
நன்னாவைச் சுற்றி அமர்ந்திருந்த நண்டு,ச்சுண்டுகளின் ஈரக்குலையெல்லாம் நடுங்க ஆரம்பித்தன.
டெக்சஸிலிருந்து, கமுதி சுந்தரபுரத்திலிருக்கும் நன்னி வீட்டிற்கு வருடாவருடம் பள்ளி விடுமுறைக்கு தவறாமல் இடப்பெயர்ச்சி செய்யும் இவ்வாண்டுகளுக்கு நன்னாவிடம் கதை கேட்கா விட்டால் விடுமுறைப் பயன் நிறைவேறாது.பகலில் நரிக்கதை.மதியம் நாகூர் ஆண்டகையின் கராமத்துகள் பற்றிய கதை.இரவில் முஹியத்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் குத்றத்துகளும் பாம்புகளுமாக சில மயிர்கூச்செறியச் செய்யும் கதைகள்.வேளா வேளைக்கு நேரத்திற்கு தக்கன கதைகள்.நன்னாவும் அசராமல் பன்னீர் புகையிலையை மென்று கொண்டே எச்சில் தெறிக்க கதை சொல்வார்.கால் கழுவ கக்கூஸூக்கு போவாம, கால வெள்ளனயே இந்த பக்கியளுக்கு கத சொல்ல ஆரம்பிச்சிட்டீயலா? என்று நன்னி தான் செல்லமாக கடிந்து வைப்பாள்.பிறகு நாஸ்டாவுக்கு இட்லி அவிக்க போய் விடுவாள்.
இன்றிரவு மின்சாரத் தடை என்பதால் 'ரவைக்குச் சாப்பாட்டுக்குப் பொறவு' ஜின்கள் கதை சொல்லப் போவதாக நன்னா அறிவித்தார். ஜின்கள் என்றாலே பிஞ்சுகளுக்கு முகம் வெளிறி தானாக கண்களில் மிரட்சி வந்து அப்பிக் கொள்ளும். சற்றுமுன்னர் கரைந்து உருகி விழுங்கப்பட்ட குல்பி மலாய் மீண்டும் உறைந்து அடிவயிற்றில் ஒலி எழுப்பும்.
நம்ம சுந்தரபுரம் பள்ளிவாசல்ல மீன்முழுங்கி இபுராஹிம்.. மீன்முழுங்கி இபுராஹிம்னு ஒரு 'அசர்த்து' இருந்தாராம். மீன்முழுங்கினு அவுகளுக்கு ஏன் பேரு வந்திச்சிண்டு நாளைக்கு சொல்றேன்.ஒங்களமாரி சின்ன புள்ளைஹளுக்கு நெதம் நம்ம ஊருணிக்கு பக்கத்துல இருக்க மதரஸாவுல கொர்வான்(குர்ஆன்) ஓதிக் கொடுப்பாராம்.
"ஊருணிண்டா நேத்து ஈவ்னிங் போயி குளிச்சமே அந்த டேர்ட்டி லேக்கா நன்னா?"
முதல் கேள்விக்கணை அதிகாரப்பூர்வமாக நன்னாவை நோக்கி வீசி எறியப்பட்டது. இப்படி பல அம்புகள் அவ்வப்பொழுது கதைக்கு நடுவே நன்னாவை நோக்கி ஏவப்படும். ஆமாண்டி எம்மவ பவுசியா பெத்த மவளே!! பேத்தியை அள்ளி மடியில் வைத்துக் கொண்டார். எஞ்சியிருந்த மீதங்கள் தம் குட்டி உள்ளங்கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு ஆவல் பொங்க மீதக்கதையை எதிர் நோக்கி காத்திருந்தன.
அப்ப ஆலிம் பட்டத்துக்காக நாலைஞ்சி பெரிய புள்ளைஹளும் அவருகிட்ட ஓதிச்சிங்களாம். ஒரு நா வெள்ளிக்கெழம ரவ்வு, பேய் மழ பேஞ்சி ஊரெல்லாம் வெள்ளக்காடாயி, இங்க மாதிரி அங்கனயும் கரெண்ட்டு கட்டாயிருச்சாம். சத்தம் போட்டு ஓதிக்கிட்டிருந்த புள்ளைஹ அம்புட்டும் இருட்டுல கொர்வான் தாள பாக்க முடியாம ஓதுறத நிறுத்திச்சுங்களாம்.
லைட்டெல்லாம் அமந்தவொடன ஒருத்தரு மொவத்த ஒருத்தர் பாக்க முடியாம பள்ளியாச முழுசும் ஒரே இருட்டுக்கசம். கடைசி பெஞ்சில யஸ்ஸர்னல் கொர்வான் ஓதிக்கிருந்த நெட்டப்பயல பாத்து அசர்த்து "அடேய் ரஹ்மான்..உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுத்துக்கிட்டு வாறையா? ன்னு கேட்டாராம்.
"இருட்டுக்கீண்டு கடக்குல்ல...யாருக்கும் தெரியவாப்போவுதுண்டு உக்காந்த மேனியே உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுக்க ரஹ்மான் பெரிய கைய நீட்டினாப்ளயாம். மூணு நாலு அடிக்கு கை நீண்டு துளாவி வெளக்க எடுத்துக்குடுக்கவும் அசர்த்துக்கு பக்குனு ஆயிருச்சாம். அவரு கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சுருக்கு பாருங்க..!! அட அல்லாவு நாயனே ! நாம இத்தன நாளு ஜின்னுக்கா ஓதிக்குடுத்துட்டு இருந்தோம்னு அசந்து வேர்த்து விறுவிறுத்து போச்சாம்.

