Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts

Sunday, September 18, 2011

எப்போதுமிருக்கும் ஒருநாள்



பொடி கடை,பாண்டியன் பலசரக்கு, விதை உரம் பூச்சி மருந்து கடை,அமுதலிங்கேஸ்வரர் திருக்கோயில்,கோயில் சாவி எதிரே உள்ள பட்டறையில் இருக்கிறது இரும்பு பலகை,ஆழாக்கரிசி வணிக வளாகம்,சுலைகா மர இழைப்பகம்,அச்சம்மாள் கிளினிக், ஃபிரண்ட்ஸ் புரோட்டா கடை, மிட்டாய் கடை,உப்புமா,கேசரி விற்கப்படும் ஒரு டீக்கடை சன்னல் வழி பார்த்தபடியே வந்த களிப்பில் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பயணித்த பேருந்து களைப்பு ச‌ற்று த‌ணிந்திருந்த‌து.

பல‌முறை த‌ண்ணீர் தெளித்து அய‌ர்ன் செய்த புது ச‌ட்டை முதுகுப்புற‌ம் சாய்ந்து அம‌ர்ந்த‌தில் நிறைய‌ க‌ச‌ங்கியிருந்த‌து.வெயிலின் உக்கிர‌ம் புது பேருந்து நிலைய‌ பாத்திர‌க்க‌டையின் எவ‌ர்சில்வ‌ர் குடக்கண்ணாடியில் முக‌த்தை இன்னும் க‌ருப்பாகக் காட்டிய‌து.பெரிய‌ப்பாவும் மாமாவும் சாத்துக்குடி,ஆப்பிள் வாங்க பழக்கடைகளைத் தேடிக் கொண்டிருந்தார்க‌ள்.அப்பா எதிரே உள்ள‌ மிட்டாய் க‌டையில் ல‌ட்டுக‌ளை அட்டைப்பெட்டியில் "எம்புட்டுண்ணே" பெண்ணிட‌ம் வெகுசீராக‌ அடுக்க‌ உத‌விக் கொண்டிருந்தார்.அம்மாவும் சித்தியும் சர்பத் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஐஎஸ்ஐ முத்திரை இல்லா தண்ணீர் பாக்கெட் வாங்கி முகத்தில் அறைந்து கழுவி, தலை சீவி கைக்குட்டையில் துடைத்து துடைத்து சற்று வெளுப்பாக்கிக் கொள்கிற தலையாய முயற்சியில் மதியம் மணி ஒன்றைத் தாண்டியது. மாப்பிள்ளை என்ற ஒரு காரணத்திற்காக அன்று மட்டும் கொஞ்சம் என்னை மரியாதையோடு பார்ப்பதற்கான ஒப்பந்தத்தை தம்பி ஏற்றுக் கொண்டிருந்தான்.முகம் கழுவ அவன் தான் தண்ணீர் பாக்கெட்டை உள்ளங்கையில் பீய்ச்சினான்.

பல்முனை ஆயத்தங்கள் நிறைவு பெற்று உறவினர் அனைவரும் ஓரிடத்தில் கூடி, பெண் வீட்டை நோக்கி மூங்கில் கைப்பிடி வைத்த பைகளோடு நடக்கத் தொடங்கியிருந்தோம்.லேசாக மழை தூர ஆரம்பித்தது.எப்போதுமில்லா பதற்றமும் குறுகுறுப்பும் பலமுறை சீராக சீவியச் சிகையை மீண்டும் மீண்டும் சீவத் தூண்டியது. மணக்கப்போகும் பெண்ணைப் பார்ப்பதற்கு முன்பே நெய்சோறும் கோழி வறுவலும் பரிமாறப்பட்டு உள்ளூர் அஸ்ரத்து தூவா ஓதி அங்கேயே நிச்சயம் முடிந்து, திருமணத் தேதி குறிக்கப்பட்டது. ப‌க்க‌த்தில் அம‌ர்ந்திருந்த‌ முதிய‌வ‌ர் என் ச‌ம்ப‌ள‌ம் எவ்வ‌ள‌வு என்ப‌தை தெரிந்து கொள்வ‌தில் மிகுந்த சிரத்தையோடு இருந்தார்.வாச‌லில் நின்றிருந்த‌ வேப்ப‌ம‌ர‌த்திற்க‌டியில் இர‌ண்டு ஆட்டிக் குட்டிக‌ள் ஓயாம‌ல் க‌ர‌க‌ர‌வென்று கத்திக் கொண்டேயிருந்தன. தெரு வீட்டிலிருந்து சற்றே கண் அகற்றிப் பார்த்தால் வீட்டின் உள்ளறையிலிருந்து நான்கைந்து பெண்கள் சலசலக்கும் புடவை கொலுசு சத்தத்தில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதில் யார் மணப்பெண்ணாக இருக்கும் என்று யூகிக்கலாமா என்று யோசிப்பதற்குள், நொடிகளை எண்ணி மணவாட்டியைக் காண்பித்து அவசர கதியில் மதுரைக்கு என்னை பஸ் ஏற்றி விட்டார்கள்.

மாட்டுத்தாவ‌ணியிலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் க‌ன‌வுக‌ளும் எதிர்பார்ப்புக‌ளும் கூட‌வே ஏறிக் கொண்ட‌ன‌.அட‌ர்ந்த‌ வேப்ப‌ம‌ர‌மொன்றும் ம‌ர‌ச்ச‌ட்ட‌ம் பொருத்த‌ப்ப‌ட்ட‌ திண்ணையும் அதில் தனது இஷ்டம் போல விரிந்திருந்த மணி பிளாண்ட் கொடியின் பச்சை இலைகளும், ம‌ங்க‌லாக‌ ஒரு பெண்ணின் முக‌மும் ம‌ன‌மெங்கும் நிறைந்திருந்த‌ன‌.வாக‌ன‌ இரைச்ச‌லையும் தாண்டி, ஒரு ஆட்டிக் குட்டியின் க‌ரைச்ச‌ல் காதில் இடைவிடாம‌ல் ஒலித்துக் கொண்டேயிருந்த‌து. எட்டாம் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கியதற்கு பரிசாக அப்பா வாங்கி கொடுத்த மீன்குஞ்சுகளை ஆவலோடு தொடும் போது ஏற்பட்ட ஒரு இனம்புரியாத பதற்றமும் சந்தோசமும் முதன் முதலாக அவளைப் பார்த்தபோது ஏற்பட்டது.ஒரு சேரில் அமர்த்தி அவள் வாயில் சீனி போடச் சொன்னார்கள்.மீண்டும் அவளை எனக்கு சீனி போடுமாறு சொல்லி என்னை அமரச் செய்தார்கள்.உறவினர்கள் பகடியும் புன்னகையுமாக‌ மாறி மாறி ஒரு கனவு போல அந்த காட்சி நகர்ந்து கொண்டிருந்தது.பேருந்து திண்டுக்கல் தாண்டியும் தூக்கமே வரவில்லை.

ஆண்பிள்ளை என்பதால் தாத்தா பாட்டி முதற்கொண்டு குஞ்சு குளுவான்கள் வரை புது டிரெஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும்.நல்ல சூட் தைக்க வேண்டும்.காலனி கொஞ்சம் குதிகால் உயரமாக பார்க்கவேண்டும். இதில் அசட்டையாக இருந்தால் அவள் என்னைவிட ஒரு இஞ்ச் அதிகமாகத் தெரியக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன.இரண்டு அக்காளுக்கும் காஞ்சிபுரத்தில் உயர்ந்த விலையில் பட்டு புடவை வாங்கித் தர‌ வேண்டும். மணப்பெண் மஹருக்கு நகை வாங்க வேண்டும்.எத்தனை பவுன் என்பதை தீர்மானிக்க வேண்டும். எல்லா செலவுகளையும் சமாளிக்க வங்கியில் லோன் எடுக்க வேண்டும். வட்டியாக‌ மாதச் சம்பளத்தில் இருந்து எவ்வளவு பிடிப்பான் என்ற‌ கவலை, வெள்ளை சட்டையில் காக்காய் எச்சம் போல பொத்தென்று தெறித்து அநாவசியமாக தொற்றிக் கொண்டது.சட்டென உதறிவிட்டு, மீண்டும் திருமணக் கனவு என்னை உள்ளிழுத்து தாழ்பாளிட்டது.

பார்த்தவுடன் கவர்ந்துவிடும் வசீகர முகம் கொண்டவனில்லை என்பதால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்குமா? எந்த அளவுகோல் கொண்டு என்னை மதிப்பீடு செய்திருப்பாள், அவளின் உறவினர்கள் எப்படியான விமரிசனத்தை அவளிடம் வைப்பார்கள், திருமணத் தேதி வரையில் இடையில் இருக்கும் சொற்ப நாட்களில் பேச வாய்ப்பு கிடைக்குமா,யாரிடம் சொல்லி அலைபேசி எண் வாங்குவது,என்னென்ன பேசுவது,பழைய கதைகளையெல்லாம் சொல்லித் தொலைப்பதா இல்லை மறைப்பதா,என்னைப் போலவே புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்குமா, சாலையில் சிதறியிருக்கும் சிறுபூக்களை பொறுக்குபவளாயிருப்பாளா ? கவிதைகள் பிடிக்குமா, மழையை ரசிப்பவளாயிருப்பாளா,ஏதேனும் ஒரு சிறுகதையையாவது வாசித்திருக்கக்கூடுமா. பேருந்து தாம்பரம் தாண்டியிருந்தது.

அவள் வீட்டு நிலைக்கண்ணாடியும் தூண்களும் நூறு வருட பழைய கடிகாரமும் எப்போதும் என்னைச் சுற்றியிருந்தன.நகரம் அழகாகத் தெரிந்தது.அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மின்சார ரயிலில் எல்லோரும் அழகாகத் தெரிந்தார்கள்.குறுந்தகவலில் கவிதைகளோடு நிறைய பரிமாறத் தொடங்கியிருந்த நாட்கள்.காணாமல் போன குருவியொன்று என் வீட்டு தென்னை மரத்தில் மீண்டும் கூடுகட்ட ஆரம்பித்திருந்தது.'இன்னும் எத்தன நாள் இருக்கு..சொல்லு பாப்போம்'. திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தாள்.பதிலையும் அவளாகவே சொல்வதைத் தான் விரும்புவாள்.அதில் இருந்த‌ குழந்தைமையும் சந்தோசமும் இன்று வரை மாறாதவை. வண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவுக்கு அடிக்கடி வருகிறது.சமீப நாட்களில், நான் வீட்டுக்கு வெளியே இத்தனை உயரம் பறந்ததில்லை.


