Thursday, July 2, 2009

கறையான்கள் அரித்த மீதிக்கதவுகள்கட‌ந்து செல்லும் ம‌னித‌ர்க‌ளின் சூட்டை நுக‌ரும் திற‌ந்த‌ க‌த‌வுக‌ளைக் காட்டிலும்,மூடிய க‌த‌வுக‌ள் கொஞ்ச‌ம் அனுபவ‌சாலிக‌ள்.அந்த‌ இடைவெளி ச‌ர்விலிய‌ன்ஸ் கேமிரா பொருத்த‌ப்ப‌ட்ட‌ அபார்ட்மென்ட் க‌த‌வுக‌ளுக்கும், திறந்த‌வெளி கிராம‌த்து திண்ணை வீட்டு க‌த‌வுக‌ளுக்குமான அனுப‌வ‌ இடைவெளி.அடைமழை காலங்களில் விடுமுறை அறிவித்து பூட்டப்படும் பள்ளிக்கூடத்து கதவுகள் திடீர் மகிழ்ச்சியையும்,எதிர்பார்த்து சென்ற நண்பன் வீட்டு பூட்டிய கதவுகள் ஏமாற்றத்தையும் தரவல்லவை.

மூடிய வீட்டின் க‌த‌வுக‌ளை பார்க்கும் போது ஏற்ப‌டும் உண‌ர்வுக‌ள் அலாதியான‌வை..உள்ளே காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,கம்பளங்கள் விரிக்கப்பட்டு,மர வேலைப்பாடுகளோடும் அழகூட்டப்பட்டிருமா அல்லது விரிசல்கள் படர்ந்து உள்ளே பாம்பு,பூரான்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்குமா? ஒளிந்திருப்பது ஆடம்பரமா? ஏழ்மையா? உள்ளிருக்கும் அறைக‌ள் முழுவதும் சில‌ந்தி வ‌லை பின்ன‌ப்ப‌ட்டு பாழ‌டைந்த‌ தோற்ற‌ம் உருவாகியிருக்குமா? நிரந்தரமாக பூட்ட‌ப்ப‌ட்ட‌ க‌த‌வுக‌ளின் பின் வாழும் சுவ‌ர்க‌ளின் நிலைமை என்ன‌வாகி போயிருக்கும்? த‌ங்க‌ளுக்குள் பேசி கொண்டு அச்சுவர்கள் ச‌க‌ஜ‌பாவ‌ங்க‌ளை க‌ற்று கொண்டிருக்குமா? அல்லது தம்மோடு ஒன்றிப்போயிருக்கும் ப‌ல்லிக‌ளின் இச்சைக‌ளை பார்த்து முக‌ம் சுளிக்க‌ தொட‌ங்கியிருக்குமா? என்றெல்லாம் ஆர்வமிகுதியில் நிறைய கேள்விகள் எழுவதுண்டு.

'பூட்டிய வீட்டை பார்த்தால் உனக்கு என்ன தோன்றும்' என்று அலைபேசியில் தோழியிடம் கேட்டால் 'ம்ம்ம்...பயம்ம்மாயிருக்கும்' என்று மிரட்சியோடு பதில் சொல்வாள்.பூட்டிய வீட்டிற்கும் அவளுக்குமான சம்பந்தம் நிறைய பேய்க்கனவுகளில் தோன்றியதாக‌ குற்றம் சாட்டுவாள்.பார்த்து பார்த்து மரத்தையும் வர்ணப்பூச்சுகளையும் தேர்வு செய்து அரிதின் முயன்று இழைத்த கதவுகளை,ஏதோ ஒரு காலசூழ்நிலை கறையான்களுக்கு உணவாகவும்,குழந்தைகளை பயமுறுத்த காட்சி பொருளாகவும் ஆக்கி விடுகிறது.

