசாரித்தால் குட்டிச் சாத்தான்க‌ள் கூட சொல்லும்.
ஆர‌ஞ்ச் நிற‌த்தில் பெரிய சைசில் நூடுல்ஸ்,ப‌ச்சை முட்டைகோஸ்,வ‌றுத்த‌ பூண்டு,புளி தண்ணீர்,கொத்த ம‌ல்லி,அரைத்த‌ மிள‌காய் இன்னும் ப‌ல வ‌ஸ்துக்க‌ளை சேர்த்து கையிலியே பிசைந்து ஒரு பிர‌ள‌ய‌த்தையே உண்டுபண்ணி
பீங்கான் கோப்பைக‌ளில் ப‌ரிமாறுவார்க‌ள்.தொட்டுக் கொள்ள ப‌ச்சைமீன் வ‌டித்த‌ த‌ண்ணீரில் வாழைத்தண்டுகள் போட்டு கெட்டியாக சுடச்சுட அஜினமோடோ கலவையுடன் ஒருகுழ‌ம்பு ( Highly viscous liquid ) த‌ருவார்க‌ள்.
கடித்துக் கொள்ள "பேஜோ" என்று நம்மூர் அடை மாதிரி தான் ஆனால் கொஞ்சம் பெரிய சைசில் கடினமாக இருக்கும்.
இவ்வ‌ள‌வும் சேர்த்து விலை 15 முதல் 20ஐ தாண்டாது.


U.K Robert Gordon University-யில் M.S படித்த‌வராக இருந்தாலும்,இன்போசிஸில் சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தாலும் Treat என்று வந்துவிட்டால் ஒரு ஜமாஅத் "அத்தோ" கடைகளில் ஆஜராகிவிடுவோம்.ஒருமணி நேரம் எல்லா கவலைகளையும் மறந்து, 6,7 பேர் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டே,150 ரூபாய் செலவில் பைவ்ஸ்டார் ஓட்டலில் கிடைக்காத மகிழ்ச்சியை அனுபவித்து விட்டு வருவோம்.
அதுமட்டுமன்றி, பர்மிய தின்பண்டங்கள்,"கவ்னி" அரிசி,செருப்புகள்,கைலி அனைத்தும் குறைந்த விலையில் பி.வி.காலனியில் கிடைக்கும்
மக்களிடையே பர்மிய வார்த்தைகள் புழக்கம் அதிகம்.அவற்றுள் சிலவற்றை கீழே பாருங்கள். ( நீங்கள் பர்மாபஜாரில் பொருள் வாங்க செல்லும் போது இந்த வார்தைகளை உபயோகித்தால், பர்மா மக்கள் மாதிரி காட்டிக் கொண்டு பேரம் பேசலாம் )

சியா- வாத்தியார்
அசே- ஒரிஜின‌ல்
அட்டூ- டூப்ளிகேட் ( இந்த‌ வார்த்தை சென்னை ம‌க்க‌ளிடையே இப்போது பிர‌ப‌ல‌ம்.<"அட்டு பிக‌ர் மாமே !!!!> )
இந்த 3 வார்த்தைகள் போதும்.இதை வைத்து ஒரு சின்ன உதாரணம்.
" ஸியா !!!!! இந்த பீஸ் அசெயா ? இல்ல அட்டூவா ?" என்று கேட்கலாம்.

பேச்சு வார்த்தையோடு நின்று விடாமல்,
லுங்கியையும் நாக்கையும் மடித்து வைத்து குத்தியெடுக்கும் சாவுக்குத்தும்,கானாப் பாடல்களும் உருவான தாயகமும் எங்கள் வியாசர்பாடி ( பேஜார்பாடி ) தான்.கானா உல‌க‌நாத‌ன்
வியாச‌ர்பாடி வாசி.


விளையாட்டைப் பொறுத்த மட்டில்,
சென்னை முழுவதும் தெரு கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தினாலும்,எங்களுக்கு தேசிய விளையாட்டு கால்பந்து தான். பிரேசில்,மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இங்கு ஏராளம்.நிறைய பேருக்கு அரசு உத்யோகம் கால்பந்து உபயமாகத் தான் கிடைத்தது.
சத்யமூர்த்தி நகர் மாநகராட்சிப்பள்ளியில் பயிற்சி செய்தே ஒரு மாணவன்,தேசிய கால்பந்து அணிக்காக போர்ச்சுகல் வரை சென்று வந்தான்.

பாரிமுனையிலிருந்து 10ரூ ஷேர் ஆட்டோவுக்கு தந்தால்,30 நிமிடத்தில் இந்த பர்மிய பிரதேசத்தை அடைந்து விடலாம்.
சென்னையில் இப்ப‌டி ஒரு இட‌மா ? என்று நீங்க‌ள் புருவ‌ம் உய‌ர்த்த கார‌ண‌ம் ஆயிரம்.
(இன்னும் நிறைய‌ இருக்கு...)