------

வைர மோதிரமோ,சலவைக்கல் மாளிகையோ,இறக்குமதி செய்யப்பட்ட காரோ வாங்கித் தர இயலாதவனாய் இருந்தும் என்னை சகித்துக் கொண்டும் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொண்டும், உலகின் பரிவு அனைத்தையும் எனக்காக தன் கண்களில் எப்போதும் சேமித்து வைத்திருக்கும் என் அன்பு மனைவிக்கு.

*****************

Sunday, February 14, 2010

நெப்பந்தஸ் ( சிறுகதை பாகம்-2 )


முத‌ல் பாக‌ம் ப‌டிக்க..!

---------------------------------

தீட்டுக்காயங்கள் பழுத்து,ஆறி காய்ந்து தழும்புகள் மறைந்து சமநிலைக்கு வந்தது கல்லூரியில் சகுந்தலாவின் அறிமுகத்திற்கு பிறகு தான்.பால்க‌வுச்சியும் நெய் வாடையும் கும‌ட்ட வைத்த‌ பா.ரா தெருவின் ஒரே ம‌ரிக்கொழுந்து ம‌ண‌ம் சகுந்தலாவினுடைய‌து.பெரிய‌ பெரிய‌ க‌ண்க‌ளுடைய‌ ச‌குந்த‌லாவின் மேனியெங்கும்,ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ம‌ண‌ம் வீசும்.துள‌சி,ம‌ல்லிகை,பெருங்காய‌ சாம்பார்,மூல்தானி மெட்டி,சிகைக்காய்,மோர்க்குழ‌ம்பு என ஒவ்வொரு கிழமையும் திங்களும் நாழிகையும் ஒவ்வொரு மணம்.அப்போதைய தட்ப வெப்ப சூழ்நிலையில் ஒரு சுத்த ஐய‌ங்கார் வீட்டுப் பெண்,பேயன் தெரு மக்களோடு புத்தகங்கள் பகிர்ந்து கொள்வதும்,தொட்டு அடித்து பேசுவதும் டிப‌ன் பாக்ஸை திற‌ந்து பார்ப்ப‌தும்,ஐம்ப‌து ரூபாய் ப‌ந்த‌ய‌ம் க‌ட்டி க‌ருவாட்டுத் துண்டைக் காக்காய் க‌டி க‌டித்த‌தும்,ம‌னித வாசனை இல்லாத தேச‌த்திலிருந்து ப‌ற‌ந்து வ‌ந்த‌ சிட்டுக்குருவியைப் போல,அவள் பெரிய கண்களை அக‌ல‌ விரித்து,கொஞ்ச‌ம் கொஞ்ச‌மாக‌ என் கூட்டுக்குள் அடைகாக்க‌ தொட‌ங்கினாள்.

சக ந‌ண்ப‌ர்க‌ளைப் போலத் தான் என்னிடமும் பழகுகிறாள் என்று வெற்றுச்ச‌மாதான‌ம் செய்து செய்து கொள்வது பெருஞ்சிரமமாக இருந்தது.ச‌மாதான‌ம் செய்து கொள்ள‌வும் விருப்ப‌மிருக்க‌வில்லை.த‌ண்ணி சீசாவை வாய் வைத்து குடித்த‌த‌ற்கு கூட ஒன்றுமே சொல்ல‌வில்லை.இதுவே ம‌ற்ற‌வ‌ர்க‌ள் செய்திருந்தால் ச்சீ எச்சி என்று உத‌டு கோணியிருப்பாள்.பிசிஓ ப‌ரிம‌ள‌த்திட‌ம் பேசும் போது கூட‌,ஒருமுறை என்னைப் பார்த்து முறைத்தாள்.நான் எரிப்ப‌து போல் பார்த்தாள் என்று க‌விதை எழுதினேன்.என‌க்கு பிடித்தவாறு தான் உடைய‌ணிகிறாள்.சுதா ர‌குநாத‌னின் அலைபாயுதே குர‌ல் பிடித்திருக்கிறது என‌ கார‌ண‌மில்லாம‌லா என்னிட‌ம் ம‌ட்டும் சொல்லுவாள்.ஸ்நான‌ம் ப‌ண்ணின்ட்ருக்க‌ச்ச‌ அடிவ‌யித்துல‌ அப்ப‌டி ஒரு வ‌லிடா.அதான் மூணுநாளா காலேஜூக்கு வ‌ல்ல என்று பெண்மையின் ர‌க‌சிய முடிச்சுக‌ளை த‌னிமையில் அவிழ்க்கிறாள்.அவளின் உடல்மொழியின் அளபெடையில் நான் எத்தனை மாத்திரை என்பதை கணக்கிடுவதிலும்,நடந்தவற்றை அசை போட்டு மென்று,தற்குறிப்பேற்ற அணிகளை இயற்றுவதிலும் மயிர்க்கால்கள் குத்திட்டு நிற்பதை உணர முடிந்தது.

வழக்கமான காதலின் சராசரி மூடநம்பிக்கைகள்,கெட்டப்பழக்கங்களில் எனக்கு இம்மியளவு கூட நம்பிக்கையில்லை.ஒருவரை விரும்பலாம் என்று அவர்கள் எடுத்த முடிவு சரியாக இருக்கும்.ஆனால் காரணங்கள் அபத்தமாக இருக்கும்.வேதியல் துறை கணபதி பிப்ரவரி 23 ஆம் தேதி பிறந்தவனாம்.அதே துறையில் படிக்கும் புஷ்பவல்லியும் பிப்ரவரி 23ம் தேதி பிறந்தவள் என்பதால் காதலிக்க ஆரம்பித்து விட்டானாம்.பிரபாவதி பிரபாகரன் பிரபா பிரபா ஒரே மாதிரி வந்தால் போதும் காதல் கோட்டைக்கு அடிக்கல் நாட்டி விடுவார்கள்.பக்கத்து வீடாக இருத்தல்,அம்மாக்கள் ஒரே ரேஷன் கடையில் சீனி வாங்குதல் அல்லது அப்பாக்கள் ஒரே கடையில் சவரம் செய்பவர்களாதல்,ஒரே பேருந்து வழித்தடத்தில் பயணம் நாய்க்குட்டி,தோட்டம்,சுண்டக்காய் என இப்படி குறைந்த முதலீட்டில் சம்பந்தங்களை உருவாக்கி,சந்தர்ப்பவாத காதலை நடத்துவார்கள்.

சகுந்தலாவின் மீதான ஈர்ப்பு வேலி தாண்டி அத்து மீறியதற்கு தரம் தாழ்ந்த காரணங்கள் எனக்கு அவசியப்படவில்லை.அவள் ஒரு அதிசயப்பிறவி.மனிதர்களை மனிதர்களாகப் பார்க்கத் தெரிந்த அதிசயப்பிறவி.சாதியும் வர்ணங்களும் எங்களை வேற்றுக்கிரகத்தில் வீசி எறிந்த போது,வானத்தைக் கிழித்து பறந்து வந்த மீன்கொத்திப் பறவையாக,நட்பு அலகில் கவர்ந்து சென்று மீட்டவள்.என் க‌ருப்பு புறங்கையில் அவ‌ளின் செக்க‌ச்சேவேல் விர‌ல்க‌ள் ப‌ட‌ரும் போது தோன்றும் அதீத‌ குற்ற‌ உண‌ர்ச்சியை,தாழ்வு ம‌ன‌ப்பான்மையை,கூச்ச‌த்தை,வெட்க‌த்தை,குறுகுறுப்பை,ப‌ர‌வ‌ச‌த்தை சலனமின்றி ஒரு வென்னிற‌ கைக்குட்டை கொண்டு துடைத்து தூர எறிந்தவள்.

வாய் நிறைய புன்னகையும்,மடிநிறைய இளைப்பாறல்களும் அவள் மீதான உடைமைத்துவத்தை அகலப்படுத்தியது.சகுந்தலா எனக்காக மட்டுமே சிருஷ்டிக்கப்பட்டவள் என்ற மனநிலை உக்கிரமாக ஆட்கொண்டது.அந்த‌ர‌ங்க‌ உடைமையில் கீறல்கள் விழுவது சாட்டை அடியை ஒத்திருந்த‌து.ஒவ்வொரு வ‌லியும் வெறுப்பை விதைத்த‌து.வெறுப்பு வ‌ன்ம‌த்தை கொணர்ந்த‌து.

(தொட‌ரும்...)

*****

Thursday, January 28, 2010

நானோ பிரபஞ்சத்தில் பேரிடி

இது ஒரு தொடர் பதிவு. அதிரடி பதிவர் விசாவின் யோசனைப்படி முகிலன் இதை துவக்கினார். மொத்த பதிவையும் நீங்கள் இங்கே படிக்கலாம்.

http://padhivarkalanjiyam.blogspot.com/

முகிலன். பலாபட்டரை, பிரபாகர், ஹாலிவுட் பாலா, வினோத் கௌதம், கிஷோர், சுபதமிழினியன்....இறுதியாக விசா.. இவர்களை தொடர்ந்து நானும்
களத்தில் இறங்க முடிவு செய்து சிறுமுயற்சி தந்திருக்கிறேன்.

சொதப்பல்,ஒன்னுமே புரியல,கதை நீளம்,ஒரே கொயப்பம்,இடியாப்பம் போன்ற பின்னூட்டங்கள் ஏற்கப்பட மாட்டாது என்பதை தாழ்வன்புடன் தெரிவித்து கொள்கிறேன்.

இக்கதையின் முன்கதை, பதிவர் விசாவின் விறுவிறுப்பான எபிசோட் வாசிக்க,

http://writervisa.blogspot.com/2010/01/8.html

---------

எங்கே செல்லும் இந்த பாதை-9

வ‌தை 1:

வீடியோவில் காண்பிக்கப்பட்ட வெற்றுடம்பு மனிதனின் குறியில் கொக்கி போட்டு இழுக்கப்பட்டதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்த‌ ராஜேஷ் வாய் திறக்காமலா இருப்பான்.உடைந்த உண்டியலில் சில்லறைகள் சிதறுவது போல உண்மைகள் கொட்ட ஆரம்பித்தன.

லோ டெம்ப்ரேச்ச‌ர்ல‌ பாடிய‌ வைக்க‌ற‌துனால‌ செல்க‌ள‌ திரும்ப‌வும் உயிர்ப்பிக்க‌லாம்னு நினைக்க‌ற‌து திய‌ரிடிக‌லா வேணும்னா சாத்தியமாகலாம்.ஆனா இது இம்ப்ராடிக்க‌ல்.இந்த‌ கிரையோனிக்ஸ் எல்லாம் சும்மா ப‌ம்மாத்து வேல‌.."