வண்ணவிளக்குகளின் வெளிச்சத்தில் சிரித்து கொண்டிருக்கும் தோரணங்கள் கட்டப்பட்ட‌ கல்யாண‌ வீடுகளை விட,முட்செடிகளால் சூழப்பட்ட‌ இருளில் பூட்டப்பட்ட கதவுகளின் ஈர்ப்பு அதிகம்.நிரந்தரமாக பூட்டப்படும் கதவுகளை விட,தற்காலிக பூட்டப்படுதல்கள் தான் கள்வர்களின் கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு எடுத்து செல்லப்படுகின்றன. இரவுகளில் 'அந்த மாதிரி' இத்யாதிகள்லாம் நடக்குதாம்' என்பன போன்ற அவதூறு குற்றச்சாட்டுகளில் ஆரம்பித்து,'அந்த‌ வீட்டுல‌ தான் ஒரு பொண்ணு தூக்கு போட்டு தொங்குச்சாம்' ரீதியிலான‌ திகில் க‌தைக‌ள் வ‌ரை அனைத்து வ‌சைக‌ளையும் பூட்டிய‌ வீட்டின் காதுக‌ளாக‌ அந்த‌ க‌த‌வுக‌ள் கேட்டு கொண்டுதானிருக்கின்ற‌ன‌.

தேக்கு,ரோஸ்வுட் என்று இழைத்து இழைத்து க‌ட்ட‌ப்ப‌ட்ட‌ க‌த‌வுக‌ளை க‌ன‌த்த‌ பூட்டுக‌ள் எப்போதுமே அல‌ங்க‌ரிப்ப‌தில்லை.கதவுகளை வடிவமைக்கும் போது,பூட்டுகளை பற்றி யாரும் ஏன் அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை என்று கூட‌ சில‌நேர‌ங்க‌ளில் நினைக்க‌த் தோன்றும்.

மூடிய‌ க‌த‌வுக‌ள் எங்கோ ஓரிட‌த்தில் யாரோ ஒருவ‌ரின் சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை மெள‌ன‌மாக‌ அறிவித்து கொண்டிருக்கின்ற‌ன‌.இரவோடு இரவாக காலிசெய்த காதலி வீட்டு கதவுகள் பிரிவின் உச்சத்தை உரக்க சொல்லி கொண்டிருக்கின்றன.மனிதர்கள் இல்லா வெற்றிடத்தை அஃறிணை பொருட்கள் நிரப்ப முயன்று தோற்றிருக்கலாம்.மின்விசிறிகள் அணைக்கப்பட்டு,சில நினைவுகள் மட்டுமே சுழன்று கொண்டிருக்கலாம்.திறக்கப்படாமலே இருக்கும் பல கதவுகள் பின்னாளில் தத்தம் முகவரிகளை மறந்து போகலாம். சாலையில் போவோர் வருவோரையும்,பாராமுகமாய் செல்லும் தபால்காரரின் சைக்கிள் பெல்லையும் ஏக்கத்தோடு எதிர்நோக்கியிருக்கலாம்.இரவுக்கும் பகலுக்குமான சுழற்சி,பூட்டிய வீடுகளுக்கு எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை.கிழிக்கப்படாத திகதிகள்,உலகம் தற்காலிமாக எந்த ஒரு சலனமுமற்று நின்று போனதாக உள்ளிருக்கும் பொருட்க‌ள் நினைக்கக் கூடும்.

பூட்டிய கதவுகளுக்கும் தனிமைக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை.ஏதோ ஒரு மொழி நான்கு சுவ‌ர்க‌ளுக்குள் சிறை வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.இருள் க‌ப்பிய‌ அந்த‌ சுவ‌ர்க‌ளின் மேல் வெறுமையின் கிறுக்க‌ல்க‌ள் ப‌ட‌ர்ந்திருக்க‌லாம்.பொருள் பொதிந்த‌ மெள‌ன‌ங்களையும் சோகங்களையும் சும‌ந்து கொண்டு வெளியே சிரித்துகொண்டுதானிருக்கின்ற‌ன‌ பூட்டிய‌ வீட்டின் க‌த‌வுக‌ள்.

**********************

56 comments:

Mani said...

Your way of writing is similiar to S.Ramakrishnan. i guess you are a great fan of S.R. but you have to create your own style of writing boss.

அ.மு.செய்யது said...

நன்றி மணி !!

எஸ்.ராவோடு ஒப்பிடும் அளவுக்கு என் எழுத்துக்கள் இன்னும் முதிர்ச்சியடையவில்லை
என்றாலும் இது எனக்கு பெருமையே.

மேலும் அந்த அளவுக்கு எஸ்.ரா இன்னும் என்னை பாதிக்கவில்லை.

வால்பையன் said...

அய்யோ, அம்மா
எல்லோருமே பின்நவினத்துவவாதியாகிட்டா நாடி தாங்குமா!

