Monday, January 9, 2012

புத்தகத் திருவிழா 2012 ‍- எழுச்சியும் புறக்கணிப்பும்




நேர்காணல்களும் நலம் விசாரிப்புகளும் போராட்டங்களும் வெளியேற்றங்களும் மேடைப்பேச்சுகளும் என ஒரு மிகப்பெரிய ஆரவாரம், புத்தகத் திருவிழாவின் நுழைவாயிலிலிருந்து ஆரம்பிக்கிறது.சுற்று வட்டார‌ சாலைகளில் புத்தக திருவிழாவையொட்டி ஒரு சின்ன விளம்பர பலகை, சுவரொட்டி கூட தென்படவில்லை.தமிழ் நாட்டில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால், பெரிய அளவிலான விளம்பரம் தேவையிருக்காது என பபாசி கருதியிருக்கலாம். எழுத்தாளர்‍-வாசகர் சந்திப்புக்கென தனியே ஒரு ஸ்டால் அமைத்து நாள் குறித்திருக்கிறார்கள். எதாவதொரு பதிப்பகத்தின் முன் நடக்கும் 'கூடிக்கும்மி அடித்தல்' செல்லமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இக்காலத்து இளைஞர்களிடம் வாசிப்பு குறைந்து வருகிறது என சஞ்சலப்படுவோர் கவனிக்க வேண்டிய விஷயம், புத்தக கண்காட்சியில் அதிகமாக இளைஞர்களைத் தான் பார்க்க முடிகிறது. வேலை நாளான திங்கட் கிழமை கூட, படையெடுக்கின்றனர்.பெரும்பாலும் ரிபீட் ஆடியன்ஸூகளாக இருக்கிறார்கள். அருகாமையில் அமைந்த கரையிலோ கீழ்ப்பாக்கத்திலோ 15 நாட்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கக்கூடும். தினமும் வந்து கையெழுத்து போடுகின்றனர். நேர்காணலில் பங்கேற்கின்றனர். நின்று கொண்டே வாசிக்கின்றனர்.எஸ்.ராமகிருஷ்ணனைச் சுற்றி ஒரு இயக்கமே செயல்படுகிறது.சலிப்பு தட்டாமல் பேசிக்கொண்டே இருக்கிறார் மனிதர். நிச்சயமாக அவர் ஒரு சாக்ரட்டீஸ் தான்.

சென்ற ஆண்டு இருந்த மனநிலை இந்த முறை இல்லை.புனை கதைகளின் வாசிப்பில் ஒருவித தேக்க நிலையும் அயர்ச்சியும் உருவாகி விட்டதாக உணர்கிறேன். கிருஷ்ணபிரபு மாதிரியான ஆட்களைத் தவிர மற்ற யாருடனும் அதிகம் அளவளாவ பிடிக்கவில்லை.புனைவு இலக்கியங்களில் அதிகம் கவனம் செலுத்தக்கூடாது என தீர்மானம் இயற்றி விட்டுத் தான் புத்தக வேட்டையைத் துவக்கினேன்.மேலும் கிழக்கு, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்திருந்தேன்.இருப்பினும் யுவனின் குள்ளச்சித்தனுக்காகவே கிழக்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. தமிழினி வெளியீடாக முன்பு வந்ததை, கிழக்கு மீள்பதிப்பு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல, கோபி கிருஷ்ணனின் புத்தகங்கள் 'கடல்'லையே இல்லையாம்.

கீழைக்காற்று, பாரதி புத்தகாலயங்களில் பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முற்போக்கு கட்டுரைகள் நிரம்பிய குட்டி புத்தகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கங்கள். பாதசாரியின் 'பேய்க்கரும்பு', கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'மீன் குகை வாசிகள்' பார்த்த மாத்திரத்தில் வாங்கத் தூண்டியவை.தமிழ்மகனின் 'வெட்டுப்புலி', யூமா.வாசுகியின் 'மஞ்சள் வெயில்', யுவன் சந்திர சேகரின் 'மணற்கேணி' எதிர்பார்த்து வாங்க வேண்டியவை பட்டியலில் இடம் பெற்றிருந்தன. சிக்மண்ட் ஃபிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' உளவியல் வேட்கைக்கு தீர்வு அளித்திருக்கிறது.

காத்திரமான கட்டுரைகள் அடங்கிய புதிய கலாச்சாரத்தின் "கண்ணை மறைக்கும் காவிப்புழுதியும்", அரபி இலக்கியம் குறித்தான சாருநிவேதிதாவின் "தப்பு தாளங்களும்" மறக்காமல் வாங்கிக் கொண்டேன்.ஆண்டன் செகாவ் சிறுகதைகளும்,சாருவின் 'ஊரில் மிக அழகான பெண்ணும்'மொழிபெயர்ப்பு வரிசையில் சேர்ந்து கொண்டன. மற்றபடி,என் மனதிற்கு நெருக்கமான வண்ணதாசனின் "பெய்தலும் ஓய்தலும்" சிறுகதை தொகுப்பு இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கான‌ எனது தேடலை மனநிறைவுடன் இறுதி செய்திருக்கிறது.