Tuesday, December 23, 2008

இன்று ஒருநாள் ம‌ட்டும்


தூரத்து சொந்தமென்று
ஒரு சிவப்பு நிற சுடிதார் தேவதையை
எனக்கு காட்டினார்களே
நாம் சந்தித்த அந்த முதல் நாள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***
அக்கா குழந்தையைத் தூக்கும் ப‌ட‌ல‌மாய்
உன்னிட‌மிருந்து நானும்
என்னிட‌மிருந்து நீயும்
மாற்றி மாற்றி, விர‌ல்க‌ள் உர‌சி
வெட்க‌ம் உன் க‌ண்ணில் சிதறி
இருவ‌ரும் க‌ரைந்து நின்ற நொடிக‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***

உன்னெதிரில் நான் அம‌ர்ந்து
என் அம்மா தோளிலேயே சாய்ந்து கொண்டு
க‌ள்ளத் த‌ன‌மாய் எனைப் பார்த்த
உன் ஓர‌ப்பார்வைக‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***


சொல்ல முடியாமல் நீ தவித்து
நான் தூங்குவதாய் எண்ணி
என் அருகில் வந்தமர்ந்து
காதோரம் நீ உதிர்த்த
அந்த ரகசிய வார்த்தைகள்
நினைவுக்கு வராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***


நான் பார்க்க‌ வேண்டுமென்றே
என் கால‌ணிக்குள் உன் கால்க‌ள் நுழைத்து
பார்க்காதது போல் நான் ந‌டித்து
த‌லைகீழாய் புத்த‌க‌ம் படிப்ப‌வனைப் பார்த்து
"இன்னுமாடா உன‌க்கு புரிய‌ல‌..."
என்ப‌து போல் முறைத்துக் கொண்டே
வாய‌சைத்த அந்த‌ குட்டி இதழ்க‌ள்
நினைவுக்கு வராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்...
***


இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் நீ தந்த‌
அந்த‌ முத‌ல் முத்தம்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***


காகிதத்தில் மட்டும‌ல்ல‌
க‌ன்னத்தில் கூட‌ க‌விதை எழுதலாமென்று
என‌க்கு நீ சொல்லிக் கொடுத்த‌ நாட்க‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***


எண்ணெய் தடவி படிய வாரிய‌
தலைமுடியைக் கலைத்துவிட்டு
"இப்பத் தாண்டா நீ அழகா இருக்க!!"
என்று என்னையும் சேர்த்து கலைத்தாயே !!!
அன்று நாமமர்ந்த மரத்தடி சிமெண்ட் பெஞ்ச்.
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***


சின்ன சின்னக் காரணங்களுக்காய்
சண்டை போட்டு
பல நாட்கள் பேசாமலிருந்து
யாருக்கும் தெரியாமல்
பின்னிரவில் அழுது நனைத்த போர்வைக‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***

இதோடு நாம் பிரிய போகிறோம்
என்று தெரிந்தோ தெரியாம‌லோ
ச‌ன்ன‌லோர‌ இருக்கையில்
என் கைக‌ளை இறுக பிடித்துக் கொண்டே
க‌டைசியாக ஒருமுறை
"நீ எனக்கு வேணுன்டா" என்று
அழுது கொண்டே நீ சொன்ன‌
அந்த க‌ண்ணீர் வார்த்தைக‌ள்
நினைவுக்கு வ‌ராம‌லிருந்தால்
இன்று ஒருநாள் ம‌ட்டும்.....
***

வாழ கற்றுக் கொள்கிறேன்

இன்று ஒருநாள் ம‌ட்டும்
கிளிச‌ரின் புன்ன‌கையின்றி....

Monday, December 1, 2008

களவு

வானம் கிழித்து
வின்மீண் திருட்டு.
மதியும் முகிலும் புகார் செய்ய‌
பகலவன் சிறையில் பாவம் விடியல்.

என் அன்பு நெல்ம‌ணிக்கு........



நீ என்னுள் விதைக்கப் பட்ட‌
நாளை நான்
ஒருபோதும் மறந்ததில்லை.
ஒவ்வொரு மழைத்துளியும்
நம்மையும் நாம் சந்தித்த
முதல் நாளையும்
நினைவு படுத்தி கொண்டே இருக்கின்றன.

வெயிலில் காய்ந்த
விரல்களிலிருந்து
உதிரமாக படர்ந்தாய்
என்மீது நம்பிக்கையுடன்.
நான் உன்னை இறுக‌ப் ப‌ற்றிக் கொண்டேன்.
நீ உன் வேர்களால் என்னைக் க‌ட்டியணைத்தாய்.