நட்புகளே இனிமே யாருமே எதையுமே பூட்டாதிங்க, செய்யது பதிவு போட்டுருவார்!

:)

அன்புடன் அருணா said...

நல்லாருக்கு பூட்டிய கதவு! பூங்கொத்து!

அ.மு.செய்யது said...

// வால்பையன் said...
அய்யோ, அம்மா
எல்லோருமே பின்நவினத்துவவாதியாகிட்டா நாடி தாங்குமா!

நட்புகளே இனிமே யாருமே எதையுமே பூட்டாதிங்க, செய்யது பதிவு போட்டுருவார்!
//

பீதிய கிளப்பாதீங்க வாலு..

( வ‌ருகைக்கு ந‌ன்றி )

அ.மு.செய்யது said...

ந‌ன்றி அருணா..பூங்கொத்திற்கு !!

லவ்டேல் மேடி said...

அட விடுங்க பாஸ் ...!! பல்லி , பூரான் , எட்டுகால் பூச்சி .... இப்புடி எல்லோருமே உயிறிணமின்னு சொல்லும்போது... அவிங்களுக்கு யாரு வீடு கட்டி குடுக்குறது....!! வாழ்ந்திட்டு போறாங்க விடுங்க...!!!

ஒரு காலத்துல கமலா , ஷீலா , மாலா ன்னு பிகருங்க..... , இப்போ அசின் , பிசின் ன்னு பிகருங்க....!! காலம் அப்டேட் ஆயிகிட்டே போகுது... நீங்க என்னடானா..... கரகாட்டகாரன் படத்துல வர்ற மாதிரி இன்னுமும் பழைய இரும்புச் சாமானத்துக்கு பேருச்சம்பழம்கிற கதையா இருக்குறீங்க....!!!!!


யூ .. நோ.... ..ஆக்சுவலி .... வாட் .... ஐ .... ஆம்... சேயிங் ....................

அ.மு.செய்யது said...

வாங்க மேடி...

ரொம்ப நாளா ஆளையே காணோம் ??

( ஆரம்பமே இப்படியா ??? இன்னிக்கு பொழப்பு போச்சு )

rose said...

ennapa aachu nallathane irunthinga?

ஜீவன் said...

அருமை ,,செய்யது அசத்தலா இருக்கு! இதுபோல நெறைய எழுதுங்க!

ஆ.முத்துராமலிங்கம் said...

நல்லாவே எழுதியிருக்கீங்க செயது.
பூட்டிய கதவுகள் எப்பவும் கதை சொல்லும் வாயிலாகவே இருந்து வருகின்றது அல்லது கதையை உருவாக்கும் வல்லமை கொண்டது.
உங்கள் எழுத்து ரசிக்கும் படி உள்ளது.

ஒன்று. எஸ்.ரா வின் பாதிப்பு நிரையபேரிடம் இயல்பாக வருகின்றது.
இதிலும் அதன் தாக்கம் உணர முடிகின்றது. (ஒன்றே ஒன்றுதான் தனக்குதானே கேள்வி கேட்பது போல் எழுத்து நடை அமைந்தால் அது எஸ்.ராவின் சாயல்)

VISA said...

ஒரு நல்ல முயற்சி. ஆனால் இது போன்ற கதைகளுக்கு உங்களுக்கு இன்னும் பயிற்சி தேவை. தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

நன்றி ரோஸ். ( ஏங்க ?? )

நன்றி ஜீவன் !!!

நன்றி ஆ.முத்துராமலிங்கம் தெளிவான உங்கள் விளக்கத்திற்கு..

எஸ்.ராவை வாசிக்காதவர்களுக்கும் இந்த கேள்வி கேட்கும்
பாணி தொற்றி கொண்டிருக்கலாம் என்பது தானே நீங்கள் கூற விரும்பும் கருத்து ??

அ.மு.செய்யது said...

நன்றி விசா வருகைக்கும் கருத்துகளுக்கும்..

இதையே அந்த பயிற்சியின் முதற்படியாக எண்ணி,மேலும் என்னை வளர்த்து கொள்ள முயல்கிறேன்.

நட்புடன் ஜமால் said...

எஸ்.ரா அதிகம் படித்ததில்லை என்பதை விட படித்ததேயில்லை எனலாம் ...

இனி படிக்கோனும் ...

பூட்டியிருக்கும் கதுவுலேயே இம்பூட்டு மேட்டர் இருக்கா ...

