Thursday, February 14, 2013

அப்ஃசல் குருவும் கஷ்மீரும் - வஞ்சிக்கப்பட்ட வரலாறு




வருகின்ற‌ நாடாளுமன்ற‌ தேர்தல் பிரச்சாரத்தில், காங்கிரசு அரசின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை வீச, பா.ஜ.க வுக்கு எவ்வித அருகதையும் இல்லை. இருகட்சிகளுமே கழுத்தளவு ஊழல் சேற்றில் சிக்கிக் கொண்டிருக்கும் கட்சிகள் என்பதால் ஊழலை ஒரு முக்கிய குற்றச்சாட்டாக பா.ஜ.க பயன்படுத்த முடியாது. எனவே தேசப்பாதுகாப்பு என்ற ஒரு கருத்தியலை எடுத்துக் கொண்டால் மட்டுமே காங்கிரசை கேள்விக்குள்ளாக்க முடியும் என்ற பா.ஜ.க வின் திட்டத்தை, காங்கிரசு முறியடிக்க இந்த வைகறைக் கொலைகள் அவசியமாயிருக்கின்றன. இந்து தீவிரவாதிகள் என வாய் மலர்ந்ததற்காக எங்கே வாக்கு வங்கியை தவற விட்டு விடுவோமோ என்ற பதை பதைப்புடன் இப்படுகொலை முழுக்க முழுக்க சர்வ ரகசியமாக, உரிய நேரத்தில் காங்கிரசின் காய் நகர்த்தலுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த புள்ளியிலிருந்து தான் அஃப்சல் குரு படுகொலையை புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியலமைப்பு, ஆனால் அஃப்சல் குருவின் வழக்கில் நடந்ததோ இதற்கு நேரெதிர்.

சரணடைந்த போராளியான அஃப்சல் குரு ஏழைக்குடும்பத்தைச் சேர்ந்தவர். சரணடைந்த போராளிகளுக்கு எந்த அரசு வேலையும் கிடைக்காது. அஃப்சல் குருவுக்கு ஒரு வழக்கறிஞரை வைத்துக் கொள்ளும் அளவுக்குக் கூட வசதியில்லை.குற்றம் சாட்டப் பட்ட நால்வரில் தண்டனை வழங்கப்பட சாத்தியம் உள்ளவராக இருந்த போதிலும் அஃப்சலுக்கு மட்டுமே வழக்கறிஞர் யாருமில்லை. தனக்கு ஒரு வழக்கறிஞரை நியமிக்குமாறு அவர் சிறப்பு நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.எட்டு வழக்கறிஞர்களின் பெயர்களடங்கிய பட்டியலொன்றையும் அவர் அளித்திருந்தார். எனினும் தாங்கள் தேசத்துரோகிகள் என அழைக்கப்பட நேருமோ என்கிற அச்சத்தின் விளைவாக அவ்வழக்கறிஞர்கள் அவருக்காக வாதிடுவதற்கு மறுத்துவிட்டனர்.ராம்ஜெத் மலானி மட்டும் கிலானிக்காக வாதிட முன் வந்த போது, சிவசேனா இந்து வெறியர்கள் அவரது மும்பை அலுவலகத்தை சூறையாடியது நினைவிருக்கலாம்.

இறுதியாக 2002 ஜூலை 12 ஆம் தேதி அன்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஒரு இளம் வழக்குரைஞரை சட்ட உதவுனராக ( amicus curiae) நியமித்தும், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்ய அஃப்சலுக்கு உரிமை அளித்தும் ஆணை ஒன்றை இட்டார். கிரிமினல் விசாரணை என்பது குற்றவியல் சட்ட அறிவைக் கோரும் ஒரு விஷயம் என்பதையும் ஒரு சாதாரண மனிதன் சட்ட உதவியின்றி குறுக்கு விசாரணை செய்ய முடியாது என்பதையும் எல்லோரும் அறிவர். அஃப்சல் சட்ட உதவி பெறுவதற்கு கடுமையாக முயற்சி செய்திருக்கிறார். எஸ்.ஏ.ஆர் கீலானியைக் காப்பாற்றுவதற்காக அமைக்கப்பட்ட அகில இந்திய குழுவிற்கும், உச்சநீதி மன்றத்தால் அவருக்காக வாதாடிய வழக்கறிஞருக்கும் அவர் எழுதிய கடிதங்களை வாசித்தால் சட்டபூர்வமாகத் தன்னைக் காத்துக் கொள்ளும் அவரது முயற்சிகள் எவ்வளவு குரூரமாக மறுக்கப்பட்டன என்பது புரியும்.

தடை செய்யப்பட்ட எந்த ஒரு அமைப்பிலும் முகம்மது அஃப்சல் உறுப்பினராக இருந்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை உச்சநீதிமன்றம் வெளிப்படையாக கூறியுள்ளது. இன்னும் சொல்லப் போனால் பொடா சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகளிலிருந்தும் அஃப்சலை அது விடுதலை செய்துள்ளது. பொடா சட்டம் 3(2) பிரிவின் கீழ் அளிக்கப்பட்ட தண்டனை விலக்கப்பட்டுள்ளது. அவர் எந்த ஒரு பயங்கரவாத அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார் என்பதற்கு ஒப்புதல் வாக்கு மூலத்தைத் தவிர வேறு நேரடி ஆதாரம் எதுவுமில்லை என்பதால் பொடா சட்டம் 3(5) பிரிவின் கீழான தண்டனையும் விலக்கப்பட்டுள்ளது. ஒப்புதல் வாக்குமூலத்தின் படியும் கூட அவர் எந்த ஒரு பயங்கரவாதக் கும்பல் அல்லது அமைப்பிலும் உறுப்பினராக இருந்தார் என்பது சந்தேகத்துக்குரியதே என்பதையும் நாங்கள் சொல்ல முடியும்” என்பது உச்சநீதிமன்றத் தீர்ப்பு.காவல்துறை சார்பாக 80 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டனர். இவர்களில் ஒருவர் கூட அஃப்சலுக்கு ஏதேனும் ஒரு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருந்ததாகக் குற்றம் சாட்டவில்லை. உண்மைகள் இப்படி இருந்தும் கூட காவல் துறையும் ஊடகங்களும் தொடர்ந்து அஃப்சல் குருவின் மரணத்தை ஒரு “தீவிரவாதியின்” மரணமாகத் தான் கொண்டாடி மகிழ்கின்றன. இது அடிப்படை இசுலாமிய வெறுப்பும் இந்துத்துவ பாசிச வெறியும் அறுவடை செய்த மரண தண்டனை. உலகளாவிய பச்சைக்கு எதிரான அமெரிக்காவின் போருக்கு, அடிவருடி இந்திய அரசு நிறைய துரும்புகளைக் கிள்ளிப் போட வேண்டியிருக்கிறது.‘இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும்” என்று கூறி அஃப்சல் குருவிற்கு மரண தண்டனை அளித்தது உச்ச நீதிமன்றம். நாட்டையே உலுக்கிய நிகழ்ச்சியின் விசாரணையும், தண்டனை வழங்கிய விதமும் எவ்வளவு கேலிக்கூத்தான வகையில் நடைபெற்றது என்பதை பார்த்தோம்.

அஃப்சல் குரு தூக்கில் இடப்பட்டது அவரது குடும்பத்திற்கு கூட தெரிவிக்கவில்லை, அதுமட்டுமின்றி அவரது உடலையும், சனநாயகத்தையும் சேர்த்து திகார் சிறையினுள்ளே புதைத்துவிட்டது இந்திய அரசு. அஃப்சல் குரு தூக்கிலிட்ட அன்றிலிருந்து இன்று வரை கஷ்மீர் முழுக்க ஊரடங்கு உத்தரவு, அஃப்சல் குரு குடும்பம் உள்ளிட்ட கஷ்மீர் மக்கள் யாருக்கும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்த கூட உரிமையில்லை, ஆனால் நாம் சொல்கின்றோம் இந்தியா சனநாயக நாடென்று, தன் தந்தையின் இறந்த உடலை கூட பார்க்கமுடியாத சனநாயக நாட்டில் வாழ்கின்றது அஃப்சல் குருவின் குழந்தை. அஞ்சலி செலுத்துவதற்காக ஒன்று கூடிய மக்களின் மேல் எந்த வித சனநாயக வழிகளையும் பின்பற்றாமல் நடந்தேறிய துப்பாக்கி சூட்டில் இதுவரை மூன்று பேர் பலியாகியுள்ளனர். மருத்துவர்கள் கூட தங்கள் மருத்துவமனைக்கு செல்ல முடியாமல் இராணுவ படையினரால் தடுத்து திருப்பி அனுப்பப்படுகின்றார்கள்.

இந்த கூட்டு மனசாட்சியில் கஷ்மீரிய மக்களுக்கு இடமில்லையா? அல்லது சமூகத்தின் கூட்டு மனசாட்சி ஒரு உயிரின் முடிவில் தான் சமனமடைகிறதா? அஃப்சல் குரு என்ற இளைஞனுக்கு நிகழ்ந்த இந்த கொடூரம் இன்று ஒவ்வொரு அப்பாவி கஷ்மீரி இளைஞனுக்கும் அவன் சொந்த மண்ணிலேயே நடந்து கொண்டிருக்கிறது. இயற்கை அழகு கொஞ்சும் கஷ்மீரில் இன்று எட்டு லட்சம் இந்திய ராணுவ வீரர்கள், அதாவது ஐந்து பொதுமக்களுக்கு ஒரு இராணுவ வீரர் இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் ஒரு குடும்பத்திற்கு ஒரு இராணுவ வீரன். இராணுவ படை சிறப்பு அதிகாரச் சட்டம் என்ற வரம்பிலா அதிகாரத்துடன் அம்மக்களை ஆண்டு வருகின்றனர். இராணுவம் யாரை வேண்டுமென்றாலும் கொலை செய்யலாம், பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கலாம். அவர்களுக்கு தண்டனை கிடைக்காது, அதற்கு பதிலாக பதவி உயர்வுகளும், பரிசுகளும் சன்மானமாக கிடைக்கின்றன. கடந்த 2010 சூலையில் இந்த இந்திய இராணுவத்தினரால் 113 சிறுவர், சிறுமியர் சுட்டுக்கொல்லப்பட்டார்கள், இவர்களை சுட்டுக்கொன்றவர்களின் மேல் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை இல்லை, 6000த்திற்கும் அதிகமான மனித புதைகுழிகளை கஷ்மீர் அரசு அமைத்த மனித உரிமை ஆணையம் கண்டுபிடித்து சட்டசபையில் தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது, இதன் மேலும் எந்த ஒரு விசாரணையும் இல்லை. கஷ்மீரை ஆள்வது சனநாயகமல்ல, இராணுவமே. மணிப்பூரின் ஐரோம் சர்மிளா முதற்கொண்டு தற்போது அமைக்கப்பட்ட வர்மா கமிசன் வரை எல்லோரும் பரிந்துரைக்கும் முதல் வாக்கியம் இராணுவ படை சிறப்பு அதிகார சட்டத்தை இரத்து செய்யச் சொல்கின்றது, ஆனால் அரசு அதை காதில் கூட வாங்க மறுக்கின்றது.

