Sunday, February 14, 2010

நெப்பந்தஸ் ( சிறுகதை பாகம்-2 )


முத‌ல் பாக‌ம் ப‌டிக்க..!

---------------------------------

தீட்டுக்காயங்கள் பழுத்து,ஆறி காய்ந்து தழும்புகள் மறைந்து சமநிலைக்கு வந்தது கல்லூரியில் சகுந்தலாவின் அறிமுகத்திற்கு பிறகு தான்.பால்க‌வுச்சியும் நெய் வாடையும் கும‌ட்ட வைத்த‌ பா.ரா தெருவின் ஒரே ம‌ரிக்கொழுந்து ம‌ண‌ம் சகுந்தலாவினுடைய‌து.பெரிய‌ பெரிய‌ க‌ண்க‌ளுடைய‌ ச‌குந்த‌லாவின் மேனியெங்கும்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ம‌ண‌ம் வீசும்.துள‌சி,ம‌ல்லிகை,பெருங்காய‌ சாம்பார்,மூல்தானி மெட்டி,சிகைக்காய்,மோர்க்குழ‌ம்பு என ஒவ்வொரு கிழமையும் திங்களும் நாழிகையும் ஒவ்வொரு மணம்.அப்போதைய தட்ப வெப்ப சூழ்நிலையில் ஒரு சுத்த ஐய‌ங்கார் வீட்டுப் பெண்,பேயன் தெரு மக்களோடு புத்தகங்கள் பகிர்ந்து கொள்வதும்,தொட்டு அடித்து பேசுவதும் டிப‌ன் பாக்ஸை திற‌ந்து பார்ப்ப‌தும்,ஐம்ப‌து ரூபாய் ப‌ந்த‌ய‌ம் க‌ட்டி க‌ருவாட்டுத் துண்டைக் காக்காய் க‌டி க‌டித்த‌தும்,ம‌னித வாசனை இல்லாத தேச‌த்திலிருந்து ப‌ற‌ந்து வ‌ந்த‌ சிட்டுக்குருவியைப் போல,அவள் பெரிய கண்களை அக‌ல‌ விரித்து,கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ என் கூட்டுக்குள் அடைகாக்க‌ தொட‌ங்கினாள்.

சக ந‌ண்ப‌ர்க‌ளைப் போலத் தான் என்னிடமும் பழகுகிறாள் என்று வெற்றுச்ச‌மாதான‌ம் செய்து செய்து கொள்வது பெருஞ்சிரமமாக இருந்தது.ச‌மாதான‌ம் செய்து கொள்ள‌வும் விருப்ப‌மிருக்க‌வில்லை.த‌ண்ணி சீசாவை வாய் வைத்து குடித்த‌த‌ற்கு கூட ஒன்றுமே சொல்ல‌வில்லை.இதுவே ம‌ற்ற‌வ‌ர்க‌ள் செய்திருந்தால் ச்சீ எச்சி என்று உத‌டு கோணியிருப்பாள்.பிசிஓ ப‌ரிம‌ள‌த்திட‌ம் பேசும் போது கூட‌,ஒருமுறை என்னைப் பார்த்து முறைத்தாள்.நான் எரிப்ப‌து போல் பார்த்தாள் என்று க‌விதை எழுதினேன்.என‌க்கு பிடித்தவாறு தான் உடைய‌ணிகிறாள்.சுதா ர‌குநாத‌னின் அலைபாயுதே குர‌ல் பிடித்திருக்கிறது என‌ கார‌ண‌மில்லாம‌லா என்னிட‌ம் ம‌ட்டும் சொல்லுவாள்.ஸ்நான‌ம் ப‌ண்ணின்ட்ருக்க‌ச்ச‌ அடிவ‌யித்துல‌ அப்ப‌டி ஒரு வ‌லிடா.அதான் மூணுநாளா காலேஜூக்கு வ‌ல்ல என்று பெண்மையின் ர‌க‌சிய முடிச்சுக‌ளை த‌னிமையில் அவிழ்க்கிறாள்.அவளின் உடல்மொழியின் அளபெடையில் நான் எத்தனை மாத்திரை என்பதை கணக்கிடுவதிலும்,நடந்தவற்றை அசை போட்டு மென்று,தற்குறிப்பேற்ற அணிகளை இயற்றுவதிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்பதை உணர முடிந்தது.

