
ஒரு சில வருடங்களுக்கு முன் இந்த ஏரியாவுக்கு இரவில் நீங்கள் வருவதாயிருந்தால் ஒரு ஆட்டோ கூட கிடைக்காது.வியாசர்பாடி என்றாலே ரவுடி ஏரியா என்று நிறைய பேருக்கு தெரியும்.
வடசென்னை முன்பெல்லாம் லேபர் ஏரியா என்றுதான் சொல்வார்கள்.
படிப்பு வாசனையே இல்லாத வெள்ளந்தி மனிதர்கள் இங்கு ஏராளம்.அழுக்கு படிந்த சட்டை,பர்மா "பாதெக்" (Bataik) கைலிகள்,வாயில் பீடி நாற்றம் இது தான் வியாசர்பாடி மக்களின் அடையாளம்.
ஆனால் சென்னை மக்களுக்கு தெரியாத இன்னும் நிறைய சுவாரசியமான விஷயங்கள் இந்த வியாசர்பாடி ஏரியாவில் உண்டு.
பி.வி.காலனி,சாஸ்திரி நகர்,சர்மா நகர்,பாரதி நகர் இந்த பகுதிகளை உள்ளடக்கியதே இந்த வியாசர்பாடி.அறுபதுகளில் எங்களைப் போன்று பர்மாவிலிருந்து தாயகம் திரும்பியோருக்காக,அப்போதிருந்த தமிழக அரசு வியாசர்பாடியில் நிலங்களை ஒதுக்கியது.முன்னரே குடியிருந்த மக்களுக்கும்,இந்த புலம் பெயர்ந்த குடிகளுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டபோது தான், ரவுடியிசமும் கட்டப் பஞ்சாயத்துகளும் கோலோச்சத் துவங்கின.குட்டி காஷ்மீர் மாதிரி.எதாவது ஒரிடத்தில் சண்டை நடந்து கொண்டே தான் இருக்கும்.
பட்டப் பகலில் வெட்டுக் குத்து கொலைகள் சகஜம்.ஆயிரக் கணக்கான சம்பவங்கள் நடந்தேறியிருந்தாலும், சுப்பையா,பிலிப்,பெஞ்ச் படுகொலைகள் இங்கே பிரபலம்.குறிப்பாக பிலிப் என்ற ரவுடி, ஒரு மதிய வேளையில் பைக்கில் சென்ற போது, முகத்தில் ஆசிட் ஊற்றி வழிமறித்து,ஒரு கும்பல் மற்ற மக்கள் முன்னிலையில் சரமாரியாக வெட்டிக் கூறுபோட்டது. செய்தது காதுகுத்து ரவியின் ஆட்கள்.எல்லாம் 14 முதல் 15 வயதுள்ள சிறுவர்கள். நீண்ட கால போராட்டத்திற்குப் பின் தமிழக காவல்துறை இந்த ரவுடியிசத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது.எல்லா வீரமறவர்களையும் என்கவுண்டரில் போட்டுத் தள்ளிய பிறகு தான் வியாசர்பாடி மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
அதெல்லாம் இப்போது இறந்த காலமாகி விட்டது.
இப்போது நீங்கள் வியாசர்பாடி வந்தால் உங்கள் அனுபவமே வேறு.
பர்மாவிலிருந்து வந்ததால் இப்பகுதி மக்களிடையே ஒரு வித்தியாசமான கலாச்சாரத்தை உணர முடியும்.
உணவு,உடை பேச்சுவார்த்தைகள் எல்லாவற்றிலுமே.
சென்னையில் (தண்டையார்பேட்டை,செகண்ட் லைன் பீச் ரோடுகளைத் தவிர) வேறங்கும் கிடைக்காத
சில உணவு வகைகள் இப்பகுதிகளில் கிடைக்கும்.
அத்தோ,கவ்ஸ்வே,மொய்ங்கா,பேபியோ,மொபெட்டோ அனைத்தும் பர்மிய உணவு வகைகள்.
குறிப்பாக அத்தோ,கவ்ஸ்வே சின்னசின்ன ரோட்டோர கடைகளில் (Only at nights) கிடைக்கும். "அத்தோ" கடை எங்க இருக்கு" என்று விசாரித்தால் குட்டிச் சாத்தான்கள் கூட சொல்லும்.