பூக்களின் தேசம் இன்று ராணுவ கூடாரங்கள் சூழ்ந்த விதவைகளின் தேசமாக மாறிப் போயிருக்கிறது.கடந்த 18 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் கஷ்மீரிக‌ள் இந்தியப் படையால் கொல்லப்பட்டிருக்கின்றனர். 80,000 குழந்தைகள் அனாதைகளாகியுள்ளன. ஆண்டுதோறும் சுமார் 3000 இளைஞர்கள் அரசின் கணக்குப்படியே காணாமல் போகின்றனர். தொடர்ந்து பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆண்டின் பல மாதங்கள் ஊரடங்கு உத்தரவு.

கஷ்மீர் பிரச்சினைக்கு 50 ஆண்டுகளுக்கு மேலான வரலாறு இருக்கிறது. இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில், இந்திய ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் ஒரே நிலைப்பாட்டைத் தான் கொண்டிருக்கின்றன. இவ்விவகாரத்தில் அமெரிக்காவோ ஐ.நாவோ வேறு எந்த மூன்றாம் தரப்போ தலையிடுவதை நிராகரிப்பது தான் அதன் முதல் நிலை.காரணம், எச்சூழ்நிலையிலும் அது கஷ்மீர் மக்களின் சுயநிர்ணய உரிமையை இந்திய அரசை ஏற்கச் செய்து விடவும் கஷ்மீரில் பொது வாக்கெடுப்பு நடத்தவும் வாய்ப்பளித்து விடக்கூடும்.ஆகவே தான் கஷ்மீர் ஒரு சர்வதேச பிரச்சினையாவதை எப்போதும் கடுமையாகவே எதிர்த்து வந்திருக்கிறது இந்திய அரசு. அதே நேரம் எல்லைக்கப்பாலிருந்து பயங்கரவாதிகளை ஏவிவிடுவதால் பாகிஸ்தானைப் பயங்கரவாத நாடாக அறிவித்து, பொருளாதாரத் தடைகள் விதித்து ஒடுக்க வேண்டும் என்று தொடர்ந்து உலக நாடுகளை வற்புறுத்தியே வந்திருக்கிறது. இது தான் கஷ்மீர் மக்கள் தொடர்ந்து இந்திய அரச பயங்கரவாதத்தின் மூலம் வஞ்சிக்கப்படும் வரலாறு.

கஷ்மீர் மண்ணும் மலையும் காடுகளும் இயற்கை வளங்களும் கஷ்மீரிய மக்களுக்கே சொந்தம். அதைக் கேட்பது அவர்கள் உரிமை. அஃப்சல் குருவுக்கு இழைக்கப்பட்ட அநீதியை கேள்விக்குள்ளாக்குவதன் மூலமும் கஷ்மீரிய தெருக்களில் கட்டவிழ்க்கப்படும் இந்திய அரச பயங்கரவாதத்தின் கோர முகத்தை அம்பலப்படுத்துவதன் மூலமுமாகத் தான் அம்மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் நாம் துணை நிற்கிறோம் என்பதை அவர்களுக்கு நாம் உணர்த்த முடியும். கஷ்மீர் நிலப்பரப்பை மட்டும் நேசித்து கஷ்மீர் மக்களை இராணுவப் பிடியில் வைக்கச் சொல்லும் இந்தியாவின் பெரும்பான்மை ’நாட்டுப் பற்றாளர்கள்’ போல் அல்லாமல் கஷ்மீர் மக்களை நேசிக்கும் நாட்டுப் பற்றாளர்கள் கஷ்மீரிகளோடு இருக்கின்றார்கள் என்பதை உரக்கச் சொல்வதே நம் முன் இருக்கும் கடமை.


கீற்றுவில் வெளிவந்தது

---------

Monday, August 13, 2012

ஆகஸ்டு 6 உலக அணுசக்தி எதிர்ப்பு தினம்

இரண்டாம் உலகப்போரின் இறுதிக் கட்ட போரில் 1945 ஆகஸ்டு ஆறாம் நாள் ஹிரோஷிமா வான்வெளியில் அமெரிக்க போர் விமானங்களைக் கண்ணுற்ற ஜப்பானிய‌ ராணுவம் வழக்கமான தமது அபாய ஒலியின் எச்சரிக்கையோடு அன்றைய தினத்தின் அலுவல்களை முடித்துக் கொண்டது. வரலாற்றின் மிகப்பெரிய அநீதி அமெரிக்க ராணுவத்தால் மிகக்கொடூரமாக அன்று நிகழ்த்தப்பட்டது. 1,60,000 மக்கள் புழுக்களைப் போல உடனடியாக செத்து மடிந்தனர். ஹிரோஷிமா நகரமே தரை மட்டமானது. ஹிரோஷிமா குண்டு வீச்சைத் தொடர்ந்து தொடர்ந்து பல ஆண்டுகள் அணுக்கதிர் வீச்சின் கோர முகத்தால் பல லட்சம் மக்கள் புற்றுநோயினாலும் இன்னும் பல கொடிய தோல் வியாதிகளினாலும் மரணித்தனர்.
சமகாலத்தில் வல்லரசு என தம்மைக் கூறிக்கொள்ளும் பெரியண்ணன் நாடுகளனைத்தும் இடுப்பிலே அணுகுண்டைக் கட்டிக் கொண்டு பேட்டை ரவுடியாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இருப்பை விட அதிகமாகிப் போன யுரேனியத்தை விற்க இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளின் சந்தை அவர்களுக்கு தேவையாயிருக்கிறது. அணுக்கொள்முதல்,அணு வியாபாரம் ஆகியவற்றின் மூலம் பெருமுதலாளிகள் லாபம் சம்பாதிக்கவும் அதற்கு உறுதுணையாக‌ அடிவருடி உதவவும் ஒரு அதிகார வர்க்கமே காத்திருக்கிறது. கிடைத்த‌ எலும்புத் துண்டுகளுக்கு ராஜ விசுவாசமாக‌ நாடு முழுவதும் பெட்டிக்கடைகள் போல அணு உலைகளை நிறுவி அம்முதலாளிகளுக்கு காணிக்கையாக்க திட்டமிடுகின்றது அரசு இயந்திரம். அணுகுண்டுகள் அணு உலைகளாக வேடமணிந்து திரண்டெழுந்து மேடையேறுகின்றன.
ஹிரோஷிமா நாகசாகியின் நினைவுகளை இன்றைய தலைமுறை மறந்திருந்தால் மீண்டும் அவர்களுக்கு நினைவூட்டுதல் சமூக மனிதர்களின் கடமையாயிருக்கிறது. அணுகுண்டும் அணு உலையும் வெடித்தால் ஒன்றே என்ற உண்மையை செர்னோபிலும் ஃபுகுஷிமாவும் ஏற்கனவே தலையில் அடித்து சத்தியம் செய்து விட்டன. உலகெங்கும் அணு உலைகளுக்கெதிரான கருத்தியல் தோன்ற ஆரம்பித்து விட்டது.அணுசக்தியை முற்றிலுமாக கைவிட பல நாடுகள் உறுதி மேற்கொண்டு விட்டன. ஜப்பானில் அணு உலைகளை மூட அரசு உத்தரவிட்டால் மக்கள் வீதியில் இறங்கி கொண்டாடுகின்றனர். சூரிய ஒளியையும் காற்றையும் நம்பி மின்சாரம் தயாரிக்க பெருமளவில் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப் படுகின்றன. வெற்றியும் கிட்டுகிறது. இந்திய அரசின் சிற்றறிவுக் கிட்டங்கி மட்டும் இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அல்லது ஒரு சமுதாயத்தை பலியிட்டு இன்னொரு சமுதாயத்தை வாழ வைக்க தலைப்படுகிறது.
அதற்காகத் தான் களமிறங்கினோம். மக்களிடம் பேச நினைத்தோம். ஆகஸ்டு 5, 6 சென்னையின் வெவ்வேறு இடங்களில் குழுக்களாகப் பிரிந்து நுகர்வுக் கலாச்சாரத்தில் சிக்குண்டு கிடக்கும் எந்திர மனிதர்களுக்கு அணுசக்தியின் தீங்குகளைச் சொல்வோமென்று உறுதி பூண்டோம்.
ஆகஸ்டு 5 ஞாயிற்றுக்கிழமை மாலை தாம்பரம் ரயில் நிலையம், கேம்ப் ரோடு, மேடவாக்கம் பகுதிகளில் சேவ் தமிழ்சின் 11 தோழர்களும், வேளச்சேரி பேருந்து நிலையத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் 7 தோழர்களுமாக மூன்று குழுக்கள் பிரிக்கப்பட்டது.ஹிரோஷிமா நினைவு தினமான ஆகஸ்டு 6 காலை மாலை இருவேளைகளிலும் இருகுழுக்களாக பிரிந்து களப்பணியில் இறங்கினோம். தகவல் தொழில் நுட்ப மையமான டைடல் பூங்காவில் 8 தோழர்களும், சோழிங்க நல்லூர் நாற்கர சந்திப்பில் 6 தோழர்களுமாகச் சென்று மக்களைச் சந்தித்தோம். மாத முதல் ஞாயிற்றுக்கிழமை.சம்பள வாரம்.பிரம்மச்சர்ய ஐ.டி ஊழியர்களின் தலைமையகமான வேளச்சேரி நடையும் கையுமாகவே இருந்தது.வார இறுதியின் உச்சகட்ட பரபரப்பில் சிலர் துண்டறிக்கைகளை வாங்கி ஆர்வமுடன் பார்த்தனர்.சற்றே இளைப்பாறிக் களைத்த சில முகங்கள் நம்மை அலட்சியப்படுத்திக் கடந்தன. மெட்ரோ ர‌யில் ப‌ணிக்காக‌வும் க‌ட்ட‌ட‌ வேலைக‌ளுக்காக‌வும் உழைத்து உழைத்து உருக்குலைந்து போன‌ வ‌ட‌ மாநிலத் தொழிலாள‌ர்க‌ள், தாமாகவே முன்வந்து அந்த துண்டறிக்கைகளைப் பெற்றனர். சில கலாமிஸ்ட்டுகள் தாம் வாங்கிய மஞ்சள் சிட்டை ராக்கெட்டாக்கி சேற்றில் விட்டு தம்மை ஒரு ப்ரோ நியூக்ளியராக பறை சாற்றினர். அணுகுண்டு வீச்சிலும் அணு உலை வெடிப்பிலும் நிராதரவாகிப் போன பச்சிளம் குழந்தைகளை, எண்ணிப்பார்க்கவோ அதைப்பற்றி பேசவோ யாரேனும் வருவார்களா என்ற‌ காத்திருப்பு நம் தோழர்களின் கண்களில் நிரந்தரமாக குடியிருந்தது. வெவ்வேறு பகுதிகளில் முகாமிட்டிருந்த தோழர்கள் அனைவரும் இரவு 7.30 மணிக்கு மேல் வேளச்சேரியில் ஒன்றிணைந்தோம். அடுத்த நாள் பரப்புரைகளுக்கான‌ திட்டமிடுதல்கள், விவாதங்கள், தேநீர் என சந்திப்பு ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீண்டு பிறகு கலைந்தது.
புதிய வியூகமும் புதிய மனநிலையுமாக புத்துணர்ச்சியுடன் மறுநாள் திங்கள் காலை,டைடல் பூங்காவிலும் சோழிங்க நல்லூர் பிரதான சிக்னல் அருகிலும் இரு வெவ்வேறு குழுக்களாக‌ முகாமிட்டோம். ஷாப்பிங் மால்கள், பெச‌ன்ட் ந‌க‌ர் பீச், பில்லா2 என வார இறுதியில் கிறங்கிக் கிடக்கும் ஐ.டி நடுத்தரவர்க்கத்தை, பேருந்துகளும் பறக்கும் ரயில்களும் திங்கட் கிழமை காலை மொத்தமாக வந்து ராஜிவ் காந்தி சாலையில் கொட்டுகின்றன‌. அவசரமாக விரையும் அந்த வேக மனிதர்களை இரண்டு நொடிகள் நிறுத்தி வைப்பதற்கு பிரத்யேக முகமூடிகளும் வித்தியாசமான பதாகைகளும் போதுமானதாக இருக்கவில்லை. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை மாலையை போல் வெறுமை சூழாமல், பலர் தாமாகவே முன்வந்து துண்டறிக்கைகளை வாங்கி கொண்டனர்.பள்ளி செல்லும் குழந்தைகள் பதாகைகளை விட ஸ்கீரீம் முகமூடிகளை ஆர்வத்தோடு பார்த்தனர். திருவான்மியூர் ரயில் நிலையம் நிரம்பி வழிந்தது. டைடல் சிக்னல் அருகே கவன ஈர்ப்பு மிகுதியாக இருந்தது. நமது தோழர் ஒருவர் அணு வெடிப்பால் மரணித்ததைப் போல சாலையில் படுத்து நடித்தது நல்ல கவன ஈர்ப்பைப் பெற்றுத் தந்தது.வழக்கம் போல ஹிரோஷிமா பற்றியோ அணு உலைகளைப் பற்றியோ யாரும் பேச முன்வரவில்லை. இது எதிர்பார்த்த ஒன்று தான்.
முதலாளித்துவ அரசுகள் கட்டமைத்த அணு எதிர்ப்பு போராட்டங்களுக்கெதிரான பொதுபுத்தி, ஊடங்களின் தொடர்ச்சியான பொய்ப் பிரச்சாரம் என முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்ட ஒரு பொருளை ஊதி ஊதி மக்களிடையே கொண்டு போய்ச் சேர்க்கும் சிரத்தை நம் அனைவருக்கும் இருக்கிறது. அந்நெருப்புக்கான சிறு பொறிகளைத் தூண்டுவே இத்தகைய முகாம்களின் நோக்கமாக நாம் கருத வேண்டியிருக்கிறது. அணுசக்தி என்பது மனித சமுதாயத்தால் கட்டுப்படுத்த முடியாத ஒரு வினை. அவ்வினையிலிருந்து பாடம் கற்றுக் கொள்ள மறுக்கும் ஒரு கூட்டத்தை தெளிய வைக்க வேண்டிய அவசியம் இங்கிருந்து தான் தொடங்குகிறது.
**********************