திறந்த கதவுன்னு ஒரு எதிர் பதிவு போடலாம் தான் ...


அதற்கு முன் எழுத கற்றுகொள்கிறேன் ...செய்யது எப்படி பாராட்டனும் அல்லது விமர்சிக்கனுமுன்னு தெரியலைப்பா, அதான் ஏதோ உளர்றேன் ...

thevanmayam said...

கிழிக்கப்படாத திகதிகள்,உலகம் தற்காலிமாக எந்த ஒரு சலனமுமற்று நின்று போனதாக உள்ளிருக்கும் பொருட்க‌ள் நினைக்கக் கூடும்.///

ஆஹா செய்யது கவிதை வழிந்து உரைநடையாக ஓடுகிறது....................

thevanmayam said...

ஏதோ ஒரு மொழி நான்கு சுவ‌ர்க‌ளுக்குள் சிறை வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

செய்யது அருமை. இலக்கியப்பத்திரிக்கைகளுக்கு அனுப்பவும்.
கட்டாயம் பிரசுரமாகும்!!

thevanmayam said...

மின்விசிறிகள் அணைக்கப்பட்டு,சில நினைவுகள் மட்டுமே சுழன்று கொண்டிருக்கலாம்.

ரொம்ப அருமை!!

thevanmayam said...

இந்தக் கட்டுரை பல பிரபலங்களின் கட்டுரைகளுக்கு இணையாக உள்ளது. இதில் யார் எழுத்தும் இல்லை. இது உங்கள் நடைதான்!!!!!

லவ்டேல் மேடி said...

// அ.மு.செய்யது said...

வாங்க மேடி...

ரொம்ப நாளா ஆளையே காணோம் ??

( ஆரம்பமே இப்படியா ??? இன்னிக்கு பொழப்பு போச்சு ) //ஆமாங்க சகா.......!! ஒரு மாசமா எனக்கு நெட் ப்ராபளம் ......!! நெம்ப குஷ்டமா போச்சு..... த்து .... கஷ்டமா போச்சு...!!!!!

பாலா said...

நம்ம மக்கா சொல்ற மாதிரி எஸ்ரா சாயல்தான் எனக்கும் தெரியுது செய்யது
நல்ல இருந்துது
ரசித்தேன்

gayathri said...

rose said...
ennapa aachu nallathane irunthinga?


ada innuma theriyala avaruku ennachini

தமிழரசி said...

நானெல்லாம் கவிதை என்ற பேரில் குண்டு சட்டியில் குதிரை ஓட்டற ஆள்..புரியலை...மீண்டும் படிக்கிறேன்...

குடுகுடுப்பை said...

கதவு ஆள் இருக்க வீட்லேயே இப்ப பூட்டிதான் இருக்கு, கிராமத்திலே எங்க ஊட்டுக்கு பூட்டே கெடயாது..

செய்யது சார், எஸ்.ரா வோட பாதிப்பு இருக்குங்கிறாங்க , என்னோட எழுத்துல எஸ்.ரா வோட பாதிப்பு இருக்கான்னு பாத்து சொல்லுங்க

குடந்தை அன்புமணி said...

நகரத்தில் பல வீடுகளின் கதவுகள் பூட்டியேதான் இருக்கும். சில வீடுகளில் என்ன நடக்கிறது என்பதை அறிய ஆவலாய் இருக்கும். ஆனால் எங்கவீட்டில் இரவில் மட்டுமே சாத்திவைப்போம். இல்லையென்றால் வீட்டில் இருக்க முடியாது. அவ்வளவு ஹீட்டாக இருக்கும்.

பதிவை படித்ததும் எனது கவிதைதான் ஞாபகத்திற்கு வந்தது....

கதவை இறுக மூடினாலும்
மெல்லிய இடைவெளி வழியே
கசிகிறது...
உன் காதல்!

இன்னும் நிறைய எழுதுங்க அடுத்த எஸ்ரா- ஆக வாழ்த்துகள்!

அ.மு.செய்யது said...

நன்றி ஜமால் காக்கா..

நீங்க வந்து பின்னூட்டமிடுதலே ஒரு பெரிய அங்கீகாரம் தான்.
இதுல பாராட்டு வேறயா ??

நன்றி தேவா சார்.

