Monday, January 16, 2012

கூடன்குளம் அணு உலை எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரமும் சில விவாதங்களும்




எழுத்தாளரும் களப்பணியாளருமான தோழர் அ.முத்துக்கிருஷ்ணனின் கூடன்குள அணு உலை தொடர்பான "விழித்தெழும் உண்மைகள்" சிறு நூலை மக்களிடையே கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்த‌ போது, எதிர்கொண்ட கேள்விகளும் விவாதங்களுமாக இந்த அனுபவம் இன்னும் முற்றுப்பெறாமலிருக்கிறது.பல மாதங்களாக அலுவலகத்திலும் நண்பர்களிடமும் உறவினர்களிடமும் நேரிலும் சாட்டிலும் முகநூலிலும் விவாதங்கள் தொடர்ந்த வண்ணம் இருக்கின்றன.

அணு உலை குறித்த அடிப்படை கருத்துகளை பரப்பும் முதல் களமாக பள்ளிக்கூடங்களையும் மஸ்ஜிதுகளையும் நாடலாம் என முடிவு செய்யப்பட்டு களப்பணிகள் ஆரம்பமாயின.சந்தித்த முதல் இடமே ஏமாற்றமளித்தது.நான் படித்த கிறிஸ்துவ பள்ளியின் பாதிரியார், எதிர்ப்பு குறித்தான பிரச்சாரமோ, புத்தக விற்பனையோ செய்வது சமூக விரோதம் என்ற அடிப்படையில் பேசி நிராகரித்ததோடு நில்லாமல், இந்த போராட்டம் ஏன் அணு உலை கட்ட ஆரம்பிக்கும் போதே இல்லை என ஒரு சாமான்யனைப் போல அவரும் அதே பிராண்டட் கேள்வியை கேட்டது வருத்தமளித்தது.மேலும் இந்த விஷயத்தில் அனைத்து கிறிஸ்துவர்களும் கேள்விக்குள்ளாக்கப்படுகின்றனர் என கவலை தெரிவித்தார்.அது போக வேறெங்கும் போய் இதைப்பற்றி செமினார் பண்ணாதீங்க தம்பி..என அறிவுரை வேறு. நல்லது என நடையை கட்டினேன்.

கூடன்குளம் அணு உலையை எதிர்த்து சமநிலைச்சமுதாயம், விடியல் உள்ளிட்ட பல‌ இஸ்லாமிய பத்திரிக்கைகளில் காத்திரமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டிருக்கும் இக்காலத்திலும் பல உலமாக்கள், மஸ்ஜிது நிர்வாகிகள் அணு உலைகள் குறித்த‌ ஒரு அரசல் புரசலான அறிவு கூட இல்லாமல் இருந்தது வேதனையளித்தது.ஆயிரம் பேர் கூடக்கூடிய வடசென்னையின் ஒரு முக்கிய பள்ளிவாசலின் தலைவர் "கூடன்குளமா..அப்படின்னா...என்ற ரீதியில் நெளிந்தார். புத்தகத்தை வேண்டுமானால் விற்றுக் கொள்ளுங்கள். ஜமா அத் முன்பு பேச அனுமதி தரமுடியாது என தன்னிச்சையாக அறிவித்தார்.இன்னொரு பள்ளிவாசல் கொஞ்சம் பரவாயில்லை. பள்ளி நிர்வாகி ஒருவர் வழக்கமான‌ பிராண்டட் கேள்வியோடு விவாதத்தை தொடங்கினார்.உண்மைகளை கொஞ்சம் எடுத்துரைத்த பின், புத்தகத்தை பள்ளி இமாமிடம் கொடுத்து படிக்கச் சொல்லி தொலைபேசி எண்ணையும் குறித்துக் கொண்டார்.இன்னும் பயான் செய்ய அனுமதி கிடைக்கவில்லை.