நன்னா எச்சிப்பணிக்கையில் புளிச் என்று துப்பிக் கொண்டார்.கோடியில் அமர்ந்திருந்த பேரன்மாரு ரெண்டு பேரும் ஓடிவந்து நன்னாவின் அருகில் அமர்ந்து கொண்டனர். மற்ற பிள்ளைகள் அருகிலிருந்த இடைவெளிகளை நிரப்பி நெருங்கி அமர்ந்தனர். கேட்டா கொசு கடிக்குதாம். குளிருதாம்.அப்புறம் என்ன ஆச்சாம் நன்னா..?
அதுக்கு பொறவு ஒருநா மதியம் பள்ளிவாசல் கொள்ளப்புறம் இருக்க கிணத்தடில குளிச்சிக்கிட்ருக்கும் போது உக்காந்த மேனிக்க கைய நீட்டி சோப்ப எடுத்திச்சாம் அந்த ஜின்னு.இதையும் அசர்த்து பாத்தாராம். இதுக்கு மேல தாங்காதுனு மக்யா நாளு கூப்பிட்டு பேசிட்டாராம்.
"யப்பா ரஹ்மான். நீ ஜின்னுன்ற விசயம் எனக்கு தெரிஞ்சி போச்சி.நானா இருக்கக்கண்டு பயப்படல.இதுவே மதரஸாவுல உள்ள மத்த சின்ன புள்ளைஹ பாத்துச்சிண்டா பயந்து ஜூரம் வந்துரும். நீ இன்னிக்கே அஞ்சு மணி பஸ்ஸ பிடிச்சி உங்க ஊரப்பக்கம் பாத்து கிளம்பிரு ராசா"
போ மாட்டேன்னு அழுது அடம்பிடிச்சி அசர்த்துக்கிட்ட கெஞ்சி கேட்டுச்சாம் அந்த ஜின்னு. அசர்த்து கறாரா பேசிட்டாராம். பொறவு வேற வழியில்லாம பொட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புள்ளையள பாத்து அலுதுகிட்டே மதரஸாவிட்டு போச்சுதாம் .
ஜின்னு நல்லதா கெட்டதா நன்னா ?
அது நம்ம மாரி மனுசரு கைலதேம் இருக்கு !! ஒழுங்கா சுத்தபத்தமா இருந்தம்னா ஜின் நம்மள அண்டாது. நடுநிசிக்கு மேல குளிப்பு இல்லாம பள்ளியில தூங்கிட்டிருந்த புள்ளைஹள குளத்துல தூக்கி வீசுன ஜின்களும் இருந்துச்சி.வெளக்கு வெக்கிற நேரம் தனியா வர்ற வயசு புள்ளையகிட்ட சில்மிசம் பண்ண ஜின்களும் இருக்கத்தான் செஞ்சிச்சி.
இது போவ ஜின்கள வசியப்படுத்தவும் செய்யலாம்.நல்லா ஓதிப்படிச்ச அசர்த்து மாருங்க ஒன்னா உக்காந்து ரவ்வு பூரா கொர்வான் ஓதினா மசிஞ்சிரும்.ஆனா நடுப்பற வந்து பேய் மாதிரி பயமுறுத்தும்.எம்புட்டு பயமுறுத்துனாலும் அசையாம ஓதிக்கிட்டே இருக்கணும். லேசா அசஞ்சோம்..போச்சி..அம்புட்டு தான் ச்சோலி. பயந்துட்டம்னா ஒரே அடியா அடிச்சிரும்.அதோட மய்யத்து தே.
"வசியப்படுத்திட்டா என்ன ஆவும் நன்னா"?"
வசியப்படுத்திட்டா நீ சொல்றதெல்லாம் செய்யும்.கேக்குறதெல்லாம் எடுத்துட்டு வந்து தரும்.
"குல்பி ஐஸ்? "
குல்பி பானையே எடுத்துட்டு வந்து தரும்.
"ஹைய்!"
சரி சரி! காத்துல குத்துவிளக்கு அமரப்போவுது. அடேய் நைனார் மவனே..உள்ள போய் அந்த சிம்னி விளக்க எடுத்துட்டு வர்றியா ? "
மற்ற வாண்டுகள் அப்பொடியனின் கைகளையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தன.
*********************
மனிதர்களைப் போலவே ஜின்களுக்கும் ஒரு தனி அமானுஷ்ய உலகமிருக்கிறது என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.குர் ஆனில் 35 இடங்களில் ஜின்களைப் பற்றிய வசனங்கள் இருக்கின்றன.மனித இனத்தை படைப்பதற்கு முன்னரே ஜின்கள் படைக்கப்பட்டதாக தகவல்கள் கூறினாலும், ஆதம் நபிக்கு முன்னர் ஜின்கள் இருந்ததாக குறிப்புகள் தெளிவாக இல்லை. இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்து கொண்டும் தானிருக்கின்றன.
வழக்குச் சொற்கள்:
கராமத், குத்றத்து---பராக்கிரமங்கள்;
அசர்த்து---இஸ்லாமிய கல்வி கற்ற மார்க்க அறிஞர் ( ஹழ்ரத்);
நன்னா,நன்னி--தாத்தா பாட்டி;
மதரஸா--இஸ்லாமிய பாடசாலை;
மய்யத்து--பிணம்.
****
நன்றி:
உயிரோசை
இணைய இதழ் (08 டிசம்பர் 2009) ------------------------------------