Thursday, March 22, 2012

எம் மக்களின் மன உறுதியையும் காற்றையும் கடலையும் உங்களால் அடைக்க முடியுமா?

அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு என்ற பதாகையின் கீழ் இன்று காலை 9 மணிக்கு, நெல்லை பாளையங்கோட்டை திடலில், பெரியார் திராவிடர் கழகம், ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர், மனிதநேய மக்கள் கட்சி, பாட்டாளி மக்கள் கட்சி, சேவ் தமிழ்ஸ், தமிழக இளைஞர் எழுச்சி பாசறை, SDPI, மே 17 இயக்கம், த.தே.பொ.க., தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம், ஆதித் தமிழர் பேரவை உள்ளிட்ட பல கட்சிகள், இயக்கங்கள் ஒன்றிணைந்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், விடுதலை சிறுத்தைகள் வன்னிஅரசு, தோழர் தியாகு, பண்ரூட்டி வேல்முருகன் ஆகிய தலைவர்களின் தலைமையில் "மக்களின் அச்சத்தைப் போக்கி அணு உலையை திறக்கக்கூடாது என்ற தமிழக அரசு இன்று மக்களை அச்சுறுத்தி திறப்பது நியாயமா? கூடங்குள அணு உலையை திறக்காதே! கைது செய்தவர்களை உடனே விடுதலை செய்!" என்கிற கோரிக்கை முழக்கத்துடன் 5000க்கும் மேற்பட்ட தோழர்கள் இடிந்தகரை நோக்கி படையெடுத்தபோது, போலிசாரால் கைது செய்யப்பட்டனர். விண்ணதிர வைக்கும் முழக்கங்களுடன் காற்று அங்கு வேறு மாதிரியாக இருந்தது. ஏறத்தாழ 800க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாகினர். கைது செய்யப்பட்டவர்களை தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்ட ரோஸ் மஹால் நிரம்பி வழிந்தததால் மென்மேலும் தோழர்களை அடைத்து வைக்க முடியாமல் காவல் துறையினர் விழி பிதுங்கினர்.

மாலை ஐந்து மணிக்கு விடுவிக்கப்பட்ட தோழர்கள் இன்று ஒரு எதிர்பாராத திருப்பத்தை சந்திக்க நேர்ந்தது. இன்றைய போராட்டத்தில் பங்கு பெற்ற தோழர் சதீஸ், மற்ற இயக்கத் தோழர்களுடன் வெளியே சென்றபோது, கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கு வந்த சிலர் அவரை சுற்றி வளைத்து வண்டியில் போட்டு கடத்திச் சென்றிருக்கின்றனர். இது கியூ பிராஞ்ச் போலிசின் நடவடிக்கையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. எந்தவித வாரண்டோ, காரணங்களோ இல்லாமல், இப்படியான ஒரு நிகழ்வு அரங்கேற்றப்பட்டிருக்கிறது. கூடங்குள அணு உலை எதிர்ப்புப் போராட்டத்திற்கு பெருவாரியான‌ மக்களிடையே ஆதரவு பெருகிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், இந்த அறப்போரை திசைதிருப்ப எல்லா வழிகளிலும் ஆளும் அரசால் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்பதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது. போராடும் மக்களை நெருங்க முடியாத கையாலாகாத‌ அரசு, மாற்று வழியில் உளவியல் தாக்குதலைத் தொடுத்திருக்கிறது.

ந‌மது அடிப்படை வாழ்வாதார உரிமைகளுக்காக ஆதிக்க சக்திகளின் அடக்குமுறைகளை எதிர்த்து உலகெங்கும் போராடி வரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கெல்லாம் ஒரு மாபெரும் முன்னுதாரணமாகத் திகழும் கூடன்குளம் இடிந்தகரை மக்கள் இம்மாதிரியான அடக்குமுறைகளை தூசு போலத் துடைத்தெறியத் துணிந்திருக்கின்றனர். முதலாளித்துவ ஏகாதிபத்திய நலன்களுக்காக ஒரு சமூகத்தையே பலியிடத் துடித்துக் கொண்டிருக்கும் இந்திய அரசையும் தமிழக அரசையும் எதிர்த்து, கொலைகார‌ அணு உலையை மூடும் வரை மக்கள் இந்த அறவழிப்போரை இம்மியளவு கூட விட்டுக் கொடுக்கப் போவதில்லை. ஆயிர‌க்கண‌க்கான‌ போலீசின் பிரம்மாண்ட அணிவகுப்பும், இராணுவ‌மும் துப்பாக்கிக‌ளும் நெஞ்சுர‌ம் கொண்ட அந்த‌ குழந்தைகளைக் கூட‌ மிர‌ட்ட‌ப் போதுமான‌தாக‌ இருக்கவில்லை.




இன்னொரு முள்ளி வாய்க்காலை நிறைவேற்றி விட‌லாம் என‌ ல‌ட்சிய‌ வெறியோடு க‌ள‌மிற‌ங்கியிருக்கிற‌து அர‌சு இய‌ந்திர‌ம். உண‌வு, குடிநீர் காய்க‌றி எல்லா அத்தியாவ‌சிய‌ப் பொருட்க‌ளும் த‌டை செய்ய‌ப்ப‌ட்டிருக்கின்ற‌ன. ராதாபுரம் பகுதியில் 144 த‌டை உத்த‌ர‌வு பிற‌ப்பிக்க‌ப்ப‌ட்டிருக்கிறது. உள்ளே வெளியே போக்குவ‌ர‌த்து அனும‌தி இல்லை. மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது. மருந்துகளின் கையிருப்பு குறைந்து கொண்டே வருகிறது. கூட‌ங்குள‌மும் இடிந்த‌கரையும் வெளியுல‌கோடு தொட‌ர்ப‌றுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து. உதயகுமார் அவர்களின் துணைவி நடத்தும் பள்ளிக்கூடம் கூலிப்படையினரால் தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறது. வலியால் அவதிப்பட்ட ஒரு கர்ப்பிணிப்பெண் மருத்துவமனைக்குச் செல்ல போலிசு மறுத்திருக்கிறது. கைது செய்யப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களுக்கு உணவு வழங்கப்படவில்லை. கைதானவர்களில் 45-க்கும் மேற்பட்ட பெண்கள் பேருந்துகளில் கொண்டு சென்ற போது, மலஜலம் கழிக்கக்கூட போலிசு வண்டியை நிறுத்த‌ அனுமதிக்கவில்லை.