அடையாறு மஸ்ஜித் இமாம் மெள்லானா சதீதுத்தீன் பாகவி குறித்து ஏற்கெனவே பலமுறை எழுதியிருக்கிறேன். அவர் ஒரு கல்வியாளர். உலக,மார்க்க கல்வி அறிஞர். அவரை தனியாக சந்தித்த போது, கூடன்குள எதிர்ப்பு தொடர்பான வலுவான கருத்தியல் அவரிடமிருந்தது. சாவகாசமாக தனது கருத்துகளை இஸ்லாமிய பார்வையில் எடுத்துரைத்தார்.கூடன்குளத்தை ஆதரிப்போரின் நுகர்வுப்பார்வையில் இருக்கும் குளறுபடிகளையும் ஏகாதிபத்திய நாடுகளின் வியாபார நோக்கங்கள் குறித்தும் பேசினோம். முத்துக்கிருஷ்ணனை அவருக்கு தெரிந்திருந்தது. ஏற்கெனவே ஜூம்ஆ பயான்களில் கூடன்குள அணு உலை குறித்து அவர் குறிப்பிட்ட கருத்துகளையும் கூறினார். இன்னும் அதைப்பற்றி விரிவாகப் பேசுவதைப் பற்றி பரிசீலிப்பதாகவும் உறுதி கூறினார். இன்ஷா அல்லாஹ் என்று புத்தகத்தை வாங்கி கொண்டார். மஹல்லா மக்களிடம் விற்பனை சொல்லிக் கொள்ளுமளவு இல்லையென்றாலும், இது போன்ற உறுதி மொழிகளும் நம் சமூகத்தின் மீதான அக்கறைகளும் ஆறுதலளிப்பதாக இருந்தன.

ஏறத்தாழ எல்லாரும் வழக்கமான‌ கேள்விகளைத் தான் திரும்ப திரும்ப கேட்டனர்.எல்லாவற்றிற்குமான பதில்களும் விளக்கங்களும் முறையான தரவுகளுடன் முத்துக்கிருஷ்ணனின் இந்நூலில் விரிவாக அலசப்பட்டிருக்கிறது.


1. இந்த போராட்டம் எதிர்ப்பு ஏன் அணு உலைகளை தொடங்கிய நாட்களிலேயே இல்லை ?

2. கூடன்குளம் அணு உலை திறக்கப்படவில்லையென்றால் எப்படி நம் மின் தடை பிரச்சனை நிறைவேறப்போகிறது.காலம் முழுவதும் நாம் இருளில் மூழ்க வேண்டியது தானா ?

3. அப்துல்கலாமே சொல்லிட்டாரே. 100% பாதுகாப்பானது தான் என்று. அப்புறமென்ன போராட்டம் அது இதுன்னு தேவையில்லாத வேலை. அவருக்கு தெரியாததா உங்களுக்கெல்லாம் தெரியப் போகிறது. அப்துல் கலாமின் அபத்தமான ஒப்பீட்டையே அவர்களும் முன்மொழிந்தனர். கார் விபத்தில் இறக்காதவர்களா ? என்று.

4. செர்னோபில்-லாம் ந‌ட‌ந்து 25 வ‌ருஷ‌ம் ஆவுதுங்க‌..இப்ப‌ இருக்க‌ இந்திய‌ விஞ்ஞானிக‌ள்லாம் எக்ஸ‌ப்ர்ட்ஸ். இதெல்லாம் யோசிக்காம‌யா இந்த‌ புராஜெக்ட‌ கொண்டு வருவாய்ங்க‌..?

5.இவ்வளவு செலவு செய்தாகி விட்டதே. இதை எப்படி கைவிடுவது?



கூடங்குளம் அணு உலை திட்டம் உருவான அரசியல் பின்னணி, ரஷ்ய அணு உலைகளின் அபாயம்,இருபத்தைந்து கால இடைவிடாத எதிர்ப்புப் போராட்டங்கள்,அணுசக்தி கழகத்தின் ஊதாரித்தனம்,ஊழல்,பொய்ப்பிரச்சாரம், அறிவுசார் தளத்தில் இயங்கும் சில ஊடகங்களில் வெளிவந்த விழிப்புர்ணவு கட்டுரைகள், அணு உலைகளைச் சுற்றியுள்ள மக்கள் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்கொள்கிறார்கள், மாற்று மின்சாரத்தின் அவசியம் என்ன ? இந்திய அணு உலைகளுக்கு நாம் கொடுக்கும் விலை என்ன ? செர்னோபில்,ஃபுகுஷிமா அணு உலை வெடிப்புகள் உலகெங்கும் ஏற்படுத்திய பாதிப்புகளை அறிதல் எவ்வளவு முக்கியமானது போன்ற பல கேள்விகளுக்கு எளிய தமிழில் விடையளித்திருக்கிறார் முத்துக்கிருஷ்ணன்.உயிர்மையின் 100ஆவது இதழில் சிறப்பு பகுதியாக வெளிவந்த முத்துக்கிருஷ்ணனின் கட்டுரைகள் தொகுக்கப்பட்டு, பல பதிப்பகங்கள் ஒன்றிணைந்து மக்கள் பதிப்பாக இப்புத்தகம் வெளிவந்திருக்கிறது.

