Thursday, September 18, 2014

நீர்த்திவலைகளில் பூத்திருக்கும் வானம்




எல்லாவற்றையும் எழுத முடிவதில்லை.

ஆண்டாண்டு காலம் எழுதித் தீர்த்த வெண் தாள்கள், செல்லரித்த‌து போக, எதுவும் மிச்சமிருக்கவில்லை.கால் கடுக்க நடந்தும்,மணிக்கணக்கில் உறங்கியும், தொலை தூரம் இலக்கில்லாமல் பயணம் செய்தும் உடல் அசதியில் எல்லாவற்றையும் புதைக்க முற்பட்டதெல்லாம் ஒரு கொடுங்கனவாக இருக்கிறது. செய்ய ஏதுமில்லாமல் கிடப்பில் போடப்பட்ட பழைய கோப்புகளைப் போல, தனிமை உடல் முழுதும் நிரம்பி மூழ்கடித்தது. யாரைப் பற்றியும் யோசிக்கத் தேவையில்லை. என்னைப்பற்றியும் யாரும் யோசித்திருக்க மாட்டார்கள். இப்படியான ஒரு மனநிலை வாய்க்கும் போது உலகம் ஒரு மாயவெளி ஆகி, எல்லா நிலக்காட்சிகளிலும் ஒரு வித கருப்பு வெள்ளை படர ஆரம்பித்து விடும். தீவிர நிறக்குருடு நோய்க்கு ஆளாக நேரிடும். அடுத்து என்ன? என்ற கேள்விகளுக்கு பதில் இருக்காது. சாலையில் அடிபட்டு இறந்து கிடக்கும் பெயர் தெரியாத பறவையாக, எனக்குள் இருந்த ஒன்று, நிராதரவாகிப் போனது நினைவுக்கு வந்து உலுக்கி எடுக்கும். இறந்து போன என்னுடைய பழைய இரும்புப் பெட்டியில் இருந்த மிச்ச சொச்சங்கள் அவை.

இப்போது அந்த இரும்புப் பெட்டியை தூர எறிந்து விட்டேன். அல்லது கை மறதியாய் ஓரிடத்தில் வைத்து விட்டு மறந்து விட்டேன். நான்கு ஆண்டுகள் கடந்து விட்டன. தூர எறிந்ததும் கை மறதியாய் வைத்ததும், எது உண்மையில் நடந்தது? நினைவில் இல்லை. ஆனால் இன்று அந்த பெட்டி என்னிடம் இல்லை என்பதில் மட்டும் உறுதியாக இருக்கிறேன். வெற்றுத் தாள்களாக இருந்தவற்றுள் பல ஆயிரம் பக்கங்கள் இன்று பூர்த்தியாகி இருக்கின்றன. நம்ப முடியாத அழகு, அப்பக்கங்களுக்கு கூடியிருக்கிறது. செம்பருத்தி பூக்களும், மரிக்கொழுந்தும் மண் வாசனையும், வண்ணத்துப் பூச்சிகளும் வெள்ளரிப் பிஞ்சுகளும் கத்தரியும் அவரையும், சோற்றுக் கற்றாழைகளும் ரோஜாப்பூ இதழ்களும் என நான்கு ஆண்டுகள், அவ்வெற்றுத் தாள்களில் வண்ணம் நிரம்பியிருக்கிறது. இவ்வனைத்தையும் இரவு பகலாக, உன் ஈரக்கைகளால் வரைந்திருக்கிறாய்.

வாழ்க்கைக்கல்வி என்றொரு பாடம் ஐந்தாம் வகுப்பு வரை இருந்தது. மற்ற பாடங்களை விட நான் அதிகம் விரும்பியது அந்த வாழ்க்கைக்கல்வியைத் தான். சாகுல் மாமா கல்யாணப் பத்திரிக்கையை குறுக்கு வாக்கில் வெட்டி, கப்பல் செய்து ஒட்டியது, வெண்டைக்காயை பிரில் இங்கில் தோய்த்து, நெக்லஸ் வரைந்தது, ஸ்கெட்ச் பேனாக்களில், அப்பா அம்மா, குழந்தை குடும்பம் வரைந்து பத்துக்கு பத்து, வீ குட் வாங்கியது, சாக்லேட் பேப்பர்களில் ஆட்கள் செய்தது என வாழ்க்கைக்கல்வி புத்தகம் முழுதும் ஒரே கொண்டாட்டமாகத் தானிருக்கும். உன்னைக் கை பிடித்த நான்கு ஆண்டுகளை ஒரு வாழ்க்கைக் கல்வி புத்தகமாக ஆக்கியிருக்கிறாய்.

