பொடி கடை,பாண்டியன் பலசரக்கு, விதை உரம் பூச்சி மருந்து கடை,அமுதலிங்கேஸ்வரர் திருக்கோயில்,கோயில் சாவி எதிரே உள்ள பட்டறையில் இருக்கிறது இரும்பு பலகை,ஆழாக்கரிசி வணிக வளாகம்,சுலைகா மர இழைப்பகம்,அச்சம்மாள் கிளினிக், ஃபிரண்ட்ஸ் புரோட்டா கடை, மிட்டாய் கடை,உப்புமா,கேசரி விற்கப்படும் ஒரு டீக்கடை சன்னல் வழி பார்த்தபடியே வந்த களிப்பில் கமுதியில் இருந்து அருப்புக்கோட்டை வரை பயணித்த பேருந்து களைப்பு சற்று தணிந்திருந்தது.
பலமுறை தண்ணீர் தெளித்து அயர்ன் செய்த புது சட்டை முதுகுப்புறம் சாய்ந்து அமர்ந்ததில் நிறைய கசங்கியிருந்தது.வெயிலின் உக்கிரம் புது பேருந்து நிலைய பாத்திரக்கடையின் எவர்சில்வர் குடக்கண்ணாடியில் முகத்தை இன்னும் கருப்பாகக் காட்டியது.பெரியப்பாவும் மாமாவும் சாத்துக்குடி,ஆப்பிள் வாங்க பழக்கடைகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்.அப்பா எதிரே உள்ள மிட்டாய் கடையில் லட்டுகளை அட்டைப்பெட்டியில் "எம்புட்டுண்ணே" பெண்ணிடம் வெகுசீராக அடுக்க உதவிக் கொண்டிருந்தார்.அம்மாவும் சித்தியும் சர்பத் குடித்துக் கொண்டிருந்தார்கள். ஐஎஸ்ஐ முத்திரை இல்லா தண்ணீர் பாக்கெட் வாங்கி முகத்தில் அறைந்து கழுவி, தலை சீவி கைக்குட்டையில் துடைத்து துடைத்து சற்று வெளுப்பாக்கிக் கொள்கிற தலையாய முயற்சியில் மதியம் மணி ஒன்றைத் தாண்டியது. மாப்பிள்ளை என்ற ஒரு காரணத்திற்காக அன்று மட்டும் கொஞ்சம் என்னை மரியாதையோடு பார்ப்பதற்கான ஒப்பந்தத்தை தம்பி ஏற்றுக் கொண்டிருந்தான்.முகம் கழுவ அவன் தான் தண்ணீர் பாக்கெட்டை உள்ளங்கையில் பீய்ச்சினான்.
பல்முனை ஆயத்தங்கள் நிறைவு பெற்று உறவினர் அனைவரும் ஓரிடத்தில் கூடி, பெண் வீட்டை நோக்கி மூங்கில் கைப்பிடி வைத்த பைகளோடு நடக்கத் தொடங்கியிருந்தோம்.லேசாக மழை தூர ஆரம்பித்தது.எப்போதுமில்லா பதற்றமும் குறுகுறுப்பும் பலமுறை சீராக சீவியச் சிகையை மீண்டும் மீண்டும் சீவத் தூண்டியது. மணக்கப்போகும் பெண்ணைப் பார்ப்பதற்கு முன்பே நெய்சோறும் கோழி வறுவலும் பரிமாறப்பட்டு உள்ளூர் அஸ்ரத்து தூவா ஓதி அங்கேயே நிச்சயம் முடிந்து, திருமணத் தேதி குறிக்கப்பட்டது. பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவர் என் சம்பளம் எவ்வளவு என்பதை தெரிந்து கொள்வதில் மிகுந்த சிரத்தையோடு இருந்தார்.வாசலில் நின்றிருந்த வேப்பமரத்திற்கடியில் இரண்டு ஆட்டிக் குட்டிகள் ஓயாமல் கரகரவென்று கத்திக் கொண்டேயிருந்தன. தெரு வீட்டிலிருந்து சற்றே கண் அகற்றிப் பார்த்தால் வீட்டின் உள்ளறையிலிருந்து நான்கைந்து பெண்கள் சலசலக்கும் புடவை கொலுசு சத்தத்தில் வருவதும் போவதுமாக இருந்தார்கள். இதில் யார் மணப்பெண்ணாக இருக்கும் என்று யூகிக்கலாமா என்று யோசிப்பதற்குள், நொடிகளை எண்ணி மணவாட்டியைக் காண்பித்து அவசர கதியில் மதுரைக்கு என்னை பஸ் ஏற்றி விட்டார்கள்.
