பாகம்-1 படிக்க
இங்கே சொடுக்குக !!!!
மூவாயிரத்து மூந்நூற்றைந்து பட்டாம் பூச்சிகளும்,படபடப்புகளும் பின் நானும் மீனம்பாக்கம் ரயில் நிலையத்தில் அமைதியாக இறங்கினோம்.என் வாழ்வியலை இரண்டாக பிளந்தவளைக் கண்டு பிடிக்க இரண்டு நொடிகள் கூட பிடிக்க வில்லை.45 டிகிரி அளவில் என் முகத்தை சாய்த்து கொண்டு,அந்த கோண இடைவெளியில் என் பதற்றத்தை புதைக்க முயற்சித்து,அவள் வட்டத்தில் என்னை கொண்டு போய் ஒரு வழியாக சேர்த்தேன்.
முதல் முறையாக அவள் என் வீட்டிற்கு வந்த போது இருந்ததை விட சற்றே மெலிந்திருந்தாளும், முழு வெள்ளைத் தாளில் அப்சாரா 4H பென்சிலால் தீட்டப்பட்டு லேசாக வரைந்த ஓவியம் போலவே இருந்தாள்.
ஆடம்பரமில்லா புன்னகை..சலனமில்லா அசைவுகள்..பொடி கண்கள்..அரேபிய மூக்கு..
ஆனாலும் அழகி !!!!!!!!!
நான் சேமித்து வைத்த கவிதைகள் எல்லாம் ஒரு மிகப்பெரிய கவிதையை பார்த்த மறுகணம், தம் தோல்வியை ஒப்பு கொண்டு வார்த்தைகளையெல்லாம் கீழே போட்டு விட்டு சரணடைந்து விட்டன.
வெள்ளிக் கரண்டியோடு பிறந்து,பாலைவனதேசமொன்றில்.அம்ச தூளிகா மஞ்சத்திலே வளர்ந்த ஒருத்தி,வடசென்னையின் கூவம் நதிக்கரையோரம், ஒண்டுகுடித்தனத்தில் நடுத்தரவர்க்க கனவுகளோடு வாழ்ந்து வரும் ஒரு சராசரியானவனுக்காக காத்திருந்ததின் காரணத்தை கண்டிப்பாக அவளிடம் கேட்டறியாமல் கிளம்பக் கூடாது என முடிவு செய்தேன்.
"வந்து ரொம்ப நேரம் ஆச்சா ??" நான்.
"ம்ஹும்..ஆமா..உனக்கு தெரியாதா..என்ன" அவள்.
விடை தெரிந்த கேள்விகள் கேட்பது காதல் கணங்களின் தர்மம் என்பது அவளுக்கு தெரிந்திருந்தாலும்....
அன்று சனிக்கிழமை மதிய நேரமாக இருந்தால் ரயில் நிலையத்தில் கூட்டம் அதிகமில்லை.இறங்கிய இடத்திலிருந்து கொஞ்சம் தள்ளி ஒரு இருக்கையை தேர்வு செய்தோம் அமர்ந்தோம்.பத்தடி அவளோடு நடந்து சென்று தான் அவ்விருக்கையில் அமர்ந்தேன் என்று என்னால் அறுதியிட்டு சொல்ல முடியாது.
அலைபேசியில் பேசும் போதெல்லாம் நான் தான் அதிகம் பேசுவேன்.வானொலி போல அவளுக்கு கேட்க மட்டும் பிடிக்கும்.அன்றைய தினம் மட்டும் எதிர்மறையாக அவளே அதிகம் பேசி கொண்டிருந்தாள் இதழ் பிரிக்காமல்.
காதலை என்னிடம் சொல்லிவிட்டு என் பதிலுக்காக காத்திருந்த அந்த மூன்று மாதங்களில் அவள் தவித்த தவிப்பையெல்லாம் கொட்டி தீர்த்த போது ஏனோ அவள் கண்களில் கண்ணீர் கோர்த்து கொண்டது.
நடக்க ஆரம்பித்து தவறி விழும் குழந்தையை வாரி அணைத்து கொள்ள விரையும் தாயாக மாறி விட துடித்தேன்.அதிக பட்சம் அவள் கரங்களைப் பற்றி கொள்ள மட்டுமே முடிந்தது.லேசாக சிலிர்த்தாலும் இது ஒன்றும் புதிய உணர்வல்ல..ஏதோ ஒரு கிரகத்திலோ, ஆயிரம் கடல்களுக்கு அப்பால் ஒரு தீவிலோ, சப்த ரிஷி மண்டல நட்சத்திரம் ஒன்றிலோ எங்கேயோ எப்போதோ அவளோடு வாழ்ந்த ஞாபகங்களில் இதுவும் ஒன்று.
கடலை விற்கும் சிறுவனின் வண்டியில்
சுருட்டி வைக்கப்பட்டிருக்கும்
காகித கூம்புகளாய் நானும்
அவளுக்குள் சுருட்டி வைக்கப்பட்டேன்.
முதல் குறுந்தகவல்,முதல் வார்த்தை,முதல் மிஸ்டு கால், முதல் அலைபேசி முத்தம்,முதல் சண்டை,பெற்றோர் எதிர்ப்பு, வேலை,திருமணம் பிறக்கப்போகும் குழந்தைக்கு பெயர் வைப்பது முதல்,டென்னிஸ் அகாடமியில் சேர்ப்பது வரை எல்லாம் பேசி தீர்த்தோம்.நேரில் பார்க்கும் போது காதில் ரகசியமாய் சிலவற்றை சொல்வதாய் அவள் ஒரு பின்னிரவில் உறுதியளித்ததை நினைவூட்டினேன்.
"ம்ஹூம்..சொல்ல மாட்டேன்.."
"ப்ளீஸ்..ப்ளீஸ்..எனக்காக ஒருமுறை"
"இருநூறுமுறை கெஞ்சி
இரண்டுமணி நேரம் போராடி
இருபது வண்டிகள் தவற விட்டு
இந்த கடைசி ரயிலில் ஏறப்போகிறேன் என்றவுடன்
சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு
இமைக்கும் நேரத்தில் பெற்ற
அந்த முதல் முத்தம்..........."வடக்கிலிருந்து தெற்காக இரை தேடச் சென்று, திரும்பி கொண்டிருந்த ஒரு பறவையொன்று இந்த நிகழ்வை பார்த்து,கூட்டிற்கு சென்று தன் இணையுடன் அதே அழகுடன் ஒரு முத்தம் தர சொல்லி அடம் பிடித்த செய்தியை அன்றிரவு தொலைபேசியில் அவளிடம் தெரிவித்த போது,வெட்கத்தால் சிவந்த அவள் முகத்தை என்னால் பார்க்க முடியவில்லை.
"மேக உபயங்களோ
வானவில் சாயங்களோ
மண்வாசனைகளோ
சாரலின் பேரிரைச்சல்களோ
ஏதுமில்லா
ஒரு ஷாம்பைன் பிரபஞ்சத்தில் இருவரும்
மழைக்கு ஒதுங்கினோம்...வெட்ட வெளியில் நனைவதற்காகவே..."( ஒரு வேளை தொடரலாம்...)