1. இருப‌த்தைந்து காலமாக‌ இந்த‌ போராட்ட‌ம் தொட‌ர்ந்து கொண்டு தான் இருக்கிற‌து. ஆனால் அதை நாம் தான் அறிந்து கொள்ள‌வில்லை. கூட‌ன்குள‌ம் அணு உலை குறித்தான‌ ப‌ல‌ க‌ட்டுரைக‌ள் ப‌ல‌ ப‌த்திரிக்கைக‌ளில் வெளி வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்திருக்கின்ற‌ன.அணு உலையை எதிர்த்து ப‌ல‌ ஊர்வ‌ல‌ங்க‌ளும் பொதுக்கூட்ட‌ங்க‌ளும் இடிந்த‌க‌ரையிலும் நெல்லை மாவ‌ட்ட‌த்தின் ப‌ல‌ ஊர்க‌ளிலும் ந‌ட‌ந்திருக்கிறது. ம‌க்க‌ள் ஆத‌ர‌வு வ‌லுப்பெறாத‌ கால‌ க‌ட்ட‌ங்க‌ளில், அறிவு சார் தள‌த்திலே இருந்த‌ இந்த‌ எதிர்ப்பு, ம‌க்க‌ள் எதிர்ப்பாக‌ உருப்பெற்ற‌வுட‌ன் அத‌னை கொச்சைப்ப‌டுத்த‌ தொட‌ங்கியிருக்கிற‌து இந்திய‌ அர‌சு.

2. இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தியில் 2.62% தான் அணு உலைகளின் பங்களிப்பாக இருக்கிறது. சூரிய ஒளியிலிருந்து 1.1%-மும், அனல்,புனல்,காற்று இவைகளிலிருந்து 65% மின்சாரம் நமக்கு கிடைக்கிறது.

கூடன்குளம் அணு உலை 1200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கக் கூடிய சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது.இதில் கூட‌ன்குள‌ அணு உலைக்கே செல‌வாகும் மின்சார‌ம் 12%. ஆக‌ ந‌ம‌க்கு 1080 மெகாவாட் மின்சார‌ம் தான் உற்ப‌த்தி என‌ வைத்துக் கொள்வோம். இதில் ந‌ம் மாநில‌த்திற்கு 50% தான் என‌ அர‌சு நிர்ண‌யித்திருக்கிற‌து. வ‌ழ‌க்க‌மாக‌ 30% தான் சொந்த‌ மாநில‌த்திற்கு கிடைக்கும்.ஆக‌ த‌மிழ்நாட்டிற்கு 540 மெகாவாட் கிடைக்குமெனில், இதில் மின்க‌ட‌த்த‌லின் இழ‌ப்பு 15 முத‌ல் 20% வ‌ரை இருக்குமெனில் ந‌ம‌க்கு கிடைக்க‌ விருப்ப‌து வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் ம‌ட்டுமே.

சுப‌.உத‌ய‌குமாரின் கூற்றுப்ப‌டி, த‌மிழ்நாட்டில் உள்ள குண்டுப‌ல்புக‌ளை எல்லாம் மாற்றி குழ‌ல் விள‌க்குக‌ளாக‌ மாற்றினாலே நாம் 500 மெகாவாட் மின்சார‌ம் சேமிக்க‌ முடியும். வெறும் 400 மெகாவாட் மின்சார‌ம் உற்ப‌த்தி செய்வ‌த‌ற்கா இவ்வ‌ள‌வு கோடிக‌ள் ??? க‌ட்டுமான‌ செல‌வை விடுங்க‌ள்.உலை இய‌ங்க‌ ஆர‌ம்பித்தால் ப‌ராமரிப்பு செல‌வு என்ன‌ ஆகும் தெரியுமா ?

ஜெர்ம‌னி,சுவிட்ச‌ர்லாந்து, ஜ‌ப்பான் உள்ளிட்ட‌ ப‌ல‌ நாடுக‌ள் த‌த்த‌ம‌து அணு உலைக‌ளுக்கு மூடுவிழா நட‌த்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா ம‌ட்டும் அணு உலைக‌ளை தொட‌ங்குவ‌து ஏன் ? அமெரிக்கா திணித்த 123 அணு ஒப்ப‌ந்த‌த்திற்கு அடிப‌ணிந்து என்றென்றும் யுரேனியம் விற்கும் நாடுக‌ளுக்கு இந்தியா அடிமையாக‌ இருப்ப‌த‌ற்கான‌ அடிமை சாச‌ன‌ம் தானே அது.