"நோ இன்ஸ்பெக்ட‌ர்.இது எங்க‌ ட்ரீம்..எட்டு வ‌ருஷ‌ க‌னவு,தவம்,உழைப்பு.நானோ டெக்னாலஜில இதுவர யாரும் தொடாத லிமிட்ஸ்-அ நாங்க டச் பண்ணிருக்கோம்.இதுக்காக‌ எங்க‌ பாஸ்,டாக்ட‌ர் நிர்மல் எவ்ளோ க‌ஷ்ட‌ப்ப‌ட்ருக்காருன்னு கூட‌ இருந்து நான் பாத்துருக்கேன்." வலி வேதனையுடன் ராஜேஷின் குரலில் அழுத்தம் இருந்தது.

இது இயற்கைக்கு புறம்பானது தான்.இது சாத்திய‌மே இல்லாத‌ ஒன்னு.அப்படியே இது வொர்க் அவுட் ஆனாலும் பின்னால ஆபத்தான விளைவுகள ஏற்படுத்தும்.இத உடனே தடுத்து நிறுத்தணும்" இன்ஸ்பெக்டர் தனது விசாரணையின் அடுத்த கட்டத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்.

"சொல்லுங்க‌ ராஜேஷ்...உங்க‌ ரிசர்ச் சென்ட‌ர் எங்க‌ ந‌ட‌த்திட்ருக்கீங்க‌ ? எத்த‌னை பேரு இதுல‌ இன்வால்வ்ட்..?

***

வ‌தை 2:

ஸ்டான்ஃபோர்டு ஸ்டூடியோவின் அதிநவீன உபயம் போலிருந்தது ம்ருத்துவக்கூடம்.சோடியம் விளக்குகள் கூடத்தை ஒளிவெள்ளத்தில் மூழ்கடித்தன.டாக்டர் நிர்மல் நான்கைந்து கோர்ட் சூட் வெள்ளையர்களுடன் ருஷ்ய மொழியில் மானிட்டரைப் பார்த்து ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார்.சென்னையில் இப்படி ஒரு இடம் வாய்ப்பே இல்லை.

மின்னல் கடந்தது போல ஒரு ஃப்ளாஷில் பாஸ்கருக்கு விழிப்பு தட்ட ஆரம்பித்தது. ஸ்வாதி !! ஸ்வாதி !!! முனக ஆரம்பித்தான்.இமைகளைத் திறந்ததும் அதில் பொருத்தப்பட்டிருந்த சென்சார் பல்லிளித்தது.அருகே இருந்தே கணினித் திரையில் அலைகள் பாய்ந்தன. பீப் சத்தம் கேட்டு டாக்டர் நிர்மல் தன் சகாக்களுடன் பாஸ்கரின் படுக்கையை நோக்கி விரைந்தார்.

"கய்ஸ்..சப்ஜெக்ட் கண் முழிச்சுடுச்சி !!! லெட்ஸ் ஸ்டார்ட் தி தெர்மல் இன்செர்ஷன்" கண் சிமிட்டினார்.

பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ப‌டுக்கை திடீரென‌ ஒரு க‌சாப்புக்க‌டை ம‌ர‌க்க‌ட்டையாகி, லேச‌ர் க‌ற்றைக‌ள் அவ‌ன் உட‌லை கூறு போட‌ ஆர‌ம்பித்த‌ன.கொடூர‌ வ‌லியில் எழும்பிய‌ அவ‌ன் குர‌ல் எதிரொலிக்காம‌ல் துளைக‌ள் போட்ட‌ அட்டையால் விழுங்க‌ப்ப‌ட்ட‌து.ரத்தக்களரியாக‌ செல்க‌ள் பிரித்து மேய‌ப்ப‌ட்ட‌ன‌.ந‌ர‌ம்புக‌ளில் ஆங்காங்கே அக்குப‌ஞ்ச‌ர் முறையில் IC-க்க‌ள் பொருத்த‌ப்ப‌ட்ட‌ன‌.என்ன‌ ந‌ட‌க்கிற‌து ?? இங்கே..!! நான் ஏன் இங்கே இருக்கிறேன்.மாஸ்க் அணிந்த‌ ப‌ச்சைப் பேய்க‌ள் யார் இவ‌ர்க‌ள் ? இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ தேவையிருக்கிற‌து ? ப‌னிக்க‌ட்டியில் வைத்த‌தைப் போல் உட‌ல் ந‌டுங்குகிற‌தே..நான் ப‌டுத்திருப்ப‌து என்ன‌ ஐஸ் கட்டியா ?

***


போலீஸ்,க‌மாண்டோ ப‌டையின‌ரின் வாக‌ன‌ங்க‌ள் 120 கீ.மீ ஐத் தாண்டி ப‌றந்து கொண்டிருந்த‌ன‌.

போரூர் செக்போஸ்ட்டை க‌ட‌ந்த‌தும் வேக‌ம் குறைய‌ ஆர‌ம்பித்த‌து. ஜீப்புக‌ள் நிறுத்த‌ப்ப‌ட்டு,க‌மாண்டோ ப‌டையின‌ர் ஒவ்வொருவ‌ராக‌ இற‌ங்கி சுற்றியிருந்த‌ வீடுக‌ளில் ப‌துங்க‌ ஆர‌ம்பித்த‌ன‌ர்.இன்ஸ்பெக்ட‌ர் வேர்க‌ட‌லை சிறுவ‌னை அழைத்து அந்த‌ பிர‌தான‌ சாலையின் சுர‌ங்க‌ப்பாதையில் "இயேசு அழைக்கிறார்" போஸ்ட‌ரை கிழிக்க‌ச் சொன்னார்.

எதிர்பார்த்தப‌டியே,சுவ‌ற்றில் நால‌ணா அள‌வு துளையில் ஒரு க‌ணினி மெள‌ஸின் ரோல்ல‌ர் ப‌ந்து செருகியிருந்த‌து.ஆட்காட்டி விர‌ல் கொண்டு அதை உருட்டிய‌ மறுக‌ண‌ம்,மெல்லிய‌ இசையுட‌ன் அந்த‌ அற்புத‌க்க‌த‌வு திறந்த‌து.Thats it !!!


***

எம்.எம்.எக்ஸ் மெடிக்கல் பவுண்டேஷனின் முத‌ல் த‌ள‌ம் சைர‌ன் ஒலியில் அதிர்ந்த‌து.மாடி அறையில் இய‌ங்கி கொண்டிருந்த‌ லின‌க்ஸ் திரைக‌ள் அபாய செய்திக‌ளை ப‌ர‌ப்பிக் கொண்டிருந்த‌ன‌.ஆப‌த்து !!!

"ந‌ம்ம‌ இட‌த்த‌ போலீஸ் க‌ண்டுபிடிச்சிடுச்சி..நம்ம கிரவுண்ட் ஃப்ளோர் 3M கதவ‌ இவ்ளோ சுல‌ப‌மா த‌மிழ்நாடு போலீஸ் ம‌ட்டுந்தான் ஓப்ப‌ன் ப‌ண்ண‌ முடியும்.

லெட்ஸ் கிக் ஆஃப் தி பேக்கிங் புரோகிராம் ! "

பாஸ்க‌ரின் சிந்த‌டிக் ஐஸ்க‌ட்டி படுக்கை ஒரு பெட்டியாக‌ உருமாறி அவனைச் சுற்றி சுவர் எழுப்பியது.ஆக்ஸிஜ‌ன் வால்வு பொருத்த‌ப்ப‌ட்ட‌து.ரிச‌ர்ச் சென்ட‌ரின் முத‌ல்த‌ளம், Maersk பெயர் ஒட்டப்பட்ட‌ துறைமுக‌ டிர‌க் ஒன்றில் அலேக்காக‌ அம‌ர்ந்த‌து. எந்நேர‌மும் த‌ப்பிப்ப‌த‌ற்கான டாக்டர் நிர்மலின் மின்ன‌ல் வேக‌ ஏற்பாடுக‌ள் இவை.

டாக்ட‌ர் நிர்ம‌ல் அன்ட் கோ, பெட்டியில் பாஸ்க‌ர், முத‌ல் த‌ள‌ க‌ருவிக‌ள் எல்லாம் ஒரே டிர‌க்கில்.டிரக் நகரின் இஞ்சி இடுக்குகளில் நுழைந்து சீறிப்பாய்ந்தது.வேகம்.ஒளியின் வேக‌த்தை தொட‌ முடியுமா? எத்த‌னித்தார்க‌ள். பிடிப‌ட்டால் மில்லிய‌ன் டால‌ர்க‌ள் அர‌சாங்க‌த்தின் பிடியில். திட்ட‌ம்,க‌ன‌வு,த‌வ‌ம் எல்லாம் த‌விடு பொடி. ஏற்கென‌வே செய்த‌ 20 ந‌ர‌ப‌லிக‌ளுக்கு ப‌தில் சொல்லியாக‌ வேண்டுமே !!!டாக்ட‌ர் நிர்ம‌லின் இத‌ய‌ம் ப‌ட‌ப‌ட‌த்த‌து. புரோஜெக்ட்டின் உச்ச‌ப‌ச்ச‌ திருப்ப‌த்தில், இப்ப‌டியாகி விட்ட‌தே. ராஜேஷ் !! கிராதகன்.இப்ப‌டியா உள‌றி கொட்டியிருப்பான்.அவ‌ன் க‌ழுத்தில் ச‌ய‌னைடு க‌ட்டி விட்டிருக்க‌லாம்.ப‌ர‌வாயில்லை.எப்ப‌டியாவ‌து த‌ப்பித்து விட‌லாம்.பாஸ்க‌ரின் உயிர் தான் ந‌ம‌க்கு இறுதி ந‌ம்பிக்கை.பாஸ்க‌ரின் கிரையோனிக் பொருத்த‌ப்ப‌ட்ட‌ உட‌ல் தான் ந‌ம‌க்கு த‌ங்க‌ முட்டையிடும் வாத்து. எங்கே பாஸ்க‌ர் ?!?! ஓ மை காட் ?!?!

ஐஸ்க‌ட்டியின் Frozen plug-in பிடுங்க‌ப்ப‌ட்டு த‌ண்ணீர் தேங்கியிருந்த‌து. பாஸ்க‌ர் மாய‌ம்.

டிரக்கின் வேக பிடி தளர்ந்தது. புறநகர் பகுதியை அடைவதற்கு முன்பாகவே தாம்பரத்தில் Maersk டிர‌க் போலிஸ் வாகனங்களால் சுற்றி வளைக்கப்பட்டது.

