முடிவுகளை நோக்கி பயணிக்காத கதைகள் தரும் சுதந்திரம் அளப்பரியது.ஒழுங்கின்மையும் சீரமைக்காத வார்த்தைகளும் வரையறைகளுக்கு இம்மியளவு கூட கட்டுப்படாத வடிவ நெருடல்களும் கதையின் சுவாரசியத்தை அதிகரிக்க வல்லவை.அதை ஏன் கதை என்று சொல்ல வேண்டும்.எழுதப்போவது கதை என்றாலே அங்கு ஒரு கட்டுப்பாடு வந்து விடுகிறது.நாவல் என்று வைத்து கொள்வோமோ ? குறுநாவல்,ஒரு பக்க கதை,தொடர்கதை எதுவும் வேண்டாம்.வரையறைகளே வேண்டாம்.வரையறை என்ற சொல்லாடல் வரும் போது தான் அங்கு மேற்சொன்ன கட்டுப்பாடுகளும் விதிகளும் இலவச இணைப்புகளாக வந்து விடுகின்றனவே.இந்த தடைகளற்ற சுதந்திரத்தை அனுபவித்தலுக்கு "டேனியல் விதி" என்று பெயரிடுவோமோ.ஒரு விதிக்கு ஆங்கில நாட்டவரின் பெயர் வைத்தால் தான் அதற்கு மதிப்பும் மரியாதையும் தருகிறோம்.தானாகவே அந்த விதிக்கு ஒரு வசீகரம் கூடிவிடுகிறது.)பொன்னுசாமி விதி,குப்புசாமி விதி என்று சொல்லிப்பாருங்கள்.சகிக்கவில்லை தானே ?
இதே கோட்பாடு "டேனியல் விதி" எனக்கும் ஒரு பெண்ணுக்குமான உறவில் ஏற்பட்ட நிலையைத் தான் சொல்ல நினைக்கிறேன்.முழுமையாக அவளை என் பக்கம் இழுப்பதே இப்பகுதியின் நோக்கம் என்ற குற்றச்சாட்டை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.எந்த வடிவத்தில் என்னைக் கொடுக்கிறேனோ அதே வடிவத்தில் கூடுமானவரை அவளுக்கு நேர்மையாளனாக இருப்பேன்.
எனது சுயம், கனவு, தோல்விகள் ஏற்படுத்திய ரணங்கள்,போலியான சமூக கட்டமைப்புகளின் மீதிருந்த அதிருப்தி என என்னைச் சூழ்ந்திருந்த எல்லா அபத்தங்களுக்கும் அவளிடம் ஒரு பதில் இருந்தது.இந்த விஷயத்தில் மட்டும் சிக்மண்ட் ஃபிராய்ட் அநியாயத்திற்கு விழித்துக் கொள்கிறார்.நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நொடிக்கொரு தரம் எனக்கு நினைவு படுத்திக் கொண்டே இருக்கிறார்.நூற்றி இருபது நிமிடங்களில் நாற்பத்தைந்து முறை,அவள் ஏதோ ஒரு மயக்கப்புள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடித் தோற்றதை கொண்டாடச் சொல்கிறார்.அதே நூற்றி இருபது நிமிடங்களில்,எத்தனை முறை அவளை வன்முத்தமிட எத்தனித்தேன் என்கிற ரகசியத்தை இந்நேரம் அவளிடம் போட்டுக் கொடுத்திருப்பார்.இருக்கட்டும் இருக்கட்டும்.பிறகு கவனிக்கிறேன் அவரை.
இப்பகுதியை எழுத ஆரம்பித்த போது வித்தியாசமான சில குறிப்புகளைக் கொண்டு அவளைச் சொல்வதென தீர்மானித்தேன்.ஒரு கோர்வையாக எழுத வராமல் குறிப்புகள் அனைத்தும் பிறழ்ந்து அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக் கிடக்கிறது.அவற்றிற்கு நம்பர்கள் கொடுத்து ஒரு வரையறைக்குள்......மன்னிக்கவும்..ஏதோ ஒரு முறையில் தந்திருக்கிறேன்.பாருங்கள்.
