Showing posts with label வாசிப்பு. Show all posts
Showing posts with label வாசிப்பு. Show all posts

Monday, January 9, 2012

புத்தகத் திருவிழா 2012 ‍- எழுச்சியும் புறக்கணிப்பும்




நேர்காணல்களும் நலம் விசாரிப்புகளும் போராட்டங்களும் வெளியேற்றங்களும் மேடைப்பேச்சுகளும் என ஒரு மிகப்பெரிய ஆரவாரம், புத்தகத் திருவிழாவின் நுழைவாயிலிலிருந்து ஆரம்பிக்கிறது.சுற்று வட்டார‌ சாலைகளில் புத்தக திருவிழாவையொட்டி ஒரு சின்ன விளம்பர பலகை, சுவரொட்டி கூட தென்படவில்லை.தமிழ் நாட்டில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால், பெரிய அளவிலான விளம்பரம் தேவையிருக்காது என பபாசி கருதியிருக்கலாம். எழுத்தாளர்‍-வாசகர் சந்திப்புக்கென தனியே ஒரு ஸ்டால் அமைத்து நாள் குறித்திருக்கிறார்கள். எதாவதொரு பதிப்பகத்தின் முன் நடக்கும் 'கூடிக்கும்மி அடித்தல்' செல்லமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இக்காலத்து இளைஞர்களிடம் வாசிப்பு குறைந்து வருகிறது என சஞ்சலப்படுவோர் கவனிக்க வேண்டிய விஷயம், புத்தக கண்காட்சியில் அதிகமாக இளைஞர்களைத் தான் பார்க்க முடிகிறது. வேலை நாளான திங்கட் கிழமை கூட, படையெடுக்கின்றனர்.பெரும்பாலும் ரிபீட் ஆடியன்ஸூகளாக இருக்கிறார்கள். அருகாமையில் அமைந்த கரையிலோ கீழ்ப்பாக்கத்திலோ 15 நாட்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கக்கூடும். தினமும் வந்து கையெழுத்து போடுகின்றனர். நேர்காணலில் பங்கேற்கின்றனர். நின்று கொண்டே வாசிக்கின்றனர்.எஸ்.ராமகிருஷ்ணனைச் சுற்றி ஒரு இயக்கமே செயல்படுகிறது.சலிப்பு தட்டாமல் பேசிக்கொண்டே இருக்கிறார் மனிதர். நிச்சயமாக அவர் ஒரு சாக்ரட்டீஸ் தான்.

சென்ற ஆண்டு இருந்த மனநிலை இந்த முறை இல்லை.புனை கதைகளின் வாசிப்பில் ஒருவித தேக்க நிலையும் அயர்ச்சியும் உருவாகி விட்டதாக உணர்கிறேன். கிருஷ்ணபிரபு மாதிரியான ஆட்களைத் தவிர மற்ற யாருடனும் அதிகம் அளவளாவ பிடிக்கவில்லை.புனைவு இலக்கியங்களில் அதிகம் கவனம் செலுத்தக்கூடாது என தீர்மானம் இயற்றி விட்டுத் தான் புத்தக வேட்டையைத் துவக்கினேன்.மேலும் கிழக்கு, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்திருந்தேன்.இருப்பினும் யுவனின் குள்ளச்சித்தனுக்காகவே கிழக்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. தமிழினி வெளியீடாக முன்பு வந்ததை, கிழக்கு மீள்பதிப்பு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல, கோபி கிருஷ்ணனின் புத்தகங்கள் 'கடல்'லையே இல்லையாம்.

கீழைக்காற்று, பாரதி புத்தகாலயங்களில் பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முற்போக்கு கட்டுரைகள் நிரம்பிய குட்டி புத்தகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கங்கள். பாதசாரியின் 'பேய்க்கரும்பு', கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'மீன் குகை வாசிகள்' பார்த்த மாத்திரத்தில் வாங்கத் தூண்டியவை.தமிழ்மகனின் 'வெட்டுப்புலி', யூமா.வாசுகியின் 'மஞ்சள் வெயில்', யுவன் சந்திர சேகரின் 'மணற்கேணி' எதிர்பார்த்து வாங்க வேண்டியவை பட்டியலில் இடம் பெற்றிருந்தன. சிக்மண்ட் ஃபிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' உளவியல் வேட்கைக்கு தீர்வு அளித்திருக்கிறது.