ச‌ங்க‌ர‌ன் கோவில் இடைத்தேர்த‌ல் நிகழ்ந்த ம‌றுநாளே, த‌ன் கோர‌ முக‌த்தைக் காட்டிக் கழுத்தறுத்த‌ த‌மிழ‌க அரசையும், ஒரு இனப்படுகொலைக்குத் தயாராகும் முஸ்தீபுகளோடு தன் திட்டத்தை வரையறுத்திருக்கும் மாநில அரசையும் மக்கள் அவதானிக்கத் தொடங்கி விட்டனர். ஏற்கெனவே சிங்கள் அரசின் உதவியோடு அம்பலமான ஈழப்படுகொலைகளைப் பார்த்து கண்ணீரோடு (சற்று தாமதமாக) கொதித்துப் போயிருக்கிற தமிழனுக்கு காங்கிரசு அரசின் மீதான தேச வளர்ச்சி பொய்க்கரிசனம் தெற்றென விளங்கியிருக்கிறது.

இடிந்தகரையில் அணு உலையை எதிர்த்துப் போராடும் மீனவ விவசாய மக்களின் நியாயத்தையும், ஏன் அணு உலைக‌ளை இந்தியா உள்ளிட்ட‌ மூன்றாந்த‌ர‌ நாடுக‌ள் ஆதரிக்கின்றன என்ற‌ பின்ன‌ர‌சியலையும் ம‌க்க‌ளிடையே அவசரமாய்க் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டிய நிர்ப்பந்தம் இங்கே தான் இருக்கிறது. தின‌ம‌ல‌ம் போன்ற‌ பாசிச‌ நாளித‌ழ்க‌ளின் க‌ருத்துக‌ளுக்கு போதுமான‌ ஆத‌ர‌வு குறைந்து வருகிற இவ்வேளையில்,நம் சந்ததிகளைக் காக்க இரவு பகலாக போராடி வரும் அந்த மக்களுக்கான ஆதரவைத் திரட்ட‌ நம்மாலான முயற்சிகளைச் செய்வோம்.

தமிழகத்தையே கூறுபோடக் காத்திருக்கும் எண்ணிலடங்கா திட்டங்கள் மத்திய அரசிடம் இன்னும் நிறைய இருக்கின்றன. எனவே இந்த அவலம் நாளை ஒவ்வொரு தமிழனுக்கும் நேரும் காலம் வெகுதொலைவில் இல்லை. நமது நிலங்கள் பறிக்கப்படவிருக்கின்றன. நமது வீடுகள் சூறையாடப்படவிருக்கின்றன. நமது உயிர்களைச் சுவைக்க‌ பிணந்தின்னி கழுகுகள் காத்திருக்கின்றன. அரசியல்வாதிகள் எப்போதும் போல நம்மைக் கைவிட்டு விடுவார்கள். கூடங்குளத்தையும் இடிந்தகரையையும் வட்டாரப் பிரச்சினையாக பாவித்து பாராமுகமாய் இருக்கப் போகிறோமா? தொலைக்காட்சியையும் கிரிக்கெட்டையும் ஓட்டரசியல் கட்சிகளின் இலவசக் கவர்ச்சி விளம்பரங்களையும் பார்த்து கிறங்கிக் கிடக்கப் போகிறோமா?

ஒடுக்கப்பட்ட மக்களின் மீது வன்முறைச் சேற்றை வாரியிறைத்து வாழ்வாதாரப் போராட்டங்களை நசுக்கத்துடிக்கும் ஒவ்வொரு அரசும் இறுதியில் வீழ்ச்சியைச் சந்தித்தே ஆக வேண்டுமென்பதை, போராடும் மக்களுக்கு தோள் கொடுப்பதன் மூலம் இந்திய அரசை எச்சரிப்போம். நம் மன உறுதியையும் காற்றையும் கடலையும் அவர்களால் அடைக்க முடியாது என்பதை சாவு வியாபாரி அரசுகளின் துப்பாக்கி ரவைகளுக்கு உரக்கச் சொல்வோம்.


கீற்று இதழில் வெளிவந்தது.

***********************************************************

Thursday, February 16, 2012

இனப்படுகொலை வெர்ஷன் 2.0 - முறியடிப்பது எப்படி ?



உலகெங்கும் அணு உலைகளுக்கெதிராக எதிர்ப்பு இயக்கங்கள் மிகத்தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இவ்வெதிர்ப்பு இயக்கங்களின் செயல்பாடுகளும் போராட்டங்களும் நிறைந்த வரலாறு மிகப்பழமையானது. அணு உலைகளை ஆதரிக்கும் ஜப்பானிலும் பிரான்சிலும் அமெரிக்காவிலும் தான் உக்கிரமான போராட்டங்கள் நடந்திருக்கின்றன. 2001 ஐரோப்பிய கமிஷன் எடுத்த ஒரு சர்வே, வெறும் 10.1 விழுக்காடு ஐரோப்பியர்கள் மட்டுமே அணு சக்தியின் மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவிக்கிறது. அமெரிக்காவில் 80-க்கும் மேற்பட்ட அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் இருக்கின்றன. 1982-ல் நியூயார்க் நகரில் ஒரு மில்லியன் மக்கள் பங்கேற்ற ஒரு போராட்டம் (அமெரிக்க வரலாற்றிலே மிகப்பெரிய அணு உலை எதிர்ப்பு) நடந்தேறியிருக்கிறது.

அணு உலைகளே இல்லாத ஆஸ்திரேலியாவில் கூட அணுசக்திக்கெதிராகவும் யுரேனியம் வெட்டி எடுப்பதை எதிர்த்தும் அணு உலை எதிர்ப்பு இயக்கங்கள் (CANE) போராட்டங்கள் நடத்தியிருக்கின்றன. ஆஸ்திரியா, க‌ன‌டா, ஜெர்ம‌னி, பிரான்ஸ், க‌ஸக‌ஸ்தான், நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ், துருக்கி, போல‌ந்து, தைவான், சுவிட்ச‌ர்லாந்து, இங்கிலாந்து, ஸ்பெயின் என‌ எல்லா நாடுக‌ளிலும் இவ்விய‌க்க‌ங்க‌ள் போராடி வ‌ருகின்ற‌ன. இவர்களுக்கெல்லாம் எந்நாட்டிலிருந்து நிதி வருகிறதென்றோ அல்லது எந்த மிஷினரியின் பின்புலம் வேலை செய்கிறதென்றோ நமது தினமலரும் நாராயணசாமியும் ஒரு கலந்தாய்வு கட்டுரை எழுதினால் நன்றாக இருக்கும். எல்லா இயக்கங்களின் முழக்கம் ஒன்று தான். அது மக்கள் நலம். மக்களின் வாழ்வாதாரங்களுக்கெதிராக அரசோ நாட்டின் வளர்ச்சியோ அணு உலைகளோ முக்கியமல்ல என்பதே அனைத்து போராட்டங்களின் அடிநாதமாக இருந்து வந்திருக்கிறது.

செர்னோபில் அணு உலை விபத்து நிகழ்ந்த இரண்டாமாண்டு நினைவு தினம். சோவியத் யூனியனின் குர்சட்டாவ் என்கிற அணுசக்தி ஆராய்ச்சி நிலையத்தின் முதல் இயக்குனரான வாலெரி லெகசோவ் தனது அபார்மென்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். பின்னாளில் தெரியவந்த‌ லேகசோவ் தற்கொலைக்கான காரணங்கள் ரஷ்யாவையே உலுக்கின. லெகசோவின் தற்கொலை ரஷ்ய அணுசக்தி கழகத்தின் மீதான‌ மிகப்பெரிய ஐயப்பாட்டையும் அதிர்ச்சி அலைகளையும் மக்களிடையே தோற்றுவித்தது. ரஷ்ய‌ அணுசக்திக் கழகத்தின் அம்பலமாகாத ரகசியங்களை வெளிப்படையாக‌ பேச முடியாத தொடர் மன அழுத்தமே தனது தற்கொலைக்கான காரணமாக லெகசோவ் தனது இறுதி ஆடியோடேப்பில் பதிவு செய்திருக்கிறார். செர்னோபில் அணு உலைகளின் வடிவமைப்பில் இருந்த‌ தொடர் குளறுபடிகளும் கன்ட்ரோல் ராடுகளின் பிரச்சினைகளும் அந்த நிலைய ஆபரேட்டர்களுக்கு ஏற்கனவே தெரியுமாம். அனைத்து உண்மைகளையும் விபத்து நடந்ததற்கு பின் ஒப்புக் கொள்ள வேண்டி வந்த மிகப்பெரிய துயரம் அவரை பெருமளவில் பாதித்திருக்கிறது.

இங்கு நாம் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம் லெகசோவின் தற்கொலை என்பதை விட, அவர் தற்கொலைக்கு ஆகிருதியான காரணியாக விளங்கிய செர்னோபில் அணு உலையின் நம்பகத்தன்மையும் ரஷ்ய அணுசக்திக் கழகத்தின் பொய்யுரைகளுமே. கூடங்குள‌மும் செர்னோபிலும் ஒத்த‌ வ‌டிவ‌மைப்புடைய‌வை என்ப‌து நம் அனைவருக்கும் தெரிந்த‌ உண்மை.

ப‌ல ல‌ட்ச‌ம் ம‌க்க‌ளை அணு அணுவாய் கொன்று குவித்த‌ அதே செர்னோபில் தான் இப்போது கூடங்குள‌த்தில் ம‌றுபிற‌வி எடுத்திருக்கிற‌து. 16 ஆண்டுக‌ளுக்கு முன் ர‌ஷ்யாவில் ந‌ட‌ந்த‌ ஒரு மாபெரும் வ‌ர‌லாற்றுத்துய‌ர‌ம் மீண்டும் நிக‌ழக் காத்திருக்கிற‌து. அதே வடிவமைப்பு, அதே காரணங்கள், அதே பொய்கள். எல்லா உண்மைகளையும் தெரிந்தே தான் ரஷ்யா, விபத்திற்கான இழப்பீட்டைத் தர முடியாது என்ற நிர்பந்தத்தில் இந்திய அரசை கையெழுத்திட வைத்திருக்கிறது.