***

போலிஸ் கஸ்டடியில் சிக்கிய‌ டாக்டர் நிர்மல், பதற்றமாகாமல் அமைதியாக‌ திருவாய் மலர்ந்தார்.

"பாஸ்கரோட பாடியில இன்செர்ட் பண்ணியிருக்க Aphinil -X சிப் இன்னும் ஒரு மணி நேரத்துல வெடிக்கப் போவுது. அது மட்டும் வெடிச்சா தமிழ்நாடே அமிலக் காடாகும் !!..என்ன பண்ண போறீங்க ?"


( தொடரும் )

-----------------------------------------------

விதிகள் :

01. தொடர விரும்புபவர்கள் கடைசியாக யார் எழுதியிருக்கிறார்களோ அந்தப் பதிவில் சென்று பின்னூட்டம் இடுங்கள்.
02. ஒருவருக்கும் மேல் ஒரே நேரத்தில் விருப்பம் தெரிவித்தால், கடைசியாகப் பதிவை எழுதியவர் யார் தொடரலாம் என்பதை தேர்ந்தெடுப்பார்.
03. முந்தைய பாகங்களுக்கான சுட்டியையும், அடுத்த பாகத்தின் சுட்டியையும் (யாராவது தொடர்ந்த பின்னர்) பதிவில் கட்டாயமாக இட வேண்டும்.
04. ஒரு எச்.டி.எம்.எல் கேட்ஜட் உருவாக்கத்தில் இருக்கிறது. உருவான பின் அதையும் உங்கள் வலைப்பூவில் கட்டாயம் சேர்க்க வேண்டும்
05. மேலே உள்ள விதிகள் அனைத்தும் தொடர் பாகத்தை ஒருவருக்கு மேற்பட்டவர் எழுதி விடக்கூடாது என்பதற்காகவே.

---

Saturday, January 23, 2010

நெப்பந்தஸ்



"நெருக்கியடித்து வளர்ந்தும் வளராத முட்புதர்களும்,செம்மண் புழுதி படிந்து காய்ந்து போயிருக்கும் கீழாநெல்லிச்செடிகளும்,சிறியதும் பெரியதுமாக கோரைப்புற்களும் சூழ்ந்த புனித மார்க் தோட்டத்தின் மண்ணறையொன்றில் மெல்வின் கிடத்தப்பட்டு ஆழ்ந்த உறக்கத்திலிருக்கிறான்.பூச்சிகளைத் தின்னும் நெப்பந்தஸ் போல,தன் கருநாவைக் க‌ழற்றியெறிந்து,நினைவுகளை வாரிச்சுருட்டி ஒருமுறை அசைபோட்டு விட்டு மீண்டும் விழுங்கி விடுகிறது நாட்களின் நகர்வுகள்."

ஆயிர‌ம் குண்டூசிக‌ள் ஒரு சேர செருகிய‌தைப் போல் வாடைக்காற்று செவிப்ப‌றையைக் கீறும் குளிர்கால‌ம்.எதிர் வீட்டு நாவ‌ல் ப‌ழ‌ ம‌ர‌ம் மட்டும் இலைகளையும் சருகுகளையும் கலைத்து பேரிரைச்ச‌லை உண்டு ப‌ண்ணாம‌லிருந்தால்,அந்த ர‌க‌சிய‌க் காற்றின் அமானுஷ்ய‌ம் விள‌ங்காம‌லே போயிருக்க‌க்கூடும்.ப‌றவைக‌ளும் மின்மினிப்பூச்சிக‌ளும் தத்தம் இணைகளோடு கூடிய நிசப்த வெளியில் தியான‌த்தில் இருக்கின்ற‌ன.புலர்காலை சூரியன் முதுகில் அறைந்து எழுப்பிய‌தும் அவைக‌ளின் த‌வ‌ம் க‌லைய‌க்கூடும்.அப்போது எல்லாம் ச‌ரியாகி விடும்.

ச‌ன்ன‌லின் திரைச்சீலை இருப்பு கொள்ளாமல் ஆடிக் கொண்டிருந்த‌து.குளிர்சாதன‌ம் அணைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ த‌ற்காலிக‌ உஷ்ண‌த்தில் க‌டிகார‌ முள் ச‌ற்று உற்சாக‌மாக‌ ஒலியெழுப்பி ந‌க‌ர்ந்து கொண்டிருந்த‌து.மேஜை மேலிருந்த பிஸ்கட் பாக்கெட்டின் இடுப்பு பகுதி கிழிந்து சில‌ கொசுக்க‌ள் உள்ளே போய் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்தன.வ‌ழ‌க்கமாக‌ இர‌வின் சுழற்த‌ன்மை புல‌னாவ‌த‌ற்கு முன்பே எனக்கு விடிந்து விடும்.இன்று கொஞ்ச‌ம் வித்தியாச‌மான‌ நாள்.அத‌னால் தான் என்ன‌வோ ந‌ள்ளிர‌வு ப‌ன்னிரெண்டைத் தாண்டியும் தூக்க‌ம் பிடிக்க மறுக்கிறது.

ச‌குந்தலா இடப்பக்கம் படுத்திருக்கிறாள்.என் முக‌த்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்.குழந்தைமை மாறாத க‌ண்க‌ளில் நீர்த்துளிக‌ள் சுர‌ந்து வீங்கியிருக்கிறது முக‌ம்.நிறைய அழுதிருப்பாள்.சோக‌ம் விர‌வியிருந்த அழகிய முட்டைக்க‌ண்க‌ளை விடியும் வ‌ரை பார்த்து கொண்டிருந்தாலும் பாவ‌மில்லை.பார்வை எதிர்கொள்ளும் பிம்ப‌ங்க‌ளைக் க‌ட‌ந்து,அவ‌ள் சிந்த‌னை கால‌ய‌ந்திர‌த்தின் ஞாப‌க‌ க‌ண்ணியை ப‌ற்றிக் கொண்டு,ஒரு வ‌ருட‌ம் பின்னோக்கி நீள்கிறது.நிச்ச‌ய‌ம் அங்கு நானிருக்க‌ப் போவ‌தில்லை.இருந்தாலும் தொந்த‌ர‌வு செய்ய‌ப்போவ‌தில்லை.அவளைச் சூழ்ந்திருக்கும் பேரமைதி ஒரு திடப்பொருளாக இருக்கிறது.தவறி உடைந்து விடும் பட்சத்தில் அதனுள் நிரப்பப்பட்டிருக்கும் பெயரிடப்படா திரவம் பீய்ச்சியடிக்கப்பட்டு,அறையை ஒரு வித‌ ரசாயன வெள்ளத்தில் மூழ்கடிக்கக்கூடும்.இது அவளுடைய அந்தரங்கம்.பிர‌த்யேக‌ தனிமை.முழுமையாய் அனுபவிக்கட்டும்.கரைந்து தீர்க்கட்டும்.

----

எங்கள் வீட்டின் வலது திண்ணையிலிருந்து சுவற்றை ஒட்டி எட்டிப்பார்த்தால்,வரதராஜ பெருமாள் கோயிலின் பின்புறமிருக்கும் பொற்றாமரைக்குளம் தெரியும்.சைக்கிள் இருந்தால் ஐந்து நிமிடங்களில் குளத்தை அடைந்து விடலாம்.குளத்தின் மறுகரையில் இருந்தது பாப்லோ ராமசாமி தெரு.குளத்தை ஒட்டியே இருந்ததால் அத்தெருவுக்கு ஒரு திவ்யமான அழகு கூடியிருந்தது.வைகறைகளில் சாணி மொழுகி,வண்ணப்பொடிகளைத் தூவி மலர்க்கோலம் இடும் இளந்தளிர்களை அலகில் வைத்து கவர்ந்து போக காகங்கள் கூட காத்திருக்குமாம்.மாமா சொல்லியிருக்கிறார்.

அக்ரஹாரத்து பெரியவாள் தெப்பக்குளத்தின் வலது கோடியில் குளிப்பது தான் வாடிக்கை என்பதால் இடது ஓரம் குப்பைகள் கொட்டப்பட்டு பொற்றாமரைக் குளம் லேசாக கலங்கியிருந்தது.தூர்வாறப்படாத அந்த இடது ஓரத்தில் தான் நாங்கள் சர்வ ரகசியமாக குளிப்பதும் கோயில் கோபுரத்தைப் பார்த்து கை கூப்புவதும்! வரதராஜ பெருமாளை தரிசித்த கணங்களை விட,குளத்தில் ஊறியவாறே ராமசாமி தெருவின் தேவதைகளைக் கண்டு வாய் பிளந்த தருணங்கள் அதிகம்.பாப்லோ ராம‌சாமி தெருவில் காகங்களுக்கும் நாய்களுக்கும் இதர ஜந்துக்களுக்கும் காலாற,பசியாற இடமுண்டு.எங்களைப் போன்ற கீழ்வர்ண மனிதர்களுக்குத் தான் இடமில்லை.

(தொடரும்..)

****

Monday, December 7, 2009

நெருப்பாலான‌ ஜின்கள்


நன்னாவைச் சுற்றி அமர்ந்திருந்த நண்டு,ச்சுண்டுகளின் ஈரக்குலையெல்லாம் நடுங்க ஆரம்பித்தன.

டெக்சஸிலிருந்து, கமுதி சுந்தரபுரத்திலிருக்கும் நன்னி வீட்டிற்கு வ‌ருடாவ‌ருட‌ம் பள்ளி விடுமுறைக்கு தவறாமல் இடப்பெயர்ச்சி செய்யும் இவ்வாண்டுக‌ளுக்கு ந‌ன்னாவிட‌ம் க‌தை கேட்கா விட்டால் விடுமுறைப் ப‌ய‌ன் நிறைவேறாது.ப‌க‌லில் ந‌ரிக்க‌தை.ம‌திய‌ம் நாகூர் ஆண்ட‌கையின் க‌ராம‌த்துக‌ள் ப‌ற்றிய‌ க‌தை.இர‌வில் முஹிய‌த்தீன் அப்துல் காதிர் ஜீலானியின் குத்ற‌த்துக‌ளும் பாம்புக‌ளுமாக‌ சில‌ ம‌யிர்கூச்செறிய‌ச் செய்யும் க‌தைக‌ள்.வேளா வேளைக்கு நேரத்திற்கு தக்கன‌ க‌தைக‌ள்.ந‌ன்னாவும் அச‌ராம‌ல் ப‌ன்னீர் புகையிலையை மென்று கொண்டே எச்சில் தெறிக்க‌ க‌தை சொல்வார்.கால் க‌ழுவ‌ க‌க்கூஸூக்கு போவாம‌, கால வெள்ள‌னயே இந்த ப‌க்கிய‌ளுக்கு க‌த‌ சொல்ல‌ ஆர‌ம்பிச்சிட்டீயலா? என்று ந‌ன்னி தான் செல்ல‌மாக க‌டிந்து வைப்பாள்.பிற‌கு நாஸ்டாவுக்கு இட்லி அவிக்க‌ போய் விடுவாள்.

