Sunday, May 17, 2009

ஷேர் ஆட்டோ கவிதை பயணங்கள்



பீக் அவ‌ர்ஸ்லில் பேருந்துக்காக காத்திருக்கும் பரபரப்பான காலைப் பொழுதுக‌ளில்,பத்து ரூபாய் கணக்கு பார்க்காமல்,ஒரு சில அசெளகரியங்களையும் அலட்டி கொள்ளாமல்,ஷேர் ஆட்டோக்க‌ளை நாடும் கணவான்கள்,குறித்த‌ நேர‌த்தில் இல‌க்கை அடைத‌லோடு ம‌ட்டுமின்றி, இன்னும் ப‌ல‌ சுவார‌ஸிய‌மான‌ சுகானுபவ‌ங்க‌ளை பெறுகிறார்க‌ள்.

என்னைப் பொறுத்த‌ம‌ட்டில் சென்னையின் ம‌ற்ற ப‌குதிக‌ளைக் காட்டிலும்,வ‌ட‌சென்னை ராய‌புர‌ம்,பீச் ஸ்டேஷ‌ன் மற்றும் வியாச‌ர்பாடி ஏரியாக்க‌ளில் ஷேர் ஆட்டோக்க‌ளில் ப‌ய‌ண‌ம் செய்தலே அலாதியானது.பாகுபாடுக‌ளின்றி,நடுத்த‌ர‌ வ‌ர்க்க‌ நாதாரிகளுக்காக‌வே உருவாக்க‌ப்பட்ட‌ தேர் இந்த‌ "ஷேர்" ஆட்டோக்க‌ள்.

க‌ட்டுப்பாடுக‌ளும்,பார‌ம்ப‌ரிய‌மும் மிக்க‌ த‌மிழ் க‌லாச்சார ஏடுக‌ளின் வரலாற்றில் ஆணும் பெண்ணும் அருகருகே அமர்ந்து பயணம் செய்யும் சமத்துவத்தை கொணர்ந்து, ஒரு மாபெரும் புரட்சி செய்த பெருமை சென்னை ஷேர் ஆட்டோக்களையே சாரும்.

ஷேர் ஆட்டோக்க‌ள் அறிமுக‌ப் ப‌டுத்த‌ப்ப‌ட்ட கால‌கட்ட‌ங்க‌ளில்,குறைந்த‌ க‌ட்ட‌ண‌த்தில் கார் ஸ்டிய‌ரிங் வைத்த‌ விக்ர‌ம் மினிடோர் ஆட்டோக்க‌ள் தான் முத‌லில் மாந‌கராட்சியை வ‌ல‌ம் வ‌ந்த‌ன‌.நாங்க‌ள் அதை மூட்டைப்பூச்சி ஆட்டோ என்று செல்ல‌மாக‌ அழைப்போம்.

ஆறு பேர் ம‌ட்டுமே அமர‌லாம் என்ற‌ ச‌ட்ட‌ங்க‌ளை மீறி, அதிக‌ப‌ட்ச‌ம் ட‌ச‌ன் ஆட்க‌ளை உள்ளே திணித்துகொண்டு, குறுக‌லான‌ ச‌ந்துக‌ளில் கூட, மொனோக்கோ கிராண்ட்பிரீயில், மைக்கேல் ஷீமாக்கர்க‌ளாக‌ சீறிப் பாயும் நம்மூர் ஷேர் ஆட்டோ டிரைவர்களின் சாகசங்கள் எண்ணிலடங்கா.

இர‌ண்டாவ‌து சிக்ன‌லில் நிற்கும் போதே, மூன்றாவ‌து சிக்ன‌லில் இருக்கும் டிராபிக் மாமாவின் இருப்பு முன்கூட்டியே அலைபேசியில் ந‌ம்ம‌வ‌ர்க்கு தெரிவிக்க‌ப்பட்டு விடும்.மாமாவின் க‌ண்க‌ளில் ம‌ண்ணைத் தூவிவிட்டு,ஸ்டிய‌ரிங்கை ஒரு சுழ‌ற்று சுழ‌ற்றி த‌ப்பிக்கும் திக் திக் நிமிட‌ங்களும், மயிர்கூச்செறிய செய்யும் ஒரு திரில்ல‌ர் ப‌ட‌ம் பார்த்த‌ அனுப‌வமும் ப‌ய‌ணிக‌ளுக்கு இல‌வ‌ச‌ம்.

