Monday, November 23, 2009

ஆதியின் ஹாலிடேஸ் சிறுகதைக்கான‌ முடிவு

ஆதிமூலகிருஷ்ணனின் ஹாலிடேஸ் கதைக்கான என்னுடைய முடிவு:

************

மூவருக்கும் தூக்கிச்சட்டியை கிணற்றுத் திண்டின் மீது வைத்து விட்டு அகிலா வேப்பமரத்தடி சாலையில் மறைந்து போனாள்.

அகிலாவின் இளமை பூசிய ஸ்தனங்களும் கருத்த உதடுகளும்
இளநீரில் கலந்த கள்ளை விட விஜய்க்கு அசாத்திய‌ கிளர்ச்சியை உண்டு பண்ணின.சசிகுமார்,ஹிமான் என்று தடாலடியாக அவனுக்கு இரண்டு அந்தரங்க எதிரிகள் உருவாக அக்கிளர்ச்சி காரணமாக‌ இருந்தது.

கறிச்சோறு தொண்டைக்குழிக்குள் இறங்கும் வரை மூவரும் நண்பர்களாகவே சிரித்து பேசினர்.நண்பர்களாகவே தென்னை மரத்தடி கயிற்றுக்கட்டிலில் படுத்துக் கிடந்தனர்.அகிலாவை பார்த்த கணம்,அகிலா என்று சத்தம் போட்டு கூப்பிட இருவருக்குமே தைரியம் போதவில்லை தான்.

ஆனால் விஜயை போல சசி இல்லை.அகிலாவின் செழித்த பெண்மை குறித்தான பிரக்ஞையே வளராத காலகட்டங்களிலிருந்து அவளோடு பழகியவன் என்பதால் விஜய்க்கு சசி மேல் லேசான பொறாமை கூட ஏற்பட்டிருக்கலாம்.

திடீரென்று இரு நண்பர்களிடையே பூமி பிளவுற்று இரு வேறு உலகில் நின்று கொண்டிருந்தனர்.ஹிமான் உண்ட களைப்பில், ஏற்கெனவே உறங்கி விட்டிருந்தான்.விஜய்,சசி இருவரும் கண்களை மட்டும் மூடியிருந்தனர்.மர நிழலினூடே குத்திட்ட சூரிய கற்றைகள் கண்கள் கூச இருவருமே சிறிது நேரத்திற்கு பிறகு,அகிலா குறித்த‌ சிந்தனைகளோடு உறங்கிப் போயினர்.

திடீரென்று தென்னைக்குரும்பை ஒன்று மரத்திலிருந்து கயிற்றுக்கட்டிலின் வெகு அருகாமையில் விழ, இருவருக்குமே விழிப்பு தட்டியது.அதே நேரம் பம்பு செட்டின் அருகே ஒரு பெண்ணின் அரவம் காற்றைக்கிழித்து வந்தது.

பர‌பரப்போடு ஓடிச்சென்று இருவரும் பம்பு செட்டின் அறையை அடைந்தனர்.அங்கு அவர்கள் கண்ட காட்சி !!

"தும் முஜே ச்சோட்கே கஹாங் கயா தே சொனாலி !!! சொனாலி !! கஹாங் கயா தே சொனாலி !!!" அகிலாவை வலுக்கட்டாயமாக கட்டியணைக்க முயன்று கண்களில் நீர் வழிய பிதற்றிக் கொண்டிருந்தான் ஹிமான்.


**************

Sunday, November 15, 2009

வலைச்சர வாரம்

அன்பு நண்பர் சீனாவின் அன்புக்கட்டளையை ஏற்று,இந்த வாரம் வலைச்சரத்தில் எழுதவிருக்கிறேன்.உங்கள் ஆதரவையும் அன்பையும் வேண்டுகிறேன்.

இணைந்திருங்கள் !!!

