Wednesday, June 1, 2011

தரம் தாழ்ந்த ஆனந்த விகடனின் டாலடித்த ஜெ கம்மல்

---------

ஆட்சியாளர்களும் அரசு அதிகாரிகளும் வழிதவறும் போது தவறுகளை எடுத்துரைத்து நல்வழிப்படுத்த வழிமுறைகளைச் சொல்லித்தர வேண்டிய புனிதப்பணி பத்திரிக்கையினுடையது.எழுத்து சுதந்திரம் என்பது நடுநிலைமை பிறவாமல் வாள்சுழற்றும் வித்தை.அந்த வாள் இரத்தத்தை கொணர்வதற்காக அல்ல.மேலும் வதைகள் ஏற்படாமல் தடுக்க.

மெழுகுவர்த்தி புகழ் ஞாயிற்றுக்கிழமை புரட்சியாளர்களையும் கிரிக்கெட்டையும் பிரதான செய்திகளாக வெளியிடும் வடஇந்திய ஊடகங்களுக்கு இணையாக ஆனந்த விகடன் இப்போது தரம் தாழ்ந்து இயங்கி கொண்டிருக்கிறது.பக்கத்திற்கு பக்கம் கனிமொழி கைதை நையாண்டி செய்வதிலும் கலைஞரையும் திமுகவையும் கிண்டலடிப்பதிலும் தற்பொழுது ஆ.வி முழுமூச்சில் ஈடுபட்டிருக்கிறது.ஏற்கெனவே அணைந்து போன நெருப்பை
மீண்டும் மீண்டும் நீர் தெளித்து அணைப்பதில் ஒரு ஆழ்மன வக்கிரம் தொனிக்கிறது.

ஆனந்த விகடன் அதிமுக விகடனாக புத்துயிர் பெற்று கனகாலமாகி விட்ட நிலையில்,ஜெ.வின் வெற்றியை ஜெ எந்தளவு கொண்டாடினாரோ,அதைவிட ஆ.வி அந்த வெற்றியில் ஊறி ஊறித் திளைத்து இத்து போகும் அளவு ஊறிக் கொண்டிருக்கிறது.கடந்த கால திமுக ஆட்சியின் பேயாட்ட ஊழல்,விலைவாசி உயர்வு,மின்வெட்டு போன்ற ஆயிரம் காரணங்கள் தான் அதிமுகவை ஜெயிக்க வைத்திருக்கிறது என்ற உண்மை ஒருபுறமிருக்க,ஏதோ ஜெயலலிதா மக்களுக்காக வீதியில் இறங்கி போராடி ஜெயித்ததாக உச்சி மோர்ந்து கொஞ்சுகிறது ஆ.வி.அதிலும் ஜெவுக்கு அட்வைஸ் செய்து நல்லபேர் வாங்கி கொள்ள நினைப்பது அதைவிட பேரபத்தம்.

கலைஞர் ஜெயா டிவிகளின் அபத்தங்களுக்கு இணையாக‌ "முதல்வரின் கம்மல் டாலடித்தது முகம் டாலடித்தது" போன்ற மூன்றாந்தர எழுத்துக்களை வாரி இறைத்து கொண்டிருக்கிறது.வீட்டுவசதி திட்டத்தை "தீப்பெட்டி திட்டம்" என்று கேலி செய்து பேசியதற்காக வீட்டுவசதி துறை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டதையும்,கல்வி பற்றி நாலு வார்த்தை உளறியதற்காக உயர்கல்வித்துறை ஒரு அமைச்சருக்கு ஒதுக்கப்பட்டதையும் ஏதோ ஜெயலலிதா தமிழ்நாட்டின் மிகப்பெரிய புரட்சி சீர்திருத்தம் செய்து விட்டதாக கொண்டாடுகிறது.

லோக்பால் திட்டத்தின் வெற்றி லட்சணம் எந்த அளவு என்கிற முகாந்திரத்தின் அடிப்படை தெரியாமலேயே, இனப்படுகொலை நாயகன் நரேந்திர மோடியையும்,மும்பை ரவுடி ராஜ் தாக்கரேவையும் அபிமானியாக கொண்ட அண்ணா ஹசாரே (எ) கொல்லு தாத்தாவை வாராவாரம் பாலாபிஷேகம் செய்து ம‌கிழ்கிற‌து.இதில் வரும் வாரங்களில் வெத்து வேட்டு விஜயின் கேள்வி பதில் வேறாம்.ஏற்கெனவே ஏ.பி.ஜே அப்துல் கலாமின் கழுவுற மீனில் நழுவுற மீன் கேள்வி பதில்களை படித்து சலித்துப் போன வாசகர்களுக்கு மேலும் ஒரு துன்ப அதிர்ச்சி.பொக்கிஷம்,எனர்ஜி பக்கங்கள் போன்ற பதிவுகள் ஓரளவு ஆறுதல் அளித்தாலும்
மேற்கூறிய‌ மொக்கை கேள்வி பதில்களும் முகம் சுழிக்க வைக்கும் நையாண்டி விருதுகளும் டிவிட்டர் உளறல்களும் விகடனின் வாசகப்பரப்பை குறைத்துக் கொண்டிருக்கிறது.