நமீதா,மும்தாஜுக்கு பிறகு அதிகம் குலுக்கியவர்கள் பட்டியலில் நம்மூர் ஷேர் ஆட்டோ ஓட்டுநர்களைத் தான் சொல்ல வேண்டும்.அத்த‌னை ந‌ளின‌ம்.ப‌ல‌பேருக்கு அது ஊஞ்ச‌லாக‌ ம‌ட்டுமே இருக்கும்.

தாலிக‌ட்டிய‌ ம‌னைவியோடு கூட‌ அத்த‌னை நெருக்க‌மாக‌ அம‌ர்ந்து போயிருக்க‌ மாட்டோம்.அவ்வள‌வு அன்யோன்ய‌ம்.ப‌ழ‌க்கப் ப‌ட்ட‌வ‌ர்க‌ளாயிருந்தால் ப‌ர‌வாயில்லை.ஆனால் புதிதாய் ஷேர் ஆட்டோக்க‌ளில் ஏறுபவர்கள் பாடு தான் திண்டாட்டம்.கூனி கூசி குறுகிப்போய் மனிதர் ஒரு ஓரமாக கால்களை மடக்கி அமர்ந்திருப்பார் பக்கத்தில் பூ கட்டி கொண்டிருக்கும் நம்ம மி(மு)னிமா அக்காவின் வசைகளை கேட்டபடி.

இந்த அலப்பறைகளை குவியாடியில் பார்த்து கொண்டே,டிரைவரின் இடதுபுறம் அசோக‌ சின்ன‌த்தின் சிங்க‌ம் போல‌ தவுலத்தாக‌ அம‌ர்ந்து கொண்டு, "மின்ட்ட்டூ..ஸ்டான்லீ..ஆர்ட்ஸ் காலேய்ய்ய்ஜே" என‌ நாமும் சில‌நேர‌ங்க‌ளில் கூவி, பார்டைம் ஷேர் ஆட்டோ க‌ண்ட‌க்ட‌ர் வேலை பார்ப்ப‌து ம‌ன‌துக்கு ஒரு இந்த‌ஸ்தை அளிக்குமென்ப‌தில் ஐய‌மில்லை.

ச‌ம‌ய‌ங்க‌ளில்,பாதிவ‌ழியிலே ந‌ம்ம‌ தேர் பிரேக் ட‌வுன் ஆக,ஃபார்ம‌லான‌ உடையில், மென்பொருள் ஐடி கார்டுக‌ளோடு நாமும் இற‌ங்கி த‌ள்ள‌ வேண்டிய‌ நிர்ப‌ந்தத்துக்கு ஆளாக்க‌ப்ப‌டுகிறோம் என்றாலும், உள்ளே மேல்த‌ள‌த்தில் அம‌ர்ந்திருக்கும் சிட்டுக்குருவிக‌ளின் புன்ன‌கைக‌ளை ப‌ரிசில் பெறுகிறோம் என்ற‌ ஒரு உண்மையை க‌ருத்தில் கொள்ள‌ வேண்டும்.

இந்த அரைம‌ணி நேர‌ அற்புத‌ ப‌ய‌ணங்களில் குறைந்த பட்சம் ஒரு சிறுக‌தைக்கான‌ க‌ரு நிச்சயம் கிடைத்து விடும்.முக‌ம் பார்க்க‌ முடியாவிட்டாலும் உள்ளூர‌ ஒரு நெருக்க‌த்தோடு அம‌ர்ந்திருக்கும் ம‌னித‌ர்க‌ள் தான் எத்த‌னை ர‌க‌ம்?

அத்த‌னை பேரையும் ஒரு க‌ட்ட‌த்தில் ஒன்றாக்கி விடுவ‌து இந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ள் மட்டுமே.

சென்னை ந‌க‌ர‌ ம‌க்க‌ளின் அன்றாட வாழ்வில் இர‌ண்ட‌ற‌ க‌ல‌ந்த‌ ஷேர் ஆட்டோக்க‌ளுக்கு,
கழிப்பறையில் அமர்ந்த வண்ணம் கனநேரத்தில் யோசித்து எழுதிய இக்கவுஜையை அர்ப்பணிக்கிறேன்.