தனது ஏவல் நாயான இலங்கை அரசின் உதவியோடு, ஈழத்தில் ஒன்றரை லட்சம் தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய காங்கிரசு அரசின் இரத்த வெறி இன்னும் தீர்ந்து விடவில்லை. பாதுகாப்பானதென‌ பொய்யுரை பரப்பியோ, வெளிநாட்டுச் சதி என உண்மைகளைத் திரித்தோ அல்லது மறைத்தோ, மதச்சாயம் பூசி வன்முறையை ஏவியோ இந்த கூடங்குள அணு உலையை நிறுவி விட்டால் போதும்; குமரி முதல் வங்காளம் வரை மேற்கே மகாராஷ்டிரம் வரை ஆயிரம் மீட்டருக்கு ஒரு அணு உலையை கடலோரப்பகுதிகளில் கட்டி விடலாம் என்ற கொள்கை வெறியோடு களமிறங்கியிருக்கிறது இந்த மக்கள் விரோத காங்கிரசு அரசு. தமிழர்களைக் கூண்டோடு கொன்றொழிக்க போடப்பட்ட திட்டமாகவே இந்த கூடங்குள அணு உலையை நினைக்கத் தோன்றுகிறது. வடதமிழகத்திற்கு கல்பாக்கமும் தென் தமிழகத்திற்கு கூடங்குளமுமே முழு தமிழகத்தை அழிக்கப் போதுமானதாக இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் கூடங்குளம் அமைந்திருக்கும் பகுதி மேற்குத் தொடர்ச்சி மலையின் முடிவாக இருப்பதாலும் ஆரல்வாய் கணவாய் இவைகளினாலும் இயல்பாகவே காற்று வீசும் பகுதியாக அமைந்திருக்கிறது. ஆகவே அணு உலை செயல்படத் துவங்கும் வேளையில், புகை போக்கியின் வழியாக வெளியேறும் சீசியம், அயோடின், சார்ட்டியம் போன்ற நச்சுத்துகள்கள் காற்று வீசும் திசையெங்கும் பரவும்.

நூறு மில்லி சிவரேட் கதிர்வீச்சு புற்றுநோயை உருவாக்கப் போதுமானதாக இருக்கிறது. ஆயிரம் மில்லி சிவரேட் கதிர்வீச்சு உடனடி மரணத்தை தோற்றுவிக்கக் கூடியது. நூறு மில்லி சிவரேட் அல்லது அதற்குக் குறைவான கதிர்வீச்சு என்பது ஒரு அணு உலையைச் சுற்றி எழ‌ வாய்ப்பில்லை என யாராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. அணுக்கதிர்வீச்சு முதலில் தாக்குவது கருத்தரிக்கும் உறுப்புகளைத் தான். இதனால் அணு உலையைச் சுற்றியிருக்கும் ஆண்களும் பெண்களும் மலடாகவோ அல்லது உருச்சிதைந்த குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களாகவோ மட்டுமே இருப்பர். இதனால் ஒரு சமூகமே அழியும் பேரவலம் திரைமறைவில் காத்திருக்கிறது. கதிர்வீச்சு கடல்வாழ் உயிரினங்களுக்கும் உலைவைக்கும் என்பதால் கடலை நம்பியே வாழும் மக்களின் வாழ்வாதாராம் பறிபோகவிருக்கிறது.

ச‌ங்க‌ர‌ன்கோவில் இடைத்தேர்த‌லுக்குப் பின் கூட‌ங்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌த‌ற்கான‌ எல்லா முகாந்திர‌ங்க‌ளையும் த‌மிழ‌க‌ அர‌சு செய்து வ‌ருகிற‌து. எட்டுமணி நேர மின்வெட்டின் மூலம் கூடங்குள அணு உலையைத் திறக்ககோரி மக்களிடையே ஒருமித்த பொதுக்கருத்தை கட்டமைத்தது முதற்கொண்டு, பேச்சிப்பாறை அணையை தூர்வார‌ ஆணை பிற‌ப்பித்த‌து, எம்.ஆர்.சீனிவாசன் உள்ளிட்ட‌ அணு உலை ஆதரவாளர்களை வைத்தே நிர்மாணிக்கப்பட்ட நிபுணர் குழு, என‌ மெல்ல‌ மெல்ல கூடங்குள‌ அணு உலையைத் திற‌ப்ப‌தில் மாநில‌ அர‌சு த‌ன் இர‌ட்டை வேட‌த்தைக் க‌லைத்து வ‌ருகிற‌து.

இலங்கையில் லட்சக்கணக்கான நம் தமிழ் உறவுகளை பறிகொடுத்தபோது செய்வதறியாது கையறு நிலையில் இருந்த நாம், நம் சொந்த மண்ணிலேயே மீண்டுமொரு சதி நிறைவேற அனுமதிக்கக் கூடாது. வலுவான வெகுஜன ஊடகங்களை தன் ஆளுகைக்கு உட்படுத்திக் கொண்ட மத்திய, மாநில அரசுகளின் பொய்யுரைகளை அம்பலமாக்கி அவற்றை வேரறுக்க நம்மைத் தயார்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகிறது. இதற்கான களப்பணிகளை நம்மைச் சுற்றியுள்ள சமூகத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

நொடிப்பொழுதில் லட்சக்கணக்கானோருக்கு ஒரு தனிமனிதனின் முயற்சியாலேயே செய்திகளைக் கொண்டு சேர்க்க வல்ல அதிநவீன கால கட்டத்தில் வாழும் நாம், பரப்புரைகளை மேற்கொள்ள வேண்டிய வழிகள் எளியன. எடுத்துக்காட்டாக அலுவலக நண்பர்களுக்குப் புரிய வைக்கலாம்; விவாதிக்கலாம். உண்மைகளை தரவுகளோடு எடுத்துரைக்கலாம். பக்கத்து வீட்டு பெரியவர்களுடன் இது குறித்து உரையாடலாம். சிறு கலந்துரையாடல்களை ஏற்பாடு செய்யலாம். கூடங்குள அணு உலையின் பேராபத்துகள் குறித்து கட்டுரைகள் நிறைந்த சிறு புத்தகங்கள் எண்ணற்ற அளவில் கிடைக்கின்றன. அதை நண்பர்களுக்குக் கொடுத்து கருத்து கேட்கலாம். பேருந்து, ரயில் பயணம் என கிடைத்த சந்தர்ப்பங்களில் அணு உலைகள் குறித்து பேச முயற்சிக்கலாம்.

எப்படி பேச்சை ஆரம்பிப்பது? வெகு சுலபம். மின்வெட்டு என்ற ஒரு பொறி போதும். அல்லது கூடங்குள அணு உலை படம் போட்ட புத்தக‌மொன்றை கையில் எடுத்துக் கொண்டால் அருகிலிருப்பவர்களின் கவனத்தை எளிதில் ஈர்க்கலாம். தொடர்ந்து முகநூலில் நிலைத்தகவல்களை எழுதுதல், கட்டுரைகளைப் பகிர்தல் என எல்லா வகையிலும் நமது பரப்புரைகளைச் செய்ய ஆரம்பிக்க வேண்டும். தொடர்ந்து கூடங்குள மக்களின் போராட்டங்களுக்கு நம்மால் இயன்றவரை எல்லா வகையிலும் தோள் கொடுத்து, மக்கள் போராட்டம் வெல்லும் வரை உடன் நிற்போம்.


பெப்ரவரி 14,2012 அன்று கீற்று இதழில் வெளிவந்தது

***********************************************************

Monday, January 16, 2012

கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரமும் சில விவாதங்களும்




எழுத்தாளரும் களப்பணியாளருமான தோழர் அ.முத்துக்கிருஷ்ணனின் கூடன்குள அணு உலை தொடர்பான "விழித்தெழும் உண்மைகள்" சிறு நூலை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த‌ போது, எதிர்கொண்ட கேள்விகளும் விவாதங்களுமாக இந்த அனுபவம் இன்னும் முற்றுப்பெறாமலிருக்கிறது.பல மாதங்களாக அலுவலகத்திலும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நேரிலும் சாட்டிலும் முகநூலிலும் விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

அணு உலை குறித்த அடிப்படை கருத்துகளை பரப்பும் முதல் களமாக பள்ளிக்கூடங்களையும் மஸ்ஜிதுகளையும் நாடலாம் என முடிவு செய்யப்பட்டு களப்பணிகள் ஆரம்பமாயின.சந்தித்த முதல் இடமே ஏமாற்றமளித்தது.நான் படித்த கிறிஸ்துவ பள்ளியின் பாதிரியார், எதிர்ப்பு குறித்தான பிரச்சாரமோ, புத்தக விற்பனையோ செய்வது சமூக விரோதம் என்ற அடிப்படையில் பேசி நிராகரித்ததோடு நில்லாமல், இந்த போராட்டம் ஏன் அணு உலை கட்ட ஆரம்பிக்கும் போதே இல்லை என ஒரு சாமான்யனைப் போல அவரும் அதே பிராண்டட் கேள்வியை கேட்டது வருத்தமளித்தது.மேலும் இந்த விஷயத்தில் அனைத்து கிறிஸ்துவர்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனர் என கவலை தெரிவித்தார்.அது போக வேறெங்கும் போய் இதைப்பற்றி செமினார் பண்ணாதீங்க தம்பி..என அறிவுரை வேறு. நல்லது என நடையை கட்டினேன்.