இன்றைய வலைச்சர அறிமுகப்பதிவு

**********

Sunday, November 1, 2009

இன்னுமொரு நாடகம்-2 (சிறுகதை)

முத‌ல் பாக‌ம்


*******************பாகம்-2**************************************

ஒரு சாக்பீஸ் துண்டை இரண்டாக பிளந்து அவளிடம் தருவேனாம். அவ‌ள் அதை இன்னும் சிறுசிறு துண்டுகளாக்கி என்னிடம் தருவாளாம்.நான் அந்த சிறு துண்டுகளை மேலும் நறுக்கி அவள் உள்ளங்கையில் திணிப்பேனாம்.இப்படி விரல்கள் மாற்றி மாற்றி அவள் கைகளில் சாக்பீஸ் துண்டு பொடியாகி, மேலும் சிறிதாக்க முடியாமல் தோல்வியின் பொய்க்கோபத்தில் மிச்சமிருக்கும் சுண்ணாம்பு பொடிகளை என் கன்னத்தில் அப்பி விட்டு ஓடிவிடுவாள். ஒத்திகை என்ற பேரில் இன்னொரு ரகசிய நாடகம் திரைமறைவில் எங்களுக்காக பிரத்யேகமாக‌ அரங்கேறிக் கொண்டிருந்தது.அவளுடனான‌ பொற்கணங்களை இழக்கிறோமோ என்ற வருத்தத்தை விட,என் அந்தரங்க‌ எதிரியான (குளோரியா மேரியைப் பொறுத்தமட்டில்) ஹேமந்த் பாபுவுடன் நடிக்க போகிறாளே என்ற ஆற்றாமை தான் பிய்த்து தின்றது.

ம‌றுநாள் ச‌னிக்கிழ‌மை காலை 10 ம‌ணிக்கு தொட‌ங்கவிருந்த‌ ஒத்திகை,மேரி வ‌ராத‌தால் தாம‌த‌மான‌து.சிறிது நேர‌ம் க‌ழித்து,சி செக்ஷன் சும‌தி வ‌ந்து கிரேஸி மிஸ் காதில் ஏதோ கிசுகிசுத்தாள்.அத‌ன் பிற‌கு,சுமார் மூஞ்சி சும‌தியே ஜூலிய‌ட்டாக ந‌டிப்ப‌தாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்ட‌து.ஹேம‌ந்த் பாபு ஏமாந்த‌ பாபுவானான்.அற்ப‌ ச‌ந்தோஷ‌த்தில் நான் மெலிதாக‌ சிரித்த‌து மேரிக்கு கூட‌ கேட்டிருக்கும்.

ஒரு வார‌ம் மேரி ப‌ள்ளிக்கு வ‌ர‌வில்லை.இருப்பு கொள்ளாம‌ல் சைக்கிளின் முன் க‌ம்பியில் அந்தோணி சாமியை கிட‌த்திக் கொண்டு நாலைந்து நாட்க‌ள் அவ‌ள் வீட்டின‌ருகே அலைந்து திரிந்தேன்.ஒரு வழியாக‌ நான்காவ‌து நாள் தைரிய‌த்தை வ‌ர‌வ‌ழைத்து கொண்டு, வாச‌லில் க‌றிகாய் வாங்கிக் கொண்டிருந்த‌ அவ‌ள் அம்மாவிட‌ம் மேரி வ‌ராத‌தை ப‌ற்றி விசாரித்தேன்.கார‌ணத்திற்கு அவ‌ள் என்னிட‌ம் வாங்கியிருந்த‌ புவியிய‌ல் நோட்டை துணைக்கு அழைத்தேன்.மேரிக்கு மேலுக்கு முடிய‌லை என்றும் இர‌ண்டொரு நாளில் ப‌ள்ளிக்கு வ‌ந்து விடுவ‌தாக‌வும் ஆன்ட்டி சொன்னார்க‌ள்.பிற‌கு என்ன‌ நினைத்தார்க‌ளோ.ஒரு நிமிஷ‌ம் இருப்பா மேரியை கூப்பிடுறேன்னு சொல்லிவிட்டு க‌ன‌த்த உருவம் மேரிரீய்ய் என்று கூவிக்கொண்டே வீட்டிற்குள் ம‌றைந்த‌து.ஒரு வேளை நான் அணிந்திருந்த‌ குவிஆடி சைஸை பார்த்து ந‌ம்பியிருக்க‌க்கூடும் என்று சிரித்த அந்தோணி சாமியை வாச‌லிலேயே இருத்தி விட்டு, நான் ம‌ட்டும் வ‌ராண்டாவிலிருந்த‌ சேரில் காத்திருந்தேன்.சிறிது நேர‌த்தில் பான்ஸ் ப‌வுட‌ருட‌ன் க‌ல‌ந்த ம‌ல்லிகை ம‌ண‌ம் குபீரென்று அவ்விடத்தை நிறைத்தது.ஒரு தாவ‌ணிப் பெண். ம‌ங்கிய‌ வெளிச்ச‌த்தில் நான் க‌ண்ட அந்த உருவம் வாழ்நாளில் ம‌ற‌க்க‌வே முடியாது.கதைகளில் வரும் கடற்கன்னியை போல் மாறிவிட்டிருந்தாள். ம‌ஞ்ச‌ள் பூசிய‌ முக‌ம்,புதிதாய் வெட்க‌ம்,லேசான‌ த‌ய‌க்க‌ம்,குறுகிய‌ இடைவெளி விட்டு ந‌டை, விம்மிப்பூரித்த‌...ச‌ரி வேண்டாம். ஒரு பெண்மையின் ப‌ரிபூர‌ண‌ ஸ்ப‌ரிச‌த்தை வெகு அருகாமையில் அதுவும் அந்த‌ ம‌ல்லிகைப்பூ வாடை அருகில் வ‌ர‌ வர க‌ண்க‌ள் சுர‌ந்து விட்ட‌து.நான் இதுவ‌ரை பார்த்திராத‌ மேரி.

