பள்ளிக்காலங்களில் கட்டுரை போட்டிகளில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் முதல் பரிசு வாங்கியவன் என்ற ஒரே அற்ப தகுதியை மட்டுமே ஆதாரமாக வைத்து,வலைதளத்தில் எழுத வந்த எனக்கு கிடைக்கும் சிறிய,பெரிய அங்கீகாரங்கள் உண்மையிலே அவற்றிற்கு நான் தகுதியானவனா என்ற சிந்தனையை அவ்வப்பொழுது தூண்டுவதுண்டு.அது ஒருபுறமிருக்க..
அண்ணன்
செந்தழல் ரவி மூலமாக,நான் விரும்பி வாசிக்கும் பதிவர்
அமித்து அம்மா என்னையும் சுவாரசிய பதிவர் பட்டியலில் சேர்த்து,என் பதிவுகளுக்கும் வாகைப்பூ சூட்டியிருக்கிறார்.பெருமையாக உணர்கிறேன்.
அவர்கள் இருவருக்கும் மிக்க நன்றி !!!!
எனவே இந்த சங்கிலித்தொடர் சம்பிரதாயத்தை கர்மசிரத்தையோடு நிறைவேற்றும் சீரிய பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.தொடர்பதிவு என்றவுடன்,நமது கடைக்கு வரும் ரெகுலர் கஸ்டமர்களையும் நெருங்கிய நண்பர்களையும் அழைத்து,தட்டியும் சுட்டியும் கொடுத்து பாராட்டும் பரஸ்பர சொறிதலில் எனக்கு உடன்பாடில்லையாதலால்,கொஞ்சம் சீரியஸாக,இந்த விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்கலாம் என்று அதிகப்பிரசங்கித்தனமாக யோசித்து,ஆறுபேரை அலசி எடுத்திருக்கிறேன்.

இவர்களுக்கு விருது வழங்க நான் தகுதியானவனா என்ற கேள்வி உள்ளுக்குள்
பீடிகை போடத்தான் செய்கிறது.எது எப்படியாக இருந்தாலும் இவர்கள் தான் என் எழுத்துகளை சுத்திகரித்து கொண்டிருப்பவர்கள்.மறைமுகமாக எனக்கு பாடம் நடத்தி கொண்டிருப்பவர்கள்.யாரெல்லாம் ?
பீமோர்கனின் "வழிப்போக்கன்" என்னை அடித்து துவைத்த எழுத்துகளுக்கு சொந்தக்காரர்.அவருடைய
"
சமுத்திரத்தில் மீன்களை வரைபவன்" பதிவின் அனைத்து வரிகளும் எனக்கு மனனம்.தனிப்பட்ட முறையில் இவரை அதிகம் தெரியாது என்றாலும், இவர் எழுத்துக்களை மிகவும் நேசிக்கிறேன்.
ஆடுமாடுமண்வாசனை மிக்க சிறுகதைகளை மட்டுமே எழுதுகிறார்.
சுவாரசியமான எழுத்துகளை வாசிக்கும்போது,என்னையறியாமல் நகங்களால் என் உதடுகளை கிள்ளுவதுண்டு.அந்த வகையில் உதட்டில் இரத்தம் வருமளவு,படிக்க வைத்து புண்ணாக்கியவர் ஆடுமாடு.அவர் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் அளவுக்காவது நான் தகுதியடைய வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
லேகாவின் "யாழிசை ஓர் இலக்கிய பயணம்"எஸ்.ரா.வின் மனங்கவர்ந்த டாப்டென் வலைப்பூக்களில் யாழிசையும் ஒன்று.தமிழின் குறிப்பிடத்தக்க படைப்புகளை அறிமுகம் செய்து வைத்து,தமிழ் கூறும் நல்லுலகுக்கு சத்தமில்லாமல் ஒரு சேவையை செய்து வருகிறார் லேகா.நல்ல படைப்புகளுக்கான தேடல்களுக்கு லேகாவின் வலைப்பூ ஒரு முற்றுப்புள்ளி.நேரம் கிடைக்கும் போதெல்லாம் நான் விரும்பி வாசிக்கும் பதிவர் இவர்.இவருடைய பரந்த வாசிப்பை கண்டு வியந்திருக்கிறேன்.
ஆதிமூலகிருஷ்ணனின் "புலம்பல்கள்"இவருடைய ரகளையான தங்கமணி நகைச்சுவை பதிவுகள் அதிகம் பேசப்பட்டாலும்,இவருடைய குறுங்கதைகளைத் தான் நான் அதிகம் ரசித்திருக்கிறேன்."
நீ நான் அவள்" என்ற பதிவை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பாருங்கள்.துறை சார்ந்த பதிவுகள், சிறுகதை, மொக்கை என அனைத்து தரப்பினரையும் சுண்டி இழுக்கும் டிபிக்கல் மசாலா+தரம் வாய்ந்த வலைப்பூ இவருடையது.
நர்சிம்,பரிசல் வரிசையில் இன்னுமொரு MR.CONSISTENT !
அகநாழிகை பொன்.வாசுதேவன்வெகுஜன ஊடகங்களில் அதிகம் தொடர்புடையவர் என நண்பர்கள் மூலம் கேள்விப்பட்டிருக்கிறேன்.நான் பெரிதும் மதிக்கும் எழுத்தாளர்+பதிவர்.கதை சொல்லிகளுக்கு
கே.ரவிஷங்கர் ஒரு ஆசிரியர் என்றால்,கவிதை எழுதிகளுக்கு வாசு அவர்கள் ஒரு ஆசிரியர்.பல நல்ல தமிழ் வார்த்தைகளை கற்பதற்காகவே அவர் வலைதளத்துக்கு நான் அடிக்கடி செல்வதுண்டு.இவருடைய "
போடா ஒம்போது" கட்டுரையை வாய்ப்பு கிடைத்தால் வாசித்து பார்க்கவும்.முழுக்க முழுக்க அக்மார்க் தரம் வாய்ந்த படைப்புகளுக்கு சொந்தக்காரர்.
அனுஜன்யா'கவிதை எழுதி'களுக்கு ஒரு மானசீக குரு.கீற்று,உயிரோசை,நவீன விருட்சம் மின்னிதழ்களில் தொடந்து இவருடைய கவிதைகள் பிரசுரமாகின்றன.
இவருடைய "
ரொட்டியும் மீன்களும்" கவிதையை படித்து உறைந்து போனேன்.நீ சிகரெட் பிடிப்பியா என்று என் பெற்றோர்கள் சந்தேகிக்குமளவுக்கு நான் உதடு கிழித்து புண்ணாக்கியதற்கு இவருடைய எழுத்துகளும் ஒரு காரணம்.உரைநடையை எப்படி சுவாரஸியமாக கையாள்வது எனக் கற்று கொள்ள விரும்பும் புதியவர்களுக்கு நான் முதலில் பரிந்துரைக்கும் வலைப்பக்கம் அனுஜன்யா அவர்களுடையதாயிருக்கும்.
சாஸ்திர சம்பிரதாயப்படி,ஆறுபேரும் தங்கள் அபிமான பதிவர்களுக்கு இவ்விருதை பகிர்ந்தளிக்க வேண்டுமாம்.
**************