--------

எண்ணெய் படிய வழித்து சீவப்பட்ட தலையாயிருக்கும் என எப்போதோ பார்த்த உன் முகத்தை நினைவூட்டினாள் அக்கா. உன்னை விட சற்று உயரம் என திகிலூட்டினார் மாமா. பொண்ணுச் செவப்பா இருக்கும்னு பாட்டியின் ஊகம். ஒரு பழுப்பு நிறக்கவரில், 165 செ.மீ உயரக்குறிப்புளடங்கிய பயோடேட்டாவோடு, உன் ரெண்டு நிழற்படங்கள் வந்து சேர்ந்ததும், ஒரு விதத்தில் எல்லா ஊகங்களும் சரியென்று ஆனது.

மாம்பழக்காலமொன்றில் தான் நாம் பேசத்துவங்கினோம். சூரியனுக்கு கீழுள்ள எதையும் நாம் விட்டு வைக்கவில்லை. உன் வீட்டு கொள்ளைப்புறக் கதவின் இழுவை ஒலியோடு ஆரம்பிக்கும், உன் அலைபேசி குரலைச் சுற்றியே, ஒவ்வொரு நாளும் நகர்ந்தது. சாம்பல் நிறப் பூனையொன்று , எங்கள் வீட்டுக் அடுப்படியிலும் கொள்ளைப்புற மதில் சுவரிலும், போர்டிகோ தோட்டத்திலும் புதிதாகக் குடியிருக்க ஆரம்பித்தது. நிறைய குரோட்டன்ஸ் இலைகள் பல வடிவங்களில் படர ஆரம்பித்தன. ஒன்றிரண்டு பட்ரோஸ்கள் துளிர் விட ஆரம்பித்தன. வேப்பம்பழங்கள் தரையெங்கும் உதிர்ந்து, குழந்தைகளின் கால்விரல்களால் நசுங்கி மகிழ்ந்தன. மொட்டை மாடியிலிருந்து, கை நீட்டினால் இளநீர் பறிக்கக் கிடைக்கும் தென்னை மரத்தில், குஞ்சு பொறித்த காங்கள், தலைகளைக் கொத்தின. வண்ணநிலவனின் பிலோமியும், தமிழ்ச்செல்வனின் மாரியும் உனக்கும் அறிமுகமானார்கள். மாம்பழக்காலம் முடிந்து, நீ என் வீட்டிற்கு வந்து சேர்ந்த போது மழைக்காலமாகியிருந்தது. அடுப்படி வரை வந்த பூனைக்கு, வாசற்படி வரை வர, தைரியம் கிடைத்தது. உன் விரல்களிலிருந்த தோசைத் துண்டுகளை, லாவலகமாகப் பெற்றுக் கொண்டன அந்த காகங்கள். தினம் தினம் ஒரு பூவை பிரசவித்தது அந்த வெள்ளை ரோஜாச் செடி. இப்படியாகத் தான் நீயும் என்னில் கிளை பரப்பத் தொடங்கினாய். ராம்சஸிடமிருந்து அடிமைகளை விடுவித்த மோசஸைப் போல, கொடுங்கனவுகளிலிருந்து என்னை விடுவித்தாய். என் எல்லா ரணங்களுக்கும் வலிகளுக்கும் ஒரு அற்புத சஞ்சீவி மருந்தொன்று உன்னிடமிருந்தது. நான் விடுபட ஆரம்பித்தேன்.