--------
உறவுகளை வரையறுத்தல் அபத்தமானது என்ற கொள்கை ஆழ்மனதின் வக்கிரங்களை சமன் செய்யும் நவீன சித்தாந்தமாக இருவரும் ஏற்றுக் கொண்டோம்.
காதல்,அன்பு போன்ற டெட்டால் போட்ட வார்த்தைகள் வழக்கொழிந்த சொற்களாகி விட்ட நிலையில்,உடல் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் அவளோடு பழக முடியும் என்று என்னால் அறுதியிட்டுச் சொல்ல முடியாது.
எத்தனை முறை முயன்றும் அவளுக்கான இந்த முதல் பத்தியை சிறப்பாக எழுதிவிட முடியவில்லை.எந்த வரிகளாலும் அவளை நிரப்பி விட முடியாதோ என்ற அச்சம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.எவ்வித கொள்கலனிலும் அடைக்க முடியாத விசேஷ நீர்மம் அவள்.
உடல் தின்று உயிர் வாழும் வல்லூறுகளின் நகங்கள் என் விரல்களில் முளைக்க ஆரம்பித்த நாட்களில் தான் அவள் என்னைச் சந்திக்க விரும்புவதாகச் சொன்ன நினைவிருக்கிறது.வரையறை இல்லாத உறவுமுறை இருவருக்குமே பிடித்திருந்தது.
தீவிர அவதானிப்புடன் எழுதப்பட்ட புனைகதைக்குள் வெற்றுடம்புடன் செவ்வரளிப்பூக்களை மட்டும் சூடி உலாவரும் யட்சியின் புற அழகை வென்றிருந்தாள்.
கடற்காகங்களும் வல்லூறுகளும் நண்டுகளும் மீன்களும் அன்றைய தினத்தின் புனித அறிக்கைகளை செவ்வானத்திடம் சமர்ப்பித்துக் கொண்டிருந்த ரட்சிக்கப்பட்ட ஒரு அந்தி வேளையில்,இரவுப்பணிக்காக பெளர்ணமி நிலவு முழு வீச்சில் ஆயத்தமாகிக் கொண்டிருந்தது.
அன்று Sigmund Freud கொஞ்சம் அதிகமாகவே விழித்திருந்தார்.நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பதை நொடிக்கொரு தரம் எனக்கு நினைவுபடுத்திக் கொண்டே இருந்தார்.நூற்றி இருபது நிமிடங்களில் நாற்பத்தைந்து முறை,அவள் ஒரு மயக்கப்புள்ளியிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ள போராடித் தோற்றுக் கொண்டிருந்தாள்.
இடைவெளிகளை நிரப்புவதில் அவளுக்கும் உடன்பாடு இருந்திருக்கக்கூடும்.
பெளர்ணமி நாளின் நிலவின் குளிர்ச்சியும்,அவள் அருகாமை ஏற்படுத்திய உஷ்ணமும் ஒரு சேர அனுபவிக்கும் தருணங்கள் எத்தனை கொடுமையானது என்று அலைகளைச் சபித்துக் கொண்டிருக்கும் வேளையில் தான் என்மீது கடற்கரை மணலைத் தூவி விளையாடி கொண்டிருந்தாள்.
என்கிரிப்டட் கவிதைகளை டிசைஃபர் செய்யும் உத்திகளை பழகிக் கொண்டிருக்கிறேன்.காலப்போக்கில் நிறைய புலப்பட்டு விடும்.
அவள் சுயமைதுனச் சித்திரங்களின் ஒரு கிளையாக எனது விரல்களும் நீட்சியடைந்திருக்கக்கூடும்.
எம்மை சோதனைகளில் விழவிடாதேயும்.தீமையிலிருந்து ரட்சித்தருளும்.
நெருக்கமான ஒரு சொல் கூட உதிர்க்கவில்லை.ஆனால் அதை என்னை உணர வைக்க அவள் எடுத்துக்கொண்ட சிரத்தை ரகசியங்களால் கட்டமைக்கப்பட்டது மட்டுமின்றி அது ஒரு சிக்கலான மதிப்பீடு.
*********