கூடன்குளம் அணு உலையை எதிர்த்து சமநிலைச்சமுதாயம், விடியல் உள்ளிட்ட பல‌ இஸ்லாமிய பத்திரிக்கைகளில் காத்திரமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்திலும் பல உலமாக்கள், மஸ்ஜிது நிர்வாகிகள் அணு உலைகள் குறித்த‌ ஒரு அரசல் புரசலான அறிவு கூட இல்லாமல் இருந்தது வேதனையளித்தது.ஆயிரம் பேர் கூடக்கூடிய வடசென்னையின் ஒரு முக்கிய பள்ளிவாசலின் தலைவர் "கூடன்குளமா..அப்படின்னா...என்ற ரீதியில் நெளிந்தார். புத்தகத்தை வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள். ஜமா அத் முன்பு பேச அனுமதி தரமுடியாது என தன்னிச்சையாக அறிவித்தார்.இன்னொரு பள்ளிவாசல் கொஞ்சம் பரவாயில்லை. பள்ளி நிர்வாகி ஒருவர் வழக்கமான‌ பிராண்டட் கேள்வியோடு விவாதத்தை தொடங்கினார்.உண்மைகளை கொஞ்சம் எடுத்துரைத்த பின், புத்தகத்தை பள்ளி இமாமிடம் கொடுத்து படிக்கச் சொல்லி தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டார்.இன்னும் பயான் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

அடையாறு மஸ்ஜித் இமாம் மெள்லானா சதீதுத்தீன் பாகவி குறித்து ஏற்கெனவே பலமுறை எழுதியிருக்கிறேன். அவர் ஒரு கல்வியாளர். உலக,மார்க்க கல்வி அறிஞர். அவரை தனியாக சந்தித்த போது, கூடன்குள எதிர்ப்பு தொடர்பான வலுவான கருத்தியல் அவரிடமிருந்தது. சாவகாசமாக தனது கருத்துகளை இஸ்லாமிய பார்வையில் எடுத்துரைத்தார்.கூடன்குளத்தை ஆதரிப்போரின் நுகர்வுப்பார்வையில் இருக்கும் குளறுபடிகளையும் ஏகாதிபத்திய நாடுகளின் வியாபார நோக்கங்கள் குறித்தும் பேசினோம். முத்துக்கிருஷ்ணனை அவருக்கு தெரிந்திருந்தது. ஏற்கெனவே ஜூம்ஆ பயான்களில் கூடன்குள அணு உலை குறித்து அவர் குறிப்பிட்ட கருத்துகளையும் கூறினார். இன்னும் அதைப்பற்றி விரிவாகப் பேசுவதைப் பற்றி பரிசீலிப்பதாகவும் உறுதி கூறினார். இன்ஷா அல்லாஹ் என்று புத்தகத்தை வாங்கி கொண்டார். மஹல்லா மக்களிடம் விற்பனை சொல்லிக் கொள்ளுமளவு இல்லையென்றாலும், இது போன்ற உறுதி மொழிகளும் நம் சமூகத்தின் மீதான அக்கறைகளும் ஆறுதலளிப்பதாக இருந்தன.

ஏறத்தாழ எல்லாரும் வழக்கமான‌ கேள்விகளைத் தான் திரும்ப திரும்ப கேட்டனர்.எல்லாவற்றிற்குமான பதில்களும் விளக்கங்களும் முறையான தரவுகளுடன் முத்துக்கிருஷ்ணனின் இந்நூலில் விரிவாக அலசப்பட்டிருக்கிறது.


1. இந்த போராட்டம் எதிர்ப்பு ஏன் அணு உலைகளை தொடங்கிய நாட்களிலேயே இல்லை ?

2. கூடன்குளம் அணு உலை திறக்கப்படவில்லையென்றால் எப்படி நம் மின் தடை பிரச்சனை நிறைவேறப்போகிறது.காலம் முழுவதும் நாம் இருளில் மூழ்க வேண்டியது தானா ?

3. அப்துல்கலாமே சொல்லிட்டாரே. 100% பாதுகாப்பானது தான் என்று. அப்புறமென்ன போராட்டம் அது இதுன்னு தேவையில்லாத வேலை. அவருக்கு தெரியாததா உங்களுக்கெல்லாம் தெரியப் போகிறது. அப்துல் கலாமின் அபத்தமான ஒப்பீட்டையே அவர்களும் முன்மொழிந்தனர். கார் விபத்தில் இறக்காதவர்களா ? என்று.

4. செர்னோபில்-லாம் ந‌ட‌ந்து 25 வ‌ருஷ‌ம் ஆவுதுங்க‌..இப்ப‌ இருக்க‌ இந்திய‌ விஞ்ஞானிக‌ள்லாம் எக்ஸ‌ப்ர்ட்ஸ். இதெல்லாம் யோசிக்காம‌யா இந்த‌ புராஜெக்ட‌ கொண்டு வருவாய்ங்க‌..?

5.இவ்வளவு செலவு செய்தாகி விட்டதே. இதை எப்படி கைவிடுவது?



கூடங்குளம் அணு உலை திட்டம் உருவான அரசியல் பின்னணி, ரஷ்ய அணு உலைகளின் அபாயம்,இருபத்தைந்து கால இடைவிடாத எதிர்ப்புப் போராட்டங்கள்,அணுசக்தி கழகத்தின் ஊதாரித்தனம்,ஊழல்,பொய்ப்பிரச்சாரம், அறிவுசார் தளத்தில் இயங்கும் சில ஊடகங்களில் வெளிவந்த விழிப்புர்ணவு கட்டுரைகள், அணு உலைகளைச் சுற்றியுள்ள மக்கள் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்கொள்கிறார்கள், மாற்று மின்சாரத்தின் அவசியம் என்ன ? இந்திய அணு உலைகளுக்கு நாம் கொடுக்கும் விலை என்ன ? செர்னோபில்,ஃபுகுஷிமா அணு உலை வெடிப்புகள் உலகெங்கும் ஏற்படுத்திய பாதிப்புகளை அறிதல் எவ்வளவு முக்கியமானது போன்ற பல கேள்விகளுக்கு எளிய தமிழில் விடையளித்திருக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.உயிர்மையின் 100ஆவது இதழில் சிறப்பு பகுதியாக வெளிவந்த முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, பல பதிப்பகங்கள் ஒன்றிணைந்து மக்கள் பதிப்பாக இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது.

1. இருப‌த்தைந்து காலமாக‌ இந்த‌ போராட்ட‌ம் தொட‌ர்ந்து கொண்டு தான் இருக்கிற‌து. ஆனால் அதை நாம் தான் அறிந்து கொள்ள‌வில்லை. கூட‌ன்குள‌ம் அணு உலை குறித்தான‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ப‌ல‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளி வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்திருக்கின்ற‌ன.அணு உலையை எதிர்த்து ப‌ல‌ ஊர்வ‌ல‌ங்க‌ளும் பொதுக்கூட்ட‌ங்க‌ளும் இடிந்த‌க‌ரையிலும் நெல்லை மாவ‌ட்ட‌த்தின் ப‌ல‌ ஊர்க‌ளிலும் ந‌ட‌ந்திருக்கிறது. ம‌க்க‌ள் ஆத‌ர‌வு வ‌லுப்பெறாத‌ கால‌ க‌ட்ட‌ங்க‌ளில், அறிவு சார் தள‌த்திலே இருந்த‌ இந்த‌ எதிர்ப்பு, ம‌க்க‌ள் எதிர்ப்பாக‌ உருப்பெற்ற‌வுட‌ன் அத‌னை கொச்சைப்ப‌டுத்த‌ தொட‌ங்கியிருக்கிற‌து இந்திய‌ அர‌சு.

2. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 2.62% தான் அணு உலைகளின் பங்களிப்பாக இருக்கிறது. சூரிய ஒளியிலிருந்து 1.1%-மும், அனல்,புனல்,காற்று இவைகளிலிருந்து 65% மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.

கூடன்குளம் அணு உலை 1200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது.இதில் கூட‌ன்குள‌ அணு உலைக்கே செல‌வாகும் மின்சார‌ம் 12%. ஆக‌ ந‌ம‌க்கு 1080 மெகாவாட் மின்சார‌ம் தான் உற்ப‌த்தி என‌ வைத்துக் கொள்வோம். இதில் ந‌ம் மாநில‌த்திற்கு 50% தான் என‌ அர‌சு நிர்ண‌யித்திருக்கிற‌து. வ‌ழ‌க்க‌மாக‌ 30% தான் சொந்த‌ மாநில‌த்திற்கு கிடைக்கும்.ஆக‌ த‌மிழ்நாட்டிற்கு 540 மெகாவாட் கிடைக்குமெனில், இதில் மின்க‌ட‌த்த‌லின் இழ‌ப்பு 15 முத‌ல் 20% வ‌ரை இருக்குமெனில் ந‌ம‌க்கு கிடைக்க‌ விருப்ப‌து வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் ம‌ட்டுமே.

சுப‌.உத‌ய‌குமாரின் கூற்றுப்ப‌டி, த‌மிழ்நாட்டில் உள்ள குண்டுப‌ல்புக‌ளை எல்லாம் மாற்றி குழ‌ல் விள‌க்குக‌ளாக‌ மாற்றினாலே நாம் 500 மெகாவாட் மின்சார‌ம் சேமிக்க‌ முடியும். வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கா இவ்வ‌ள‌வு கோடிக‌ள் ??? க‌ட்டுமான‌ செல‌வை விடுங்க‌ள்.உலை இய‌ங்க‌ ஆர‌ம்பித்தால் ப‌ராமரிப்பு செல‌வு என்ன‌ ஆகும் தெரியுமா ?

ஜெர்ம‌னி,சுவிட்ச‌ர்லாந்து, ஜ‌ப்பான் உள்ளிட்ட‌ ப‌ல‌ நாடுக‌ள் த‌த்த‌ம‌து அணு உலைக‌ளுக்கு மூடுவிழா நட‌த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா ம‌ட்டும் அணு உலைக‌ளை தொட‌ங்குவ‌து ஏன் ? அமெரிக்கா திணித்த 123 அணு ஒப்ப‌ந்த‌த்திற்கு அடிப‌ணிந்து என்றென்றும் யுரேனியம் விற்கும் நாடுக‌ளுக்கு இந்தியா அடிமையாக‌ இருப்ப‌த‌ற்கான‌ அடிமை சாச‌ன‌ம் தானே அது.

3.1986 செர்னோபிலின் அணு உலை ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையவை என கூகிளில் லேசாக ஒரு தேடலை தொடங்குங்கள். ரஷ்யாவில் உள்ள செர்னோபிலின் அதே அணு உலையைத் தான் பெயர் மாற்றி நமக்கு விற்றிருக்கிறார்கள். கூடன்குளமும் செர்னோபிலும் வடிவமைப்பில் ஒன்றே தான். இதிலும் முதன்முறையாக குளிர்விக்கும் கலன்களாக கடல்நீர் அமையவிருப்பது ரஷ்ய விஞ்ஞானிகளுக்கே புதியது. ரஷ்ய அணு உலைகளிலே 31 மிகப்பெரிய காரணிகள் ஆபத்தாக இருக்கின்றன என ரஷ்ய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் போது, ஊழல் மிகுந்த நம் நாட்டில் 100% பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயண சாமி, வாயிலே வடை சுடுகிறார்.