காத்திரமான கட்டுரைகள் அடங்கிய புதிய கலாச்சாரத்தின் "கண்ணை மறைக்கும் காவிப்புழுதியும்", அரபி இலக்கியம் குறித்தான சாருநிவேதிதாவின் "தப்பு தாளங்களும்" மறக்காமல் வாங்கிக் கொண்டேன்.ஆண்டன் செகாவ் சிறுகதைகளும்,சாருவின் 'ஊரில் மிக அழகான பெண்ணும்'மொழிபெயர்ப்பு வரிசையில் சேர்ந்து கொண்டன. மற்றபடி,என் மனதிற்கு நெருக்கமான வண்ணதாசனின் "பெய்தலும் ஓய்தலும்" சிறுகதை தொகுப்பு இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கான‌ எனது தேடலை மனநிறைவுடன் இறுதி செய்திருக்கிறது.


இதுவரை வாங்கியவை:

1.பேய்க்கரும்பு - பாதசாரி / தமிழினி

2.மஞ்சள் வெயில் - யூமா.வாசுகி/அகல் பதிப்பகம் ( கருப்பு பிரதிகளில் கிடைக்கும் )

3.மீன்குகை வாசிகள் ‍ - கீரனூர் ஜாஹிர் ராஜா / ஆழி பப்ளிஷர்ஸ்

4.அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில் எம்.எஸ் / பாதரசம் வெளியீடு
( கீழைக்காற்றில் கிடைக்கும் )

5.கண்ணை மறைக்கும் காவிப்புழுதி ‍- புதிய கலாச்சாரம் கட்டுரைகள / கீழைக்காற்று

6.தலித் முஸ்லிம் - ஹெச்.ஜி.ரசூல் / பாரதி புத்தகாலயம்

7.சோஷலிச திட்டத்தில் கடந்த காலமும் எதிர்காலமும்‍ - பிரபாத் பட்நாயக் / பாரதி புத்தகாலயம்

8.பெண்ணியம் பேசலாம் வாங்க ‍- உ.வாசுகி / பாரதி புத்தகாலயம்

9.நக்சலிசம் புரட்சித் தத்துவமா ? ‍ - அனில் பிஸ்வாஸ் / பாரதி புத்தகாலயம்

10.கனவுகளின் விளக்கம் சிக்மண்ட் ஃபிராய்ட் - நாகூர் ரூமி /ஸ்நேகா பதிப்பகம் ( பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும் )

11.வெட்டுப்புலி - தமிழ்மகன் / உயிர்மை

12.தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா / உயிர்மை

13.மணற்கேணி - யுவன் சந்திரசேகர் / உயிர்மை

14.ஊரில் மிக அழகான பெண் மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் - சாருநிவேதிதா / உயிர்மை

15.பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன் / சந்தியா பதிப்பகம்

16.குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திர சேகர் / கிழக்கு பதிப்பகம்


*****************************

Monday, January 11, 2010

கேணி இலக்கிய சந்திப்பு,புத்தக கண்காட்சி சில குறிப்புகள்

கணிசமான தொகைக்கு இந்த வருடம் புத்தக சந்தையில் அள்ளியாகி விட்டது.வழக்கம் போலவே,வாங்க வேண்டும் என்ற நினைத்த பட்டியல் வேறு.புத்தக சந்தையில் நுழைந்த பின் உருவான பட்டியல் வேறு.மற்றபடி,அபிமான எழுத்தாளர்களான யுவன்சந்திரசேகர்,கோபி கிருஷ்ணன் இவர்களின் புத்தகங்களை வாங்க தவறவில்லை.நண்பர்கள் கேட்ட,பரிந்துரைத்த சில புத்தகங்கள் நிறைய கிடைக்கவில்லை.ஒவ்வொரு நாளும் பதிவுலக நண்பர்களை விழாவில் சந்தித்தது சுவாரஸியமான அனுபவம்.கிழக்கு வெளியீட்டில், ரகோத்தமன் எழுதிய ராஜீவ் காந்தியின் கொலைவழக்கு புத்தகத்தை அண்ணன் அப்துல்லா வாங்கி கையெழுத்திட்டு அன்பளித்தார்.