3.1986 செர்னோபிலின் அணு உலை ஏற்படுத்திய பாதிப்புகள் எத்தகையவை என கூகிளில் லேசாக ஒரு தேடலை தொடங்குங்கள். ரஷ்யாவில் உள்ள செர்னோபிலின் அதே அணு உலையைத் தான் பெயர் மாற்றி நமக்கு விற்றிருக்கிறார்கள். கூடன்குளமும் செர்னோபிலும் வடிவமைப்பில் ஒன்றே தான். இதிலும் முதன்முறையாக குளிர்விக்கும் கலன்களாக கடல்நீர் அமையவிருப்பது ரஷ்ய விஞ்ஞானிகளுக்கே புதியது. ரஷ்ய அணு உலைகளிலே 31 மிகப்பெரிய காரணிகள் ஆபத்தாக இருக்கின்றன என ரஷ்ய விஞ்ஞானிகள் ஏற்றுக் கொள்ளும் போது, ஊழல் மிகுந்த நம் நாட்டில் 100% பாதுகாப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயண சாமி, வாயிலே வடை சுடுகிறார்.

4.கூடன்குள அணு உலை விபத்து நிகழ்ந்தால் ஏற்படக்கூடிய பேராபத்துகள் ஒருபுறமிருக்க, அணு உலை ( விபத்தின்றி ) இயங்கினாலே ஏற்படக்கூடிய பிரச்சினைகள் இன்று அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்கியி இருக்கின்றன.கூடங்குளம் அமைப்பதில் மரபு விதிகள் எதுவும் பின்பற்றப்படவில்லை. அணு உலைப் பகுதியில் மக்கள் உயிர் வாழ உரிய உத்தரவாதம் இல்லை. விபத்து இல்லாமல் அணு உலைகள் இயங்கும்போது ஐயோடின் 131, 132, 133 ஐசோடோப்கள் வெளியிடும் ஸ்ட்ரோண்டியம், டிரைடியம், டெலுரியம் என்ற கதிர்வீச்சு வாயுக்களால் பல அழிவுகள் ஏற்படும். நிலத்தடி நீர், விவசாய விளைப்பொருட்கள், கடல்நீர், கடல் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்படக்கூடிய அபாயங்கள் ஏராளம்.மக்களின் உயிரோடும் வாழ்வாதாரங்களோடும் ஒப்பிடுகையில் நாட்டின் வளர்ச்சி என்பது இரண்டாம் பட்சம் தானே. அணு உலையால் ஏற்படும் கேடுகளால் உலகின் பல நாடுகளில் அணு உலைகள் மூடப்படும் நிலையில் நாம் மட்டும் அதை செயல்பாட்டுக்குக் கொண்டு வருவது நம்மை நாமே அழித்துக் கொள்வதற்குச் சமமாகும்.

5.தமிழகத்தில் உள்ள கல்பாக்கம் அணுமின் நிலையத்தைச் சுற்றிலும் வசிக்கும் மக்கள் கோலான் என்ற தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் சில நோய்களால் மரணம் அடைந்துள்ளனர். இந்தியாவில் 20 அணுமின் நிலையங்கள் உள்ளன. இதில் பழமையானது தாராப்பூர் (மகாராஷ்டிரா). இந்த அணு உலைகளைச்சுற்றி பிறக்கும் பெரும்பாலான குழந்தைகள் உருக்குலைந்து தான் பிறக்கின்றன. பலர் புற்று நோயால் இறக்கின்றனர்.ஆனால் எல்லா உண்மைகளையும் இந்திய அரசும் அணுசக்திக்கழகமும் ரகசிய காப்பின் கீழ் வெகுசிரத்தையுடன் மூடி மறைத்து வருகிறது. அணுசக்தி திட்டங்களை அமெரிக்கா கைவிட்டுவிட்டது. ஆஸ்திரியா, ஸ்வீடன், பின்லாந்து, யுகோஸ்லாவாக்கியா, ஆஸ்திரேலியா, பிரேசில், சீனா, மெக்சிகோ, ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய பல நாடுகளும் பாதகமான இந்த அணுஉலைகளை வேண்டாம் என்று தவிர்த்து வருகின்றது.கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஜப்பானில் நடந்த நிலநடுக்கத்தில் அங்கிருந்த ஃபூகுஷிமா டைச்சி அணுஉலை கடலில் மூழ்கி அங்கு நடந்த கோர சம்பவத்தை நாம் தொலைக்காட்சியில் பார்த்திருக்கிறோம்.