ஒரு வார்த்தையோ அல்லது ஒரு தொடுதலோ இருவரிடையே இருந்த ஒரு மெல்லிய‌ திரையைக் கிழித்தெறிய போதுமானதாக இருந்திருக்கும்.நான் தான் முதலில் ஆரம்பித்தேன்.

'உன‌க்கு உட‌ம்பு ச‌ரியில்ல‌ன்னு அம்மா சொன்னாங்களே'.

'நாந்தான் புவியிய‌ல் புக்க போன‌ வார‌மே கொடுத்துட்டேனே.ஏன் எங்க அம்மாகிட்ட பொய் சொன்ன !!'.

அந்த‌ வ‌ருட‌ம் முழுதும் நாள் த‌வ‌றாம‌ல் இதே கேள்வியை என்னிட‌ம் கேட்டுக் கொண்டேயிருந்தாள். தொல்லை தாங்க‌ முடியாம‌ல் ஒருநாள் Mercy twice blessed நாட‌க‌ம் முடிந்து கொட்டும் ம‌ழையின் பின்ன‌ணி இசையில் அவ‌ளிட‌ம் உண்மையை ஒப்புக்கொண்டேன்.

அப்போது என்ன‌ ந‌ட‌ந்த‌து என்பதை சொல்வதில் எனக்கு தயக்கமில்லை.ஆனால் ம‌றுநாள் என்னைப் பார்த்து அவள் கடமைக்கு புன்ன‌கைத்த‌து செய‌ற்கையாக‌ இருந்த‌து.அவளுக்கு எவ்வித அபிப்ராயமும் இருந்திருக்கவில்லையென அதிலிருந்தே புரிந்து கொண்டேன்.பாட‌த்தில் க‌வ‌ன‌ம் செலுத்த‌ வேண்டும் என்று அடுத்த‌டுத்த‌ நாடக‌ங்க‌ளில் ந‌டிக்க‌ ம‌றுத்து விட்டாள்.அத‌ன் பிறகு ஒரேயொரு முறை சூசைய‌ப்ப‌ர் ந‌வ‌நாள் விழாவின் போது கையில் செம்பருத்தி பூக்களை வைத்துக் கொண்டு "அசிஷ்ட‌ மரியாயே.ச‌ர்வேசுவே மாதாவே" என்று மைக்கில் ஜெபித்ததும், மச்சி உன் ஆளுக்கு செம கண்ணுடா! என்று மாப்பிள்ளை பெஞ்சு சிலாகித்ததும் மட்டும் நினைவில் இருக்கிறது.

கடைசியாக போட்ட வேடம் எமன் தான்.அதன் பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக நாடகங்களில் நடிப்பதை அறவே நிறுத்திக் கொண்டேன்.அட்டைக்கத்திகளும் வாடகை மீசை தாடி போலிப்பூச்சுகளும் சலிப்புத்தட்ட ஆரம்பித்தன.நாங்கள் எழுதிய எல்லா நாடகங்களிலும் ஒட்டிக் கொண்டிருந்த ஒருவித யதார்த்தமின்மையும், தட்டையான பொய் வசனங்களும் பின்னாளில் எங்களைப் பார்த்து கேலி செய்ய ஆரம்பித்தன.நாடகங்கள் குறித்த கனவுகள் யாவும் நீர்த்துப் போய்,மலைப்பாம்பின் பிடியைப் போல வெறுமையின் அசுரத் தழுவல் எங்களை ஆட்கொள்ள ஆரம்பித்தது.