பதிவுலக நண்பர்களின் எழுத்துக்களை அச்சில் பார்த்ததும் ஏற்பட்ட பரவசம் சொல்லில் அடங்காது.

-------------

ஞாயிற்றுக்கிழமை ஹெவி மதிய உணவுக்கு பிறகு,பரபரப்பாக கிளம்பி,கலைஞர் நகர் ஞானியின் வீட்டை தாம‌த‌மாக‌ க‌ண்டடைந்தேன்.பதிவர் கிருஷ்ண‌பிர‌புவும் கைபேசியும் இல்லையென்றால்,விழா முடியும் போது தான் சேர்ந்திருப்பேன்.ச‌ரியாக‌ ஞானி வீட்டின் வாச‌லில் அடியெடுத்து வைக்கும் போது தான் க‌விஞ‌ர் சுகுமாற‌ன் ஒலிபெருக்கியையும் குர‌லையும் ச‌ரிசெய்து ஆர‌ம்பிக்கிறார்.வ‌ழ‌க்கமாக‌ ஞானி வீட்டின் கொல்லை புறத்தில் தான் ச‌ந்திப்பு ந‌ட‌க்கும் என்று கேள்வி.இம்முறை,அவ‌ர் வீட்டின் வ‌ர‌வேற்ப‌றையிலேயே ச‌ந்திப்பு ந‌ட‌ந்த‌து.

என‌க்கு முன் பாயில் ச‌ம்ம‌ண‌மிட்டு அம‌ர்ந்திருந்த ஒரு பெண்ம‌ணி,எக்க‌ச்ச‌க்க‌ ஒப்ப‌னையில்,க‌விஞ‌ர் சுகுமார‌ன் அவ‌ர்க‌ளின் உரையில் லயித்திருந்தார்.லைட்டா திரும்புங்க ஆண்ட்டி என்று ம‌ன‌திற்குள் சொன்ன‌து அவ‌ர் காதில் எப்ப‌டி விழுந்த‌து என்று தெரிய‌வில்லை.லேசாக திரும்பினால்,செய்தி வாசிப்பாள‌ரும் ந‌டிகையுமான‌ பாத்திமா பாபு.பிறகு,நேர‌ம் செல்ல‌ செல்ல எல்லா க‌வனச்சிதறல்களையும், தேநீர் பிஸ்கட் கேக் போன்ற வஸ்துக்களின் வாசனைகளையும் த‌ன் பேச்சு ஆளுமையால் சுகுமார‌ன் முழுவதுமாக ஆக்கிரமித்து விட்டார்.

ஒரு மீசைக்கார‌ க‌விஞ‌னின் ப‌டைப்பு தான் த‌ன்னை முத‌ன் முத‌லில் புர‌ட்டிப் போட்ட‌தாக‌வும்,அதுவே தான் எழுத வ‌ந்த‌மைக்கு முழுமுத‌ற்கார‌ண‌மும் என்று சொன்னார்.எழுத‌ வ‌ந்த‌ கால‌த்தில் க‌வியுல‌கில் அப்போது க‌ர‌காட்ட‌ம் ஆடிக் கொண்டிருந்த பிச்ச‌மூர்த்தி,த‌ர்மு சிவ‌ராமு,பிர‌மிள் இவ‌ர்க‌ளின் பாணி த‌ன்னுள் வராம‌ல் இருக்க பெருஞ்சிரத்தை எடுத்துக் கொண்ட‌தாக‌வும் தெரிவித்தார்.எழுத்தாள‌ர் பாஸ்க‌ர் ச‌க்தியும்,ஞானியும் புன்முறுவ‌லோடு கேட்டுக் கொண்டிருந்த‌ன‌ர்.