தட தட சத்தமும்
வியர்வை கலந்த டீசல் வாடையும்
இரண்டாம் தளத்தில் அமர்ந்திருக்கும் போது
'பின்னால்' குத்தும் ஆணியும்
முதுகில் மிதிக்கும் இளம்பெண்களின் செருப்பும்
அவ்வ‌ப்போது நிக‌ழும் விப‌ரீத‌ விப‌த்துக‌ளும்
"அஞ்சுர்பா சில்ற‌ இல்யா ??........"


மத்தியதர வர்க்க வாழ்வியலின் த‌விர்க்க‌ முடியா அடையாள‌ங்க‌ள்.

******************************************************************

Monday, May 11, 2009

சில்லறை சித்தாந்தம் !


எப்போது ஆரம்பிக்கும் என்று
அவனுக்கு தெரியவே தெரியாது.

விவரம் தெரிந்த நாளிலிருந்தோ
பொம்மைகளினூடோ
புத்தகப் பையிலோ
பக்கத்து வீட்டு பெண்ணிலோ
வளையல் துண்டுகளிலோ
அலுவலகத்திலோ
படுக்கையிலோ
கனவிலோ
ஏதேனுமொன்றை
தேடி கொண்டிருப்பதே அவனுக்கு வாடிக்கை.

தேடியவை கிடைத்துவிடும்
ஒவ்வொரு முறையும் முதலில் மறந்து விடுவான்.
நிறுத்த வேண்டியது தேடுதல் என்பதை.

அவனை பொறுத்த மட்டில்,
சாகாவரம் பெற்றது அவனுடைய‌
தேடல் மட்டுமே.



Wednesday, May 6, 2009

இஸ்லாத்திலும் சாதிகளை புகுத்தாதீர் !!

முஸ்லிம் அல்லாத‌ சகோதரர்கள் மட்டுமின்றி, இன்னும் இஸ்லாத்தை சேர்ந்த சகோதரர்களே இக்கருத்தில் உறுதியானதொரு கருத்தை புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள் என்ற ஆதங்கத்தினாலும் இவ்விஷயத்திற்கு நல்லதொரு விளக்கம் அளிக்க வேண்டும் என்ற காரணத்தாலும் மட்டுமே இப்பதிவை எழுதுகிறேன்.

இதை ஒரு பிரச்சார மற்றும் ஒருதலை பட்சமான பதிவு என்று முத்திரை குத்திவிடுவார்களோ என்ற தயக்கம் இருந்தது.மற்றபடி, "இது ஒரு நல்ல ஆஃபர். அனைவரும் வாங்கி பயனடைவீர்" என்று அறிவிக்க என் வலைப்பூ விளம்பர தளம் அல்ல.

**********************************************************************

ஓரிறை,ஓர் வேத‌ம் என‌ ஏக‌த்துவ‌த்தை பின்ப‌ற்றும் இஸ்லாமிய‌ர்க‌ள் ஏன் ஹ‌ன‌பி,ஷாபி(இந்தியாவில்), ச‌ன்னி,ஷியா ( இராக்கில்) என பல்வேறு குழுக்களாக‌ பிரிந்து கிட‌க்கின்ற‌ன‌ர்.இந்த‌ பிரிவினைக‌ளை இஸ்லாம் ஆத‌ரிக்கிற‌தா ?? இஸ்லாத்தில் சாதீய‌ம் என்ற‌ ஒரு க‌ருத்து இருக்கிற‌தா ??

இதற்கு பதில் "நிச்ச‌ய‌மாக‌ இல்லை" என்ப‌தே.மேலும் இந்த‌ நெறிமுறைக‌ளின் வீரிய‌ம் கொஞ்ச‌ம் அதிக‌ம்.

இத‌ற்கான‌ ஆணித்த‌ர‌மான‌ விடை குர்ஆனில் இருக்கிறது.

"நிச்ச‌ய‌மாக‌ எவ‌ர் த‌ம்முடைய‌ மார்க்க‌த்தை ( த‌ம் விருப்ப‌ப்ப‌டி ப‌ல‌வாறாக‌ப் பிரித்து) ப‌ல‌ குழுக்க‌ளாக‌ பிரிந்து விட்ட‌ன‌ரோ அவ‌ர்க‌ளுட‌ன் (ந‌பியே !) உம‌க்கு எவ்வித‌ ச‌ம்ப‌ந்த‌முமில்லை;அவ‌ர்க‌ளுடைய‌ விஷ‌ய‌மெல்லாம் அல்லாஹ்விட‌மே உள்ளது.அவ‌ர்க‌ள் செய்து கொண்டிருந்த‌வ‌ற்றைப் ப‌ற்றி முடிவில் அவ‌னே அவ‌ர்க‌ளுக்கு அறிவிப்பான்."