இதுவரை வாங்கியவை:

1.பேய்க்கரும்பு - பாதசாரி / தமிழினி

2.மஞ்சள் வெயில் - யூமா.வாசுகி/அகல் பதிப்பகம் ( கருப்பு பிரதிகளில் கிடைக்கும் )

3.மீன்குகை வாசிகள் ‍ - கீரனூர் ஜாஹிர் ராஜா / ஆழி பப்ளிஷர்ஸ்

4.அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில் எம்.எஸ் / பாதரசம் வெளியீடு
( கீழைக்காற்றில் கிடைக்கும் )

5.கண்ணை மறைக்கும் காவிப்புழுதி ‍- புதிய கலாச்சாரம் கட்டுரைகள / கீழைக்காற்று

6.தலித் முஸ்லிம் - ஹெச்.ஜி.ரசூல் / பாரதி புத்தகாலயம்

7.சோஷலிச திட்டத்தில் கடந்த காலமும் எதிர்காலமும்‍ - பிரபாத் பட்நாயக் / பாரதி புத்தகாலயம்

8.பெண்ணியம் பேசலாம் வாங்க ‍- உ.வாசுகி / பாரதி புத்தகாலயம்

9.நக்சலிசம் புரட்சித் தத்துவமா ? ‍ - அனில் பிஸ்வாஸ் / பாரதி புத்தகாலயம்

10.கனவுகளின் விளக்கம் சிக்மண்ட் ஃபிராய்ட் - நாகூர் ரூமி /ஸ்நேகா பதிப்பகம் ( பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும் )

11.வெட்டுப்புலி - தமிழ்மகன் / உயிர்மை

12.தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா / உயிர்மை

13.மணற்கேணி - யுவன் சந்திரசேகர் / உயிர்மை

14.ஊரில் மிக அழகான பெண் மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் - சாருநிவேதிதா / உயிர்மை

15.பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன் / சந்தியா பதிப்பகம்

16.குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திர சேகர் / கிழக்கு பதிப்பகம்


*****************************

8 comments:

ஆமினா said...

என்ன தான் இணையத்தில் புத்தகங்கள் கொட்டிகிடந்தாலும் பேப்பரில் புரட்டி படிப்பது போல் வராது.... இளைஞர்கள் மத்தியில் புத்தக வாசிப்பு இன்னும் இருக்கு என காட்டும் இடுகை

வாழ்த்துக்கள்

நட்புடன் ஜமால் said...

குறிப்பிடப்பட்ட நூலாசிரியரின் பெயரிகளில்

நாகூர் ரூமி மற்றும் சாரு, இவர்களின் பெயர் மட்டுமே தெரிந்திருக்கு எனக்கு, இன்னும் வாசித்ததில்லை இவர்களை

ரொம்ப நாளாச்சிப்பா புத்தக வாசம், மீண்டும் துவங்கனும் ...

-----------

நீங்க எப்ப படிச்சி முடிப்பீங்க ...

அ.மு.செய்யது$ said...

நன்றி ஆமினா..! என் வலைதளத்தை தொடர்கிறமைக்கு நன்றிகள் !!

*******

ஜமால் அண்ணே !! நலமா ?

எனக்கும் இதில் பலர் புதியவர்கள் தான். இனிமேல் தான் வாசித்து பழையவர்களாக்கி கொள்ள வேண்டும்.

அடுத்த புத்தக கண்காட்சிக்குள் முடிக்க உத்தேசித்திருக்கிறேன். இன்ஷா அல்லாஹ்.

புல்லாங்குழல் said...

துபாயில் இருப்பதால் புத்தக கண்காட்சிக்கு போக முடியவில்லை.அந்த குறையை ஓரளவு நிறைவு செய்கிறது உங்கள் இடுகை. அத்துடன் நீங்கள் வாங்கிய புத்தகங்களின் பட்டியல் எனக்கும் உதவும் என்பதால் ஒரு வாக்கும் பதிவு செய்தேன்.

உங்களுக்கும் உதவும் என்பதால் ஆபிதீன் பக்கங்கள் எனும் இலக்கிய பக்கத்தின் லிங்க்:

http://abedheen.wordpress.com/

அ.மு.செய்யது$ said...

நன்றி நூருல் அமீன்.

உங்கள் பக்கங்களைப் பார்த்தேன். தீவிர இலக்கிய தளத்தில் இயங்கும் இஸ்லாமியர்களின் பக்கங்களைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.சாவகாசமாக படிக்கிறேன்.

அப்துல்மாலிக் said...

நல்லா படிங்கப்பூ....

கார்த்திகைப் பாண்டியன் said...

நீங்க வாங்கினதுல பாதிக்கு மேல புனைவிலக்கியம் தானேய்யா.. அப்படி எல்லாம் விட்டுற முடியாதுல்ல..:-))

அ.மு.செய்யது$ said...

//கார்த்திகைப் பாண்டியன் said...
நீங்க வாங்கினதுல பாதிக்கு மேல புனைவிலக்கியம் தானேய்யா.. அப்படி எல்லாம் விட்டுற முடியாதுல்ல..:-))
//

க‌.க.க.போ...! கா.பா !!! இருந்தாலும் 50% குறைத்திருக்கிறேனே..அதுவே ஒரு மாற்றம் தானே.

( இருந்தாலும் முதலில் புனைகதைகளைத் தான் முதலில் பிரிக்கத் தோன்றுகிறது ) நன்றி கா.பா.