ச‌ரியாக ஐந்த‌ரை ம‌ணிக்கு ந‌ண்ப‌ர்க‌ளின் கேள்விக‌ளுக்கு இட‌ம‌ளிக்க‌ப்ப‌ட்ட‌து.மொழிபெய‌ர்ப்பு குறித்து கிருஷ்ண‌பிர‌பு கேட்ட‌போது,அதில் இருக்கும் ச‌ங்க‌ட‌ங்க‌ளை சுகுமார‌ன் எடுத்துரைக்க ஆர‌ம்பித்தார்.ம‌லையாள‌ எழுத்தாள‌ர் ப‌ஷீரின் க‌தைக‌ளை த‌மிழில் மொழிபெய‌ர்த்தல் எவ்வ‌ளவு ரிஸ்க் ஆன‌ காரிய‌ம் என்று தெரிவிக்க‌ப்ப‌ட்ட‌து."எண்ட உப்பப்பாட்ட ஒரு ஆன உண்டு" குறுநாவலை "என் தந்தையிடம் ஒரு யானை இருந்தது" என்று ஒருவர் தவறாக மொழிபெயர்த்த கதையையும் கூறினார்.இருந்தாலும் குள‌ச்ச‌ல் யூசுப்பின் மீது என‌க்கு ந‌ம்பிக்கையிருக்கிற‌து."உல‌கப்புக‌ழ் பெற்ற‌ மூக்கு" வாங்கி வைத்திருக்கிறேன்.பார்ப்போம்.

அர‌சிய‌ல் சார்ந்து உருவாக்க‌ப்ப‌ட்ட‌,க‌விதை இய‌க்க‌மான "வான‌ம்பாடி" குறித்து நிறைய‌ ச‌ர்ச்சைக‌ள் எழுந்த‌ன.பிற‌கு அந்த‌ ச‌ர்ச்சை,பெண் க‌விஞ‌ர்க‌ளான‌ ச‌ல்மா,குட்டி ரேவ‌தி,மால‌தி மைத்ரிக்கு தாவியது.ஞாநி,சென்ஷேன‌லைஸ் செய்வ‌து மீடியா தான் என்று வாதிட்டார்.பிற‌கு,கவிதை புரித‌ல் குறித்து நானும் என் ப‌ங்குக்கு ஒரு கேள்வி கேட்டேன்.சில‌ த‌மிழ் க‌விதைக‌ளுக்கே எங்க‌ளுக்கு மொழிபெய‌ர்ப்பு தேவைப்ப‌டுகிறது என்கிற ஆத‌ங்க‌த்தையும் சொன்னேன்.எல்.கே.ஜி குழ‌ந்தைக‌ளுக்கு, பிள‌ஸ் டூ பாட‌ப்புத்த‌க‌த்தை கொடுத்தால் புரித‌ல் எப்ப‌டியிருக்குமோ,அப்ப‌டித்தான் என்று ஞாநி க‌ருத்து தெரிவித்தார்.க‌விதைக்கும் என‌க்குமான‌ இடைவெளி குறைந்த‌ மாதிரி தெரிய‌வில்லை.

ராகுகால கூட்டம் என்ற பெயர் மாறி,இச்சந்திப்பு இன்று ஒரு பிடிவாத கூட்டமாக அமைந்திருக்கிறது.புத்தக கண்காட்சி போன்ற பரபரப்புகளுக்கு மத்தியில் இத்தனை பெரிய கூட்டம் வந்திருப்பது மகிழ்வைத் தருகிறது என‌வும் சில நாட்களுக்கு முன்னர் தான்,இதய அறுவை சிகிச்சை முடிந்திருந்தாலும் பிடிவாதமாக இம்மாத கேணி சந்திப்பை நடத்தியே ஆக வேண்டும் என்று வெற்றிகரமாக நடத்திய ஞாநி அவர்களுக்கும்,கவிஞர் சுகுமாரன் அவர்களுக்கும் பாஸ்கர் சக்தி நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

சந்திப்பு கலைந்து,நானும் கிருஷ்ணபிரபுவும் சில கவிஞர்களுமாக சேர்ந்து,சரவணபவனில் காபியுடன் ஒரு சிறு இலக்கிய கலந்துரையாடலில் பங்கேற்றது புதிய அனுபவம்.