இலக்கிய பத்திரிகைகளுக்கு அனுப்புமளவுக்கு இன்னும் என் எழுத்து
மேம்பட வில்லை என்பது என் தாழ்மையான அனுமானம்.அதற்கு பயிற்சி தேவை.
உங்கள் பாராட்டு சிலிர்க்க வைக்கிறது.

ந‌ன்றி ல‌வ்டேல்மேடி...

அடிக்க‌டி வாங்க‌ த‌ல‌...

அ.மு.செய்யது said...

ந‌ன்றி காயத்ரி..ஆமா அப்ப‌டி என்ன‌ ஆச்சு என‌க்கு ??

ந‌ன்றி த‌மிழ‌ர‌சி அக்கா ..ப‌டிச்சி முடிச்சிட்டீங்க‌ளா ??

ந‌ன்றி குடுகுடுப்பை சாரே !!! உங்க ஸ்டைல் சுஜாதாவோட‌து.

அ.மு.செய்யது said...

நன்றி பாலா...

இருந்தாலும் அவர் சாயல் இருந்தது என்று சொல்வது ஏதோ நெருடலை ஏற்படுத்துகிறது.
காரணம் அந்த தகுதியை நான் அடைய இப்போது தான் கிண்டர் கார்டனில் சேர்ந்திருக்கிறேன்.
--------------------------------

வாங்க குடந்தை அன்புமணி சார்.

உங்கள் பின்னூட்டமும் கவிதையும் வெகு அழகு..மிக்க நன்றி.

Rajeswari said...

எந்த ஒரு சிறு விசயத்தை கூட அக்குவேறு ஆணி வேறாக ஆராயப் பிரதனப்படுத்தும் ஆற்றல் எழுத்துக்களுக்கு உண்டு..இந்த பதிவும் அதோடு சேர்த்தி...நல்ல வார்த்தை பிரயோகங்கள்.

கரையான் அரித்த கதவுக்குள் ஆயிரம் புதைக்கப்பட்ட கதைகள்..

நல்ல பதிவு..

கார்த்திகைப் பாண்டியன் said...

அருமையான நடை நண்பா.. அடிக்கடி எஸ்ராவின் ஞாபகம் வந்தது.. காரணம், நான் எஸ்ராவின் தீவிர ரசிகன்.. வாழ்த்துக்கள்..

sakthi said...

உள்ளே காகித மலர்களால் அலங்கரிக்கப்பட்டு,கம்பளங்கள் விரிக்கப்பட்டு,மர வேலைப்பாடுகளோடும் அழகூட்டப்பட்டிருமா அல்லது விரிசல்கள் படர்ந்து உள்ளே பாம்பு,பூரான்களின் ஆட்சி நடந்து கொண்டிருக்குமா? ஒளிந்திருப்பது ஆடம்பரமா? ஏழ்மையா?

செய்யது சும்மா கலக்கறீங்க

வாழ்த்துக்கள்

sakthi said...

கதவுகளை வடிவமைக்கும் போது,பூட்டுகளை பற்றி யாரும் ஏன் அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை என்று கூட‌ சில‌நேர‌ங்க‌ளில் நினைக்க‌த் தோன்றும்.

ஆமா செய்யது தம்பி...

sakthi said...

பூட்டிய கதவுகளுக்கும் தனிமைக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை.ஏதோ ஒரு மொழி நான்கு சுவ‌ர்க‌ளுக்குள் சிறை வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

a wonderful line....

’டொன்’ லீ said...

படமே கதை சொல்லிவிடுகின்றது...:-)

உங்கள் எழுத்து நடையும் நன்று...தொடருங்கள்

அமிர்தவர்ஷினி அம்மா said...

முட்செடிகளால் சூழப்பட்ட‌ இருளில் பூட்டப்பட்ட கதவுகளின் ஈர்ப்பு அதிகம்.ந

கதவுகளை வடிவமைக்கும் போது,பூட்டுகளை பற்றி யாரும் ஏன் அதிக‌ம் க‌வ‌லைப்ப‌டுவ‌தில்லை

மூடிய‌ க‌த‌வுக‌ள் எங்கோ ஓரிட‌த்தில் யாரோ ஒருவ‌ரின் சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை மெள‌ன‌மாக‌ அறிவித்து கொண்டிருக்கின்ற‌ன‌

மின்விசிறிகள் அணைக்கப்பட்டு,சில நினைவுகள் மட்டுமே சுழன்று கொண்டிருக்கலாம்.திறக்கப்படாமலே இருக்கும் பல கதவுகள் பின்னாளில் தத்தம் முகவரிகளை மறந்து போகலாம்.