6:159 ஸூர‌த்துல் அன் ஆம்.

மேலும் முஹ‌ம்ம‌து ந‌பி (ஸ‌ல்) அவ‌ர்க‌ள் த‌ன‌து ச‌ந்த‌தியின‌ர் 72 பிரிவுக‌ளாக‌ பிரிந்து பிள‌வுப‌டுவார்க‌ள் என‌ க‌ணித்துள்ளார்.அவ‌ர்க‌ள் அனைவ‌ரும் ந‌ர‌க‌ நெருப்பில் விழ‌க் க‌ட‌வ‌து என‌வும் ச‌பித்துள்ளார்க‌ள்.இவைகள் மட்டுமின்றி அல்குர்ஆனில் பல்வேறு இடங்களில் இறைவன் இதே கருத்தை வலியுறுத்துகிறான்.

இந்த மத்ஹபுகள் குறித்து ஒரே பதிவில் எழுதுவதென்பது இயலாத காரியம்.
சுருங்கக் கூறின், இஸ்லாமிய ஷரீஅத் சட்டங்களின் நீட்சியான ஃபிக்ஹு என்னும் சட்டத்தை நான்கு பிரிவுகளாக நான்கு இமாம்கள் உருவாக்கினர்.இமாம் ஹனஃபி,ஷாஃபி,மாலிகி,ஹம்பலி இந்த நான்கும் சன்னி பள்ளியின் கீழடங்கும் சட்டங்கள்..இந்த மத்ஹபுகளை பின்பற்றுவர்கள் நாளடைவில் பல்வேறு குழுக்களாக பிரிந்து வழக்கம் போல, குழுமனப்பான்மைக்கே உரிய நடவடிக்கைகளில் இரங்க ஆரம்பித்து விட்டனர்.

சதாம் ஹூசைன் சன்னியை சேர்ந்தவர் என்பதால், ஷியா நீதிபதியை வைத்து அவருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி,இரு பிரிவினர்க்கும் ஏற்கெனவே புகைந்து கொண்டிருக்கும் பகை நெருப்பில் எண்ணெய் ஊற்றி வேடிக்கை பார்த்தது அமெரிக்க அரசின் ராஜ தந்திரம் என்பது தனிக்கதை.

இந்தியாவில் இந்த பிரிவுகள் இருந்தாலும்,இது வெறும் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன..மற்றபடி,திருமணம் உள்ளிட்ட எந்த சம்பிரதாயங்களிலும் இந்த மத்ஹபுகள் குறித்து முஸ்லிம்கள் பெரிதாக அலட்டி கொள்வதில்லை.ஆனால் உண்மையை புரிந்து கொள்ளாதவர்கள் இதை ஒரு சாதி பிரிவினை அளவுக்கு முக்கியத்துவம் தருவது வ‌ருத்த‌ம‌ளிக்கிற‌து.

ஆக‌வே,இஸ்லாம் என்ற‌ ஒரு மார்க்க‌த்தில் பிரிவினைக‌ளும் ஏற்ற‌த்தாழ்வுக‌ளும் இல்லை.சாதிக‌ளோ குழுக்க‌ளோ இல்லை.

யாரோடு யார் வேண்டுமானாலும் தோளோடு தோள் சேர்த்து ம‌ஸ்ஜிதில் தொழ‌லாம்.வேதம் ஓதலாம்.ஒரே தட்டில் உணவருந்தலாம்.ஒரே குவளையில் தண்ணீர் குடிக்கலாம்.

குறிப்பிட்ட‌ ச‌மூக‌த்தை சேர்ந்த‌வ‌ர்தான் தொழுகை ந‌ட‌த்த‌ வேண்டும் என்ற உய‌ர்சாதிய‌ கோட்பாடுக‌ள் இங்கு செல்லாது.இஸ்லாத்தை ஏற்று கொண்ட‌ யாராக இருந்தாலும் ( விஷ‌ய‌ம் தெரிந்திருக்கும் ப‌ட்ச‌த்தில் ) ம‌றுக‌ண‌மே தொழுகை ந‌ட‌த்த‌லாம்.