*******

Monday, October 19, 2009

முக‌த்தில் அறைந்த‌ க‌விதை ஒன்று




எழுத்துல‌கில் வெகு அபூர்வ‌மாக‌த்தான் நிக‌ழ்கின்றன‌ இது போன்ற‌ ப‌டைப்புக‌ள்.கவிஞ‌ர் ச‌ல்மாவின் க‌விதைக‌ள் பெரும்பாலும் பெண்க‌ளின் வாழ்விய‌ல் போராட்ட‌ங்க‌ளையும் அவ‌ல‌ங்க‌ளையும் உண‌ர்வுப்பூர்வ‌மாக எடுத்துரைக்கும்.அப்ப‌டிப்ப‌ட்ட‌ க‌விதைக‌ளுள் ஒன்று அதிகாலையில் பார்த்த மாத்திரத்திலென் முகத்திலறைந்தது.அந்த அதிர்ச்சியிலிருந்து இன்னும் நான் மீள வில்லை.


இரண்டாம் ஜாமத்துக் கதை
****************************

குழந்தைகளைப் பெற்றதற்குப் பிந்தைய

இரவுகளில்

பழகிய நிர்வாணத்திற்கிடையில்

அதிருப்தியுற்றுத் தேடுகிறாய்

என் அழகின் களங்கமின்மையை



பெருத்த உடலும்

பிரசவக் கோடுகள் நிரம்பிய வயிறும்

ரொம்பவும்தான் அருவருப்பூட்டுவதாய்ச்

சொல்கிறாய்

இன்றும் இனியும்

எப்போதும் மாறுவதில்லை எனது உடலென்றும்



நிசப்தத்தின் பள்ளத்தாக்கில்

புதையுண்டிருக்கும் என் குரல்

தனக்குள்ளாகவே முனகிக்கொண்டிருக்கும்

உண்மைதான்

என் உடலைப் போலல்ல

உன்னுடையது

பறைசாற்றிக்கொள்வதில்

வெளிப்படையாக இருப்பதில்



இதற்கு முன்னும்கூட

உன் குழந்தைகள் வேறு எங்கெங்கோ

யார் யாருக்கோ பிறந்திருக்கலாம்

உன்னிடம் தடயங்களில்லை என்பதால்

நீ பெருமைகொள்ளலாம்



நான் என்ன செய்ய?

என் நசிவைப் போலத்தான்

இந்தப் பிரசவக் கோடுகளும்

எளிதில் செப்பனிட முடிவதில்லை

வெட்டி ஒட்டிவிட இவ்வுடல் காகிதமில்லை



உன்னைக் காட்டிலும்

மோசமான துரோகத்தினைப் புரிந்திருக்கிறது

இயற்கை எனக்கு

உன்னிலிருந்துதானே தொடங்கிற்று

எனது தோல்வியின் முதலாவது நிலை



முதல் ஜாமத்தைக் காட்டிலும்

விபமுதமானது

கனவுகள் பெருகும் இரண்டாம் ஜாமம்



சுவரோவியத்தில் அமைதியாக

அமர்ந்திருந்த புலி

இவ்விரண்டாம் ஜாமத்தில்தான்

என் தலைமாட்டிலமர்ந்து

உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கிறது


************************

Wednesday, September 23, 2009

சிறுகதை பட்டறையும், நான் ரசித்த சிறுகதைகளும்

சிறுக‌தை ப‌ட்ட‌றையில் க‌ல‌ந்து கொள்ள‌ முடிய‌வில்லையே என்ற வ‌ருத்த‌ம் நேற்றோடு த‌ணிந்த‌து.ப‌த்ரி அவ‌ர்க‌ள் அவ‌ர‌து வ‌லையில் சிறுக‌தை ப‌ட்ட‌றையின் ஆடியோ/வீடியோ இர‌ண்டையும் ப‌திவு செய்து சுட்டியும் கொடுத்திருக்கிறார்.

இங்கே சொடுக்குக‌ !