ஈர்க்கப்பட்ட வரிகள்,

மொத்தப்பதிவுமே அட்டகாசம்.

வாழ்த்துக்கள்.

அபுஅஃப்ஸர் said...

பூட்டிய விட்டுக்குள்ளே இவ்வளவு இருக்கா

ஒரு சின்னவிஷயத்தை இவ்வளவு தெளிவா விளக்கி ஒரு வளர்ந்துவரும் சிறந்த எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறீர்

அபுஅஃப்ஸர் said...

//அந்த‌ இடைவெளி ச‌ர்விலிய‌ன்ஸ் கேமிரா பொருத்த‌ப்ப‌ட்ட‌ அபார்ட்மென்ட் க‌த‌வுக‌ளுக்கும், திறந்த‌வெளி கிராம‌த்து திண்ணை வீட்டு க‌த‌வுக‌ளுக்குமான அனுப‌வ‌ இடைவெளி//

நிச்சயம் அனுபவப இடைவெளியுண்டு

அங்கே கேமராவில் கண்டு தெளிவாகி திறந்துவிடப்படும், இங்கெ எப்பவுமே திறந்திருக்கும்

நிச்சயம் நிறைய இடைவெளி கதைகள் உண்டு

அருமையான எழுத்து செய்யது வாழ்த்துக்கள்

அபுஅஃப்ஸர் said...

//பூட்டிய கதவுகளுக்கும் தனிமைக்கும் பெரிய வித்தியாசங்கள் இருப்பதில்லை.ஏதோ ஒரு மொழி நான்கு சுவ‌ர்க‌ளுக்குள் சிறை வைக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து.//

அழகான விளக்கவுரை

தொடருங்கள் செய்யது

வாழ்த்துக்கள்

அ.மு.செய்யது said...

நன்றி ரசனைக்காரி..வாங்க‌...

நன்றி சக்தி ய‌க்கோவ்.

நன்றி டொன்லீ..( அப்ப‌ ப‌ட‌த்த‌ ம‌ட்டும் பாத்துட்டு எஸ்ஸா ?? )

ந‌ன்றி அமித்து அம்மா..( நுட்ப‌மான‌ அவ‌தானிப்பு )

அ.மு.செய்யது said...

//அபுஅஃப்ஸர் said...
பூட்டிய விட்டுக்குள்ளே இவ்வளவு இருக்கா

ஒரு சின்னவிஷயத்தை இவ்வளவு தெளிவா விளக்கி ஒரு வளர்ந்துவரும் சிறந்த எழுத்தாளர் என்பதை நிரூபிக்கிறீர்
//

நன்றி அபு !!!!

( காமடி கீமடி இல்லயே ??)

வித்யா said...

நல்ல ப்ளோ. வாழ்த்துகள்.

அ.மு.செய்யது said...

//வித்யா said...
நல்ல ப்ளோ. வாழ்த்துகள்.
//

thanks Vidya !!!

" உழவன் " " Uzhavan " said...

ஆஹா அற்புதம். கதவே இல்லாத கிராமத்து வாழ்க்கையிலிருந்து கைரேகை வைத்தால்மட்டுமே திறக்கும் நகரத்துக் கண்னாடிக் கதவு வரை ஏராளமான நினைவுகளை இந்தப் பதிவு ஏற்படுத்தியது. பாராட்டுக்கள்!

"எதிரொலி" நிஜாம் said...

//மூடிய‌ க‌த‌வுக‌ள் எங்கோ ஓரிட‌த்தில் யாரோ ஒருவ‌ரின் சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை மெள‌ன‌மாக‌ அறிவித்து கொண்டிருக்கின்ற‌ன‌.//
நச் நச் வரிகள்

ஷ‌ஃபிக்ஸ் said...

//பூட்டப்படும் பள்ளிக்கூடத்து கதவுகள் திடீர் மகிழ்ச்சியையும்//

உயர் நிலைப்பள்ளி வந்தவுடன், ஏன்டா பூட்டுராங்கன்னு இருக்கும்...ஹ்ம்ம்ம்!!

ஷ‌ஃபிக்ஸ் said...