மாட்டுத்தாவணியிலிருந்து சென்னை செல்லும் அரசு பேருந்தில் கனவுகளும் எதிர்பார்ப்புகளும் கூடவே ஏறிக் கொண்டன.அடர்ந்த வேப்பமரமொன்றும் மரச்சட்டம் பொருத்தப்பட்ட திண்ணையும் அதில் தனது இஷ்டம் போல விரிந்திருந்த மணி பிளாண்ட் கொடியின் பச்சை இலைகளும், மங்கலாக ஒரு பெண்ணின் முகமும் மனமெங்கும் நிறைந்திருந்தன.வாகன இரைச்சலையும் தாண்டி, ஒரு ஆட்டிக் குட்டியின் கரைச்சல் காதில் இடைவிடாமல் ஒலித்துக் கொண்டேயிருந்தது. எட்டாம் வகுப்பில் முதல் ரேங்க் வாங்கியதற்கு பரிசாக அப்பா வாங்கி கொடுத்த மீன்குஞ்சுகளை ஆவலோடு தொடும் போது ஏற்பட்ட ஒரு இனம்புரியாத பதற்றமும் சந்தோசமும் முதன் முதலாக அவளைப் பார்த்தபோது ஏற்பட்டது.ஒரு சேரில் அமர்த்தி அவள் வாயில் சீனி போடச் சொன்னார்கள்.மீண்டும் அவளை எனக்கு சீனி போடுமாறு சொல்லி என்னை அமரச் செய்தார்கள்.உறவினர்கள் பகடியும் புன்னகையுமாக மாறி மாறி ஒரு கனவு போல அந்த காட்சி நகர்ந்து கொண்டிருந்தது.பேருந்து திண்டுக்கல் தாண்டியும் தூக்கமே வரவில்லை.
ஆண்பிள்ளை என்பதால் தாத்தா பாட்டி முதற்கொண்டு குஞ்சு குளுவான்கள் வரை புது டிரெஸ் எடுத்துக் கொடுக்க வேண்டும்.நல்ல சூட் தைக்க வேண்டும்.காலனி கொஞ்சம் குதிகால் உயரமாக பார்க்கவேண்டும். இதில் அசட்டையாக இருந்தால் அவள் என்னைவிட ஒரு இஞ்ச் அதிகமாகத் தெரியக்கூடிய வாய்ப்புகள் பிரகாசமாக இருந்தன.இரண்டு அக்காளுக்கும் காஞ்சிபுரத்தில் உயர்ந்த விலையில் பட்டு புடவை வாங்கித் தர வேண்டும். மணப்பெண் மஹருக்கு நகை வாங்க வேண்டும்.எத்தனை பவுன் என்பதை தீர்மானிக்க வேண்டும். எல்லா செலவுகளையும் சமாளிக்க வங்கியில் லோன் எடுக்க வேண்டும். வட்டியாக மாதச் சம்பளத்தில் இருந்து எவ்வளவு பிடிப்பான் என்ற கவலை, வெள்ளை சட்டையில் காக்காய் எச்சம் போல பொத்தென்று தெறித்து அநாவசியமாக தொற்றிக் கொண்டது.சட்டென உதறிவிட்டு, மீண்டும் திருமணக் கனவு என்னை உள்ளிழுத்து தாழ்பாளிட்டது.
பார்த்தவுடன் கவர்ந்துவிடும் வசீகர முகம் கொண்டவனில்லை என்பதால் அவளுக்கு என்னைப் பிடித்திருக்குமா? எந்த அளவுகோல் கொண்டு என்னை மதிப்பீடு செய்திருப்பாள், அவளின் உறவினர்கள் எப்படியான விமரிசனத்தை அவளிடம் வைப்பார்கள், திருமணத் தேதி வரையில் இடையில் இருக்கும் சொற்ப நாட்களில் பேச வாய்ப்பு கிடைக்குமா,யாரிடம் சொல்லி அலைபேசி எண் வாங்குவது,என்னென்ன பேசுவது,பழைய கதைகளையெல்லாம் சொல்லித் தொலைப்பதா இல்லை மறைப்பதா,என்னைப் போலவே புத்தகம் வாசிக்கும் பழக்கமிருக்குமா, சாலையில் சிதறியிருக்கும் சிறுபூக்களை பொறுக்குபவளாயிருப்பாளா ? கவிதைகள் பிடிக்குமா, மழையை ரசிப்பவளாயிருப்பாளா,ஏதேனும் ஒரு சிறுகதையையாவது வாசித்திருக்கக்கூடுமா. பேருந்து தாம்பரம் தாண்டியிருந்தது.