முத்து நகர் எக்ஸ்பிரஸில் முதன் முறையாக நாமிருவரும் ஒன்றாக பயணம் செய்தோம். இரவோடு இரவாக நீ என் மடியில் சாய்ந்தவாறு, சன்னலோரத்தில் விடியும் இருளை, அணைத்தவாறு வந்தது பசுமையாக இருக்கிறது. நான் நீ, உன் அக்கா மகள், அண்ணன், அப்பாவோடு விருது நகர் ரயில் நிலையத்திலிருந்து, அருப்புக் கோட்டை நோக்கி, ஒரு சிறிய ஆம்னி ஊர்தியில், இரு மருங்கிலும் முட்புதர்களடங்கிய சாலையில் செல்லச் செல்ல, தூக்கம் கலைந்தது. சிவன் கோயில்ட்ட வந்துட்டோம்மா..என உன் அண்ணன், வீட்டில் ஆரத்தி தட்டோடு காத்திருக்கும் உன் அம்மாவிடம் அலைபேசியில் தெரிவித்த போது, உன் கண்கள் விரியத் தொடங்கியது. திருமணமாகி ஐந்து நாட்கள் சென்னை நகரப் புழுக்கத்தைத் தொலைத்து, உன் வீட்டு தூண்களைச் செல்லமாக, கட்டிக் கொண்டு சுற்றி வந்த போது, அந்த தூண்களைக் காட்டிலும் நீ தான் அழகாக இருந்தாய். நீ வேறு. உன் மண்ணில் வாழும் நீ வேறு.

நகரங்கள் எப்போதும் நகரங்கள் தான். அவசரமாக நாட்கள், அவசரமாக வேலை, அவசரமாக ரயில்கள், அவசரமாக ஹார்ன் அடிக்கும் வாகனங்கள், அவசரமாகக் காற்று, அவசரமாக மனிதர்கள். ஆடு மாடுகளோடு, நொண்டி கண்ணாமூச்சி விளையாடும் குழந்தைகளோடு, வான்கோழிகளோடு, மரப்பாச்சி பொம்மைகளோடு, உப்புமா கேசரி விற்கப்படும் தேநீர் கடைகளோடு, ஆமை வடைக்கு மாவு அரைத்துக் கொடுக்கும் வீடுகளோடு, நெற்றி சுருக்கி இன்னாரென அடையாளங் காண முயலும் திண்ணைக் கிழவிகளோடு, நின்று நிதானித்து அடையும் இரவோடு, சேவல் கூவி விடியும் பகலோடு….

இந்த அவசர நகரங்களுக்கு யாதொரு சம்பந்தமும் இல்லை.

இப்படியான நகரத்தில் உன்னைக் கடத்தி வந்து விட்ட, குற்ற உணர்ச்சியை, நான் எப்படி கடந்து போகிறேன். மரங்களே பார்க்காத, ஒரு தெரு நாய்க்குக் கூட இடமளிக்காத அபார்ட்மென்டுக்கு குடி வந்து விட்டோம். மொட்டை வெயிலில் பூக்கள் வாடி வதங்குகின்றன. கார்ட்டூன் சேனல்கள் நம் பிள்ளைக்கு கதை சொல்லுகின்றன. குப்பைகள் அடர்ந்த கடற்கரைகளிலும், வெளிச்சம் மங்கிய உணவகங்களிலும், ஷாப்பிங் மால்களிலும் எஞ்சிய வாழ்வின் களிப்பைத் தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நீ மாற வில்லை. நான்கு வருட நகர இருப்பு, உன்னை மட்டும் அப்படியே தான் வைத்திருக்கிறது.

ஈரக்கைகளால் அனைத்தையும் தொடுகிறாய் என நான் திட்டுவதால், கோபித்துக் கொள்கிறாய். எதைத் தொட்டாலும் ஈரம். மடிக்கணினியில் ஈரம், மதிய உணவு டப்பாவில் ஈரம், மடித்து வைத்த துணிகளில் ஈரம், புத்தகங்களில் ஈரம் என உன் ஈரக்கைகள் நிறைக்காத பொருட்களே இல்லை. அந்த ஈரம் தான் நம்மை இதுவரை அழைத்து வந்திருக்கிறது. அந்த ஈரம் தான் என்னை நானாக வைத்திருக்க உதவுகிறது. அந்த ஈரம் தான் என் ஆணாதிக்க பாறைகளைக் கரைத்து, கூழாங்கற்களாக்குகிறது. அந்த ஈரம் தான் உனக்கும் எனக்குமான இடைவெளிகளைக் குறைக்கிறது. அந்த ஈரம் தான் நம் பிரியங்களை சேமித்து வைத்திருக்கிறது.

இவ்வளவு தான் நீ.
இவ்வளவு தான் நாம்.