4.கூடன்குள அணு உலை விபத்து நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய பேராபத்துகள் ஒருபுறமிருக்க, அணு உலை ( விபத்தின்றி ) இயங்கினாலே ஏற்படக்கூடிய பிரச்சினைகள் இன்று அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியி இருக்கின்றன.கூடங்குளம் அமைப்பதில் மரபு விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அணு உலைப் பகுதியில் மக்கள் உயிர் வாழ உரிய உத்தரவாதம் இல்லை. விபத்து இல்லாமல் அணு உலைகள் இயங்கும்போது ஐயோடின் 131, 132, 133 ஐசோடோப்கள் வெளியிடும் ஸ்ட்ரோண்டியம், டிரைடியம், டெலுரியம் என்ற கதிர்வீச்சு வாயுக்களால் பல அழிவுகள் ஏற்படும். நிலத்தடி நீர், விவசாய விளைப்பொருட்கள், கடல்நீர், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயங்கள் ஏராளம்.மக்களின் உயிரோடும் வாழ்வாதாரங்களோடும் ஒப்பிடுகையில் நாட்டின் வளர்ச்சி என்பது இரண்டாம் பட்சம் தானே. அணு உலையால் ஏற்படும் கேடுகளால் உலகின் பல நாடுகளில் அணு உலைகள் மூடப்படும் நிலையில் நாம் மட்டும் அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும்.

5.தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் கோலான் என்ற தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் சில நோய்களால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. இதில் பழமையானது தாராப்பூர் (மகாராஷ்டிரா). இந்த அணு உலைகளைச்சுற்றி பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் உருக்குலைந்து தான் பிறக்கின்றன. பலர் புற்று நோயால் இறக்கின்றனர்.ஆனால் எல்லா உண்மைகளையும் இந்திய அரசும் அணுசக்திக்கழகமும் ரகசிய காப்பின் கீழ் வெகுசிரத்தையுடன் மூடி மறைத்து வருகிறது. அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. ஆஸ்திரியா, ஸ்வீடன், பின்லாந்து, யுகோஸ்லாவாக்கியா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய பல நாடுகளும் பாதகமான இந்த அணுஉலைகளை வேண்டாம் என்று தவிர்த்து வருகின்றது.கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தில் அங்கிருந்த ஃபூகுஷிமா டைச்சி அணுஉலை கடலில் மூழ்கி அங்கு நடந்த கோர சம்பவத்தை நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம்.


இன்று கூடன்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் தூத்துக்குடி தொடங்கி பழையகாயல், புன்னக்காயல், கொம்புத்துறை, ஆலந்தலை, குலசை, மணப்பாடு, பெரிய தாழை, உவரி, கூத்தங்குளி, கருத்தழை, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி என்று குமரி வரை நீண்ட அமைதியான கடற்கரை கிராமங்கள் யாவும் இன்று அணு உலைகளுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை கோரல்.


----------------

Monday, January 9, 2012

புத்தகத் திருவிழா 2012 ‍- எழுச்சியும் புறக்கணிப்பும்




நேர்காணல்களும் நலம் விசாரிப்புகளும் போராட்டங்களும் வெளியேற்றங்களும் மேடைப்பேச்சுகளும் என ஒரு மிகப்பெரிய ஆரவாரம், புத்தகத் திருவிழாவின் நுழைவாயிலிலிருந்து ஆரம்பிக்கிறது.சுற்று வட்டார‌ சாலைகளில் புத்தக திருவிழாவையொட்டி ஒரு சின்ன விளம்பர பலகை, சுவரொட்டி கூட தென்படவில்லை.தமிழ் நாட்டில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால், பெரிய அளவிலான விளம்பரம் தேவையிருக்காது என பபாசி கருதியிருக்கலாம். எழுத்தாளர்‍-வாசகர் சந்திப்புக்கென தனியே ஒரு ஸ்டால் அமைத்து நாள் குறித்திருக்கிறார்கள். எதாவதொரு பதிப்பகத்தின் முன் நடக்கும் 'கூடிக்கும்மி அடித்தல்' செல்லமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இக்காலத்து இளைஞர்களிடம் வாசிப்பு குறைந்து வருகிறது என சஞ்சலப்படுவோர் கவனிக்க வேண்டிய விஷயம், புத்தக கண்காட்சியில் அதிகமாக இளைஞர்களைத் தான் பார்க்க முடிகிறது. வேலை நாளான திங்கட் கிழமை கூட, படையெடுக்கின்றனர்.பெரும்பாலும் ரிபீட் ஆடியன்ஸூகளாக இருக்கிறார்கள். அருகாமையில் அமைந்த கரையிலோ கீழ்ப்பாக்கத்திலோ 15 நாட்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கக்கூடும். தினமும் வந்து கையெழுத்து போடுகின்றனர். நேர்காணலில் பங்கேற்கின்றனர். நின்று கொண்டே வாசிக்கின்றனர்.எஸ்.ராமகிருஷ்ணனைச் சுற்றி ஒரு இயக்கமே செயல்படுகிறது.சலிப்பு தட்டாமல் பேசிக்கொண்டே இருக்கிறார் மனிதர். நிச்சயமாக அவர் ஒரு சாக்ரட்டீஸ் தான்.

சென்ற ஆண்டு இருந்த மனநிலை இந்த முறை இல்லை.புனை கதைகளின் வாசிப்பில் ஒருவித தேக்க நிலையும் அயர்ச்சியும் உருவாகி விட்டதாக உணர்கிறேன். கிருஷ்ணபிரபு மாதிரியான ஆட்களைத் தவிர மற்ற யாருடனும் அதிகம் அளவளாவ பிடிக்கவில்லை.புனைவு இலக்கியங்களில் அதிகம் கவனம் செலுத்தக்கூடாது என தீர்மானம் இயற்றி விட்டுத் தான் புத்தக வேட்டையைத் துவக்கினேன்.மேலும் கிழக்கு, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்திருந்தேன்.இருப்பினும் யுவனின் குள்ளச்சித்தனுக்காகவே கிழக்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. தமிழினி வெளியீடாக முன்பு வந்ததை, கிழக்கு மீள்பதிப்பு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல, கோபி கிருஷ்ணனின் புத்தகங்கள் 'கடல்'லையே இல்லையாம்.

கீழைக்காற்று, பாரதி புத்தகாலயங்களில் பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முற்போக்கு கட்டுரைகள் நிரம்பிய குட்டி புத்தகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கங்கள். பாதசாரியின் 'பேய்க்கரும்பு', கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'மீன் குகை வாசிகள்' பார்த்த மாத்திரத்தில் வாங்கத் தூண்டியவை.தமிழ்மகனின் 'வெட்டுப்புலி', யூமா.வாசுகியின் 'மஞ்சள் வெயில்', யுவன் சந்திர சேகரின் 'மணற்கேணி' எதிர்பார்த்து வாங்க வேண்டியவை பட்டியலில் இடம் பெற்றிருந்தன. சிக்மண்ட் ஃபிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' உளவியல் வேட்கைக்கு தீர்வு அளித்திருக்கிறது.

காத்திரமான கட்டுரைகள் அடங்கிய புதிய கலாச்சாரத்தின் "கண்ணை மறைக்கும் காவிப்புழுதியும்", அரபி இலக்கியம் குறித்தான சாருநிவேதிதாவின் "தப்பு தாளங்களும்" மறக்காமல் வாங்கிக் கொண்டேன்.ஆண்டன் செகாவ் சிறுகதைகளும்,சாருவின் 'ஊரில் மிக அழகான பெண்ணும்'மொழிபெயர்ப்பு வரிசையில் சேர்ந்து கொண்டன. மற்றபடி,என் மனதிற்கு நெருக்கமான வண்ணதாசனின் "பெய்தலும் ஓய்தலும்" சிறுகதை தொகுப்பு இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கான‌ எனது தேடலை மனநிறைவுடன் இறுதி செய்திருக்கிறது.


இதுவரை வாங்கியவை:

1.பேய்க்கரும்பு - பாதசாரி / தமிழினி

2.மஞ்சள் வெயில் - யூமா.வாசுகி/அகல் பதிப்பகம் ( கருப்பு பிரதிகளில் கிடைக்கும் )

3.மீன்குகை வாசிகள் ‍ - கீரனூர் ஜாஹிர் ராஜா / ஆழி பப்ளிஷர்ஸ்

4.அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில் எம்.எஸ் / பாதரசம் வெளியீடு
( கீழைக்காற்றில் கிடைக்கும் )

5.கண்ணை மறைக்கும் காவிப்புழுதி ‍- புதிய கலாச்சாரம் கட்டுரைகள / கீழைக்காற்று

6.தலித் முஸ்லிம் - ஹெச்.ஜி.ரசூல் / பாரதி புத்தகாலயம்

7.சோஷலிச திட்டத்தில் கடந்த காலமும் எதிர்காலமும்‍ - பிரபாத் பட்நாயக் / பாரதி புத்தகாலயம்

8.பெண்ணியம் பேசலாம் வாங்க ‍- உ.வாசுகி / பாரதி புத்தகாலயம்

9.நக்சலிசம் புரட்சித் தத்துவமா ? ‍ - அனில் பிஸ்வாஸ் / பாரதி புத்தகாலயம்

10.கனவுகளின் விளக்கம் சிக்மண்ட் ஃபிராய்ட் - நாகூர் ரூமி /ஸ்நேகா பதிப்பகம் ( பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும் )

11.வெட்டுப்புலி - தமிழ்மகன் / உயிர்மை

12.தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா / உயிர்மை

13.மணற்கேணி - யுவன் சந்திரசேகர் / உயிர்மை

14.ஊரில் மிக அழகான பெண் மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் - சாருநிவேதிதா / உயிர்மை

15.பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன் / சந்தியா பதிப்பகம்

16.குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திர சேகர் / கிழக்கு பதிப்பகம்


*****************************

Sunday, September 18, 2011

எப்போதுமிருக்கும் ஒருநாள்



பொடி கடை,பாண்டியன் பலசரக்கு, விதை உரம் பூச்சி மருந்து கடை,அமுதலிங்கேஸ்வரர் திருக்கோயில்,கோயில் சாவி எதிரே உள்ள பட்டறையில் இருக்கிறது இரும்பு பலகை,ஆழாக்கரிசி வணிக வளாகம்,சுலைகா மர இழைப்பகம்,அச்சம்மாள் கிளினிக், ஃபிரண்ட்ஸ் புரோட்டா கடை, மிட்டாய் கடை,உப்புமா,கேசரி விற்கப்படும் ஒரு டீக்கடை சன்னல் வழி பார்த்தபடியே வந்த களிப்பில் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பயணித்த பேருந்து களைப்பு ச‌ற்று த‌ணிந்திருந்த‌து.