அவள் வீட்டு நிலைக்கண்ணாடியும் தூண்களும் நூறு வருட பழைய கடிகாரமும் எப்போதும் என்னைச் சுற்றியிருந்தன.நகரம் அழகாகத் தெரிந்தது.அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் மின்சார ரயிலில் எல்லோரும் அழகாகத் தெரிந்தார்கள்.குறுந்தகவலில் கவிதைகளோடு நிறைய பரிமாறத் தொடங்கியிருந்த நாட்கள்.காணாமல் போன குருவியொன்று என் வீட்டு தென்னை மரத்தில் மீண்டும் கூடுகட்ட ஆரம்பித்திருந்தது.'இன்னும் எத்தன நாள் இருக்கு..சொல்லு பாப்போம்'. திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டே இருந்தாள்.பதிலையும் அவளாகவே சொல்வதைத் தான் விரும்புவாள்.அதில் இருந்த குழந்தைமையும் சந்தோசமும் இன்று வரை மாறாதவை. வண்ணதாசன் எழுதிய வரிகள் நினைவுக்கு அடிக்கடி வருகிறது.சமீப நாட்களில், நான் வீட்டுக்கு வெளியே இத்தனை உயரம் பறந்ததில்லை.
------
வைர மோதிரமோ,சலவைக்கல் மாளிகையோ,இறக்குமதி செய்யப்பட்ட காரோ வாங்கித் தர இயலாதவனாய் இருந்தும் என்னை சகித்துக் கொண்டும் நான் எப்படி இருக்கிறேனோ அப்படியே என்னை ஏற்றுக் கொண்டும், உலகின் பரிவு அனைத்தையும் எனக்காக தன் கண்களில் எப்போதும் சேமித்து வைத்திருக்கும் என் அன்பு மனைவிக்கு.
*****************
9 comments:
Gud one Machi.... You and Hamsia, made for each other...!
word is an art மீண்டும் நீருபீத்து இருக்கிறாய்..எதார்த்தம் கூட இத்தனை அழகாய் சித்தரிக்கப்படுகிறது உன் எழுத்தால். நேசிக்கும் மனம் ஒன்று இருந்தால் போதும் எல்லாம் இனி வாழ்வில் எல்லாம் சுகமே....இன்று போல் என்றும் நேசிங்க சையத்...ரொம்ப நாளுக்கு பிறகு வாசிக்க செய்தமைக்கும் நன்றிகள்..
பாஸ், முதலாமாண்டு திருமண நாள் சிறப்புப் பதிவா? :-)))))))
உங்க முழு பதிவையும் படிப்பதை விட
கடைசியில் கொஞ்சம் எழுதியிருக்கீங்க பாருங்க, அது போதும்
:)
வல்ல ஏகன் அல்லாஹ் இந்த நிலையை என்றென்றும் தந்தருள்வானாக - ஆமின்
@Nana...Thanks Machi...
@தமிழரசி....நன்றி
@ஹூசைனம்மா...ஆமாங்க..!
@நன்றி ஜமால்..!
எல்லாமே மிகவும் அவசியமான தகவல்கள். நான் spicytec.com எனும் ஆங்கில ப்ளாக் ஐ நடாத்தி வருகிறேன். தமிழும் அதை பிரபல்யப் படுத்த முயற்சி செய்கிறேன். "தமிழில் தொளினுட்பம்" எனும் தலைப்பில் http://tamilspicytec.blogspot.com/ எனும் ப்ளாக் ஐ ஆரம்பித்து உள்ளேன். உங்களது ஆதரவை எதிர் பார்க்கிறேன். நன்றி..
salams sayed....was reading your posts after a long time..good..my best wishes and prayers to you both..
Nalla iruukku..
Post a Comment