வழக்கமான காதலின் சராசரி மூடநம்பிக்கைகள்,கெட்டப்பழக்கங்களில் எனக்கு இம்மியளவு கூட நம்பிக்கையில்லை.ஒருவரை விரும்பலாம் என்று அவர்கள் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.ஆனால் காரணங்கள் அபத்தமாக இருக்கும்.வேதியல் துறை கணபதி பிப்ரவரி 23 ஆம் தேதி பிறந்தவனாம்.அதே துறையில் படிக்கும் புஷ்பவல்லியும் பிப்ரவரி 23ம் தேதி பிறந்தவள் என்பதால் காதலிக்க ஆரம்பித்து விட்டானாம்.பிரபாவதி பிரபாகரன் பிரபா பிரபா ஒரே மாதிரி வந்தால் போதும் காதல் கோட்டைக்கு அடிக்கல் நாட்டி விடுவார்கள்.பக்கத்து வீடாக இருத்தல்,அம்மாக்கள் ஒரே ரேஷன் கடையில் சீனி வாங்குதல் அல்லது அப்பாக்கள் ஒரே கடையில் சவரம் செய்பவர்களாதல்,ஒரே பேருந்து வழித்தடத்தில் பயணம் நாய்க்குட்டி,தோட்டம்,சுண்டக்காய் என இப்படி குறைந்த முதலீட்டில் சம்பந்தங்களை உருவாக்கி,சந்தர்ப்பவாத காதலை நடத்துவார்கள்.

சகுந்தலாவின் மீதான ஈர்ப்பு வேலி தாண்டி அத்து மீறியதற்கு தரம் தாழ்ந்த காரணங்கள் எனக்கு அவசியப்படவில்லை.அவள் ஒரு அதிசயப்பிறவி.மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கத் தெரிந்த அதிசயப்பிறவி.சாதியும் வர்ணங்களும் எங்களை வேற்றுக்கிரகத்தில் வீசி எறிந்த போது,வானத்தைக் கிழித்து பறந்து வந்த மீன்கொத்திப் பறவையாக,நட்பு அலகில் கவர்ந்து சென்று மீட்டவள்.என் க‌ருப்பு புறங்கையில் அவ‌ளின் செக்க‌ச்சேவேல் விர‌ல்க‌ள் ப‌ட‌ரும் போது தோன்றும் அதீத‌ குற்ற‌ உண‌ர்ச்சியை,தாழ்வு ம‌ன‌ப்பான்மையை,கூச்ச‌த்தை,வெட்க‌த்தை,குறுகுறுப்பை,ப‌ர‌வ‌ச‌த்தை சலனமின்றி ஒரு வென்னிற‌ கைக்குட்டை கொண்டு துடைத்து தூர எறிந்தவள்.

வாய் நிறைய புன்னகையும்,மடிநிறைய இளைப்பாறல்களும் அவள் மீதான உடைமைத்துவத்தை அகலப்படுத்தியது.சகுந்தலா எனக்காக மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டவள் என்ற மனநிலை உக்கிரமாக ஆட்கொண்டது.அந்த‌ர‌ங்க‌ உடைமையில் கீறல்கள் விழுவது சாட்டை அடியை ஒத்திருந்த‌து.ஒவ்வொரு வ‌லியும் வெறுப்பை விதைத்த‌து.வெறுப்பு வ‌ன்ம‌த்தை கொணர்ந்த‌து.

(தொட‌ரும்...)

*****

16 comments:

ஆடுமாடு said...