மேற்கூறிய ச‌ன்னி,ஷியா,மாலிகி போன்ற‌வை வெறும் கொள்கைக‌ளின் அடிப்படையில் இயற்றப்பட்ட சட்டங்களே அன்றி அவைகள் சாதிகளோ வகுப்புகளோ கிடையாது.

மதங்கள் அனைத்தும் ஆகாயத்தில் தொங்கி கொண்டிருக்கும் கோட்டைக‌ள் என்று மதங்களின் பலவீனத்தை சொன்ன பெரியார்,தீண்டப்படாதவர்களுக்கான ஒரே தீர்வாக இஸ்லாத்தை மட்டுமே பல தருணங்களில் குறிப்பிட்டதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை.

ஒலிம்பிக்கில் த‌ங்க‌ப் ப‌த‌க்க‌ம் வாங்கிய‌ போது க‌ருப்ப‌ர் என்ற நிற‌வெறியின் கார‌ண‌மாக அமெரிக்க அரசால் நிராக‌ரிக்க‌ப் ப‌ட்ட குத்துச்சண்டை வீரர் கேஸிய‌ஸ் கிளே, ஓக்லஹாமா ந‌தியில் த‌ன‌து ப‌த‌க்க‌த்தை தூக்கி வீசிவிட்டு பிற்கால‌த்தில் முஹம்மது அலியாக மாறியதற்கு கார‌ண‌ங்க‌ள் இல்லாம‌லில்லை.


*****************************

Tuesday, April 28, 2009

இளமை விகடனில் எனது சிறுகதை


நேற்று காலை நான் பதிவிட்ட "உச்சத்தை தொட்ட தினம்" சிறுகதை, தலைப்பை மட்டும் மாற்றி அனுப்பி வைத்திருந்தேன்.

படத்தோடு வெளியிட்டிருக்கிறார்கள்.நன்றி விகடன் !!!!

பதிவை பார்க்க கீழே சொடுக்குங்கள்.
குறையொன்றுமில்லை.

Sunday, April 5, 2009

அந்த முதல் சந்திப்பு பாகம்-2



பாக‌ம்-1 ப‌டிக்க இங்கே சொடுக்குக !!!!

மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் நானும் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்.என் வாழ்விய‌லை இர‌ண்டாக‌ பிள‌ந்த‌வளைக் க‌ண்டு பிடிக்க இர‌ண்டு நொடிக‌ள் கூட‌ பிடிக்க‌ வில்லை.45 டிகிரி அளவில் என் முக‌த்தை சாய்த்து கொண்டு,அந்த கோண‌ இடைவெளியில் என் ப‌த‌ற்ற‌த்தை புதைக்க‌ முய‌ற்சித்து,அவள் வ‌ட்ட‌த்தில் என்னை கொண்டு போய் ஒரு வ‌ழியாக‌ சேர்த்தேன்.

முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்ட‌ப்ப‌ட்டு லேசாக வரைந்த ஓவியம் போல‌வே இருந்தாள்.

ஆட‌ம்ப‌ர‌மில்லா புன்ன‌கை..ச‌ல‌ன‌மில்லா அசைவுக‌ள்..பொடி க‌ண்க‌ள்..அரேபிய‌ மூக்கு..

ஆனாலும் அழ‌கி !!!!!!!!!

நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், த‌ம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன.

வெள்ளிக் கரண்டியோடு பிறந்து,பாலைவனதேசமொன்றில்.அம்ச தூளிகா மஞ்சத்திலே வளர்ந்த ஒருத்தி,வடசென்னையின் கூவம் நதிக்கரையோரம், ஒண்டுகுடித்தனத்தில் நடுத்தரவர்க்க கனவுகளோடு வாழ்ந்து வரும் ஒரு சராசரியானவனுக்காக காத்திருந்ததின் காரணத்தை கண்டிப்பாக அவளிடம் கேட்டறியாமல் கிளம்பக் கூடாது என முடிவு செய்தேன்.

"வ‌ந்து ரொம்ப‌ நேர‌ம் ஆச்சா ??" நான்.

"ம்ஹும்..ஆமா..உனக்கு தெரியாதா..என்ன‌" அவள்.

விடை தெரிந்த கேள்விகள் கேட்பது காதல் கணங்களின் தர்மம் என்பது அவளுக்கு தெரிந்திருந்தாலும்....