இன்று கூடன்குளம் உள்ளிட்ட பல கிராமங்கள் தூத்துக்குடி தொடங்கி பழையகாயல், புன்னக்காயல், கொம்புத்துறை, ஆலந்தலை, குலசை, மணப்பாடு, பெரிய தாழை, உவரி, கூத்தங்குளி, கருத்தழை, இடிந்தகரை, பெருமணல், கூட்டப்புளி என்று குமரி வரை நீண்ட அமைதியான கடற்கரை கிராமங்கள் யாவும் இன்று அணு உலைகளுக்கெதிராக போர்க்கொடி தூக்கியிருப்பது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உரிமை கோரல்.


----------------

Monday, January 9, 2012

புத்தகத் திருவிழா 2012 ‍- எழுச்சியும் புறக்கணிப்பும்




நேர்காணல்களும் நலம் விசாரிப்புகளும் போராட்டங்களும் வெளியேற்றங்களும் மேடைப்பேச்சுகளும் என ஒரு மிகப்பெரிய ஆரவாரம், புத்தகத் திருவிழாவின் நுழைவாயிலிலிருந்து ஆரம்பிக்கிறது.சுற்று வட்டார‌ சாலைகளில் புத்தக திருவிழாவையொட்டி ஒரு சின்ன விளம்பர பலகை, சுவரொட்டி கூட தென்படவில்லை.தமிழ் நாட்டில் இணையத்தை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகமாகி இருப்பதால், பெரிய அளவிலான விளம்பரம் தேவையிருக்காது என பபாசி கருதியிருக்கலாம். எழுத்தாளர்‍-வாசகர் சந்திப்புக்கென தனியே ஒரு ஸ்டால் அமைத்து நாள் குறித்திருக்கிறார்கள். எதாவதொரு பதிப்பகத்தின் முன் நடக்கும் 'கூடிக்கும்மி அடித்தல்' செல்லமாக தவிர்க்கப்பட்டிருக்கிறது.

இக்காலத்து இளைஞர்களிடம் வாசிப்பு குறைந்து வருகிறது என சஞ்சலப்படுவோர் கவனிக்க வேண்டிய விஷயம், புத்தக கண்காட்சியில் அதிகமாக இளைஞர்களைத் தான் பார்க்க முடிகிறது. வேலை நாளான திங்கட் கிழமை கூட, படையெடுக்கின்றனர்.பெரும்பாலும் ரிபீட் ஆடியன்ஸூகளாக இருக்கிறார்கள். அருகாமையில் அமைந்த கரையிலோ கீழ்ப்பாக்கத்திலோ 15 நாட்களுக்கு வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருக்கக்கூடும். தினமும் வந்து கையெழுத்து போடுகின்றனர். நேர்காணலில் பங்கேற்கின்றனர். நின்று கொண்டே வாசிக்கின்றனர்.எஸ்.ராமகிருஷ்ணனைச் சுற்றி ஒரு இயக்கமே செயல்படுகிறது.சலிப்பு தட்டாமல் பேசிக்கொண்டே இருக்கிறார் மனிதர். நிச்சயமாக அவர் ஒரு சாக்ரட்டீஸ் தான்.

சென்ற ஆண்டு இருந்த மனநிலை இந்த முறை இல்லை.புனை கதைகளின் வாசிப்பில் ஒருவித தேக்க நிலையும் அயர்ச்சியும் உருவாகி விட்டதாக உணர்கிறேன். கிருஷ்ணபிரபு மாதிரியான ஆட்களைத் தவிர மற்ற யாருடனும் அதிகம் அளவளாவ பிடிக்கவில்லை.புனைவு இலக்கியங்களில் அதிகம் கவனம் செலுத்தக்கூடாது என தீர்மானம் இயற்றி விட்டுத் தான் புத்தக வேட்டையைத் துவக்கினேன்.மேலும் கிழக்கு, காலச்சுவடு போன்ற பதிப்பகங்களை முற்றிலுமாக புறக்கணிக்க முடிவு செய்திருந்தேன்.இருப்பினும் யுவனின் குள்ளச்சித்தனுக்காகவே கிழக்குத் திசை நோக்கிச் செல்ல வேண்டியிருந்தது. தமிழினி வெளியீடாக முன்பு வந்ததை, கிழக்கு மீள்பதிப்பு செய்திருக்கிறார்கள். வழக்கம் போல, கோபி கிருஷ்ணனின் புத்தகங்கள் 'கடல்'லையே இல்லையாம்.