//மூடிய‌ க‌த‌வுக‌ள் எங்கோ ஓரிட‌த்தில் யாரோ ஒருவ‌ரின் சுத‌ந்திர‌ம் ம‌றுக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தை மெள‌ன‌மாக‌ அறிவித்து கொண்டிருக்கின்ற‌ன‌//

இது நிஜம் தான் செய்யது!! நல்ல பதிவு!!

S.A. நவாஸுதீன் said...

பூட்டிய கதவுக்குள் இத்தனை விஷயங்கள்? மூடிய கண்களின் அழகை கவிதைக்குள் கொண்டு வர கவிஞனுக்கும் சிரமம்தான். பூட்டிய கதவுக்குள் புதைந்து கிடக்கும் பல விசயங்களையும் பல கோணத்தில் பதித்திருக்கும் உங்களின் திறமைக்கு என்ன சொல்லி பாராட்டுவதென்றே தெரியவில்லை செய்யது.

ஆனால் என்னை அந்தக் கதவாய் மாற்றி ஏங்க வைத்தது உங்கள் வரிகளின் தாக்கம்தான். இதைத்தவிர சொல்வதற்கென்று ஒன்றுமில்லை.

S.A. நவாஸுதீன் said...

எத்தனை முயன்றாலும் இதுபோன்று எழுத வருமா என்பது எனக்கு நானே கேட்டுக்கொள்ளும் மிகப்பெரிய (விடை தெரியாத) கேள்வி. வாழ்த்துக்கள் செய்யது. தொடர்ந்து கலக்குங்க

அ.மு.செய்யது said...

நன்றி எதிரொலி நிஜாம்.( முதல் வருகை ??? )

நன்றி ஷஃபிக்ஸ்..

நன்றி நவாஸ் அழகான பின்னூட்டத்திற்கு..

அ.மு.செய்யது said...

நன்றி உழவன்..முதல் வருகைக்கு..அடிக்கடி வாங்க..

அக்பர் said...

எஸ். ரா வின் எழுத்துக்களும் இது மாதிரி தான்.

அவரின் துணையெழுத்தை முடிந்தால் வாசிக்கவும்.

நல்ல பதிவு.

ஆதிமூலகிருஷ்ணன் said...

வளரும் பயிர்.!

(பதிவர்களிடையே போட்டி ரொம்ப பலமா இருக்குது, ரொம்ப டஃப் குடுக்குறீங்க.. நீங்கள் என் முக்கிய எதிரிகளில் ஒருவர்)

அ.மு.செய்யது said...

நன்றி அக்பர் வருகைக்கும் கருத்துகளுக்கும்...

ஆல்ரெடி எஸ்.ரா வின் துணையெழுத்தை வாசித்திருக்கிறேன்.
ஆனால் தொடர்ச்சியாக ஃபாலோ செய்தது கிடையாது.

---------------------------------

நன்றி ஆதி அண்ணே !!

( யாரு யார் கூட போட்டி போடுறது ?? அவ்வ்வ்வ்வ்வ்வ் )

-----------------------------

சேரல் said...

உரைநடை உங்களுக்கு இலகுவாக கை வந்திருக்கிறது. எஸ்ராவின் பாதிப்பு இருக்கிறது என்று சொல்ல மாட்டேன். ஏற்கனவே நீங்கள் அதை மறுத்திருக்கிறீர்கள். ஆனால் உங்கள் எழுத்து எனக்கு எஸ்ராவை நினைவுபடுத்தாமலில்லை.

-ப்ரியமுடன்
சேரல்

அ.மு.செய்யது said...

நன்றி சேரல் !!

உங்கள் கருத்தை ஏற்று கொள்கிறேன்.எழுத்து நடையையும் கொஞ்சம் மாற்ற முயலுகிறேன்.

வருகையும் பகிர்வும் மகிழ்ச்சியளிக்கிறது.

நாடோடி இலக்கியன் said...

எஸ்.ரா வைப் போன்ற எழுத்து நடையென்றும் சொல்ல முடியாது , ஆனாலும் ஏதோ ஒன்று அது எடுத்துக் கொண்டிருக்கும் டாப்பிக்காகவும் இருக்கலாம் எஸ்.ராவை எனக்கும் நினைவுபடுத்தியது.


மொத்தத்தில் அருமையான இடுகை வாசித்த திருப்தி இருக்கிறது நண்பரே.