இன்றிரவு மின்சார‌த் த‌டை என்ப‌தால் 'ரவைக்குச் சாப்பாட்டுக்குப் பொறவு' ஜின்க‌ள் க‌தை சொல்ல‌ப் போவ‌தாக ந‌ன்னா அறிவித்தார். ஜின்க‌ள் என்றாலே பிஞ்சுக‌ளுக்கு முக‌ம் வெளிறி தானாக க‌ண்க‌ளில் மிர‌ட்சி வந்து அப்பிக் கொள்ளும். சற்றுமுன்னர் கரைந்து உருகி விழுங்கப்பட்ட குல்பி மலாய் மீண்டும் உறைந்து அடிவயிற்றில் ஒலி எழுப்பும்.

நம்ம சுந்தரபுரம் பள்ளிவாசல்ல மீன்முழுங்கி இபுராஹிம்.. மீன்முழுங்கி இபுராஹிம்னு ஒரு 'அசர்த்து' இருந்தாராம். மீன்முழுங்கினு அவுகளுக்கு ஏன் பேரு வந்திச்சிண்டு நாளைக்கு சொல்றேன்.ஒங்களமாரி சின்ன புள்ளைஹளுக்கு நெதம் நம்ம ஊருணிக்கு பக்கத்துல இருக்க‌ மதரஸாவுல கொர்வான்(குர்‍‍ஆன்) ஓதிக் கொடுப்பாராம்.

"ஊருணிண்டா நேத்து ஈவ்னிங் போயி குளிச்சமே அந்த டேர்ட்டி லேக்கா நன்னா?"

முதல் கேள்விக்கணை அதிகாரப்பூர்வமாக நன்னாவை நோக்கி வீசி எறியப்பட்டது. இப்படி பல அம்புகள் அவ்வப்பொழுது கதைக்கு நடுவே நன்னாவை நோக்கி ஏவப்படும். ஆமாண்டி எம்மவ பவுசியா பெத்த மவளே!! பேத்தியை அள்ளி மடியில் வைத்துக் கொண்டார். எஞ்சியிருந்த மீதங்கள் தம் குட்டி உள்ளங்கைகளை கன்னத்தில் வைத்துக் கொண்டு ஆவல் பொங்க மீதக்கதையை எதிர் நோக்கி காத்திருந்தன‌.

அப்ப ஆலிம் பட்டத்துக்காக நாலைஞ்சி பெரிய புள்ளைஹளும் அவருகிட்ட ஓதிச்சிங்களாம். ஒரு நா வெள்ளிக்கெழம ரவ்வு, பேய் மழ பேஞ்சி ஊரெல்லாம் வெள்ளக்காடாயி, இங்க மாதிரி அங்கனயும் கரெண்ட்டு கட்டாயிருச்சாம். சத்தம் போட்டு ஓதிக்கிட்டிருந்த புள்ளைஹ அம்புட்டும் இருட்டுல கொர்வான் தாள பாக்க முடியாம ஓதுறத நிறுத்திச்சுங்களாம்.

லைட்டெல்லாம் அமந்தவொடன ஒருத்தரு மொவத்த ஒருத்தர் பாக்க முடியாம‌ பள்ளியாச முழுசும் ஒரே இருட்டுக்கசம். கடைசி பெஞ்சில யஸ்ஸர்னல் கொர்வான் ஓதிக்கிருந்த நெட்டப்பயல பாத்து அசர்த்து "அடேய் ரஹ்மான்..உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுத்துக்கிட்டு வாறையா? ன்னு கேட்டாராம்.

"இருட்டுக்கீண்டு கடக்குல்ல...யாருக்கும் தெரியவாப்போவுதுண்டு உக்காந்த மேனியே உள்ரூம்புல இருக்க சிம்னி விளக்க எடுக்க ரஹ்மான் பெரிய‌ கைய நீட்டினாப்ளயாம். மூணு நாலு அடிக்கு கை நீண்டு துளாவி வெளக்க எடுத்துக்குடுக்கவும் அசர்த்துக்கு பக்குனு ஆயிருச்சாம். அவரு கண்ணுக்கு மட்டும் தெரிஞ்சுருக்கு பாருங்க..!! அட அல்லாவு நாயனே ! நாம இத்தன நாளு ஜின்னுக்கா ஓதிக்குடுத்துட்டு இருந்தோம்னு அசந்து வேர்த்து விறுவிறுத்து போச்சாம்.



நன்னா எச்சிப்பணிக்கையில் புளிச் என்று துப்பிக் கொண்டார்.கோடியில் அமர்ந்திருந்த பேரன்மாரு ரெண்டு பேரும் ஓடிவந்து நன்னாவின் அருகில் அமர்ந்து கொண்டனர். மற்ற‌ பிள்ளைகள் அருகிலிருந்த இடைவெளிகளை நிரப்பி நெருங்கி அமர்ந்தனர். கேட்டா கொசு கடிக்குதாம். குளிருதாம்.அப்புறம் என்ன ஆச்சாம் நன்னா..?

அதுக்கு பொறவு ஒருநா மதியம் பள்ளிவாசல் கொள்ளப்புறம் இருக்க‌ கிணத்தடில குளிச்சிக்கிட்ருக்கும் போது உக்காந்த மேனிக்க‌ கைய நீட்டி சோப்ப எடுத்திச்சாம் அந்த ஜின்னு.இதையும் அசர்த்து பாத்தாராம். இதுக்கு மேல தாங்காதுனு மக்யா நாளு கூப்பிட்டு பேசிட்டாராம்.

"ய‌ப்பா ர‌ஹ்மான். நீ ஜின்னுன்ற‌ விச‌ய‌ம் என‌க்கு தெரிஞ்சி போச்சி.நானா இருக்க‌க்க‌ண்டு ப‌ய‌ப்ப‌ட‌ல.இதுவே ம‌த‌ர‌ஸாவுல‌ உள்ள‌ ம‌த்த‌ சின்ன‌ புள்ளைஹ‌ பாத்துச்சி‌ண்டா ப‌ய‌ந்து ஜூர‌ம் வ‌ந்துரும். நீ இன்னிக்கே அஞ்சு ம‌ணி ப‌ஸ்ஸ‌ பிடிச்சி உங்க‌ ஊர‌ப்பக்க‌ம் பாத்து கிள‌ம்பிரு ராசா"

போ மாட்டேன்னு அழுது அடம்பிடிச்சி அசர்த்துக்கிட்ட கெஞ்சி கேட்டுச்சாம் அந்த ஜின்னு. அசர்த்து கறாரா பேசிட்டாராம். பொறவு வேற வழியில்லாம பொட்டி படுக்கையெல்லாம் கட்டிக்கிட்டு புள்ளையள பாத்து அலுதுகிட்டே மதரஸாவிட்டு போச்சுதாம் .

ஜின்னு நல்லதா கெட்டதா நன்னா ?

அது நம்ம மாரி மனுசரு கைலதேம் இருக்கு !! ஒழுங்கா சுத்தபத்தமா இருந்தம்னா ஜின் நம்மள அண்டாது. நடுநிசிக்கு மேல குளிப்பு இல்லாம பள்ளியில தூங்கிட்டிருந்த புள்ளைஹள குளத்துல தூக்கி வீசுன ஜின்களும் இருந்துச்சி.வெளக்கு வெக்கிற நேரம் தனியா வர்ற வயசு புள்ளையகிட்ட சில்மிசம் பண்ண ஜின்களும் இருக்கத்தான் செஞ்சிச்சி.

இது போவ ஜின்கள வசியப்படுத்தவும் செய்யலாம்.நல்லா ஓதிப்படிச்ச அசர்த்து மாருங்க ஒன்னா உக்காந்து ரவ்வு பூரா கொர்வான் ஓதினா மசிஞ்சிரும்.ஆனா நடுப்பற வந்து பேய் மாதிரி பயமுறுத்தும்.எம்புட்டு ப‌ய‌முறுத்துனாலும் அசையாம‌ ஓதிக்கிட்டே இருக்க‌ணும். லேசா அச‌ஞ்சோம்..போச்சி..அம்புட்டு தான் ச்சோலி. பயந்துட்டம்னா ஒரே அடியா அடிச்சிரும்.அதோட ம‌ய்ய‌த்து தே.

"வசியப்படுத்திட்டா என்ன ஆவும் நன்னா"?"

வசியப்படுத்திட்டா நீ சொல்றதெல்லாம் செய்யும்.கேக்குறதெல்லாம் எடுத்துட்டு வந்து தரும்.

"குல்பி ஐஸ்? "

குல்பி பானையே எடுத்துட்டு வந்து தரும்.

"ஹைய்!"

சரி சரி! காத்துல‌ குத்துவிளக்கு அமரப்போவுது. அடேய் நைனார் மவனே..உள்ள போய் அந்த சிம்னி விளக்க எடுத்துட்டு வர்றியா ? "

மற்ற வாண்டுகள் அப்பொடியனின் கைகளையே உற்றுப் பார்க்க ஆரம்பித்தன.

*********************

மனிதர்களைப் போல‌வே ஜின்களுக்கும் ஒரு தனி அமானுஷ்ய உலகமிருக்கிறது என்று நம்பப்படுகிறது. மனிதர்களின் படைப்புக்கு மூலம் மண் என்றால் ஜின் இனத்திற்கு மூலம் நெருப்பாகும்.குர் ஆனில் 35 இடங்களில் ஜின்களைப் பற்றிய வசனங்கள் இருக்கின்றன.மனித இனத்தை படைப்பதற்கு முன்னரே ஜின்கள் படைக்கப்பட்டதாக தகவல்கள் கூறினாலும், ஆதம் நபிக்கு முன்னர் ஜின்கள் இருந்ததாக குறிப்புகள் தெளிவாக இல்லை. இன்றைக்கும் இந்த இனம் பூமியில் தான் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றன.மனிதர்களால் அவற்றின் சொந்த உருவத்தை பார்க்க முடியாத அதே வேளை அவை (குறிப்பாக தீயவை) மனிதர்களைப் பார்த்துக் கொண்டும் சூழ்ந்து கொண்டும் தானிருக்கின்ற‌ன‌.