உயிரைப் பிழிந்து
உனக்கென ஈரம் சுரப்பேன்.
உன் வேரித‌ழ்களால்
முழுவ‌துமாக உறிஞ்சிக் கொள்வாய்.
வெய்ய‌வ‌ன் கூட சிறிது
வெட்க‌ப் ப‌ட்டுக் கொள்வான்.
சுள்ளென்று த‌ன் க‌திர்க‌ளால்
சுவ‌ர‌ம் வாசிப்பான்.

காற்றில் நீ அசைவ‌தும் என்
மெள‌ன மொழி கேட்டு
நாணித் த‌லை க‌விழ்வ‌தும்
கவிதையின் தூரிகைக‌ள்.

சேர்ந்த நாளிலிருந்து
க‌ண நேர‌ம் கூட‌
நாம் பிரிந்த‌தாக‌
பிர‌ப‌ஞ்ச‌த்தில் குறிப்புகளில்லை.

வ‌ள‌ர்ந்த‌ன செழிப்பாய்
உருவ‌மும் உற‌வுக‌ளும்.
கால‌த்தின் ந‌க‌ர்வுக‌ள்
காத‌லுக்கு ப‌ரிச்ச‌ய‌மில்லை.
இதோ என்னுள் நீ
முழுவ‌துமாக் ஊடுருவி விட்டாய்.
உயிருட‌ன் பிணைந்து விட்டாய்.

நம்மை இணைத்த அதே க‌ர‌ங்க‌ள்
இன்று ந‌ம் பிரிவுக்கு வித்திடுகின்ற‌ன.
உறவோ முறையோ
உயிரோ ர‌ணமோ
கண்ணீருட‌ன் விடை பெற்றோம்.
பிறர் ந‌ல‌னுக்காக‌
உன்னுயிரைத் தியாக‌ம் செய்தாய்.
உன்னில் என்னையும் அர்ப்ப‌ணித்தாய்.

இந்த உறவு
உல‌க‌ம் உயிர்வாழ,
நீ விட்டுச் சென்ற
சுவ‌டுக‌ள்
அடுத்த‌ விதையின்
ஆர‌ம்பப் புள்ளிக‌ள்.

ஒவ்வொரு முறையும்
துவைக்க‌ப் ப‌டும் போது
சித‌றிப் போகின்றன
நெற்க‌திர்க‌ளும்
நம் காத‌லும்............

இப்ப‌டிக்கு,
உன் அன்பு வேர்.


த‌வ‌ம்



ஈரம் செறிந்த
தரை விரிசலினூடே
கண் சிமிட்டும்
மெல்லிய அரும்புகள்

விரலிடுக்குகளில்
ஒளிந்திருக்கும்
ஊழியின் உளவியல்
பிரதிபலிப்புகள்

விழியோர பாசறையில்
தேட‌ல் ஆயுதங்க‌ளில்
ப‌டிந்திருக்கும்
க‌ன‌வின் கறை।

ஏக்க‌ம் ஆழ்ந்து
வெளிரிய‌ இத‌ழ்க‌ளில்
கீற‌ல்க‌ள் பட‌ர்ந்த‌
வடுக்க‌ளின் உத‌ய‌ம்।

பார்வை தெரிந்தும்‍- நாண‌ப்
போர்வையெறிந்தும்
மெய்யிர‌ண்டும் மெலிதாக‌ உர‌ச‌
சிறு ச‌ல‌ச‌ல‌ப்பின்றி ஓர் மெள‌ன‌ ஊட‌ல்।

கருமுகில் நோக்கி
காய்ந்த‌ ம‌ண் த‌வ‌ம்।

விண்சுட‌ரெண்ணி
விடிய‌லின் த‌வ‌ம்।



ஓர் இத‌ழின‌சைவை வேண்டி- இவ்
எளிய‌னின் கடுந்த‌வ‌ம்.

மேகங்கள் திரட்டுவது நீ.......


பொய்யாக சண்டை போட்டு
தற்காலிகமாக பிரிந்திருந்து
அடுத்த நாள்
பொழிய விருக்கும்
அடைமழைக்காக காத்திருப்போம்.

விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.

இது சிலந்தி வலையென்று
தெரிந்தும் தெரியாதது போல
மழையே பிடிக்காத பெண் போல
குடையோடு வந்திருப்பாய்.

தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்
கொட்டும் மழையில் நனையாது
தவமிருப்போம்.

வெறுமையின் சருகில்
விரக்தி பொறிபட்டு
கனவுகள் தீப்பிடிக்குமுன்
மெல்லிய சாரல் அதை அணைத்து
விடும்.
மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.

உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.

இன்னுமொரு பிரபஞசத்தில்
மீண்டும் என்னைப் பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும் என்னைக் காதலிப்பாய்.

வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருக்கிறது நம் காதல்.