பூந்தளிர்,அம்புலிமாமா,சிறுவர்மலர்,தினசரி செய்தித்தாள் இவைகளுக்கு பிறகு வாசக அனுபவ பரிணாமத்தை விரிவுபடுத்துவதில் விகடன் எல்லா கால கட்டங்களிலும் முன்னணி வகித்திருக்கிறது.சராசரி நடுத்தர வர்க்க சமூகத்திலிருந்து மேட்டுக்குடி வரை விகடன் வாசிக்கப்படுகிறது.ஓரளவு எழுதப்படிக்கத் தெரிந்த‌ பாமரனிலிருந்து இலக்கியவாதிகள் வரை கொண்டாடப்பட்டு வரும் ஒரே பத்திரிக்கை விகடன்.தமிழ் எழுத்தாளர்களையும் படைப்புகளையும் ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் மறந்து விட்ட நிலையில்,கி.ரா வண்ணதாசன் சிறுகதைகளை இன்றும் ஆனந்த விகடனில் பார்க்கலாம்.அழகிய பெரியவனின் கருத்துகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது.இப்படி எல்லா அருமை பெருமைகளையும் தன் ஒருதலை பட்சமான எழுத்துகளால் இன்று விகடன் குழுமம் இழந்து கொண்டே இருக்கிறது.தரமான வாசகர்களையும் சேர்த்து தான்.


-----

12 comments:

mohamedali jinnah said...

பெரிய இடைவெளி .
நடுத்தர நிலையில் மிகவும் அருமையான கட்டுரை தந்து சிறப்பு தந்தமைக்கு பாராட்டுகள்

குடந்தை அன்புமணி said...

ஆனந்த விகடனை படிக்கையில் உங்களுக்கு மட்டுமல்ல... எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது...
(நீண்ட இடைவெளிக்கு பிறகு...இடுகை... தொடருங்கள்....)

Thamira said...

100% ரிப்பீட்டு.

ஒவ்வொரு காலகட்டத்திலும் தன் தரம் தாழ்ந்துபோகாமல் ரசனையை விட்டுக்கொடுக்காமல் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே வந்த பத்திரிகை விகடன் மட்டுமே. ஆகவேதான் அது கடந்துவந்த பாதை ஒரு வரலாறாக இருக்கிறது.

ஆனால் இப்போதைய இந்த மாற்றம் பெருத்த ஏமாற்றம். விகடன் தன் சரிவைச் சந்திக்குமா தெரியாது. ஆனால் நிறைய உண்மையான வாசகர்களை அது இழந்துகொண்டிருக்கிறது என்பது உண்மை.

ஷர்புதீன் said...

குமுதத்தை நக்கீரனுக்கு இணையாகத்தான் பார்கிறேன் பல வருடங்களாக.,

இப்பொழுது விகடன்., இதனை எதனுடன் ஒப்பிடுவது என்ற ஆராய்ச்சியில்தான் அதன் தரம் என்னை பொறுத்தவரையில் இருக்கிறது

ஹுஸைனம்மா said...

//சினிமாவிலிருந்து, இன்றைய பெண்கள் உடுத்துகிற உடைகளிலிருந்து, தினம் தினம் நம் வீட்டு வரவேற்பறைக்கே வருகிற தொலைக்காட்சி ஒளிபரப்புகளிலிருந்து அத்தனையும் மாறி இருப்பதையும், அவற்றோடு விகடனும் சற்று மாற வேண்டிய சூழ்நிலை உருவானதை//

இது விகடன் டீமில் உள்ள திரு. ரவி பிரகாஷ் என்பவர் தன் பதிவில் (http://vikatandiary.blogspot.com/2011/05/blog-post.html) கூறியது.

நட்புடன் ஜமால் said...

இந்த பத்திரிக்கையெல்லாம் படிக்க நேரம் இருக்கின்றதா தங்களிடம் ...

Anonymous said...

i have been reading Vikatan long time,but nowadays there articles and opinions are disguting and onesided it s most disappoting the reguar readers..hats off to you for writing this article...

தமிழ் அமுதன் said...

good post..!

அப்துல்மாலிக் said...

நிச்சயம் கவனிக்கப்படவேண்டிய ஒன்று செய்யது, எனக்கென்னவோ தன் பத்திரிக்கை அந்தஸ்தை தக்கவைத்துக்கொள்ள் ஆழும் கட்சிக்கு வெளக்கு புடிக்குது என்ரு தோனுகிறது

அம்பலத்தார் said...

மழைக்கு ஒதுங்கியவை தற்செயலாகப் படிக்கநேர்ந்தது. நல்லதொரு பக்கத்தைப் படித்த நிறைவைத்தந்தது

Anonymous said...

விகடனைத் தரம் தாழ்ந்தது என்று கூறியதற்கு நீங்கள் தமிழ்வாசகர்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும்

உங்களில் ஒருவன் said...

உண்மைதான் தாங்கள் சொல்வது,

வாரத்திற்க்கு 3 நடிகர்களின் பேட்டி மற்றும் சில மொக்கைகள் அவ்வளவுதானா விகடன் என நான் நினைக்க ஆரம்பித்து நிறைய நாட்கள் ஆகிறது....

தரம் தாழ்ந்துதான் விட்டது.....