வழக்குச் சொற்கள்: க‌ராமத், குத்ற‌த்து‍‍‍---பராக்கிர‌ம‌ங்க‌ள்; அச‌ர்த்து---இஸ்லாமிய‌ க‌ல்வி க‌ற்ற‌ மார்க்க‌ அறிஞ‌ர் ( ஹ‌ழ்ர‌த்); ந‌ன்னா,ந‌ன்னி‍‍--தாத்தா பாட்டி; ம‌த‌ர‌ஸா--இஸ்லாமிய பாட‌சாலை;ம‌ய்ய‌த்து--பிண‌ம்.

****

நன்றி: உயிரோசை
இணைய இதழ் (08 டிசம்பர் 2009)


------------------------------------

Monday, November 23, 2009

ஆதியின் ஹாலிடேஸ் சிறுகதைக்கான‌ முடிவு

ஆதிமூலகிருஷ்ணனின் ஹாலிடேஸ் கதைக்கான என்னுடைய முடிவு:

************

மூவருக்கும் தூக்கிச்சட்டியை கிணற்றுத் திண்டின் மீது வைத்து விட்டு அகிலா வேப்பமரத்தடி சாலையில் மறைந்து போனாள்.

அகிலாவின் இளமை பூசிய ஸ்தனங்களும் கருத்த உதடுகளும்
இளநீரில் கலந்த கள்ளை விட விஜய்க்கு அசாத்திய‌ கிளர்ச்சியை உண்டு பண்ணின.சசிகுமார்,ஹிமான் என்று தடாலடியாக அவனுக்கு இரண்டு அந்தரங்க எதிரிகள் உருவாக அக்கிளர்ச்சி காரணமாக‌ இருந்தது.

கறிச்சோறு தொண்டைக்குழிக்குள் இறங்கும் வரை மூவரும் நண்பர்களாகவே சிரித்து பேசினர்.நண்பர்களாகவே தென்னை மரத்தடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்தனர்.அகிலாவை பார்த்த கணம்,அகிலா என்று சத்தம் போட்டு கூப்பிட இருவருக்குமே தைரியம் போதவில்லை தான்.

ஆனால் விஜயை போல சசி இல்லை.அகிலாவின் செழித்த பெண்மை குறித்தான பிரக்ஞையே வளராத காலகட்டங்களிலிருந்து அவளோடு பழகியவன் என்பதால் விஜய்க்கு சசி மேல் லேசான பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம்.

திடீரென்று இரு நண்பர்களிடையே பூமி பிளவுற்று இரு வேறு உலகில் நின்று கொண்டிருந்தனர்.ஹிமான் உண்ட களைப்பில், ஏற்கெனவே உறங்கி விட்டிருந்தான்.விஜய்,சசி இருவரும் கண்களை மட்டும் மூடியிருந்தனர்.மர நிழலினூடே குத்திட்ட சூரிய கற்றைகள் கண்கள் கூச இருவருமே சிறிது நேரத்திற்கு பிறகு,அகிலா குறித்த‌ சிந்தனைகளோடு உறங்கிப் போயினர்.

திடீரென்று தென்னைக்குரும்பை ஒன்று மரத்திலிருந்து கயிற்றுக்கட்டிலின் வெகு அருகாமையில் விழ, இருவருக்குமே விழிப்பு தட்டியது.அதே நேரம் பம்பு செட்டின் அருகே ஒரு பெண்ணின் அரவம் காற்றைக்கிழித்து வந்தது.

பர‌பரப்போடு ஓடிச்சென்று இருவரும் பம்பு செட்டின் அறையை அடைந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி !!

"தும் முஜே ச்சோட்கே கஹாங் கயா தே சொனாலி !!! சொனாலி !! கஹாங் கயா தே சொனாலி !!!" அகிலாவை வலுக்கட்டாயமாக கட்டியணைக்க முயன்று கண்களில் நீர் வழிய பிதற்றிக் கொண்டிருந்தான் ஹிமான்.


**************

Wednesday, October 21, 2009

இன்னுமொரு நாடகம் (சிறுகதை)

மீசை லேசாக அரிக்க ஆரம்பித்தது.லிப்ஸ்டிக் வாயோடு ஒட்டிக் கொண்ட‌து.பேண்ட் அவிழ்ந்து விடுவேன் என்று ப‌ய‌முறுத்திய‌து. அட்டை ஈட்டி நுனியில் லேசாக ஊச‌லாடிக் கொண்டிருந்த‌து.அடிவ‌யிற்றை முட்டிய‌ ஒன் பாத்ரூமை அட‌க்கிக் கொண்டு "பாபிலோனிய‌ ம‌ன்ன‌ர் த‌ரியூ..பராக் ப‌ராக் பராக்" என்று இடுப்பில் சொருகி வைக்கப்ப‌ட்ட‌ கால‌ர் மைக்கில் சொல்ல‌ வேண்டும்.பாபிலோனிய‌ ம‌ன்ன‌ருக்கு எப்ப‌டி த‌மிழ் தெரியும் என்ற லாஜிக்கெல்லாம் யோசிக்க‌ நேர‌மில்லை.கொடுக்கப்பட்ட‌ வாயிற்காப்போன் வேட‌த்தைச் ச‌ரியாக‌ செய்ய‌ வேண்டுமென்ப‌து த‌ற்காலிக‌ க‌வலை. ஒன்ப‌தாம் வகுப்பு மாண‌வ‌ர்க‌ளுக்கு நாட‌க‌ங்க‌ளில் இது போன்ற‌ ஒப்புக்குச்ச‌ப்பான் வேட‌ங்க‌ள் தான் கொடுக்க‌ப்ப‌டும்.ம‌ன்ன‌ராக‌ வேண்டுமென்றால் ஃப்ள‌ஸ் டூவில் க‌ம்பியூட்ட‌ர் ச‌யின்ஸ் எடுத்திருக்க‌ வேண்டும்.

படிக்கிற பையன் என்ற ஒரு கெட்ட வார்த்தை போதும்.கேள்வியே இல்லாமல் நாடகம்,கட்டுரை,பேச்சுப்போட்டி என வலிந்து திணித்து விடுவார்கள்.இப்போது செய்து கொண்டிருக்கும் வாயிற்காப்போன் வேடமாவ‌து ப‌ர‌வாயில்லை.க‌ட‌ந்த‌ ஆண்டு விழாவில் நோஞ்சானான எனக்கு பீமன் வேட‌ம் த‌ந்தார்க‌ள்.அடுத்த‌ முறை த‌மிழ் ம‌ன்ற‌ விழாவின் போது சாக்ர‌ட்டீஸூக்கு விஷ‌ம் வைக்கும் மெலீட்ட‌ஸ் கேர‌க்ட‌ர் த‌ருவ‌தாக லிட்டில் ஃபிள‌வ‌ர் மிஸ் ப்ரா'மிஸ்' ப‌ண்ணியிருந்தது கொஞ்ச‌ம் ஆறுத‌லாக‌ இருந்த‌து.

ஃபிகர்களை தரம் பிரித்தல்,திருட்டு தம் அடித்தல்,பிளாட்பார பத்திரிக்கைகள் விற்றல் போன்ற எக்ஸ்டிரா கோ கரிகுலர் நடவடிக்கைகளில் அதிகம் ஈடுபடும் மாப்பிள்ளை பெஞ்ச், எங்களைப் போன்று படிக்கிற குருப்பை பார்த்தாலே வெண்பொங்க‌லில் மிள‌கு போல‌ ஒதுக்கி வைப்பார்கள்.முரட்டு சைஸ்,மூணு பவர் மூக்கு கண்ணாடியும்,முக்கா கால் பேண்ட்டுமாக அலையும் முதல் ரேங்க் மாணவர்கள் எப்போதும் த‌னித் தீவாக‌த்தானிருக்க‌ வேண்டும்.எந்த‌ கேங்கிலும் சேர்த்து கொள்ள‌ மாட்டார்க‌ள்.ம‌ச்சி..இவன் தான் க‌ண‌க்கு மிஸ் ஜோஸ்பினோட‌ spy டா..அவ‌ன் இருக்கும் போது பாத்து பேசுங்க‌..என்று அபாண்ட‌மாக‌ ச‌ந்தேகிப்பார்க‌ள்.இதுபோல் எங்கள் கனாக்கானும் காலங்களில் கல்லெறிந்தவர்கள் ஏராளம்.இப்படி வறண்டு கிடந்த எங்கள் பாலைவனத்தில் பாயாசம் காய்ச்சியது நாடக ஒத்திகைகள் தான்.

புனித சூசையப்பர் மேனிலைப் பள்ளியின் நாடக மேடைகளில்,கமலஹாசனுக்கு இணையாக அதிகம் வெரைட்டி செய்தது நானாகத் தானிருப்பேன்.குருட்டு பெற்றோரை கூடையில் சுமக்கும் சிரவணனாகவும்,ச‌மூக‌விய‌ல் டீச்ச‌ர் காந்திம‌தியின் இஸ்திரி போட்ட‌ சேலையை அங்கியாக‌ உருமாற்றி, பைபிள் கேரக்டர் யாக்கோபுவாகவும்,இரண்டு கோட்டிங் லிப்ஸ்டிக் பூசி, ஜாலிய‌ன் வாலாபாக் ப‌டுகொலைக்கு கார‌ண‌மான‌ ஜென‌ர‌ல் ட‌யரை ப‌ல‌ ஆண்டுக‌ளுக்கு பின் சுட்டு கொன்ற‌ உத‌ம் சிங்'காக‌வும், கடைசி நேரத்தில் என் ஆத‌ர்ச‌ காஸ்ட்யூம் ஸ்பான்ஸர் இருதயராஜ் காலை வாற, வேட்டி கிடைக்காமல் பள்ளிக்கூடத்து பக்கத்து வீட்டுக்காரன் ஜான்பீட்டர் லுங்கியை கட்டிக் கொண்டு ஆசிரியராகவும்,( ம‌ச்சான் லுங்கில‌ நீ ந‌ம்ம‌ பேட்ட‌ ர‌வுடி கணக்கா மெர்சிலா இருந்த‌..என்று மாப்பிள்ளை பெஞ்ச் அதிருப்தி தெரிவித்தது வேறு விஷயம் ) அழுக்கு ஜட்டியை ச‌ர்ஃப் எக்ஸ‌லில் ஊற வைத்ததைப் போலவும்,க‌ருப்ப‌ட்டியை உருட்டி வைத்தாற்போலவும் இருப்பவன் வெள்ளைக்கார‌ ஜாக்ச‌ன் துரையாக‌வும், இப்ப‌டி நிறைய "ஆக‌வும்" நான் ந‌டித்ததைப் ப‌ற்றி ஒரு நெடுந்தொட‌ரே எடுக்க‌லாம்.