அன்று சனிக்கிழமை மதிய நேரமாக‌ இருந்தால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமில்லை.இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இருக்கையை தேர்வு செய்தோம் அமர்ந்தோம்.பத்தடி அவளோடு நடந்து சென்று தான் அவ்விருக்கையில் அமர்ந்தேன் என்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாது.

அலைபேசியில் பேசும் போதெல்லாம் நான் தான் அதிக‌ம் பேசுவேன்.வானொலி போல‌ அவ‌ளுக்கு கேட்க‌ மட்டும் பிடிக்கும்.அன்றைய தினம் ம‌ட்டும் எதிர்ம‌றையாக‌ அவ‌ளே அதிக‌ம் பேசி கொண்டிருந்தாள் இத‌ழ் பிரிக்காம‌ல்.

காத‌லை என்னிட‌ம் சொல்லிவிட்டு என் ப‌திலுக்காக‌ காத்திருந்த‌ அந்த மூன்று மாத‌ங்க‌ளில் அவ‌ள் த‌வித்த‌ த‌விப்பையெல்லாம் கொட்டி தீர்த்த போது ஏனோ அவள் க‌ண்க‌ளில் க‌ண்ணீர் கோர்த்து கொண்ட‌து.

ந‌ட‌க்க‌ ஆர‌ம்பித்து த‌வ‌றி விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்ள விரையும் தாயாக‌ மாறி விட துடித்தேன்.அதிக பட்சம் அவள் கரங்களைப் பற்றி கொள்ள மட்டுமே முடிந்தது.லேசாக சிலிர்த்தாலும் இது ஒன்றும் புதிய உணர்வல்ல..ஏதோ ஒரு கிரகத்திலோ, ஆயிரம் கடல்களுக்கு அப்பால் ஒரு தீவிலோ, சப்த ரிஷி மண்டல நட்சத்திரம் ஒன்றிலோ எங்கேயோ எப்போதோ அவளோடு வாழ்ந்த ஞாபகங்களில் இதுவும் ஒன்று.

கடலை விற்கும் சிறுவனின் வண்டியில்
சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
காகித கூம்புகளாய் நானும்
அவளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டேன்.

முதல் குறுந்தகவல்,முதல் வார்த்தை,முதல் மிஸ்டு கால், முதல் அலைபேசி முத்தம்,முதல் சண்டை,பெற்றோர் எதிர்ப்பு, வேலை,திருமணம் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைப்பது முதல்,டென்னிஸ் அகாடமியில் சேர்ப்பது வரை எல்லாம் பேசி தீர்த்தோம்.நேரில் பார்க்கும் போது காதில் ரகசியமாய் சிலவற்றை சொல்வதாய் அவள் ஒரு பின்னிரவில் உறுதியளித்த‌தை நினைவூட்டினேன்.

"ம்ஹூம்..சொல்ல மாட்டேன்.."

"ப்ளீஸ்..ப்ளீஸ்..என‌க்காக‌ ஒருமுறை"

"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற‌
அந்த‌ முத‌ல் முத்தம்..........."


வடக்கிலிருந்து தெற்காக இரை தேடச் சென்று, திரும்பி கொண்டிருந்த ஒரு பறவையொன்று இந்த நிகழ்வை பார்த்து,கூட்டிற்கு சென்று தன் இணையுடன் அதே அழகுடன் ஒரு முத்தம் தர சொல்லி அடம் பிடித்த செய்தியை அன்றிரவு தொலைபேசியில் அவளிடம் தெரிவித்த போது,வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.

"மேக‌ உப‌ய‌ங்க‌ளோ
வான‌வில் சாய‌ங்க‌ளோ
ம‌ண்வாச‌னைக‌ளோ
சார‌லின் பேரிரைச்ச‌ல்க‌ளோ
ஏதுமில்லா
ஒரு ஷாம்பைன் பிர‌ப‌ஞ்ச‌த்தில் இருவரும்

ம‌ழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட‌ வெளியில் ந‌னைவ‌த‌ற்காக‌வே..."


( ஒரு வேளை தொட‌ர‌லாம்...)

Tuesday, March 17, 2009

சிறுபான்மையின‌ர் என்ன கிள்ளுக்கீரையா ??

"இந்துக்கள் எல்லாம் ஒருபுறமிருக்கட்டும்.மற்ற அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்"என்று தேர்தல் களத்தில் திருவாய் மலர்ந்திருக்கிறார் வருண்காந்தி.

இதற்கு பா.ஜ.க வே அதிருப்தி வெளியிட்டிருக்கிறது.