ஆரஞ்ச் நிறத்தில் பெரிய சைசில் நூடுல்ஸ்,பச்சை முட்டைகோஸ்,வறுத்த பூண்டு,புளி தண்ணீர்,கொத்த மல்லி,அரைத்த மிளகாய் இன்னும் பல வஸ்துக்களை சேர்த்து கையிலியே பிசைந்து ஒரு பிரளயத்தையே உண்டுபண்ணி
பீங்கான் கோப்பைகளில் பரிமாறுவார்கள்.தொட்டுக் கொள்ள பச்சைமீன் வடித்த தண்ணீரில் வாழைத்தண்டுகள் போட்டு கெட்டியாக சுடச்சுட அஜினமோடோ கலவையுடன் ஒருகுழம்பு ( Highly viscous liquid ) தருவார்கள்.
கடித்துக் கொள்ள "பேஜோ" என்று நம்மூர் அடை மாதிரி தான் ஆனால் கொஞ்சம் பெரிய சைசில் கடினமாக இருக்கும்.
இவ்வளவும் சேர்த்து விலை 15 முதல் 20ஐ தாண்டாது.
U.K Robert Gordon University-யில் M.S படித்தவராக இருந்தாலும்,இன்போசிஸில் சாப்ட்வேர் என்ஜினியராக இருந்தாலும் Treat என்று வந்துவிட்டால் ஒரு ஜமாஅத் "அத்தோ" கடைகளில் ஆஜராகிவிடுவோம்.ஒருமணி நேரம் எல்லா கவலைகளையும் மறந்து, 6,7 பேர் சேர்ந்து அரட்டை அடித்து கொண்டே,150 ரூபாய் செலவில் பைவ்ஸ்டார் ஓட்டலில் கிடைக்காத மகிழ்ச்சியை அனுபவித்து விட்டு வருவோம்.
அதுமட்டுமன்றி, பர்மிய தின்பண்டங்கள்,"கவ்னி" அரிசி,செருப்புகள்,கைலி அனைத்தும் குறைந்த விலையில் பி.வி.காலனியில் கிடைக்கும்
மக்களிடையே பர்மிய வார்த்தைகள் புழக்கம் அதிகம்.அவற்றுள் சிலவற்றை கீழே பாருங்கள். ( நீங்கள் பர்மாபஜாரில் பொருள் வாங்க செல்லும் போது இந்த வார்தைகளை உபயோகித்தால், பர்மா மக்கள் மாதிரி காட்டிக் கொண்டு பேரம் பேசலாம் )
சியா- வாத்தியார்
அசே- ஒரிஜினல்
அட்டூ- டூப்ளிகேட் ( இந்த வார்த்தை சென்னை மக்களிடையே இப்போது பிரபலம்.<"அட்டு பிகர் மாமே !!!!> )
இந்த 3 வார்த்தைகள் போதும்.இதை வைத்து ஒரு சின்ன உதாரணம்.
" ஸியா !!!!! இந்த பீஸ் அசெயா ? இல்ல அட்டூவா ?" என்று கேட்கலாம்.
பேச்சு வார்த்தையோடு நின்று விடாமல்,
லுங்கியையும் நாக்கையும் மடித்து வைத்து குத்தியெடுக்கும் சாவுக்குத்தும்,கானாப் பாடல்களும் உருவான தாயகமும் எங்கள் வியாசர்பாடி ( பேஜார்பாடி ) தான்.கானா உலகநாதன்
வியாசர்பாடி வாசி.

விளையாட்டைப் பொறுத்த மட்டில்,
சென்னை முழுவதும் தெரு கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தினாலும்,எங்களுக்கு தேசிய விளையாட்டு கால்பந்து தான். பிரேசில்,மான்செஸ்டர் யுனைடெட் அணிகள் இங்கு ஏராளம்.நிறைய பேருக்கு அரசு உத்யோகம் கால்பந்து உபயமாகத் தான் கிடைத்தது.
சத்யமூர்த்தி நகர் மாநகராட்சிப்பள்ளியில் பயிற்சி செய்தே ஒரு மாணவன்,தேசிய கால்பந்து அணிக்காக போர்ச்சுகல் வரை சென்று வந்தான்.
பாரிமுனையிலிருந்து 10ரூ ஷேர் ஆட்டோவுக்கு தந்தால்,30 நிமிடத்தில் இந்த பர்மிய பிரதேசத்தை அடைந்து விடலாம்.
சென்னையில் இப்படி ஒரு இடமா ? என்று நீங்கள் புருவம் உயர்த்த காரணம் ஆயிரம்.
(இன்னும் நிறைய இருக்கு...)