எங்கள் தமிழ் மீடியமும், சேட்டு பிள்ளைக‌ள் நிறைந்த‌ கான்வென்ட்டும் ஒரே வளாகத்தினுள்ளேயே அமைந்திருந்தன.இரண்டு பள்ளிகளும் ஒரே குழுமத்தை சேர்ந்தவை என்பதால் ஆண்டு விழா உட்பட எல்லா நிகழ்ச்சிகளும் ஒன்றாகத்தான் நடக்கும். எந்த விழாவாக இருந்தாலும், கான்வென்ட் தரப்பிலிருந்து குறைந்தது நான்கைந்து மேற்கத்திய நடனங்கள் தயாராகி விடும். பிரிட்டினி பியர்ஸ்,ஜெலோ என்று மெட்ரிகுலேசன் குட்டைப்பாவாடை குருவிகள் ஒருபுறம் சிறகடிக்க..பூலித்தேவன்..ஊமைத்துரை,பாரதியார் என எங்கள் தமிழ் மீடிய நாடகப்பட்டறை காத்து வாங்கும்.அத்தி பூத்தாற் போல‌ கைத‌ட்ட‌ல்க‌ள் அள்ளும் எங்க‌ள் நாட‌க‌ குழுவின் ந‌ட்ச‌த்திர‌ நாய‌க‌ன் சுப்புர‌ம‌ணி, 11ம் வகுப்பு சேர வேறு ப‌ள்ளிக்கு சென்று விட்டதாலும், ஒலிபெருக்கிகளும் மைக்குகளும் ஓய்வு பெறும் நிலையை அடைந்து விட்டதாலும், ஏறத்தாழ நாங்கள் போட்ட அனைத்து நாடகங்களும் ஃபிளாப் ஆனது. சகாக்கள் ரொம்பவும் சோர்ந்து போயினர்.

ரோமியோ ஜீலியட் நாடகம் போட்டால் ஓர‌ள‌வு கல்லா கட்டலாம் என்று கிரேஸி மிஸ்ஸிடம் கன காலமாக பரிந்துரைத்து வந்தது இந்த பெருமந்தத்திற்கு பிறகு ஒப்புதலானது.ரோமியோவாக‌ நானும் ஜீலியட்டாக குளோரியா மேரியும். ஆஹா..ராவெல்லாம் தூக்கம் வராமல்..ரத்தத்திலகம் சிவாஜி ஒத்ஸெல்லோ ஸ்டைலில் போர்வைக்குள் வசன ஒத்திகை நடந்தது. வயிற்றுக்குள் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சம்மர் சால்ட் அடித்தன.மேரியின் விரல்களை தொடுவதே ஒரு சம்போகம் தான்.எங்களுக்குள் மெளன தீட்சண்யமாக ஒரு உறவு அரங்கேறி கொண்டிருந்ததை நான் ம‌ட்டுமே ந‌ம்பினேன்.ஸ்கிரிப்ட் தயாரானது.பேப்பரில் ரோமியோ வேடத்தில் என் பெயருக்கு பதிலாக ஹேமந்த் பாபுவின் பெயரும் வந்தது.

( மீதி விரைவில்..)

************************************************

Monday, August 17, 2009

நத்தை

"தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய்.."

--------------------------------
ஊள‌மூக்கு உம்முனாமூஞ்சிக்கு இன்று தான் பிறந்த‌ நாளென்று நாடார்வீட்டு ச்செவ‌ப்பி மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்பு சொன்ன‌து எப்ப‌டி ம‌ற‌க்கும் அவ‌ளுக்கு.அத‌ற்காக‌ ப‌த்து வெளாம்ப‌ழ‌ம‌ல்ல‌வா ப‌றிகொடுக்க‌ வேண்டியிருந்த‌து.ஆளைப்பார்ப்ப‌தே ராம‌நாத‌புர‌த்தில் ம‌ழைபெய்வ‌தைப் போல‌ அரிதாக இருக்க‌,வெறும் ஞாப‌க‌ம் ம‌ட்டுமே வைத்து கொள்வ‌தில் என்ன‌ ப‌ய‌ன்.அதுவும் பார்க்கும் போதெல்லாம்,எண்ணெய் வ‌ழிய‌,எள்ளும் கொள்ளும் வெடிக்க‌,சுண்ட‌ வைத்த‌ வெஞ்ச‌ன‌க்கிண்ண‌ம் போல்,முக‌த்தை உர்ரென்று வைத்து
அலைந்து கொண்டிருக்கும் அந்த‌ உயிரின‌ம்.எது எப்ப‌டியிருந்தாலும் இன்று அவ‌னைப் பார்த்தே தீர‌ வேண்டுமென்று ஊருணியில் துணிவெளுக்கும் கல்லின் மீது அடித்து சத்தியம் செய்து கொண்டாள்.

அந்த ஊனாமூனா கேபிள்கார‌னின் திருமுக‌த்தை த‌ரிசிப்ப‌த‌ற்கு,அவ‌ள் பின்னும் சூழ்ச்சிவ‌லைகள் இருவ‌கைப்ப‌டும்.ம‌திய‌நேர‌மாக‌ இருந்தால் அம்மா சீரிய‌ல் பார்க்கும் நேர‌ம் பார்த்து,மெதுவாக‌ கொள்ளைப்புற‌ம் சென்று உமி நிர‌ம்பியிருக்கும் சவுக்கு கூடையின் மேல் எடை போடாம‌ல் ஏறி,பூஸ்ட‌ரில் செருகியிருக்கும் கேபிள் வ‌ய‌ரை பிடுங்கி விட்டால், உள்ளிருந்து திட்ட‌ப்ப‌டி அம்மாவின் குர‌ல் வ‌ரும், "பேதில‌ போயிருவாய்ங்க‌..ந‌ல்ல‌து பொல்ல‌து பாக்க‌ விட‌மாட்டாய்ங்க..எப்பப் பாரு கேபிள் கரெண்டு கட்டு! ஏளா மெஹ‌ரு..அந்த‌ கேபிள்கார‌ய்ங்க‌ளுக்கு போன‌ போடுளா"..!!இது ஒரு வ‌கை.ஐந்தாம் தேதி த‌ர‌வேண்டிய‌ கேபிள் ப‌ண‌த்தை, எட்டு ப‌த்து ப‌தினைந்து வ‌ரை வேண்டுமென்றே இழுத்த‌டித்து அடிக்க‌டி வீட்டுக்கு வரவைத்து முக‌ம் பார்ப்ப‌து இன்னொரு வ‌கை.

ஏற்கென‌வே ப‌ல‌முறை இந்த‌ பிர‌ம்மாஸ்திர‌ங்க‌ள் ப‌ய‌ன்ப‌டுத்த‌ப்ப‌ட்டு தீர்ந்து விட்ட‌ன‌.ம‌திய‌ம் பள்ளிவாசல் தெரு வ‌ழியாக அவன் வ‌ரும் வாய்ப்புக‌ள் அதிக‌ம்.திண்ணையில் ப‌ர்மா கிழ‌வி க‌ண்ண‌ய‌ரும் நேர‌மாக பார்த்து க‌த‌விடுக்கில் ஒளிந்து கொண்டாள்.எல்லாம் ஓரிரு நொடிகள் குறுகுறுப்பு ப‌ர‌வ‌ச‌ பார்வைக‌ளுக்காக‌த் தானன்றி,அந்த பட்டிக்காட்டில் வேறென்ன வேறென்ன சாதித்து விடமுடியும்.நெற்றி விய‌ர்வை நீர்த்திவ‌லைக‌ள் பூத்து ஒவ்வொன்றாக‌ உதிர‌ தொட‌ங்கும் வேளையில்,ச‌ட்டென்று ச‌ருகில் தீப்பிடித்த‌தை போல் ஒரு ச‌ல‌ன‌ம்.துருப்பிடித்த அந்த‌ பெரிய‌ கேரிய‌ர் சைக்கிள் பெல்லின் கர்ர்முர்ர் சத்தம் நான்கு தெருக்க‌ளுக்கு அப்பால் இருந்து ஒலித்தாலும்,ஏதோ ஒரு அலைவ‌ரிசையில்,அதிர்வெண்ணில் அவ‌ள் காதுக‌ளை எட்டிவிடுகிற‌து.

தெப்பமாக மழையில் நனைந்திருந்த பச்சை புற்களின் மறைவில்,அந்த பழுப்பு நிற நத்தை அன்று பிறந்த குழந்தையை போல வளைந்து நெளிந்து,தன் ஓட்டுக்குள் உடலை புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌தும் புகுத்துவ‌தும் வெளிவ‌ருவ‌துமாய், அவ‌ளும் அவ‌ள் காத‌லும் க‌த‌விடுக்கில் அவ‌ன் வ‌ர‌வை எதிர்பார்த்து..!ந‌ம்ப‌ முடிய‌வில்லை.ஏழெட்டு மாத‌ங்களுக்கு முன்பிருந்த‌ நிலைமை இப்போது த‌லைகீழ். ப‌ள்ளி தோழிக‌ளிட‌ம் ஜான்சிராணி தொனியில் காத‌ல் எதிர்ப்பு வ‌ச‌ன‌ங்க‌ள் பேசிய‌தும்,பெண்ணிய‌ம் பற்றி கொட்டை எழுத்துகளில் க‌ட்டுரை எழுதிய‌தும் இந்த‌ வாயில்லா பூச்சியிட‌ம் தோற்க‌த்தானா? அப்ப‌டியென்ன அவ‌ன் மீது அப்ப‌டியொரு ஈர்ப்பு.பார்த்த‌வுட‌ன் வ‌சீக‌ரிக்கும் முக‌ம் கொண்ட‌வ‌னாக‌ இருந்தாலும் ப‌ர‌வாயில்லை.ப‌டிப்பு வாச‌னையும் கிடையாது.பிறகு எங்கிருந்து ஒட்டி கொண்டது அவன் சாயம் அவள் மேல்.

மாலை இருட்டும் வரை கால்கடுக்க நின்றது தான் மிச்சம்.கடைசி வரை அத்தெருவுக்குள் அவன் வரவே இல்லை.கோபத்தில் உதடுகள் துடித்தன.கண்கள் நிறைந்து விட்டன.என்ன தெரியும் அவனுக்கு.செக்குமாடு மாதிரி இர‌வு வ‌ரை சைக்கிள் மிதித்து,வீடு வீடாய் கேபிள் கனெக்ச‌ன் மட்டுந்தான் கொடுக்க‌த் தெரியும். கடந்த ஆறுமாதங்களாக இந்த கூத்து நடந்து கொண்டு தானிருக்கிறது.ஒவ்வொரு நாளும் இப்படித்தான் எதிர்பார்த்தபடியே ஏமாற்றுவான்.