அதிலும் குறிப்பாக‌ பா.ராக‌வ‌னின் தொடக்க நிலை எழுத்தாளர்களுக்கான செஷன், ஸ்லைடு ஷோவோடு தெளிவாக‌ வ‌ந்திருக்கிற‌து.(வீடியோ கிடையாது)

அவ‌ர் சொன்ன‌ விஷ‌ய‌ங்க‌ள் வெகுச‌ன‌ இத‌ழ்க‌ளில் எழுத‌ நினைக்கும் ப‌திவ‌ர்க‌ளுக்கு மிக‌வும் ப‌ய‌ன‌ளிப்ப‌தாக‌ இருந்த‌து.குறிப்பாக‌ "உங்க‌ளுக்கு பிடித்த‌ சிறுக‌தைக‌ளை அல‌சி ஆராய்ந்து ஏன் உங்க‌ளுக்கு அந்த‌ க‌தைக‌ள் பிடித்திருந்த‌து என‌ க‌ட்டுடைத்து பாருங்க‌ள்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.அவ்வாறே செய்து பார்க்க‌லாம் என‌வும் தோன்றிய‌து.அத‌ன்ப‌டி நான் மிகவும் ர‌சித்த,என்னை மிக‌வும் பாதித்த‌ சிறுக‌தைக‌ளை ப‌ட்டிய‌லிட்டிருக்கிறேன்.வாய்ப்பு கிடைத்தால் இவைக‌ளையும் வாசித்து பார்க்க‌வும்.மேலும் நீங்க‌ள் இந்த‌ சிறுக‌தைக‌ளை ஏற்கென‌வே ப‌டித்திருந்தாலும் பின்னூட்ட‌த்தில் ப‌கிர்ந்து கொள்ள‌லாம்.ம‌ற்ற‌வ‌ர்க‌ளும் தெரிந்து கொள்ள‌ வ‌ச‌தியாக‌ இருக்கும்.

1) செவ்வாழை அண்ணாதுரை
2) ந‌க‌ர‌ம் சுஜாதா
3) தீவுக‌ள் க‌ரையேறுகின்ற‌ன‌ சுஜாதா
4) பாட்டையா மேலாண்மை பொன்னுச்சாமி
5) பாய‌ம்மா பிர‌ப‌ஞ்ச‌ன்
6) புய‌ல் அகில‌ன்
7) பொம்மை ஜெய‌காந்தன்
8) க‌த‌வு கி.ரா
9) இன்னும் கிளிக‌ள் மாத‌வ‌ராஜ்
10) ஐந்தில் நான்கு நாஞ்சில் நாட‌ன்
11) குற‌ட்டை ஒலி டாக்ட‌ர் மு.வ‌ர‌த‌ராச‌னார்
12) கால்க‌ள் சுஜாதா
13) இந்த‌ ந‌க‌ரிலும் ப‌ற‌வைக‌ள் இருக்கின்ற‌ன‌ எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
14) ந‌ட‌ந்து செல்லும் நீருற்று எஸ்.ராம‌கிருஷ்ண‌ன்
15) சிவப்பா உய‌ர‌மா மீசை வ‌ச்சுக்காம‌ ஆத‌வ‌ன்
16) ஒரு அறையில் இர‌ண்டு நாற்காலிக‌ள் ஆத‌வ‌ன்
17) பீங்கான் நாரைக‌ள் எஸ்.ராமகிருஷ்ண‌ன்
18) ம‌ண்குட‌ம் மாத‌வ‌ராஜ்
19) த‌வ‌ம் அய்க்க‌ண்
20) ப‌ல்லி மெல‌ட்டூர் ந‌ட‌ராச‌ன்
21) ஸார் நாம‌ போயாக‌ணும் ச‌த்ய‌ராஜ்குமார்

இந்த‌ க‌தைக‌ளை நான் ப‌டித்த‌ கால‌க‌ட்ட‌ங்க‌ள் வேறுவேறாக‌ இருப்ப‌தால் எந்த‌ குறிப்புக‌ளுமின்றி
நினைவில் வைத்தே எழுதுகிறேன்.ஆசிரிய‌ர்-க‌தைக‌ள் பெய‌ர்க‌ள் த‌வறெனில் பின்னூட்ட‌த்தில் தெரிவிக்க‌லாம்.

கி.ரா,ஆத‌வ‌ன்,ஜெய‌காந்த‌ன்,சுஜாதா இவ‌ர்க‌ளின் க‌தைக‌ள் ஏறத்தாழ‌ அனைத்துமே குறிப்பிட‌த்த‌க்க‌வை.அவைக‌ளை த‌னித்த‌னியாக‌ அல‌ச‌வும் திட்ட‌மிட்டிருக்கிறேன்.இணைந்திருங்க‌ள்.

***********