செய்யது,
உங்கள் மொழி இப்போது செம்மையாகியிருக்கிறது.

அழகான வர்ணனைகள், தேர்ந்த எழுத்தாளனைப்போல இயல்பாக வருகிறது. முழுவதும் படித்துவிட்டு வருகிறேன்.

தொடருங்கள். வாழ்த்துகள்.

வால்பையன் said...

புரிந்து கொள்ள நேரம் எடுத்து கொள்கிறது! எனக்கு இன்னும் சரக்கு பத்தாதோ!?

நினைவுகளுடன் -நிகே- said...

அழகிய நடை
தமிழும் அழகாக வந்து உங்கள் கதையில் விளையாடுகிறது

Thamiz Priyan said...

நல்ல நடை! ஆர்வமூட்டும் காதல் பிண்ணனியில் ஒரு பயத்தையும் கொண்டு வருகின்றது.

நட்புடன் ஜமால் said...

முதல் பா.ரா வில் ஒரு சிக்ஸர் இருக்கனுமே எங்கேன்னு பார்த்தேன்

[[ம‌னித வாசனை இல்லாத தேச‌த்திலிருந்து ப‌ற‌ந்து வ‌ந்த‌ சிட்டுக்குருவியைப் போல,அவள் பெரிய கண்களை அக‌ல‌ விரித்து,கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ என் கூட்டுக்குள் அடைகாக்க‌ தொட‌ங்கினாள்.]]

நட்புடன் ஜமால் said...

கடைசி பத்தி டெரர்ராவுல இருக்கு

அடுத்ததுல பார்ப்போம் ...

பா.ராஜாராம் said...

அபாரமான நடை.

பிடித்த தெருவிற்குள் நுழைந்து விட்ட குதியாட்டம்.

மனசின் குதியாட்டம்!

செய்யது,

கைகளை பிடித்து கொள்கிறேன்.

ஹேமா said...

செய்யது....இப்போதான் இரண்டும் வாசித்தேன்.நல்லதொரு தொடர்கதை.

SUFFIX said...

நல்லா இருக்கு செய்யது, தொடருங்கள்.

VISA said...

//வெறுப்பு வ‌ன்ம‌த்தை கொணர்ந்த‌து.
//

கொக்கி!!!!
மிக நிறைவாய் இருந்தது. குறிப்பாக நான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தது அத்தனையும் கிடைத்தது. இதை தொடர்ந்து எழுதுங்கள்.

அப்துல்மாலிக் said...

பாராட்ட வார்த்தையில்லை

எழுத்தில் மெருகேறிக்கிட்டிருக்கு

கூர்ந்து ஒன்னுக்கு 3 முறை படித்தால்தான் கொஞ்சம் புரியுது
ஆக்சுவலா இது தேர்ந்த எழுத்தாளனிடம் மட்டுமே காணமுடியும்

வாழ்த்துக்கள் மக்கா

கே.ஜே.அசோக்குமார் said...

Nandraga Ullathu

Anonymous said...

நாயகியை பற்றி சொல்லியிருப்பது ரொம்ப நீளம்..ஆனால் அழகாக சொல்லியிருப்பதால் படிக்கமுடிகிறது...

Aaron Thomae said...

Please read my blog and let me know what you think!

http://bestvacationdestinations.blogspot.com/

அமிர்தவர்ஷினி அம்மா said...

ஆடுமாடு said...
செய்யது,
உங்கள் மொழி இப்போது செம்மையாகியிருக்கிறது.

அழகான வர்ணனைகள், தேர்ந்த எழுத்தாளனைப்போல இயல்பாக வருகிறது.

தொடருங்கள். வாழ்த்துகள்.

வரிக்கு வரி வழிமொழிகிறேன்.

Thamira said...

தம்பி, நமக்கு தொடர் ஆவாது. முடிச்சப்புறம் மொத்தமா படிச்சுக்கலாம்னு இருக்கேன்.. எப்ப முடிக்கப்போறீங்க.?