தொண்டைக்குழியில் சோறு இறங்காமல் இருக்க சூன்யம் வைத்த அவன் மேல் கோபம் கோபமாக வரும். அவன் சைக்கிள் டயர் அச்சு படாத மணற்புழுதி பாலைவனச் சாயம் பூசிக்கொள்ளச் செய்யும்.நள்ளிரவில் தாழ்ப்பாள் திற‌க்காமல்,கனத்த மரக்கதவை உடைத்தெறிந்து, சொரட்டுபுள் வீட்டு திண்ணையில் படுத்துறங்குபவனின் சட்டை காலரைப் பிடித்து, "ஏண்டா என்ன தூங்க விடாம உயிர வாங்குற" என்று விழுங்க விழுங்க கேள்வி கேட்க வேண்டும் போலிருக்கும்.அவன் கண்களை பார்க்கும் கணம் மட்டும்,வெறுங்காலை ஈரப்புற்களில் நனைத்தது போல் உடல் எங்கும் சிலிர்க்கும்.அவளின் எல்லா நாட்களையும் அவனே உயிர்ப்பிப்பான்.

( வரவேற்பை பொறுத்து மீதி.......)

*******************************

Wednesday, July 8, 2009

உயர்ரக மந்திகள்


"இன்னிக்கும் ச‌ரியா க‌ழுவ‌ல.நேத்து சட்ட காலர்ல அழுக்கு அப்படியே இருந்துது.இன்னிக்கும் எல்லா த‌ட்டுல‌யும் கொழ‌ம்பு கற‌ ஒட்டிண்ருக்கு.ஒருநாள்,ரெண்டு நாள்னா பொறுத்துக்கலாம்.தினமுமா? இந்த‌ மாச‌ கூலிய கொடுத்துட்டு ச‌னிய‌ன‌ இதோட‌ த‌ல‌ முழுகிட‌ வேண்டிய‌து தான்" க‌ண‌வ‌னிட‌ம் பொரும ஆரம்பித்தாள் பார்வ‌தி.

"பாவம்டி அவ! அன்னிக்கே பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு சொல்லிட்ருந்தா.இந்த‌ நேர‌த்துல போயி அவ‌ள‌ நிப்பாட்ட‌ணும் நினைக்கிற‌து ச‌ரியாப்ப‌ட‌ல‌.உக்காத்தி வ‌ச்சி பேசிப்பாரு!! அவ‌ளுக்கு தேவையான‌த‌ செஞ்சி கொடு!!" அன‌ந்த‌ன் சொன்னதும் பார்வ‌திக்கு கொஞ்ச‌ம் விட்டுதான் பிடிக்க‌லாமென்று தோன்றிய‌து.

அன‌ந்த‌ன் பார்வ‌தி த‌ம்ப‌தியின‌ர் ஆர‌ஞ்ச் க‌வுண்டி அபார்ட்மென்டிற்கு குடிவ‌ந்த‌ இர‌ண்டு வ‌ருட‌ங்க‌ளாய் வேலைக்காரி லீலா தான் அவ‌ர்க‌ளுக்கு எல்லாம்...க‌ண‌வ‌ன் உட‌னிருந்த‌ வ‌ரை ஜாம்ஜாமென்று வாழ்ந்து கொண்டிருந்த‌வ‌ள் அவ‌னை விட்டு பிரிந்த‌தும்,நூல‌றுந்த‌ ப‌ட்ட‌ம் போல‌ ஆனாள்.வ‌யிற்று பிழைப்புக்காக‌வும் வீட்டு வாட‌கைக்காக‌வும் ம‌ட்டுமில்லாம‌ல் பிள்ளைக‌ளை ப‌டிக்க‌ வைத்து ந‌ல்ல‌ நிலைக்கு கொண்டு வ‌ர‌வேண்டும் என்ற‌ வைராக்கிய‌ம் அவ‌ளிட‌ம் அதிக‌ம் இருந்த‌து.

"மாச‌ சம்பளத்த‌ கூட்டி கொடுத்தா எந்த‌ வேலையையும் மொகஞ்சுழிக்காம‌ செய்வா!"

பி-பிளாக் கச்சபேஸ் சொன்னபோது தான் அனந்தனுக்கு லேசாக‌ பின்ம‌ண்டையில் ச‌ப‌ல‌ம் த‌ட்டிய‌து.நேற்று ஸ்டூல் மேல் ஏறி,ப‌ர‌ணிலிருந்த‌ எலிப்பொறியை எட்டி எடுக்கும்போது, க‌றுத்த‌ தேக‌த்தில் திமிரி கொண்டிருந்த‌ அவ‌ள் அழ‌கு அன‌ந்த‌னை நிலைகுலைய‌ வைத்த‌து.இது போன்று ப‌ல‌த‌ருண‌ங்க‌ள் அன‌ந்த‌னை உசுப்பி விட‌ ஆர‌ம்பித்த‌து.வேண்டுமென்றே தான் இப்ப‌டி உடைய‌ணிகிறாளா..இல்லை செய்யும் வேலையை போன்றே துணியுடுத்துவ‌திலும் அச‌ட்டை தானா?

ப‌ல‌நாள் ப‌சிக்கு இன்று தீனி போட்டுவிட‌ வேண்டுமென முடிவு செய்தான்.வெள்ளிக்கிழமை என்பதால் வழக்கம் போல‌ பார்வ‌தி கதாகாலட்சேபத்துக்கு சென்றிருப்பாள்.இந்த‌ வாய்ப்பை நழுவ விட்டால் திரும்ப‌ கிடைக்காது.பெர்ச‌ன‌ல் வொர்க் என‌ மேனேஜ‌ரிட‌ம் சொல்லிவிட்டு மதியம் 2 ம‌ணிக்கே கிள‌ம்பினான்.ஏடிஎம்மில் அட்டையை நுழைக்க‌ அது க‌த்தை க‌த்தையாக‌ நோட்டுக‌ளை உமிழ்ந்த‌து.

காலிங் பெல்லை அழுத்த‌ க‌த‌வை திறந்தது எதிர்பார்த்தபடி லீலாவே தான்.

"உட‌ம்பு ஏதும் ச‌ரியில்லீங்க‌ளாய்யா !! சீக்கிர‌ம் வ‌ந்துட்டீங்க‌" ....

"ஆமா லேசா த‌லைவ‌லி அதான்..." க‌த‌வை தாளிட்டான் அன‌ந்த‌ன்.

"இருங்க‌ய்யா நான் காபி போட்டு த‌ர்றேன்" ....லீலாவின் விய‌ர்வை வாடை அனந்தனை கிறங்கடித்தது

"உன் பைய‌னுக்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ காசு வேணும்னு சொன்ன‌ல்ல.அந்த‌ க‌றுப்பு பாலிதீன் பைக்குள்ள‌ வ‌ச்சிருக்கேன் எடுத்துக்க‌..

எனக்கு உன்ன‌ ரொம்ப‌ பிடிச்சிருக்கு லீலா..ஒரே ஒருமுறை...இன்னிக்கு ம‌ட்டும் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ.உன் பைய‌ன‌ கான்வெண்ட் ஸ்கூல்ல‌ ப‌டிக்க‌ வைக்க‌ப்போறியா...இல்ல கார்ப்ப‌ரேஷ‌ன் ஸ்கூல் போதுமா?.."

பின்புற‌மிருந்து லீலாவை க‌ட்டிய‌ணைக்க‌ முய‌ன்ற‌வ‌னை ப‌டாரென்று த‌ள்ளி விட்டு,முந்தானையை சரிசெய்து கொண்டு சுவற்றில் சரிந்தாள் லீலா.அவ‌ள் கண்கள் நிறைந்திருந்தன.

அரை நிமிட சுழற்சியை சட்டென நிறைவு செய்தது கடிகாரம்.

பெறும் கதறலுக்கு பின் தன்னை ஆசுவாசப்படுத்தி கொண்டு "வேணாம்யா...இந்த‌ அபார்ட்மென்ட் க‌ட்ட‌ற‌ நேர‌ம் இங்க‌ எல‌க்ட்ரீசிய‌ன் வேலைக்கு வ‌ந்த‌ புருசன் ஒரு சித்தாள் பொம்ப‌ள‌ கூட இருந்த‌ தொட‌ர்பால‌ தான், நான் இப்ப‌ ப‌த்து பாத்திர‌ம் தேய்க்க‌ வந்துருக்கேன்.எம்புள்ளைங்க‌ இன்னிக்கு அர‌வ‌யிறு காவ‌யிறு க‌ஞ்சிக்கும் க‌ஷ்ட‌ப்ப‌டுது.அந்த‌ நெல‌ம‌‌ பார்வ‌தி அம்மாவுக்கும் வ‌ர‌க்கூடாது.கிழிஞ்ச‌ சேலையோட‌ வ‌ந்த‌ நான் இன்னிக்கு க‌ட்டிட்ருக்க‌து அவ‌ங்க‌ளோட‌ சேலையத்தான்.என்கிட்ட‌ மிச்ச‌மிருக்கறது இது ஒன்னுதான்யா..என்ன‌ விட்ருங்க‌..நாளையிலிருந்து நான் வ‌ர‌ மாட்டேன்." க‌ண்ணீரை துடைத்து கொண்டு வெளியேறினாள்.

"காய‌வ‌ச்ச‌ துணியெல்லாம் மழையில நனைஞ்சிண்டுருக்கு..பாருங்க‌!!
இன்னிக்கும் துணிய‌ எடுக்காம‌ போயிட்டாளா?" த‌லையை துவ‌ட்டி கொண்டே வ‌ந்த பார்வ‌தியிட‌ம், "ஆமாண்டி.அவ‌ ச‌ரிப்ப‌ட்டு வ‌ர‌ மாட்டா.அழுக்கும் க‌றையும் இனிமே இருக்க‌க் கூடாதுன்னு நான் தான் அவள நாளையிலர்ந்து வேலைக்கி வ‌ர‌ வேணாம்னு சொல்லிட்டேன்."


*******************************

Tuesday, April 28, 2009

இளமை விகடனில் எனது சிறுகதை


நேற்று காலை நான் பதிவிட்ட "உச்சத்தை தொட்ட தினம்" சிறுகதை, தலைப்பை மட்டும் மாற்றி அனுப்பி வைத்திருந்தேன்.

படத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.நன்றி விகடன் !!!!

பதிவை பார்க்க கீழே சொடுக்குங்கள்.
குறையொன்றுமில்லை.