கீழைக்காற்று, பாரதி புத்தகாலயங்களில் பத்து ரூபாய்க்கு கிடைக்கும் முற்போக்கு கட்டுரைகள் நிரம்பிய குட்டி புத்தகங்கள் ஒவ்வொன்றும் மாணிக்கங்கள். பாதசாரியின் 'பேய்க்கரும்பு', கீரனூர் ஜாகிர் ராஜாவின் 'மீன் குகை வாசிகள்' பார்த்த மாத்திரத்தில் வாங்கத் தூண்டியவை.தமிழ்மகனின் 'வெட்டுப்புலி', யூமா.வாசுகியின் 'மஞ்சள் வெயில்', யுவன் சந்திர சேகரின் 'மணற்கேணி' எதிர்பார்த்து வாங்க வேண்டியவை பட்டியலில் இடம் பெற்றிருந்தன. சிக்மண்ட் ஃபிராய்டின் 'கனவுகளின் விளக்கம்' உளவியல் வேட்கைக்கு தீர்வு அளித்திருக்கிறது.

காத்திரமான கட்டுரைகள் அடங்கிய புதிய கலாச்சாரத்தின் "கண்ணை மறைக்கும் காவிப்புழுதியும்", அரபி இலக்கியம் குறித்தான சாருநிவேதிதாவின் "தப்பு தாளங்களும்" மறக்காமல் வாங்கிக் கொண்டேன்.ஆண்டன் செகாவ் சிறுகதைகளும்,சாருவின் 'ஊரில் மிக அழகான பெண்ணும்'மொழிபெயர்ப்பு வரிசையில் சேர்ந்து கொண்டன. மற்றபடி,என் மனதிற்கு நெருக்கமான வண்ணதாசனின் "பெய்தலும் ஓய்தலும்" சிறுகதை தொகுப்பு இந்த ஆண்டு புத்தக கண்காட்சிக்கான‌ எனது தேடலை மனநிறைவுடன் இறுதி செய்திருக்கிறது.


இதுவரை வாங்கியவை:

1.பேய்க்கரும்பு - பாதசாரி / தமிழினி

2.மஞ்சள் வெயில் - யூமா.வாசுகி/அகல் பதிப்பகம் ( கருப்பு பிரதிகளில் கிடைக்கும் )

3.மீன்குகை வாசிகள் ‍ - கீரனூர் ஜாஹிர் ராஜா / ஆழி பப்ளிஷர்ஸ்

4.அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில் எம்.எஸ் / பாதரசம் வெளியீடு
( கீழைக்காற்றில் கிடைக்கும் )

5.கண்ணை மறைக்கும் காவிப்புழுதி ‍- புதிய கலாச்சாரம் கட்டுரைகள / கீழைக்காற்று

6.தலித் முஸ்லிம் - ஹெச்.ஜி.ரசூல் / பாரதி புத்தகாலயம்

7.சோஷலிச திட்டத்தில் கடந்த காலமும் எதிர்காலமும்‍ - பிரபாத் பட்நாயக் / பாரதி புத்தகாலயம்

8.பெண்ணியம் பேசலாம் வாங்க ‍- உ.வாசுகி / பாரதி புத்தகாலயம்

9.நக்சலிசம் புரட்சித் தத்துவமா ? ‍ - அனில் பிஸ்வாஸ் / பாரதி புத்தகாலயம்

10.கனவுகளின் விளக்கம் சிக்மண்ட் ஃபிராய்ட் - நாகூர் ரூமி /ஸ்நேகா பதிப்பகம் ( பாரதி புத்தகாலயத்தில் கிடைக்கும் )

11.வெட்டுப்புலி - தமிழ்மகன் / உயிர்மை

12.தப்புத்தாளங்கள் - சாரு நிவேதிதா / உயிர்மை

13.மணற்கேணி - யுவன் சந்திரசேகர் / உயிர்மை

14.ஊரில் மிக அழகான பெண் மொழி பெயர்ப்புச் சிறுகதைகள் - சாருநிவேதிதா / உயிர்மை

15.பெய்தலும் ஓய்தலும் - வண்ணதாசன் / சந்தியா பதிப்பகம்

16.குள்ளச்சித்தன் சரித்திரம் - யுவன் சந்திர சேகர் / கிழக்கு பதிப்பகம்


*****************************