பல‌முறை த‌ண்ணீர் தெளித்து அய‌ர்ன் செய்த புது ச‌ட்டை முதுகுப்புற‌ம் சாய்ந்து அம‌ர்ந்த‌தில் நிறைய‌ க‌ச‌ங்கியிருந்த‌து.வெயிலின் உக்கிர‌ம் புது பேருந்து நிலைய‌ பாத்திர‌க்க‌டையின் எவ‌ர்சில்வ‌ர் குடக்கண்ணாடியில் முக‌த்தை இன்னும் க‌ருப்பாகக் காட்டிய‌து.பெரிய‌ப்பாவும் மாமாவும் சாத்துக்குடி,ஆப்பிள் வாங்க பழக்கடைகளைத் தேடிக் கொண்டிருந்தார்க‌ள்.அப்பா எதிரே உள்ள‌ மிட்டாய் க‌டையில் ல‌ட்டுக‌ளை அட்டைப்பெட்டியில் "எம்புட்டுண்ணே" பெண்ணிட‌ம் வெகுசீராக‌ அடுக்க‌ உத‌விக் கொண்டிருந்தார்.அம்மாவும் சித்தியும் சர்பத் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஐஎஸ்ஐ முத்திரை இல்லா தண்ணீர் பாக்கெட் வாங்கி முகத்தில் அறைந்து கழுவி, தலை சீவி கைக்குட்டையில் துடைத்து துடைத்து சற்று வெளுப்பாக்கிக் கொள்கிற தலையாய முயற்சியில் மதியம் மணி ஒன்றைத் தாண்டியது. மாப்பிள்ளை என்ற ஒரு காரணத்திற்காக அன்று மட்டும் கொஞ்சம் என்னை மரியாதையோடு பார்ப்பதற்கான ஒப்பந்தத்தை தம்பி ஏற்றுக் கொண்டிருந்தான்.முகம் கழுவ அவன் தான் தண்ணீர் பாக்கெட்டை உள்ளங்கையில் பீய்ச்சினான்.

பல்முனை ஆயத்தங்கள் நிறைவு பெற்று உறவினர் அனைவரும் ஓரிடத்தில் கூடி, பெண் வீட்டை நோக்கி மூங்கில் கைப்பிடி வைத்த பைகளோடு நடக்கத் தொடங்கியிருந்தோம்.லேசாக மழை தூர ஆரம்பித்தது.எப்போதுமில்லா பதற்றமும் குறுகுறுப்பும் பலமுறை சீராக சீவியச் சிகையை மீண்டும் மீண்டும் சீவத் தூண்டியது. மணக்கப்போகும் பெண்ணைப் பார்ப்பதற்கு முன்பே நெய்சோறும் கோழி வறுவலும் பரிமாறப்பட்டு உள்ளூர் அஸ்ரத்து தூவா ஓதி அங்கேயே நிச்சயம் முடிந்து, திருமணத் தேதி குறிக்கப்பட்டது. ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ முதிய‌வ‌ர் என் ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு என்ப‌தை தெரிந்து கொள்வ‌தில் மிகுந்த சிரத்தையோடு இருந்தார்.வாச‌லில் நின்றிருந்த‌ வேப்ப‌ம‌ர‌த்திற்க‌டியில் இர‌ண்டு ஆட்டிக் குட்டிக‌ள் ஓயாம‌ல் க‌ர‌க‌ர‌வென்று கத்திக் கொண்டேயிருந்தன. தெரு வீட்டிலிருந்து சற்றே கண் அகற்றிப் பார்த்தால் வீட்டின் உள்ளறையிலிருந்து நான்கைந்து பெண்கள் சலசலக்கும் புடவை கொலுசு சத்தத்தில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதில் யார் மணப்பெண்ணாக இருக்கும் என்று யூகிக்கலாமா என்று யோசிப்பதற்குள், நொடிகளை எண்ணி மணவாட்டியைக் காண்பித்து அவசர கதியில் மதுரைக்கு என்னை பஸ் ஏற்றி விட்டார்கள்.

மாட்டுத்தாவ‌ணியிலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் க‌ன‌வுக‌ளும் எதிர்பார்ப்புக‌ளும் கூட‌வே ஏறிக் கொண்ட‌ன‌.அட‌ர்ந்த‌ வேப்ப‌ம‌ர‌மொன்றும் ம‌ர‌ச்ச‌ட்ட‌ம் பொருத்த‌ப்ப‌ட்ட‌ திண்ணையும் அதில் தனது இஷ்டம் போல விரிந்திருந்த மணி பிளாண்ட் கொடியின் பச்சை இலைகளும், ம‌ங்க‌லாக‌ ஒரு பெண்ணின் முக‌மும் ம‌ன‌மெங்கும் நிறைந்திருந்த‌ன‌.வாக‌ன‌ இரைச்ச‌லையும் தாண்டி, ஒரு ஆட்டிக் குட்டியின் க‌ரைச்ச‌ல் காதில் இடைவிடாம‌ல் ஒலித்துக் கொண்டேயிருந்த‌து. எட்டாம் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கியதற்கு பரிசாக அப்பா வாங்கி கொடுத்த மீன்குஞ்சுகளை ஆவலோடு தொடும் போது ஏற்பட்ட ஒரு இனம்புரியாத பதற்றமும் சந்தோசமும் முதன் முதலாக அவளைப் பார்த்தபோது ஏற்பட்டது.ஒரு சேரில் அமர்த்தி அவள் வாயில் சீனி போடச் சொன்னார்கள்.மீண்டும் அவளை எனக்கு சீனி போடுமாறு சொல்லி என்னை அமரச் செய்தார்கள்.உறவினர்கள் பகடியும் புன்னகையுமாக‌ மாறி மாறி ஒரு கனவு போல அந்த காட்சி நகர்ந்து கொண்டிருந்தது.பேருந்து திண்டுக்கல் தாண்டியும் தூக்கமே வரவில்லை.

ஆண்பிள்ளை என்பதால் தாத்தா பாட்டி முதற்கொண்டு குஞ்சு குளுவான்கள் வரை புது டிரெஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும்.நல்ல சூட் தைக்க வேண்டும்.காலனி கொஞ்சம் குதிகால் உயரமாக பார்க்கவேண்டும். இதில் அசட்டையாக இருந்தால் அவள் என்னைவிட ஒரு இஞ்ச் அதிகமாகத் தெரியக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன.இரண்டு அக்காளுக்கும் காஞ்சிபுரத்தில் உயர்ந்த விலையில் பட்டு புடவை வாங்கித் தர‌ வேண்டும். மணப்பெண் மஹருக்கு நகை வாங்க வேண்டும்.எத்தனை பவுன் என்பதை தீர்மானிக்க வேண்டும். எல்லா செலவுகளையும் சமாளிக்க வங்கியில் லோன் எடுக்க வேண்டும். வட்டியாக‌ மாதச் சம்பளத்தில் இருந்து எவ்வளவு பிடிப்பான் என்ற‌ கவலை, வெள்ளை சட்டையில் காக்காய் எச்சம் போல பொத்தென்று தெறித்து அநாவசியமாக தொற்றிக் கொண்டது.சட்டென உதறிவிட்டு, மீண்டும் திருமணக் கனவு என்னை உள்ளிழுத்து தாழ்பாளிட்டது.

பார்த்தவுடன் கவர்ந்துவிடும் வசீகர முகம் கொண்டவனில்லை என்பதால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்குமா? எந்த அளவுகோல் கொண்டு என்னை மதிப்பீடு செய்திருப்பாள், அவளின் உறவினர்கள் எப்படியான விமரிசனத்தை அவளிடம் வைப்பார்கள், திருமணத் தேதி வரையில் இடையில் இருக்கும் சொற்ப நாட்களில் பேச வாய்ப்பு கிடைக்குமா,யாரிடம் சொல்லி அலைபேசி எண் வாங்குவது,என்னென்ன பேசுவது,பழைய கதைகளையெல்லாம் சொல்லித் தொலைப்பதா இல்லை மறைப்பதா,என்னைப் போலவே புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்குமா, சாலையில் சிதறியிருக்கும் சிறுபூக்களை பொறுக்குபவளாயிருப்பாளா ? கவிதைகள் பிடிக்குமா, மழையை ரசிப்பவளாயிருப்பாளா,ஏதேனும் ஒரு சிறுகதையையாவது வாசித்திருக்கக்கூடுமா. பேருந்து தாம்பரம் தாண்டியிருந்தது.

அவள் வீட்டு நிலைக்கண்ணாடியும் தூண்களும் நூறு வருட பழைய கடிகாரமும் எப்போதும் என்னைச் சுற்றியிருந்தன.நகரம் அழகாகத் தெரிந்தது.அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மின்சார ரயிலில் எல்லோரும் அழகாகத் தெரிந்தார்கள்.குறுந்தகவலில் கவிதைகளோடு நிறைய பரிமாறத் தொடங்கியிருந்த நாட்கள்.காணாமல் போன குருவியொன்று என் வீட்டு தென்னை மரத்தில் மீண்டும் கூடுகட்ட ஆரம்பித்திருந்தது.'இன்னும் எத்தன நாள் இருக்கு..சொல்லு பாப்போம்'. திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தாள்.பதிலையும் அவளாகவே சொல்வதைத் தான் விரும்புவாள்.அதில் இருந்த‌ குழந்தைமையும் சந்தோசமும் இன்று வரை மாறாதவை. வண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவுக்கு அடிக்கடி வருகிறது.சமீப நாட்களில், நான் வீட்டுக்கு வெளியே இத்தனை உயரம் பறந்ததில்லை.


------

வைர மோதிரமோ,சலவைக்கல் மாளிகையோ,இறக்குமதி செய்யப்பட்ட காரோ வாங்கித் தர இயலாதவனாய் இருந்தும் என்னை சகித்துக் கொண்டும் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொண்டும், உலகின் பரிவு அனைத்தையும் எனக்காக தன் கண்களில் எப்போதும் சேமித்து வைத்திருக்கும் என் அன்பு மனைவிக்கு.

*****************