அவ‌ர‌து பேச்சுக்க‌ள் அட‌ங்கிய‌ வீடியோ சிடி ந‌ம்மூர் திருட்டு விசிடி ரேஞ்சுக்கு வ‌சூலில் சாத‌னை ப‌டைத்து கொண்டிருக்கும் இவ்வேளையில்,இந்த‌ செய்தி மிகைப்ப‌டுத்தப் ப‌ட்டிருக்கிறது என்றும் நான் அதில் முஸ்லிம்களைப் பற்றி குறிப்பிடவே இல்லையே எனவும் பல‌ காமெடி ஜ‌கா வாங்கியிருக்கிறார் வ‌ருண்.

தேர்த‌ல் விதிமுறைக‌ளை மீறிய‌த‌ற்காக‌, அவ‌ர் மீது கிரிமின‌ல் வழ‌க்கு தொட‌ர‌, தேர்த‌ல் ஆணைய‌ம்,உத்திர‌ பிர‌தேச தேர்த‌ல் ஆணைய‌த்திட‌ம் ப‌ரிந்துரைத்திருக்கிற‌து.

அர‌சிய‌ல் சுய‌லாப‌த்திற்காக‌வும், ஓட்டு வ‌ங்கிக்காக‌வும், ம‌க்க‌ளிடையே ம‌த‌ உண‌ர்வுக‌ளை தூண்டிவிட்டு, காய் ந‌க‌ர்த்துவோர் எண்ணிக்கை கொஞ்ச‌ம் க‌ணிச‌மாக அதிக‌ரித்து கொண்டே வ‌ருவ‌து க‌ண்கூடு.

இன்னும் என்னென்ன‌ கூத்துக்க‌ள் ந‌ட‌க்க‌விருக்கின்ற‌ன‌வோ !!!! பொறுத்திருந்து பார்ப்போம்.

வ‌ருணிட‌ம் ஒரே ஒரு கேள்வி: ச‌ரிங்க‌ண்ணா...இந்துக்க‌ளை த‌விர‌ ம‌ற்ற‌ ச‌ம‌ய‌த்தனைவ‌ரையும் இந்தியாவை விட்டு வெளியேற்றி விட‌லாம்.

அப்ப‌டியானால், அக‌ர‌ ( ஆங்கில )வ‌ரிசைப்ப‌டி, முத‌லில் அப்துல் கலாமையும், பிற‌கு அல்லா ர‌க்கா ர‌ஹ்மானையும் வெளியேற்றுவீர்க‌ளா ??

சொல்லுங்க‌ எச‌மான்..சொல்லுங்க‌...

Wednesday, March 4, 2009

கண்டினியுட்டி இல்லா கவிதை......

முழுதும் வாசிக்கப்படாமல்
மூடிவைக்கப்பட்ட புத்தகக் குவியலை
சுமந்து கொண்டிருக்கும்
அலமாரி போல் ஆனது மனம்
அவள் நினைவுகளை சுமந்து கொண்டு..

உடைந்து போன கனவுகளை
உறைபனி நிலையில் ப‌த்திர‌மாக‌
ப‌த‌ப்படுத்திக் கொள்ள‌
மீண்டும் மீண்டும் முய‌ன்று
தோற்றுத் திரும்பின உறக்கங்கள்.

கலைந்தும் சிதைந்தும்
எஞ்சியிருந்த ஒன்றிரண்டு
வார்த்தைகளை வார்த்தெடுத்து
ஓர் பிரிவு உபசாரத்திற்கு
நிவேதனமாக்கி கொண்டிருந்தோம்
அந்த ஒற்றை இரவில்...

அவ‌ள் அழுகை
ச‌த்த‌மாக சிரிக்கத் தொட‌ங்கிய‌து
என் சிரிப்பும் சிறிது
அழுது பார்த்தது.

'எங்கிருந்தாலும் வாழ்க' வென‌
விய‌ங்கோள் வினைமுற்று விகுதியிட்டு
முடிக்க‌ இல‌க்க‌ண‌ம் ம‌ற‌ந்துபோன‌து
இருவரின் மொழியிலும்.

பெருங்கூச்சலிட்ட நிசப்த‌
சாரீரங்களை கொண்ட‌
நாழிகைகளை கடத்தி,
சற்று தாமதமாகவே விடிந்தது
அந்த ஒற்றை இரவு.



*******************************