பத்தாம் வகுப்பில் மாநில ரேங்க், பன்னிரெண்டாம் வகுப்பில் புதிய நண்பர்கள்,மொட்டை மாடி கச்சேரிகள் என நேரத்தை வீணாக்கி, ஊர்சுற்றி குறைந்த மதிப்பெண் பெற்று,பாலிடெக்னிக்கில் சேர்ந்து, அங்கும் கட் அடித்து பஸ்ஸில் தொங்கி,லேட்ரல் என்ட்ரி ம‌கேஸ்வ‌ரிக்கு SMS அனுப்பி அனுப்பி நோக்கியாவின் கீ-மேட் த‌ட‌ம் அழித்து, பிராக்டிக‌ல் எக்ஸாம் காலைய‌ன்று ரெகார்ட் ச‌ப்மிட் ப‌ண்ணி,ஒருவ‌ழியாக‌ கேம்ப‌ஸில் வேலை கிடைத்து பெங்களூர்,ஹைதராபாத் கொச்சின் என்று பந்தாடப்பட்டு கடைசியில் லோனாவாலாவில் செட்டில் ஆகி, தசராவுக்கு கிடைத்த ஏழு நாள் விடுமுறையில் இப்போது தான் ஊருக்கு வருகிறேன்.

அரசு மானியம் பெறும் பள்ளி என்பதால் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு எங்கள் பள்ளியில் தான் அமைத்திருந்தார்கள்.வெள்ளனயே அந்தோணி சாமி வந்து பல்சரில் என்னை அலேக்கி விட்டான்.பல நாட்களுக்கு பிறகு ஊருக்கு வந்ததால் கிடைத்த பலவந்த உபசரிப்பில் ஏழெட்டு இட்லிகள் நெய்யோடு உள்ளே போய் எதுக்களித்தன.லுங்கியில் சென்றதால் எழுந்த‌ த‌ர்ம‌ ச‌ங்க‌ட‌த்தில் கிரேஸி மிஸ் இருந்த அறையை கண்டுங்காணாதது போல கடந்து சென்று,வேறொரு பூத்துக்குள் நுழைந்து கொண்டேன்.வாக்காளர் சீட்டில் இருந்த என் பெய‌ரைத் தேடி கையெழுத்து போட‌ முனைந்த‌ போது, ஹேய்ய்..அப்துல் !! என்று தோளில் ஒரு மென்மையான‌ கை. திரும்பினால் லிட்டில் ஃபிள‌வர் மிஸ்.எப்ப‌டிடா இருக்க‌..ஆளே மாறிட்டான்ல மிஸ்...என்ன‌டா ப‌ண்ற‌..எத்தன‌ வ‌ருஷ‌மாச்சுல‌ருந்து ஆரம்பித்து அம‌லோற்ப‌ம் பிரின்ஸி ரிடைய‌ர்ட் ஆன‌து வ‌ரை சொல்லி முடித்தார்க‌ள்.

வித‌விதமான‌ வ‌ண்ண‌ங்க‌ளில் எடுக்க‌ப்ப‌ட்ட எங்க‌ள் நாட‌க‌ புகைப்ப‌ட‌ங்க‌ள் புது பிரின்ஸியின் அறையில் காட்சிக்கு வைக்க‌ப்ப‌ட்டிருந்த‌ன.க‌ண்க‌ள் விரிய‌ பார்த்துக் கொண்டிருந்தோம். க‌ட‌வுள் உன்ன‌ எப்ப‌டி ஆசிர்வ‌திச்சிருக்கார் பாரு !! நீ ந‌ல்லா வ‌ருவ‌ன்னு அப்ப‌வே தெரியும். என்ற‌ அவ‌ர்க‌ளின் அன்பின் வார்த்தைக‌ளில் நெகிழ்ந்து நின்ற‌ போது தான் அந்த‌ அறையின் இட‌து ஓர‌த்தில் அந்த‌ புவியிய‌ல் புத்த‌க‌ம் த‌ட்டுப்பட்ட‌து.க‌டைசி ப‌க்க‌த்தில் லிப்ஸ்டிக் கறைகளோடு ம‌ங்க‌லாக‌ எழுத‌ப்பட்டிருந்த‌ என் பெய‌ர், மேரியின் கையெழுத்து தான் என்று அந்தோணி சாமி அடித்துச் சொன்னான்.


(முற்றும்)

*******************************